top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : மிகச்சாதாரணமானவர்கள் வெற்றிபெற (Success without any special skills)

Updated: Nov 30, 2021



  • மிகச்சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, இலவச கல்வியை கற்றவர்கள் வெற்றிபெற முடியுமா?

  • வறுமையில் பிறந்து, பசியையே துணையாக கொண்டு வளர்ந்தவர்கள், பெரும் பொருள் ஈட்ட முடியுமா?

  • எல்லாவற்றிற்கும் பயந்த மனிதன், பிறரை ஊக்குவிக்கும் நல்ல பேச்சாளராக முடியுமா? நம்பிக்கை நட்சத்திரம் ஆகமுடியுமா?

இப்படியே தொடர்ந்து இது முடியுமா? அது முடியுமா? என்று பட்டியலிடத்துவங்கினால், அது மிகவும் நீண்டு கொண்டே போகும். அந்த பட்டியலைத் தெரிந்துகொண்டு நாமென்ன செய்யப்போகிறோம். முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு விடையறிந்தால் ஏதேனும் பயன்படுமென்று உங்கள் மனம் விரும்பும். பொதுவான மக்களிடம் இந்தக்கேள்விக்கு பெரும்பாலும் ‘முடியாது’ என்ற பதிலேவருகிறது. இதற்கு அவர்கள் கூறும் காரணம்,


  • வெற்றிபெற தனித்திறமைகள் வேண்டும்;

  • அதிர்ஷடம் வேண்டும்;

  • பிறவியிலேயே தனிப்பட்ட ஆற்றல்பெற்றவனாக இருந்திருக்க வேண்டும்;

  • நல்ல பெற்றோர்களும், குழந்தைப்பருவத்திலேயே நல்ல பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்;

உண்மையில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் பிறக்கும்போதே பேராற்றல் பெற்றிருந்தனரா? சற்றே புராணத்தை திருப்புவோம். கர்ணன் பிறக்கும்போதே கவச குண்டலத்துடன் தோன்றிய மாவீரன். அதேவேளையில், ஏகலைவனோ, அன்றைய காலகட்டத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட வேடுவகுலத்தில் பிறந்தவன். வில்லாற்றலில், அவன் அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் நிகரானவனாய் தூரத்திலிருந்து பார்த்தே கற்றுத்தேர்ந்தான். கண்பார்வையற்ற ஹெலன் கெள்ளர், காதுகேளாத பீத்தோவன் என்று பலரும் எப்படி அரும்பெரும் சாதணையாளர்களாக முடிந்தது.

இந்த பெயர்களை கேட்டவுடன் நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது. ஆற்றல் இல்லாதவர்கள் ஏதேனும் ஒருவர் எங்கோ ஒரு மூளையில்தானே வெற்றிபெற முடிகிறது. எங்கே நம்வீதியில், நம்மூரில் எவரேனும் வெற்றிபெற முடிகிறதா? என்று கேள்விகேட்பீர்கள்.


உண்மைதான். நமது தெருவில் அப்படி வெற்றிபெற்றவர்கள் யாருமில்லாமல் இருக்கலாம். என்றேனும் அதற்கு என்ன காரணம் என்று யோசித்ததுண்டா? எதைத் தொட்டாலும் இது உன்னால் முடியாது, எதைச் செய்தாலும் இது உனக்கு ஒத்துவராது என்று தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களையும், அவநம்பிக்கையையும் விதித்து வரும் சமுதாயத்தில், எப்படி திறமைகுறைந்த ஒருவன் வெற்றபெற முடியும்.


எல்லோர்க்கும் ஒவ்வோர் திறமையுண்டு;


என் சொல்லை கவணியுங்கள் !! நான் ‘திறமைகுறைந்தவர்’ என்று குறிப்பிடுகிறேனே தவிர, ‘திறமையற்றவர்’ என்று குறிப்பிடவில்லை. ஏனேனில், இறைவனின் படைப்பில் திறமையற்றவர் என்ற ஒருநிலை சிறிதும் இல்லை. எல்லா உயிரினங்களும் பெரும்பாலும் அவற்றிற்காண திறன்களுடனேயே படைக்கப்பட்டுள்ளன. பறவைகள் பறப்பதற்கும், விலங்குகள் ஓடி வேட்டையாடவும் இயல்பாகவே கற்றுக்கொள்கிறது.


