பல துறைகளில் உயர் பதவிகளை உழைப்பால் அடைந்தவர்களை கேட்டுப்பாருங்கள், பெரும்பாலானவர்களின் குழந்தைப்பருவம் வறுமையில் தான் துவங்கியிருக்கும். அவர்களின் குடும்ப வறுமை அவர்களை படிப்பதற்கும் உழைப்பதற்கும் தொடர்ந்த உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருக்கும்.
வாய்ப்புகளை பயன்படுத்தியவர்கள்
கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பயன்படுத்தி நன்கு படித்தார்கள். படிக்க வாய்ப்பில்லாதவர்கள் கிடைக்கும் வேலையில் சேர்ந்து கடுமையாக உழைத்து முன்னேறினார்கள். தனது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை தங்களின் கடின உழைப்பால் உயர்த்தினார்கள். அவர்களை வழிநடத்தியது எது?
கலைத்துறை வெற்றியாளர்கள்
இன்று பல வெற்றி பெற்ற எழுத்தாளர்களையும் நடிகர்களையும் பார்க்கிறோம். அவர்களின் பெரும்பாலானோரின் பின்புலம் ஏதேனும் ஒரு கிராமத்தில் துவங்கியிருக்கும். எங்கோ ஒரு குக்கிராமத்தில் அதிகம் படிக்க நூல்கள் இல்லாத ஊரில் எப்படி இப்படிப்பட்ட சொல்லாற்றல் பெற்ற கவிஞர்களும் எழுத்தாளர்களும் உருவானார்கள்?
திரைப்படக் கல்லூரிகளைக்கூட அறியாத அந்த மனிதர்கள், எப்படி நடிப்பிலே கரை கண்டார்கள். இவர்களை வழி நடத்தியவர்கள் யார்?
வெற்றாயாளர்களை இயக்கியது எது?
ü எல்லா வெற்றியாளர்களையும் துவக்கத்திலிருந்து வழி நடத்துவது யார்?
ü கற்றவர்களே இல்லாத ஊரில் பெரும் கவிஞர்கள் உருவாக வழி நடத்தியது எது?
அவர்கள் இன்று அடைந்துள்ள வெற்றிக்கு ஆயிரமாயிரம் காரணங்களைச் சொன்னாலும், என்னை பொருத்தமட்டில் அன்றாடம் அவர்களை வழிநடத்தியது, அவர்களின் சுயஉற்சாகமும், சுயஊக்கமும் மட்டும்தான்.
நம்முள் உற்சாகம் தோன்றவேண்டும்
எத்தனைதான் வெற்றிக் கதைகளை படித்தாலும், எத்தனை வழிமுறைகளை தெரிந்து கொண்டாலும், அதை செயல்படுத்த முதல் தேவை சுயஉத்வேகம். எந்த செயலானாலும், அதில் நம் உள்ளம் ஈடுபாடு செலுத்தாவிட்டால், அது சிறப்புற நடக்க வாய்ப்பில்லை. நம்முள் உத்வேகமும், உற்சாகமும் தோன்றாவிட்டால், அது எப்படிப்பட்ட செயலாக இருந்தாலும் வெறுமனே கடந்துபோகும்.
தினம்தோறும் மாறும் மனநிலை
நம்முடைய சுயஉத்வேகமும், உற்சாகமும் நாளுக்கு நாள் பல்வேறு காரணங்களினால் மாறுபடக் கூடிய ஒன்று. ஒரு சில நாட்கள், மிகுந்த உத்வேகத்துடன் இருப்போம். அந்த உற்சாகம் நிறைந்த நாட்களில், வேலைகள் இரட்டிப்பு வேகத்தில் நிகழும். ஆனால், ஏனோ காரணங்களினால், சில தினங்கள் மிகவும் சோர்வாகச் செல்லும். அன்றைய தினங்களில் செய்ய வேண்டிய செயல்களில் பாதிகூட நடப்பதில்லை.
மனித செயல்திறன், பல நேரங்களில் அவர்களின் எண்ண ஓட்டங்கள், மனநிலைகளை பொருத்து பெரிய மாற்றங்களைச் சந்திக்கிறது. இப்படி மாறிக் கொண்டே இருக்கும் மனநிலைகளில் எப்படி நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் நமக்கு தேவையான காரியங்களில் சிதறாமல் செலுத்தி சாதிப்பது என்பதே ஒரு பெரிய தொடர் சோதனைதான்.
