top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஜெயிப்பதற்காக விளையாடுங்கள் - தோல்வியை தடுப்பதற்காக அல்ல

என்ன தலைப்பு இது? தோல்வியை தவிர்ப்பது என்பது ஜெயிப்பது தானே? இரண்டும் ஒன்றுதானே!! இது என்ன தோல்வியை தவிர்ப்பது குறித்து இப்படி ஒரு எதிர்மறை நிலைப்பாடு! என்று நீங்கள் என்னை கேட்க விரும்பலாம்.


வெற்றி-தோல்விகள் ஒரு உளவியல் நிலை


நடைமுறையில், தோல்வியை தவிர்ப்பதற்காக விளையாடுவதற்கும், ஜெயிப்பதற்காக விளையாடுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு. இது விளையாட்டு என்று மட்டுமின்றி, இன்றைய சூழலில் வாழ்க்கையிலும் நம் வெற்றியை தீர்மானிக்கும் ஒரு வகையான உளவியல் நிலை.


உதாரணத்திற்கு கால்பந்து, ஹாக்கி போன்ற ஏதேனுமொரு விளையாட்டை எடுத்துக்கொள்வோம். தோல்வியை தவிர்ப்பதற்காக விளையாடுவதானால், தொடர்ந்து தடுப்பாட்டத்தை மட்டுமே விளையாடுவீர்கள். களத்தில் உங்கள் வீரர்கள் எல்லோருமே ஒரு பக்கமாகவே பெரும்பாலும் நின்றுகொண்டு, எதிர் அணியினர், எந்த ஒரு புள்ளிகளையும் சேகரிக்க வாய்ப்பளிக்க மாட்டீர்கள். அதே சமயம் நீங்கள் எதிராளியின் பக்கம் பந்தை எடுத்துச் சென்று புள்ளிகளைப் பெற முயற்சிக்காத பட்சத்தில், உங்களுக்கும் வெற்றி கிடைக்காது.


நீங்கள் முன்னேறிச் சென்று புள்ளிகளை எடுக்காமல், தடுப்பாட்டம் மட்டுமே ஆடுகின்ற சூழலில், எதிராளி ஆக்ரோஷமாக ஆடும் பட்சத்தில், உங்கள் அணியில் நிகழும் ஏதேனுமொரு சிறிய தவறுகூட அவர்களுக்கு புள்ளிகளைப் பெற வாய்ப்பாகலாம். அவர்களுக்கு எதேச்சையாக கிடைக்கும் அந்த ஒரு புள்ளியே வெற்றியை தீர்மானித்துவிடும்.


வெறும் தடுப்பாட்டம் என்பது, எல்லா சூழ்நிலைகளுக்குமான பொதுவான வழிமுறையன்று. ஆட்டத்தில், நீங்கள் முன்னரே அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்தால், அந்த முன்னிலையை தக்கவைக்க, எதிராளி மேற்கொண்டு புள்ளி சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இந்த தடுப்பாட்டம் கட்டாயம் சிறந்த வழி. அங்கு இந்த தடுப்பாட்டம் உங்களுக்கு வெற்றியை உறுதிசெய்யக்கூடும். ஆனால், நீங்கள் முன்னிலையில் இல்லாதபோது, தடுப்பாட்டம் என்பது எந்த வகையிலும் வெற்றி தரப்போவதில்லை.


முன்னெச்சரிக்கைக்கும் ஒரு அளவு வேண்டும்


வியாபாரத்தில், நாம் ஈடுபடும் ஒவ்வொரு வர்த்தகங்களிலும் நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஆனால் அந்த முன்னெச்சரிக்கையும் ஒரு எல்லை வரைதான். முன்னெச்சரிக்கை என்ற பெயரில் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் தள்ளி போட்டாலோ, அல்லது துணிந்து வியாபாரம் செய்ய தவறினாலோ, எப்படி பெரிய இலாபங்களையும், வெற்றிகளையும் பெறமுடியும்.


எந்தவிதமான இழப்பும் வந்துவிடக்கூடாது என்ற கண்ணோட்டத்திலேயே வர்த்தகம் செய்து கொண்டிருந்தால், உங்கள் வியாபாரம் ஒரளவிற்கு நடந்துகொண்டு தான் இருக்கும். சிறிய அளவில், தொடர்ந்து பொருள் ஈட்டிக்கொண்டேதான் இருப்பீர்கள். ஆனால் அந்த முற்றிலும் ஜாக்கிரதையான கண்ணோட்டத்தில், மிகப்பெரிய வெற்றிகள் பெறுவது சாத்தியமில்லை.


துணிந்தவர்க்குத்தான் வாய்ப்பு


வியாபாரமோ, விளையாட்டோ, யாரொருவர் துணிந்து பெரிய சவால்களை சந்திக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பெரிய வெற்றிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதே அப்படிப்பட்ட பெரிய சவார்களில் தோல்வியேற்பட்டால், இழப்புகளும் அதீதமாக இருக்கக்கூடும். அன்றுவரை ஈட்டிய எல்லா செல்வங்களையும் தொலைத்து கடனாளியாக நிற்கக்கூடும். பெரிய சவால்களை சந்திப்பவர்க்கு, வெற்றி-தோல்விகள் எதுவானாலும், எல்லாமே பெரிய அளவில் தான் வந்து போகின்றன.


சாதிக்க ஆசைப்பட்டால்

சரித்திரம் படைக்க விரும்பினால்

சவால்கள் பெரியதாக இருக்க வேண்டும்

முன்னெச்சரிக்கை என்ற பெயரில்

சவால்களை சுருக்கினால்

வெற்றியின் அளவும்

சிறியதாகத்தான் இருக்கும்.


