top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : சுயஒழுக்கம் - சுயகட்டுப்பாடு

நம் ஆசை


பல வெற்றியாளர்களிடமும், பல தன்னம்பிக்கை நூல்களிலும் நாம் பொதுவாக அறிந்து கொண்ட ஒரு விடயம், “தொடர்ந்து பயிற்சி வெற்றியை கொடுக்கும்”. நம் எல்லோர்க்கும் தொடர்ந்து பயிற்சி செய்து வெற்றி பெற ஆசை இருக்கிறது. ஆனால் எண்ணுவது போல் பயிற்சி செய்கிறோமா?


நம் அனுமானம்


நாம் சிறந்த கட்டுப்பாட்டுடனும், சிறந்த ஒழுக்கத்துடனும் வாழ்வதாக நம்மை நாமே அனுமானித்துக் கொள்கிறோம்.


உண்மையில்,

நம் மீது நமக்கு முழுமையான கட்டுப்பாடு இருக்கிறதா?

சுயஒழுக்கத்தை அன்றாடம் கடைபிடிக்கிறோமா?


இந்த கேள்விக்கான பதிலை உங்களுக்கு நீங்களே அலசுங்கள்.


நம் யதார்த்தம்


 • நாளை முதல் அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டு உறங்கச் செல்கிறோம். மறுநாள் காலை நம்மில் எத்தனை பேர் ஐந்து மணிக்கு எழுந்து இருக்கிறோம்?

 • யாரிடத்திலும் கோபம் கொள்ளக்கூடாது என்று எண்ணுகிறோம். இருக்க முடிகிறதா?

 • புதியவற்றை கற்க வேண்டும் என்று நினைக்கிறோம் முடிகிறதா?

இப்படி எண்ணற்ற பணிகளை செய்து முடிக்க ஆசையிருந்தாலும், எல்லாவற்றையும் செய்து முடிக்கிறோமா? என்றால், “இல்லை” என்பதுதான் நம்மில் பெருப்பாலானவர்களின் பதில்.


சிந்திக்காமல் துவங்கிவிடுகிறோம்


பல சமயங்களில், நம்முள் ஏற்படுகின்ற சில தற்காலிக உந்துதல் / அகத்தூண்டல் காரணமாக, பெரிய பணியினையோ, அல்லது குறிப்பிட்ட திறன் மேம்பாட்டு செயல்களையோ / பயிற்சிகளையோ துவக்கிவிடுகிறோம். அந்த அகத்தூண்டல்கள் சில சமயங்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.


அந்த அகத்தூண்டல் உள்ள வரை, துவக்கிய செயல்களை உத்வேகத்துடன் செய்துவிடுவோம். அதன் பின்னால், அதைத் தொடர்வதில்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இங்கு சிக்கல். அந்த உந்துதல் குறையும்போது, ஏதேனும் ஒரு சில யதார்தமான காரணங்களின் பொருட்டு அது தடைபடுகிறது. அந்த தற்காலிக தடை, ஓரிரு வாரங்களிலேயே நிரந்தரத் தடையாகிவிடுகிறது. நம்முடைய கட்டுப்பாடும், ஒழுக்கமும் சிறிதும் வேலை செய்வதில்லை.


முதல்தேவை “சுயஒழுக்கம்”


நடைமுறையில் எதை சாதிப்பதானாலும்

முதல்தேவை “சுயஒழுக்கம்”;

இதை, இன்ன நேரத்தில், இப்படி செய்ய வேண்டும்

என்கின்ற விதியை நிர்ணயித்து

அன்றாடம், அதை, அந்நேரத்தில் செய்தால்தான்

பயிற்சிகள் பலன்தரும்;

தவறாது தினமும் செய்யும் சுயஒழுக்கமே

வெற்றியின் படிக்கட்டுகள்;


நீங்கள் புல்லாங்குழல் வாசிக்க விரும்புகிறீர்கள். அடிப்படை நிலை வாசிக்க குறைந்தது 20 - 30 மணிநேர பயிற்சி தேவைப்படும் என்று குரு சொல்கிறார். குரு அன்றாடம் ஒரு மணிநேரம் தொடர்ந்து பயிற்சி செய்தால் குழல் கைகூடும் என்று சொல்கிறார். அன்றாட பயிற்சியை செய்யாமல் விட்டுவிட்டு, வாரம் ஒருமுறை வகுப்புக்கு மட்டும் சென்று பயிற்சி மேற்கொண்டால், அது 20 வாரங்கள் அல்ல 20 மாதங்கள் ஆனாலும் சரியாக வராது.


