நிகழ்வு 1 ;
அதிகமான புத்தகங்களைப் படித்தும் எண்ணற்ற அனுபவஅறிவைச் சேர்த்தவருமான ஒரு நபர், ஒரு சிறந்த புத்தகத்தைப் படித்த பின்னர், தானும் ஒரு நல்ல புத்தகத்தை எழுத வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதத் துவங்குகிறார். அந்த வார சனி-ஞாயிறில் மட்டும் 70-80 பக்கங்களை எழுதியிருப்பார். மறுபடியும் திங்கள் முதல் அலுவலக வேலை பழுவினால் தனது எழுத்துப் பிரதியை தொடக்கூட இல்லை. மறுபடியும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் அதை தொடுகிறார். ஒருவாரம் எழுதாமல் வட்டுவிட்டோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு அன்றைய தினம் மீண்டும் 50 பக்கங்களை எழுதுகிறார். அடுத்த வாரமும் அதே கதை தொடர்கிறது. மூன்று – நான்கு வாரங்கள் மேலும் தொய்வு ஏற்படுகிறது.
நான்கு மாதங்கள் கடந்தபின், தனது கையெழுத்து பிரதியை தானே ஆய்வு செய்தார். இன்னும் 200 பக்கங்களைக்கூட தாண்டவில்லை. பல விஷயங்களும் தகவல்களும் கோர்வையின்றி சில இடங்களில் திரும்பத்திரும்ப எழுதப்பட்டிருக்கின்றன. அந்த நூலை எழுதத் துவங்கியபோது இருந்த எண்ணங்களும், வெளிப்படுத்த எண்ணிய கருத்துக்களும் சரிவர கையாளப்படவில்லை என்பதை அவரே உணரமுடிந்தது. தன் கையெழுத்துப்பிரதியை தானே கிழித்தெரிந்துவிட்டு, தனக்கு இனி புத்தகம் எழுதவராதென்று முடிவுகட்டிவிட்டு, எழுதுவதை அன்றோடு நிறுத்திக்கொண்டார்.
நிகழ்வு 2;
ஒரு கணிணி மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில், மேளாளர் ஒரு செயலியை உருவாக்க 50 நபர் குழுவுடன் செயல்பட்டு ஆறு மாதமாகியும், செயலி முழுமை பெறவில்லை. அந்த மேளாளர், செயலிக்கான எல்லா குறியீடுகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். தன் வேலைகளை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே முடித்து பல பரிசுகளை வென்றவர். எள்ளென்றால் எண்ணெயாய் நிற்பவர். ஆனால் அவரது குழுவிற்கு அந்த செயலியை செய்துமுடிக்க தாமதம் ஆனது. காரணத்தை அலசியபோது, அந்த குழுவில் முக்கிய நபர்கள் நிறையபேர் வேலையைவிட்டு விலகியது ஒரு காரணமென்பது தெரியவந்தது. அதற்கான காரணத்தை மனிதவள (HR) துறையினர் அலசியபோது, பெரும்பாலும் எல்லோரும் அந்த மேலாளரின் அணுகுமுறையையே குறைகூறினர். அவர் தன் வேகத்திற்கு இனையாக எல்லோரும் இருக்கவேண்டும், எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே எல்லாத் தருணத்திலும் எல்லாரையும் அணுகினார். அவர்கள் அவருக்கு ஈடுகொடுக்காவிட்டால், எல்லோர் முன்னிலையிலும் முக்கிய நபர்களை அவமானப்படுத்தினார். அது பல ஊழியர்களை வேலையைவிட்டு விலக வைத்தது. முடிவில் மனிதவள மேம்பாட்டுத் துறையினர், நிர்வாகத்திடம் அந்த குறிப்பிட்ட மேளாலரை நிர்வாகவில் திறன் குறித்த மூன்று மாத பயிற்சிக்கு அனுப்ப பரிந்துரை செய்தனர்.