இந்த மனித இனம் ஒன்றுதான், சமுதாயத்தால் தொடர்ந்து எதிர்மறை பேச்சுக்களை கேட்டு கேட்டு தன் மீதான தன்னம்பிக்கையை தானே இழந்துநிற்கிறது. பிறக்கும் குழந்தைக்கு கருவிலேயே பெரும் தன்னம்பிக்கையை வித்திடும் மனவலிமை தாய்மைக்கு உண்டு. ஆனால், அந்த தாய் அதை செய்கிறாளா? குழந்தைக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் சொல்லி வளர்க்க தாயாலும், தந்தையாலும் முடியும். அந்த கடமையை பெற்றோர்கள் உணர்ந்து சரிவர செய்கின்றனரா? முதலில் பெற்றோர்களிடம் இருந்து தொடங்கும் இந்த சலிப்புத்தன்மையும், பொறுப்பின்மையும், காலப்போக்கில் சமூகத்தின் தொடர்ந்த எதிர்மறை கருத்துக்களாலும், எண்ணங்களாலும் மென்மேலும் அச்சுறுத்தப்பட்டு, தொடர்ந்து தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவே வளர்ந்துவிடுகிறோம்.


விளைவு, பாரதி சொன்ன ‘வேடிக்கை மனிதராகவே’ வாழ்வை கடத்தி வீணடிக்கின்றோம்.


எல்லோரும் அசாதாரணமான ஆற்றலுடையவரே;


இப்படி சாதாரணமாய் பிறந்தவர்கள் அசாதாரணமானவர்களாக ஆகவே முடியாதா? என்று என்னைக்கேட்டால், மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் அசாதாரண செயல்களைச் செய்யும் ஆற்றல்படைத்தவரே என்பேன். நாம் வாழ்கின்ற சமுதாயமும், சூழ்நிலைகளும் தான் நம்மை சிறிய வட்டத்திற்குள்ளேயே சிக்கவைத்துக்கொள்கிறது.


இந்திய வான்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் சமீபத்திய மூன்று தலைவர்கள் தமிழகத்தின் கிராமங்களிள் பிறந்து, அரசு பள்ளியில் பயின்று வெற்றிபெற்றவர்களே ! அவர்களிடம் இருந்த ஒரே சொத்து தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். கிடைத்தவாய்ப்பை முழுமூச்சுடன் பயன்படுத்தி இந்திய வின்வெளித்துறையில் தங்களுக்கென தனிமுத்திரையை பதித்தார்கள்.


இப்படி தனித்துவமாய் வெற்றிபெற்றவர்களும் இந்த எதிர்மறை கருத்துக்கள் நிறைந்த இந்த சமுதாயத்தை கடந்து வந்தவர்கள்தான். இந்த சாதாரண மனிதர்களை அசாதாரணமனிதர்களாக்கிய வெற்றிப்பாதைதான் என்ன?


1. கனவு


எல்லா வெற்றியின் முதல்படியும் அதற்கான கனவிலிருந்துதான் துவங்குகிறது. அப்துல்கலாம் நம்மை கனவுகாணச் சொன்னது வெற்றிபெற முதல்படி கனவு என்பதனால்தான். நாம் என்ன ஆகவேண்டும், எதை சாதிக்க வேண்டும் என்கின்ற தெளிவான எண்ணம், ஆரம்பத்தில் கட்டாயம் கனவுகளாக நம்மிடம் இருக்கவேண்டும். இந்த கனவெல்லாம் பகல்கனவாய் தற்சமயம் தென்பட்டாலும், அதென்ன காசா? பணமா? கனவுதானே! முதலில் அதை துவங்குங்கள்.


உறக்கத்தில் வரும்கனவல்ல கலாம் சொன்னது, உங்களை உறங்கவிடாமல் செய்யும் கனவுகளைத் தேடித்தேடி தொடர்ந்திடுங்கள். உங்கள் சுயநினைவில் அறிவுகலந்த வெற்றிக்காண கனவை தொடர்ந்து காணுங்கள்.

நாம் அடைய வேண்டிய இலட்சியம் முதலில் கனவாக தெளிவுபெற்றால்தான் அதற்கான பாதையை நம்மால் சரியாக தேடமுடியும்.


2. ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எவ்வாறு?


ஆங்கிலத்தில் 5W (& 1H) என்று சொல்லப்படும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எவ்வாறு? என்ற ஐந்து கேள்விகளையும் உங்கள் கனவு வெற்றிக்கு கேட்டுப்பாருங்கள்.


நான் ஏன் அதை செய்ய வேண்டும் என்கின்ற கேள்வி, நீங்கள் அடைய விரும்பும் இலக்கின் நோக்கத்தினை தெளிவுபடுத்தும்.


