top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : இழப்புகளை குறைப்பதுவும் ஒருவகை வெற்றியே

காப்பீடு விதிகள்


நீங்கள் சொத்துக் காப்பீட்டு ஆவணங்களை படித்திருக்கிறீர்களா?


திருட்டு, கொள்ளை, தீ விபத்து போன்றவைகள் ஏற்பட்டால், அந்த விபத்துக்களினால் ஏற்படும் சேதாரத்தை கூடியவரை குறைப்பதற்கான முயற்சியை உரிமையாளர் எடுத்திருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கும். தீ விபத்து நேரும்போது, உரிமையாளர் தான் முழுமையாக காப்பீடு செய்துவிட்டதால், தனக்கு எந்தப் பொருளிழப்பும் இல்லை என்று கூறி, எந்த ஒரு தடுப்பு நடவடிக்கைகளையும் (தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுப்பது உள்ளிட்ட…) எடுக்காமல் இருந்தால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தொகையை குறைத்துவிடும்.


இந்த சேதார தடுப்பு / குறைப்பு நடவடிக்கைகள், விபத்து காப்பீடு என்ற இடத்தில் மட்டுமின்றி, வாழ்வின் எல்லா தருணங்களிலும், எல்லோரும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய ஒரு முக்கிய கடமையாகும்.


பால் பொங்கினால்


வீட்டிலே பால் காய்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ சிந்தனையில் அது கவனிக்கப்படாவிட்டால், பால் பொங்கிவிடுகிறது. அவ்வாறு பொங்கும்பட்சத்தில், அது மேலும் பொங்கி வழிவதை தடுக்க, உடனடியாக அடுப்பை அணைக்க வேண்டும். அதைச் செய்யாமல் நின்றால், பால் முழுவதுமாய் பொங்கி பாத்திரம் தீய்ந்து, அடுப்பும் பாழ்பட்டுவிடும்.


பொங்கவிட்டவரை பின்னர் திட்டலாம்


சிலசமயம், சிலரின் கவனக்குறைவினால் தவறுகள், விபத்துக்கள், சேதாரங்கள் நேரக்கூடும். அப்படிப்பட்ட தருணங்களில், முதல் கட்டமாக அந்த இழப்பு, சேதாரங்களை தடுக்கின்ற / குறைக்கின்ற நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஆனால் ஒரு சிலர் அந்த தருணத்தில், அதை செய்தவரை கடிந்துகொண்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தவரை மெதுவாகப் பின்னர் திட்டலாம். முதலில் அந்தத் தவறினால் ஏற்படும் இழப்புக்களை குறைக்க முற்பட வேண்டும்.


தேசத்தைக் காக்க வீரர்கள் போராடுகிறார்கள்


தேசத்தின் அமைதியை காக்க, தீயசக்திகளின் ஊடுருவலையும், தீவிரவாதத்தையும் தடுத்திட, ஒரு புறம் இராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். கடுங்குளிரிலும், எல்லையில் நிற்பது, அடுத்த நாட்டின் எல்லையை கைப்பற்ற அல்ல. நம் நாட்டை அநியாயக்காரர்களிடம் இருந்து காத்திட. தேசத்திற்கு எந்தவொரு இழப்பும் ஏற்படாதவண்ணம் அவர்கள் போராடுகிறார்கள். தேவைப்படும்போது பொதுஜன இழப்புக்களைத் தவிர்க்க, சில இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர்.


நூறுபேரைக் காக்க, தான் சாகலாம் என்ற உயரிய எண்ணத்துடன் நாட்டிற்காக தங்களை அற்பணிக்கும் அந்த தியாகிகளை மனதில் இருத்தினால், உயிர்களின் மதிப்பும், இழப்புக்களை தடுப்பதற்கான உத்வேகமும் நமக்குள் தானாகவே பிறக்கும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


சிலசமயங்களில், நம் கட்டுப்பாடுகளை எல்லாம் தாண்டி, சில அசம்பாவிதங்கள் நடந்தேறிவிடும். அப்படி நடக்கக்கூடாத விபத்துக்கள் நிகழ்கின்ற பட்சத்தில், அவை பெரிய இழப்புகளாகி விடாத வண்ணம், முன்னெச்சரிக்கையாக சில தடுப்பு நடவடிக்கைகளை, முன்னரே எடுத்து வைத்திருப்பார்கள்.