புல்லாங்குழல் கற்க, தினமும் மூச்சுப்பயிற்சியும் குழல் வாசிப்பு பயிற்சியும் கட்டாயம் செய்யவேண்டும். ஓரிரு நாள் தவறவிட்டாலும், அடுத்த முறை வாசிக்க துவங்கும்போது சுவரங்கள் பிடிபட சற்றே முரண்டுபிடிக்கும். அன்றாடம் காலை / மாலை வேளையில் ஏதேனுமொரு அரை மணி நேரம் ஒதுக்கி தவறாது பயிற்சித்தால் மட்டுமே புல்லாங்குழல் நமக்கு கட்டுப்படும்.


தவறவிட்டால் கஷ்டப்படுவீர்கள்


அன்றாடும் குறித்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற விதியும்

அதை தவறாது செய்யும் சுய ஒழுக்கமும் தான்

உங்கள் வெற்றிப்பாதையின் படிக்கட்டுகள்.


ஒருநாள் தவறவிட்டால் ஏணியில் ஒரு படி ஒடிந்தது போலத்தான். அடுத்த படியை ஏற அதிக சிரமம் இருக்கும்.


உடல் பருமனை குறைக்க உண்ணும் உணவில் கட்டுப்பாடு வேண்டுமென்றால், அதை தினம்தவறாமல், வேளைதவறாமல் கடைபிடித்தால் தான் பருமன் குறையும். அவ்வப்போது அந்த ஒழுக்கத்தை தவறவிட்டு விட்டு, கண்டதைத் தின்றால் எடை குறைய வாய்ப்பேயிருக்காது.


சுயஒழுக்கத்தை வளர்ப்பது எப்படி?


 1. சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் வருவதற்கு முதலில் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு அவசரத்தின் காரணமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தவறினாலும் உடனடியாக மீண்டும் தொடங்குங்கள். சிறு தடைகளுக்கு மனம் தளராமல் மீண்டும் துவக்கி தொடர்ந்திடுங்கள்.

 2. அடுத்ததாக உங்கள் வீட்டின் சூழலை கூர்ந்து கவனித்து, எதிர்மறைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்க விரும்பினால்

  • உங்களை சுற்றிலும் கவனச்சிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • வேண்டாதவைகளை பார்ப்பதை தவிர்த்தாள் மனம் சஞ்சலம் அடைவது தானாக குறையும்.

3. கண்முன்னே மிட்டாய் இருந்தால் எல்லா குழந்தைகளும் கேட்கும். இல்லாதபோது கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

 • சுய கட்டுப்பாடும சுய ஒழுக்கம் என்பது பிறப்பால் வருவது அல்ல;

 • அவரவர் சொந்த முயற்சியால் ஏற்படுத்திக்கொள்ளும் நற்பழக்கம்


4. நாம் அடைய விரும்பும் லட்சியம் எதுவானாலும், அதை நோக்கிய பயணத்திற்கு முக்கிய தேவை இந்த சுயஒழுக்கமே. அன்றாடம் போதிய அளவு முயற்சியையும், பயிற்சியையும் ஒழுக்கம் தவறாது செய்து வந்தால், எந்த ஒரு எட்டாக்கனியான வெற்றியும் கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கும்.


5. சில சமயங்களில் கால சூழ்நிலைகளாலும், வெளியூர் பிரயாணங்களாலும் ஒன்றிரண்டு நாட்கள் பயிற்சிகளை தவறவிடக்கூடும். அதற்காக உங்களை நீங்களே கடிந்து கொண்டு “என்னால் முடியாது” என்ற எதிர்மறை எண்ணத்திற்கு சென்றுவிட வேண்டாம். “தவற விட்டால் மீண்டும் துவக்கிவிடுங்கள்”.


6. ஒருசில நாட்களில், ஒரு மணிநேர பயிற்சி முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட தினங்களில் குறைந்தது 10-15 நிமிடங்களேனும் தவறாமல் பயிற்சி செய்துவிடுங்கள். உங்களால் இயலாத நாட்களில் நீங்கள் எவ்வளவு முயன்று அந்த ஒழுக்கத்தை கடைபிடிக்கிறீர்கள் என்பதில் தான், உங்களின் மனஉறுதியும் இலட்சியத்தை நோக்கிய அர்ப்பணிப்பும் வெளிப்படும்.


எல்லா நாளும் நல்ல நாள்தான்


ஆடிக்கொரு நாள்!

அமாவாசைக்கொரு நாள்!

செய்பவர்களால், எதையும் சாதிக்க இயலாது.

அன்றாடம் தவறாமல்

களத்தில் இறங்கி பயிற்சிப்பவர்களால் மட்டுமே

அடுத்த நிலைக்கு உயர முடிகிறது.


 • வெற்றிக்கு முதல் தேவை சுயகட்டுப்பாடு / சுயஒழுக்கம்.

 • மறவாதீர் உங்களின் வெற்றி உங்களின் ஒழுக்கத்தில் தான்.


- [ம.சு.கு – 05-01-2022]32 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

留言


Post: Blog2 Post
bottom of page