நான் எதற்காக அதை செய்ய வேண்டும் என்கின்ற கேள்விக்கான விடை அந்த செயலினால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கான விளைவினை உணர்த்தும்.


நான் அந்த செயலை எப்படி, எங்கே, எவ்வாறு செய்யவேண்டுமென்ற கேள்விகளுக்கான விடை, உங்களை அந்த செயலுக்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய உதவும். நம்முடைய இலட்சியக் கனவுகளுக்கு இந்த ஐந்து கேள்விகள் போதுமான தெளிவையும், செல்ல வேண்டிய பாதையையும் காட்டும்.


குறிக்கோள் இல்லாமல், விளைவுகளின் வீரியத்தை அறியாமல், திட்டமிடலின்றி ஏனோதானோ என்று தொடங்கும் காரியங்கள் பெரும்பாலும் நம்மை தோல்வியை நோக்கியே அழைத்துச் செல்லும்.

3. கூச்சம், வெட்கம்


நம்மில் பெரும்பாலானவருக்கு என்ன செய்யவேண்டுமென்று நன்கு தெரிந்திருந்தும், பிறர் முன்னிலையில் அவற்றை துவக்க பெரும் தயக்கம் காட்டுகிறோம். நமக்கு இயல்பாக இருக்கும் கூச்சசுபாவத்தையும், வெட்கத்தையும் முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், சிறிது சிறிதாக குறைத்துக்கொள்ள முணைப்புடன் முயற்சி மேற்கொள்ளுதல் முக்கியம்.


‘தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்’, என்பது இறைவனிடம் மட்டுமல்ல, எல்லா தொழில்களிலும், சுயமுன்னேற்றத்திலும் இந்த வரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பட்சத்தில், நம் பொருட்களை நாம்தான் சந்தைப்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில், விளம்பரம் செய்யாமல் எதையும் விற்க இயலாது. நாம் நம் பொருட்களை விளக்க கூச்சப்பட்டால், அவைகள் போட்டிநிறைந்த சந்தையில் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடும்.

வாழ்வில் வெற்றிபெற முதலில் இந்த கூச்சத்தை வெற்றிகொள்ள வேண்டும். சிறந்த அறிவு கொண்ட பலர், இந்த கூச்சசுபாவத்தினாலேயே, வாய்ப்புகிடைத்த பல தருணங்களில் மேடையேற பயப்பட்டு, தங்களது பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதில்லை. எல்லா விஷயங்களுக்கும் வெட்கம் அவசியமானதில்லை. நம் ஆற்றலை வெளிப்படுத்த எதற்கு வெட்கம். இந்த கூச்சத்தையும், வெட்கத்தையும் முணைப்புடன் தவிர்க்கப்பழகுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் தானாகவே கிடைக்க ஆரம்பிக்கும்.


4. ஈடுபாடு (எதி) உறுதிப்பாடு


நம் அன்றாட வாழ்க்கை முறையில், சாதாரணமானவர்களுக்கும் அசாதாரணமானவர்களுக்கும் இடையில் இருக்கும் குறிப்பிட்ட வேறுபாடுகளில் இந்த ஈடுபாடு, உறுதிப்பாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடும் ஆர்வமும் மிக அதிம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாட செல்வேன். ஆனால் அதையே தொழில்முறை விளையாட்டாக ஆடி பணம் சம்பாதிக்க விருப்பமிருந்தாலும், அதற்குத் தேவையான மேம்பட்ட திறமைகளை உறுதிப்பாட்டுடன் வளர்த்துக்கொள்ளவில்லை. எந்த துறையானாலும், அதில் வெற்றியடையும் வரை உறுதிப்பாட்டுடன் நம் திறன்களை தொடர்ந்து வளர்த்து வந்தால் மட்டுமே, வாய்ப்புகிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி நம் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த இயலும்.


வெறும் ஈடுபாடும், ஆர்வமும் நம்மை விஷயம் தெரிந்தவராக்குமே தவிர, நம்மை மேம்பட்ட திறமை படைத்தவராக்கிவிடாது. ஈடுபாட்டில் துவங்கி, என்றைக்கு தொடர்ந்த உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு நம் செயலிலும், திறனிலும் மிகுந்த நேர்த்தியை வெளிப்படுத்துகிறோமோ, அன்றுதான் நாம் வெற்றிபெருவதற்கான தேர்வை எழுதவே தகுதிபெறுகிறோம். இடையிடையே வரும் வெற்றி தோல்விகள் எல்லாம் சற்றே நம்மை அலசி ஆராய உதவும் படிக்கட்டுகள்.