  • மோட்டார் வாகனங்களின் இருக்கையைச் சுற்றி காற்றுப்பைகள்

  • விமானங்களில் மிதவை உடைகள், வான்குடை மிதவைகள் (பாராசூட்)

  • பெரிய கப்பல்களில் அவசரகால உபயோகத்திற்கு பல சிறிய கப்பல்கள்

என்று எண்ணற்ற விபத்து சேதார தவிர்ப்பு விடயங்களை செய்து வைத்திருப்பார்கள். இதை செய்வதற்கு பதிலாக விபத்து ஏற்படாமல் இருக்க செலவு செய்திருக்கலாமே? என்று நீங்கள் கேட்கலாம். எத்தனைதான் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை செய்தாலும், இயற்கை சீற்றங்களுக்கு முன்னால் அவை தவிடு பொடியாகிவிடும். எவ்வளவு ஆழமாக நங்கூரமிட்டு கப்பல் நின்றாலும், கடல்சீற்றமும் ஆழிப்பேரலைகளும் அவற்றைப் புரட்டிப் போட்டுவிடும். அப்படி நம் சக்தியை மீறிய சில நிகழ்வுகள் அவ்வப்போது உலகின் ஏதாவதொரு மூலையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.


புயலை தடுக்கமுடியாது – எச்சரிக்கலாம்


வானியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாய், புயல் சின்னம் உருவாவதும், அந்த புயல் எந்த நேரத்தில், என்ன வேகத்தில், எந்த இடத்தில் கரையை கடக்கும் என்று கனித்துவிடுகிறார்கள். இந்த எச்சரிக்கையை, அரசாங்கம் கூடியவரை எல்லா தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும் மக்களை எச்சரிக்கிறது.


புயலை அரசாங்கத்தால் தடுக்க முடியாது. அதனால், அந்த புயலினால் ஏற்படும் சேதங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கிறது. அரசாங்கத்தின் அறிவிப்புகளை அறிந்து, நாமும் உரியவற்றை செய்தால், நம் தனிமனித இழப்புக்களும் குறைவாக இருக்கும்.


என்ன விபத்தானால் எதை முதலில் மீட்கிறோம்?


சாலையில் வாகன விபத்துக்கள் நிகழ்கின்ற நேரத்தில், உடனடியாக அதில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி செய்து முடிந்தவரை காப்பாற்றுகிறோம். அந்த வாகனத்திற்கான சேதாரங்களை அடுத்தபடியாகத் தான் பார்க்கிறோம். அங்கே வாகனங்களைக் காட்டிலும், உயிர்களுக்கு மதிப்பு அதிகம்.


அதேநேரத்தில், ஒரு குடிசைப் பகுதியில் தீ விபத்து நேர்ந்தால், அங்கு வரும் தீயணைப்பு படையினர் உயிர்களைக் காப்பதற்கு ஒரு குழுவாகவும் குடிசைகளின் தீயை அணைப்பதற்கு ஒரு குழுவாகவும் போராடுகிறார்கள். இங்கே உயிர்களோடு, ஏன் குடிசைகளுக்கும் சமமான மதிப்பை அளிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அங்கு உயிர்களுக்கு இணையாக, தீயையும் அணைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒருவேலை தீ கட்டுக்கடங்காமல் பரவினால், பக்கத்து குடிசை, பக்கத்து தெரு என்று அந்த ஊரையே அழித்து விடும். அதிகபட்ச உயிர் சேதத்தை தடுக்க, முதலில் அதை அணைக்கத்தான் வேண்டும். அதனால்தான் தீவிபத்தில் சிக்கியுள்ள உயிர்களைக் காக்க ஒரு குழு, நெருப்பை அணைக்க ஒரு குழு என்று பிரிந்து இரண்டையும் ஒருசேர செய்கின்றனர்.


இதே மழை-வெள்ளம் என்று வரும்போது, வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாதென்பதால், அப்போது உயிர்களை காக்க முக்கியத்துவம் கொடுத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறார்கள். வெள்ளம் வருவதற்கு முன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம், ஆனால் வெள்ளம் வந்தபின், அங்கே உயிர்களை மட்டுமே காக்க முடியும்.


காப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்


சூழ்நிலைகள் – நிகழ்வுகளுக்கேற்ப, விபத்துக்களினால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சேதாரங்களை குறைக்க போராடுகிறோம். ஏனெனில் எவ்வளவுக்கெவ்வளவு உயிர்களையும், பொருட்களையும் சேதாரத்திலிருந்து காக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றை மீண்டும் உருவாக்க எடுக்கும் நேரத்தையும் செலவையும் மிச்சம் செய்கிறோம்.


ஆக்கல் என்பது எவ்வளவு முக்கியமோ

அழிவு நேரும்போது

அவற்றிலிருந்து காத்தலும் அதிமுக்கியம்;

நம்மிடம் உள்ளவற்றை இழக்காமல்

அதை காப்பதே மிகப்பெரிய வெற்றி தான்;



புதியதை உருவாக்குவது ஒருவகை வெற்றி

இருப்பதை காப்பது ஒருவகை வெற்றி

அழிவதை தடுப்பது ஒருவகை வெற்றி

அழிவே வராமல் செய்வது ஒருவகை வெற்றி

சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு வெற்றிகள் வேறுபடும்

வெற்றிகள் எதுவானாலும்

சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சாதுரியமாக நடந்தால்

வெற்றி நமக்குத்தான்


- [ம.சு.கு 20.07.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page