குரங்கு மனதை எப்படி கட்டுப்படுத்துவது
நமது குரங்கு மனதை முற்றிலுமாக மாற்ற முயற்சிப்பது, என்னை பொருத்தமட்டில் முட்டாள்தனமே.
நமது மனமானது, ஒரு செயல் நிகழ்வதை காட்டிலும், பல நூறு மடங்கு வேகத்தில் அதன் சிந்தனைகளை பலவற்றில் செலுத்துகிறது. அப்படி நம் சிந்தனை / எண்ணங்களின் வேகத்திற்கு, என்றுமேநம் செயல்களால் என்றுமே ஈடு கொடுக்க முடியாது. ஆனால் நமது மனத்தின் சிந்தனை / எண்ணங்களின் இருக்கும் ஒரு தனித்துவம் யாதெனில், அது படிப்படியாய் வசியம் செய்யப்படக்கூடிய ஒன்று.
சுய-மனோவசியம்
ஒரு குறிப்பிட்ட எண்ணம் செயல் நடக்க வேண்டும் என்று எவ்வளவு தீவிரமாக நாம் எண்ணி முயற்சிக்கிறோமோ, அது அப்படியே நம்முல் வசியமாக மாறிவிடுகிறது. அந்த வசியப்பட்ட மனதை மாற்ற எளிதில் முடியாது. வசியங்களை, மந்திர-தந்திர நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஒருவர் பிறருக்கு செய்வதைப் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் வெற்றிபெற அந்த வசியத்தை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அடைய விரும்பும் நிலையை படங்களாக கண்டெடுத்து உங்கள் அறையில் நிரப்புங்கள்.
அன்றாடம் உங்கள் இலட்சியப் பாதையில் எவ்விடத்தில் இருக்கிறீர்கள்? அடுத்தது என்ன செய்ய வேண்டும்? என்பதை சுய அலசல் செய்து திட்டமிடுங்கள்.
உங்கள் இலட்சியப் பாதையின் வழிகாட்டிகளை, அவ்வப்போது சந்தித்து ஆலோசனை பெறுங்கள்?
இலட்சியப் பாதையில் வரும் சிறுசிறு தோல்விகளைக் கண்டு மனம் துவண்டு விடாதீர்கள். “யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்கள். ஆனால், யார் மீண்டும் எழுந்து நிற்கிறாரோ, அவரே வெற்றி பெற தகுதியுடையவர்.
உங்களைச் சுற்றிலும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்தால் அது மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.
எதிர்மறையாளர்களுடன் இருப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், மனம் எதை அதிகம் கேட்கிறதோ அதை அப்படியே நம்பும்.
உங்கள் சிந்தனைகள் எண்ணங்களை சிதறடிக்கும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருங்கள். இந்த சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினாலே உங்களுக்கு உழைப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும்.
இன்று செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிட்டு, அவற்றில் முக்கியமானதும் சற்று கடினமானதுமான செயலை காலையிலேயே எடுத்து செய்து முடித்து விடுங்கள். கடினமான செயல்களை முடித்தால், இதரவற்றை செய்ய அதுவே மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும்
உங்களுக்கு ஏற்றது எது?
எவை உங்களை ஊக்கப்படுத்தும்?
எவை உங்களை சோர்வடையச் செய்யும்?
என்பதை நீங்களே தொடர்ந்து சுய அலசல் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
உங்களின் ஊக்கம்
- உங்களின் செயலில் வெளிப்படும்
உங்களின் செயல்பாடுகள்
- உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்
உங்களின் வெற்றி
- உங்களுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும்.
எதிர்மறைகளை விலக்குங்கள்;
ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்;
வீட்டுச் சூழலை நேர்மறையாக்குங்கள்;
உங்கள் லட்சியங்களை
சிறு சிறு மைல்கள்களாக பிரித்து
ஒவ்வொன்றாய் முடியுங்கள்;
செயல்களின் முன்னேற்றத்தை
தொடர்ந்து மறுஆய்வு செய்து கொள்ளுங்கள்;
சிறுசிறு வெற்றியும், முன்னேற்றமும்
உங்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும்;
மறவாதீர் !!
எல்லா வெற்றிக்கும் - வெற்றியாளர்களுக்கும்
அவர்களின் சுயஊக்கமும் தொடர் உற்சாகமுமே
முழுமுதற் காரணம் என்பது நிதர்சனமான உண்மை !!
- [ம.சு.கு 12-01-2022]
Comentários