இங்கு என்றுமே, வாழ்வா-சாவா என்கிற போராட்டத்தில்தான், மிகப்பெரிய சரித்திரங்களும், சாம்ராஜ்ஜியங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன.


தோல்வியை தடுக்க போராடுபவர்க்கு, தோற்பதற்கான வாய்ப்பதிகம்


யதார்த்தத்தில், நாம் தோல்வியை தவிர்ப்பதற்காக விளையாடுவதானால், நமக்கு இந்தப் போட்டியைத்தவிர்த்து வாழ்வதற்கு வேறேதோ வழியிருப்பதாகத்தானே பொருள். இந்தப்போட்டியில்லாவிட்டால் மற்றொன்றில், அல்லது வேறுவிதங்களிங் பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்கிடுகிவோம். அப்படி நமக்கு வேறு வழி இருக்கிறதென்கிற பட்சத்தில், இன்றைய போராட்டத்தில், நம்முடைய போராடும் குணமும், ஆற்றலும் தானாக குறைகிறது அல்லவா! இப்படிப்பட்ட சூழ்நிலையில், எதிராளியின் வீரியத்தையும் போராட்டத்தையும் பொறுத்து, வெற்றி அவருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கிறது.


வெற்றிக்காக போராடுபவர்கள் பலசாலிகள்


ஜெயிக்க வேண்டும் என்ற வெறியிருந்தால், பின் தடுப்பாட்டத்தை ஆடிப் பயனில்லை. ஆக்ரோஷமாக எதிராளியை தாக்கினால் தான், அவர்கள் அசரும் ஒவ்வொரு வாய்ப்பையும் நமதாக்கி, புள்ளிகளை அல்ல முடியும். நாம் முன்சென்று தாக்காமல், தடுப்பதில் குறியாக இருந்தால், நமக்கு புள்ளிகள் ஏறாது.


தாக்குபவர்கள், காப்பவர்களைக் காட்டிலும்

மூன்று மடங்கு பலம் பொருந்தியவர்களாக இருக்கவேண்டும்


என்று பொதுவானதொரு போர் விதி உண்டு. ஏனெனில், ஒரு நாடு தன் எல்லைகளை விரிவுபடுத்த முடிவெடுத்து தானாக முன்சென்று போர் துவக்கினால், அது அன்னிய மண்ணுக்குள் நுழைந்து போராட வேண்டும். அன்னிய மண்ணில் அபாயங்கள் அதிகம் இருக்கக்கூடும். அந்தமண்ணின் பூர்வீகமான வீரர்கள், அந்த நிலப்பரப்பை நன்கு தெரிந்தவர்கள். மறைந்திருந்து எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான், முன்சென்று தாக்குபவர்கள் அந்த தாக்குதல்களையெல்லாம் சமாளிக்க, அதிக பலம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.


பலம் குறைந்தவர்கள், தாங்களாக முன்னேறிச் சென்று தாக்கமாட்டார்கள். அவர்கள், எதிரிகளை தங்கள் வலைக்குள் வரவழைத்து சிக்கவைக்கவே திட்டமிடுவார்கள். அவர்கள் அங்கு வெற்றிகொள்ள ஒன்றுமில்லை. தங்கள் தேசத்தின் இழப்பை தடுக்க போராடுகிறார்கள்.


எல்லைகளை விரிவுபடுத்த முன்சென்றால்தான் முடியும்


பெரிய போர்களின் மூலம், தேச எல்லைகளை விரிவாக்க நினைப்பவர்கள்தான் முன்சென்று தாக்குகிறார்கள். வென்றால், புதிய நிலப்பரப்புக்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் சேர்க்கப்படும். ஒருவேலை தோற்றால், பெருத்த உயிர்சேதத்தோடு, நாடு திரும்ப வேண்டிவரும். அங்கதக் தற்காத்துநின்ற நாட்டிற்கு ஆதாயம் ஏதுமில்லை. அதற்கும் எண்ணற்ற பொருள் சேதம் ஏற்பட்டிருக்கும்.


சாதிக்க விரும்பினால் போராட தயங்காதீர்கள்


போராகட்டும், வியாபாரமாகட்டும், விளையாட்டாகட்டும், நாம் சாதிக்க தீர்மானித்துவிட்டால், முதலில் நம் கோட்டையை போதுமான அளவு பலப்படுத்திவிட்டு, முன் சென்று தாக்கி போராடவேண்டும். நம் எல்லைகளுக்குள்ளேயே இருந்தால், குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான். பெரிய வெற்றிகள் எதுவும் தானாக வரப்போவதில்லை. எந்த அளவிற்கு மன உறுதியுடனும், ஆக்ரோஷத்துடனும் நாம் போராடுகிறோம் என்பதைப் பொருத்தே, நம் வெற்றிக்கான வாய்ப்புகளும் பிரகாசமாகின்றன.


புதிய களங்களை காணுங்கள்;

தோல்வியை தவிர்ப்பதற்காக அல்லாமல்

வெற்றிக்காக போராடுங்கள்;

இருப்பது ஒரு வாழ்க்கை;

வென்றால் சரித்திரம்!

தோற்றால், அதிலிருந்து பாடம் கற்று

வெற்றிக்கு மீண்டும் போராடலாம்!

ஒருநாள் வென்றே தீருவோம்!


- [ம.சு.கு 21.09.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page