5. சூழ்நிலையை சாதகமாக்கல்


தொடர்ந்து எதிர்மறையான விஷயங்களையே கேட்டுக்கொண்டுருந்தால், நமக்கு உள்ளூர ஒரு பயம் வந்துவிடும். அதே சமயம் தொடர்ந்து நம்பிக்கையூட்டும் பேச்சுக்களையும், நல்ல கருத்துக்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் நம்மில் நேர்மறை எண்ணங்கள் தோன்றி, நாம் செயல்களில் ஈடுபட இயற்கையான உத்வேகமும், உற்காகமும் தானாகவே அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட நேர்மறை எண்ணங்களை மட்டுமே கொண்ட சமுதாய அமைப்பு இயற்கையிலேயே ஒருவனுக்கு கிடைக்கப்பெறுவது அரிதிலும் அரிதே! தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமுதாயத்தில், நமக்கு உகந்த உறவு, நட்பு வட்டாரத்தை பெருக்கியும், சுருக்கியும், செலவிடும் நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியும் நேர்மறை சூழ்நிலையை அமைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.


ஔவை - ‘அறிவினார் சேர்க்கை’ இனியதென்றார்.

தமிழ் பழமொழி - ‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்பது.


இவையிரண்டும் உணர்த்துவது ஒன்றுதான். நம் சுற்றம், சேர்க்கை, பேசும் வார்த்தைகள் என்று எல்லாவற்றையும் மிக கவணமாய் தேர்வு செய்து நேர்மறை சூழலை உருவாக்கினால், அந்த சூழலே நமக்கு போதிய உற்சாகத்தையும், தூண்டுதலையும் தொடர்ந்து வழங்கிவரும். கூடாதவற்றை முனைப்புடன் தவிர்ப்பது சில சூழல்களில் கடினமாக இருந்தாலும், வேண்டாதவற்றிற்கு ‘வேண்டாம்’ என்று தெளிவுற பதிலுரைக்க தயங்கிவிடாதீர்கள். தேவையற்றவற்றிற்கு ‘இல்லை’ ‘வேண்டாம்’ என்று சொல்லத் தெரியாததால் தான் பலர் எண்ணற்ற சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறார்கள்.


6. சலிப்பை வெற்றிகொள்ளுதல்


தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக்க நாம் திட்டமிட்டிருப்போம். உறுதி எடுத்த ஒரு வாரத்திற்கு உற்சாகத்துடன் எழுந்து உடற்பயிற்சி செய்வோம். அந்தவார இறுதியில் ஞாயிறு காலை வழக்கம்போல் ஒலிக்கடிகை (அலாரம்) அடிக்கும். கண் விழித்ததும், நம்முடைய மனம் சற்றே சலனத்துடன், இன்று விடுமுறை தினம், சற்று தாமதமாக ஆரம்பிப்போம் என்று உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்போம். இந்த சிந்தனையில் சற்றே கண்ணயர்ந்து விடுவோம். பின் கண்விழித்தால் மணி 7;30’ஐ கடந்திருக்கும். நம்மை நாமே உடனே கடிந்துகொள்வோம். இப்படி முதலில் தொடங்கும் சபலத்துடனான சலிப்பு, மெதுமெதுவாக திங்கள், செவ்வாய் என்று பரவ ஆரம்பிக்கும். ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், நாம் மொத்தத்தில் பாதிநாட்கள் கூட உடற்பயிற்சி செய்திருக்கமாட்டோம். உடனே, நம்மை நாமே லாயக்கற்றவன் என்று தீர்மாணித்துக் கொள்வோம்.


எவ்வளவுதான் நாம் முயற்சி செய்தாலும், நம்முடைய சலிப்பும், சோம்பேறித்தனமும் நம்மை மிக எளிதில் ஆட்கொண்டுவிடுகிறது.


அசாத்தியமானவர்களுக்கும், சாதாரணமானவர்களுக்கும் இடையிலுள்ள அதிமுக்கிய வேறுபாடே இந்த சலிப்பும், சோம்பேறித்தனமும் தான். அவ்வப்போது வரும் சலிப்பு, நம்மை தொடர்முயற்சியிலிருந்து விலகச்செய்கிறது. என்றைக்கும் தொடரும் சோம்பேறித்தம் நாம் மனம் தளரும் போதெல்லாம் அது நம்மை ஆட்டிப்படைத்துவிடுகிறது. இந்த சலிப்பையும் சோம்பேறித்தனத்தையும் எவனொருவன் எதிர்கொண்டு வெற்றி கொள்கிறானோ, அவனே அசாதாரண செயல்களை சாதாரணமாய் செய்யும் வல்லமை பெறுகிறான்.


