“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-10
எதன்மீதும் நம்பிக்கையில்லை?
காலை எழுந்திருக்க வேண்டி கடிகாரத்தில் எழுப்புமணி (அலாரம்) வைப்போம். ஆனால் உறங்கப் போவதற்கு முன் அந்த கடிகாரம் இயங்குகிறதா? அலாரம் வைக்கப்பட்டிருக்கிறதா? அது சரியாக குறித்த நேரத்தில் ஒலியெழுப்புமா? என்ற சந்தேகத்தில் 4-5 முறை, அந்த கடிகாரத்தை சரி பார்ப்போம். எவ்வளவு முறை சோதித்துப் பார்த்தாலும், அது சரியாக குறித்த நேரத்தில் அடிக்குமா என்று தொடர்ந்து சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
ஏதேனும் புதிய ஊருக்குச் பேருந்திலோ, ரயிலிலோ சென்று கொண்டிருப்போம். சென்று சேரவேண்டிய இடம் வந்துவிட்டதா? இனியும் எவ்வளவு தூரம் இருக்கிறது? இனி எவ்வளவு நேரம் ஆகும்? என்று தொடர்ந்து நடத்துனர் உட்பட 4-5 நபர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்போம். எங்கே நாம் இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோமோ என்ற பயம்.
வீட்டில் மனைவி, குழந்தைகள் என்று யாரையும் நம்புவதில்லை. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிப்பது. எங்கே மற்றவர்களிடம் கொடுத்துவிட்டால், பின்னாளில் அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்று சந்தேகம்! பயம்! அதிலும், மருமகள், மருமகன் மீது அதீத சந்தேகம். எதற்கெடுத்தாலும் நோண்டி நோண்டி கேள்வி கேட்பது. வீட்டில் பல பிரச்சனைகள் உருவாவதற்கு காரணமே இப்படி அதீதமாக சந்தேகப்பட்டு கேள்வி கேட்பதுதான்;
நம்மோடு பணிபுரியும் சக ஊழியரை நம்பி காரியங்களை செய்யமாட்டோம். நம் அண்டை வீட்டாரை நம்பி நம் வீட்டுச் சாவியையும் பலர் கொடுப்பதில்லை;
இப்படி எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தால், எப்படி நிம்மதியாக உறங்குவது? தூங்கும்போது கூட யாராவது நம் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிடுவார்களோ? என்று அதற்கும் பயப்பட வேண்டியதுதான்.
நம் முன்னேற்றதிற்கு முதற்கண் பெரிய தடையே இந்த பயமும், நம்பிக்கையின்மையும் தான். நம்முள் இருக்கும் பயமே, நம்மை அனுவனுவாக சாகடித்து விடும்; பயத்தின் காரணமாக எல்லாவற்றையும் சந்தேகப்படுவோம். யார் எதைச் சொன்னாலும் நம்ப மாட்டோம்! சக ஊழியர், நண்பர், மனைவி, மக்கள் என்று யாரையும் நம்பாமல் இருப்பது ஒரு வகையான மனோவியாதி.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஜாக்கிரதையாக இருப்பதற்கும் ஒரு அளவு வேண்டுமே! பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அனுபவத்தில் தெரிந்ததிருப்போம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அவ்வப்போது சிலவற்றை தைரியமாக செய்தால்தான், செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும். அதீத ஜாக்கிரதையாக இருந்தால், என்றைக்கும் புதியவைகள் எதையுமே சாதிக்க முடியாது. ஏன் இயல்பானவற்றை செய்வதே சிரமமாகிவிடும்.
ஜாக்கிரதையாக இருக்கிறேன் என்ற பெயரில், நம்மைச் சுற்றியுள்ளவர்களை நம்பாமல், எல்லாவற்றிலும் நாமே ஈடுபட்டால், நம்முடைய செயல்திறனும் பெருமளவில் பாதிக்கப்படும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நேர்மை, நாணயத்தை அவ்வப்போது சோதித்து அறிந்துகொள்ளலாம். அவர்களை போதிய அளவு நம்பி, ஒரு சில பொறுப்பை ஒப்படைத்தால் தான் நம்மால் அடுத்த பெரிய காரியங்களில் கவனம் செலுத்த முடியும்.
“யாரையும் நம்பாமல்
எல்லாவற்றையும் நாமே செய்தால்
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்ட வேண்டியதுதான்”
நம்பித்தான் ஆகவேண்டும்! நம்பினால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்! யாரை எந்த அளவுக்கு நம்ப வேண்டும் என்ற அளவுகோல் கட்டாயம் வைத்துக்கொண்டு, அதனை அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டே வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய வேலைகளை, நம்மைச் சார்ந்தவர்களை நம்பி, காரியங்களை ஒப்படைத்து செயல்படுத்தினால் தான், நம்மால் நிறைய காரியங்களை நிறைவேற்ற முடியும். அடுத்த பெரிய காரியங்களுக்கு திட்டமிட்டு செயல்பட முடியும்.
நாமே எல்லாவற்றையும் செய்வதானால், நம்மால் சிறிய அளவில் மட்டுமே சாதனைகள் புரிய முடியும். பெரிய சாதனைகள் புரிவதற்கு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவு மிக மிக அவசியம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவு வேண்டுமானால், அவர்களை நம்பாமல் அது எப்படி சாத்தியப்படும் !
- [ம.சு.கு 19.10.2022]
Comments