நிகழ்வு 3 ;
ஒரு பெரிய கார்பந்தயம். நீங்கள் எண்ணற்ற கைதேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்கள் அனைவருக்கும் நிகராகவும், அதற்கு மேலும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றவர். உங்களுக்கான வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசம் என்று எல்லோரும் பொதுவாக கருதுகின்றனர். பந்தயம் துவங்கியது. துவக்கம் முதல் மூன்று சுற்றுகள் நீங்கள் இரண்டாம் நிலையிலேயே முதலாமவருடன் போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான்காம் சுற்றில் அவரை முந்தி முன்னேறிவிட்டீர்கள். இன்னும் மூன்று சுற்றுக்கள் மீதமுள்ளன. இத்தருணத்தில் உங்கள் சக்திகளையெல்லாம் பயன்படுத்தி அதிவேகமாக சென்று இரண்டாவது நபரைவிட மிகமிக குறைந்த நேரத்தில் முடுப்பது சிறந்ததா? அல்லது முதல்நிலையை தக்கவைத்தவாரே வேகத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லதா? (ஏனெனில் வேகம் அதிகரிக்கும்போது, வண்டியின் கட்டுபாடு கைநழுவி சுவற்றில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.)
ஏன் ? எதனால் ?
நாம் மேலே மூன்று விதமான வேறுபட்ட நிகழ்வுகளை பார்த்தோம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியங்களை நீங்களே அலசி ஆராய்ந்திருப்பீர்கள். அவர்கள் எதை செய்திருக்க வேண்டும், எது கூடாது என்று நீங்களே உங்கள் மனதில் ஒரு பட்டிமன்றத்தை முடித்திருப்பீர்கள்.
ஒரே நாளில் சாதிக்க முடியுமா ?
முதலில் எழுத்தாளரின் முயற்சியை எடுத்துக்கொள்வோம். அவரின் பெரும் ஆர்வத்தின் காரணமாக ஒரேநாளில் 70 பக்கங்களை எழுதமுடிந்தது. ஆனால் வேலைப்பழு போன்ற பல சுற்றுப்புற காரணங்களால் எழுதுவது தடைபட்டு அதை தொடருவதில் சிக்கல் நேர்ந்தது. ஒன்றிரண்டு முறை அமர்ந்து எழுதி ஒரு புத்தகத்தை முழுதும் முடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்புடன் எழுதுவது மிகவும் வேடிக்கையான ஒன்று.
மிகப்பெரிய எழுத்தாளர்கள்கூட தங்களின் கட்டுரைகளை முடிக்க சில சமயங்களில் மாதங்களை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கடைபிடிக்கும் ஒரேயொரு வழிமுறை என்னவென்றால், அவர்கள் நாள் தவறாது எழுதுகிறார்கள். தங்கள் மனநிலை, அன்றைய சூழ்நிலை என்ற, எவற்றுக்கும் அடிமையாகாமல் தினந்தோறும் குறித்த நேரத்தில் எழுதுவதை விடுவதில்லை. தினமும் 5 - 10 பக்கம் வீதம் தவறாமல் எழுதினால் நம்முடைய எழுத்துத்திறனும் மேம்படும். நாம் எழுதவேண்டிய கருத்துக்களுக்கும் போதிய அளவு சிந்தனைகளை மேற்கொள்ளவும் முடியும். தினம் பூராவும் எழுதி புத்தகத்தை நாம் ஒரு வாரத்தில் முடிக்கவேண்டுமென்றால், நாம் குறைந்தபட்சம் ஆயிரம் கட்டுரைகளையாவது எழுதி பழக்கப்பட்டிருக்க வேண்டும். படிப்பது, எழுதுவதை மட்டுமே தொழிலாய் கொண்டிருக்கவேண்டும். ஆனால், நாம் எழுத்தாளர்களாக மெதுவாகத்தான் செயல்பட இயலும். ஏனெனில் நமது அன்றாட கடமைகள், குடும்பச்சுமைகள் அதிகபட்ச நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.