இந்த சலிப்பையும், சோம்பேறித்தனத்தையும் வெல்ல முதலில் நமக்கு நாமே ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதைத் தவறாமல் துவக்குவதில் குறியாக இருக்க வேண்டும். எந்த செயலையும் தொடங்கி 5 நிமிடம் கடந்துவிட்டால், தானாகவே இந்த சலிப்பும் சோம்பேறித்தனமும் விலகிவிடும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தும் வெவ்வேறு வழிமுறைகளை பட்டியலிட்டு தொடர்ந்து செயல்படுத்தி வெற்றிப்பாதையில் பயணிக்க தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.


7. சுயஅலசல் – சுயமதிப்பீடு;


தினமும் எண்ணற்ற விஷயங்களை பேசித்தெரிந்து கொள்கிறோம். எண்ணற்ற செயல்களை செய்து வெற்றி-தோல்விகளை சந்திக்கிறோம். செய்து முடித்த காரியத்தை சற்று அமைதியான பொழுதில், அது சரியா தவறா என்று அலசிப் பார்க்கிறோமா? அந்த செயலை எப்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், எங்கு தவறு நடந்தது, என்று தெளிவுற அலசிப்பார்த்தால் என்ன, எங்கு, எப்படி நடந்தது என்ற தெளிவு ஏற்படும். இந்தத் தெளிவு பின்னொரு நாளில் நம்மை சரியான வழிகளை தேர்வு செய்ய உதவி புரியும்.


அன்றாடம் இரவு உறக்கத்திற்கு செல்லும் முன்னோ, அல்லது படுக்கையிலோ, அன்றைய தினத்தின் செயல்களை சிந்தித்துப் பாருங்கள். செய்து முடித்த செயல்களின் பலன்களை எளிதாக நாம் அறிவோம். ஆனால் தவறவிட்டவைகளை அறிய இந்த சிந்தனை வழிவகை செய்யும்.


இந்த சுய அலசலில், ஒருபோதும் உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளாதீர்கள். பலரும் தங்களைத் தாங்களே சுய மதிப்பீடு செய்துகொண்டு, பெரும்பாலும் தங்களை திறமையற்றவர், சோம்பேறி என்று தங்களைத் தாங்களே முத்திரைக் குத்திக்கொள்கின்றனர். இந்த எதிர்மறை மதிப்பீடுகள் உங்களை வேதனை படுத்துவதோடு அல்லாமல், உங்களின் உற்சாகத்தையும் மன தைரியத்தையும் சீர்குலைக்கும். உங்களைப்பற்றிய மதிப்பீடுகளை உலகம் தொடர்ந்து போட்டுக்கொன்டே இருக்கும். உங்களைப் பற்றிய எந்த ஒரு உயர்வான ழ தாழ்வான மதிப்பீட்டையும் நீங்கள் போடாதீர்கள் உங்கள் கடமைகளை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள். உயர்வான மதிப்பீடுகள் தானாகவே உங்களை வந்து சேரும்.


சுயஅலசல், உங்களை நீங்களே சரிப்படுத்திக் கொள்ள முக்கியத்தேவை. அதே சமையம், அந்த அலசல்களில், தேவையில்லாமல் மதிப்பீடுகளை புகுத்தி திசைதிருப்பிவிடாதீர்கள்.


இப்படி எண்ணற்ற வாழ்க்கைமுறை மாற்றங்களை முனைப்புடன் நாம் செய்து வந்தால், நாம் எவ்வளவு சாதாரணமாணவராக இருந்தாலும், கட்டாயம் வெற்றிப்படியின் உச்சத்தை அடையமுடியும். ஏனெனில்


‘வெற்றி எப்போதும் தொட்டுவிடும் தூரம்தான்,

அதைத் தொடர்ந்து முயற்சிபவர்க்கு மட்டும் !’


உங்களின் கனவுகள் வெறும் பகல் கனவாய் இல்லாமல், அந்தக் கனவுகளை நிஜமாக்க தேவையான ஊக்கத்தையும், வழிமுறையையும் உங்களின் எண்ணத்தாலும் செயலாலும் முனைப்புடன் எதிர்கொண்டால், வெற்றிக்கணி எந்த ஒரு சாதாரணமாணவருக்கும் கிட்டும். உண்மையில் எந்த சாதாரணமானவரும், ஏதேனும் ஒருவகையில், அசாதாரணமானவர் தான்.


- [ம.சு.கு - 08-09-2021]

49 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page