எல்லா தடங்கள்களுக்கும் இடையில் வெற்றி பெற விரும்பினால் தினமும் குறித்த நேர்த்தில் இயன்றவரையில் அதிகாலையால் அமர்ந்தி எழுதிவந்தால், நம் எழுத்துத்தத்திறனும் மேம்படும். சமுதாயத்திற்கு நாம் கூற எண்ணிய கருத்துக்களையும் செவ்வனே எடுத்தியம்பலாம்.
பிறர் திறன்கனை அறிந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துதல்;
இரண்டாவது உதாரணத்தில் பார்த்தால் ஒரு சிறந்த மேலாளர் (பணியாளர்) பிறரிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புக்களை கொண்டுள்ளபடியால் லட்சியத்தை அடைவதில் பெறும் சிக்கல். மேலாளராய் திகழ எண்ணற்ற விடயங்களை ஜீரணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். செயலை முடிக்க மிகுந்த உத்வேகமும், வெறித்தனமும் அவசியம். அதே சமயம், அந்த செயலில் நாம் மட்டும் இல்லாமல் நம்மைச் சார்ந்த பலரும் இருப்பதால் அவர்கள் திறமைகளையும் உணர்ந்து போதிய நிதானமும், பொறுமையும் இருத்தல் வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவைகள் யாவும் நம் எண்ணம்போல நிகழும் என்று எண்ணுவது முட்டாள்தனம். பெரும்பாலான தருணங்களில் நம் சுற்றியுள்ளவற்றிற்கு ஏற்ப நம்மை மாற்றியமைத்துக்கொண்டு வெற்றியடைய வழிகாண வேண்டும்.
வேகமா ? விவேகமா ?
மூன்றாவது நிகழ்வை எடுத்துக்கொண்டால், அந்த வீரரின் இலட்சியம் முதல் நிலையை பெறுவது மட்டுமாக இருக்கும் பட்சத்தில், தனது முதல் நிலையை தக்கவைக்க போதுமான வேகத்தை மட்டும் கையாண்டு விபத்தினை தவிர்ப்பது சாமர்த்தியம். அதே சமயம் புதிய உலக சாதனை படைப்பதாய் இருப்பின், மற்ற போட்டியாளர்களை யாரும் அவரது கண்ணோட்டத்தில் இல்லை. தான் அடைய வேண்டிய இலக்கும், நேரமும் மட்டுமே குறிக்கோளாய் இருக்கும். அவரது திட்டமிடல் அந்த குறிக்கோளை நோக்கி மாறுபட்டு அமையும். வெற்றிபெற வேண்டுமென்கின்ற ஆர்வத்தில் வாகனத்தை உச்சகட்ட வேகத்தில் ஓட்டுவது மட்டுமே குறியாக இருக்கக்கூடாது. போகின்ற வேகத்தில் வரும் தடங்கள்களை சமாளிக்கும் கட்டுப்பாட்டை கொண்டிருப்பது மிக அவசியம். வேகம் அதிகரிக்கும்போது, வளைவுகள் அபாயகரமானதாகும் என்பதை அறிந்து வளைவுகளுக்கு ஏற்ப பொறுமையை கையாள தவறினால், வாகனம் பெறும் விபத்தினை சந்திக்க நேரிடலாம்.
ஆர்வமும் – பொறுமையும்;
ஆர்வமும், ஆக்ரோஷமும் வேண்டும் – அளவாய் !
பொறுமையும் அமைதியும் வேண்டும் – அளவாய் !
வெற்றிபெற, இந்த குணநிலைகளை சரிவர கையாள்வது மிக அவசியம். அதிகபட்ச பொறுமையும், அமைதியும் நம்மை பந்தயத்தில் பின்னே தள்ளிவிடும். அதீத ஆர்வமும், ஆக்ரோஷமும் விபத்துக்களில் சிக்கவைத்துவிடும். ஆர்வம், பொறுமை என்ற வேறுபட்ட நிலைகளை சாமர்த்தியமாய் கையாள்வதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.......
- [ம.சு.கு - 01-09-2021]
Yorumlar