top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : பணத்தின் பாதை

பணத்தின் பாதை தெரிந்தவன் மட்டுமே

தொழிலில் தாக்குப்பிடித்து நிற்க முடியும்


நஷ்டம் / இழப்பு (எதி) பணப்பற்றாக்குறை


பல தொழில்கள், நஷ்டத்தின் காரணமாக மூடப்படுவதைக் அன்றாடம் பார்கிறோம். யதார்த்தத்தில், நஷ்டத்தைக் காட்டிலும், பண பற்றாக்குறையினால் வியாபாரங்கள் மூடப்படுவது தான் அதிகம்.

  • கையில் பணம் வைத்திருப்பவன், சமயத்தில் விலைகுறைவாக பொருட்களை வாங்க முடிகிறது.

  • பணப்பற்றாக்குறை உள்ளவன், அவசரத்தின் காரணமாய் பொருட்களை குறைந்த விலையில் விற்க நேரிடுகிறது.

  • பணம் தான் வியாபாரத்தில் பிரதானம். இலாபம் கூட சமயத்தில் இரண்டாவது தான்.

பொருளாதார நெருக்கடி


2008 ஆம் அண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடி முற்றிலும் பண பற்றாக்குறையினால் மட்டும் ஆரம்பித்தது.


நூறு ஆண்டகளுக்கும் மேலாய் தொடர்ந்து இலாபம் ஈட்டி வந்த லீமென் பிரதர்ஸ் நிறுவனம், தொடர்ந்து ஏற்பட்டு வந்த பண பற்றாக்குறையினால், திவால் ஆக நேரிட்டது.


ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் இலாபம் இருந்தாலும், நாளை பொருட்களை வாங்கவும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் பணம் இல்லையென்றால், உற்பத்தி தடைபட்டு நிரந்தரமாய் மூட நேரிடும்.


வியாபாரத்தில் இந்த பணத்தின் பயனப்பாதையையும், அதன் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பையும், ஒரு சிறு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிப்போம்.


கைவண்டி தக்காளி வியாபாரி


ஒரு கைவண்டி வியாபாரி தன்னிடம் இருக்கும் 1000/- ரூபாய்க்கு 100 கிலோ தக்காளியை மொத்தச் சந்தையில் வாங்கி, ஊருக்குள் விற்பனை செய்கிறார். பொதுவாக கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிய தக்காளியை, கிலோவுக்கு ரூபாய் 15 வீதம் விற்றுமுடிக்கிறார். விலை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் அவரின் தக்காளி வியாபாரம் தொடர்கிறது. நாளடைவில் ஊருக்குள் நிலையான வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்கிறார். கழிவுகள் போக தினமும் குறைந்தபட்சம் 300 முதல் 400 ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறார்.


அன்றாடம் காலையில் கையிலுள்ள ரொக்கப் பணத்தை சந்தைக்கு எடுத்துச் சென்று தக்காளி வாங்கி வருவார். அன்றைய தினம் மாலைக்குள் எல்லாவற்றையும் விற்று பணத்தை கையில் வைத்திருப்பார். அவரது அன்றாட இலாபம் தனது குடும்ப பராமரிப்புக்கு சமன் செய்து கொள்ளப்பட்டது.


இப்படி அன்றாடம் பணம் வருவதும், போவதும், இலாபம் ஈட்டுவதும் என்று எல்லாமே அவர் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது.


அந்த ஊரில் புதிதாய் உணவகம் திறந்த ஒருவர், இந்த கைவண்டி வியாபாரியிடம். தனக்கு தினமும் 25 கிலோ தக்காளியை கடைக்கு விநியோகிக்குமாறு கோரினார். ஒரு கிலோ தக்காளியை பதினெட்டு ரூபாய் வீதம் கொடுத்து வாங்கிக் கொள்வதாகக் கூறினார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். தக்காளிக்கான பணத்தை கொடுக்க 7 நாள் தவணை வேண்டும் என்று கேட்டார்.


தன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய விருப்பிய கைவண்டி வியாபாரிக்கு, இந்த வாய்ப்பு அருமையானதென்று தோன்றியது.


  1. கிலோவுக்கு மூன்று ரூபாய் அதிக இலாபம் {மொத்தம் எட்டு ரூபாய் லாபம்}

  2. கழிவுகள் தொல்லை இல்லை / வாடிக்கையாளர்ளுடன் பேரம் பேசும் தொல்லையும் குறையும்


அதிக இலாபத்திற்கு ஆசைப்பட்டு, வேறு விடயங்களைப் பற்றி ஆராயாமல், உணவகத்திற்கு அவர் நிபந்தனைகளுக்கேற்ப விநியோகிக் ஒத்துக் கொள்கிறார்.


வியாபாரம் இப்படி செல்கிறது;


தினமும் ரூ.1000/- பணத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றாடம் ரூ.300-400 இலாபம் ஈட்டிய நிலைமாறி, ஒரே வாரத்தில் தொழிலை மூட வேண்டிய நிலையிக்கு வியாபாரி வந்துவிட்டார்.


கடன் சக்கரம்


இந்த வியாபாரி, அதிக இலாபம் கிடைக்கும் என்றுதான், உணவகத்திற்கு விற்க ஒத்துக்கொண்டார். பின்னர் எப்படி தொழில் முடங்கியது என்று யோசியுங்கள்.


அளவான மூலதனம் (ரூ.1000/-) கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த தக்காளி வியாபாரி, ஏழுநாள் கடன் கொடுக்கும் சக்கரத்தில் சிக்கியதால், தொடர்ந்து தக்காளியை வாங்க பணம் இல்லாமல் போனது. குடும்ப செலவுக்கே கடன் வாங்க நேர்ந்தது.


வியாபாரி, ஊருக்குள் விற்பதோடு, கடைகளுக்கும் விநியோகம் கொடுத்து வியாபாரத்தை விஸ்தரிக்க எண்ணினார். ஆனால் பணப்பற்றாக்குறையால் வியாபாரமே தடைபட்டது.


ஊருக்குள், இந்த வியாபாரி தக்காளி கொண்டு வராததால், வேறொரு வியாபாரி விற்பனையை துவக்கி மக்களை கவர்ந்து விட்டார். இனி ஊருக்குள்ளும் விற்பனை செய்வதும் கடினமாகிவிட்டது.


எங்கே-என்ன தவறு நடந்தது?


கடன் சக்கரம் தான் ஆரம்பப்புள்ளி. கடனுக்கு கொடுத்தால், அன்றாட வியாபார புலக்கத்திற்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதை வியாபாரி யோசிக்கவில்லை.

  • வியாபாரத்தின் அளவுகளை அதிகரிக்க வேண்டுமானால், அதிக முதலீடுகள் கட்டாயம் வேண்டும்

  • கடனுக்கு விற்காதீர்கள், உங்கள் பணம் சிக்குண்டுவிடும்.

  • உங்களிடம் அதிக பணம் இருந்தால் கடன் கொடுக்கலாம். குறைவான மூலதனம் இருக்கும் சமயத்தில், உடனடி ரொக்கத்திற்கு மட்டும் விற்பனை செய்யுங்கள்.

  • வியாபாரத்தில் உள்ளே சென்ற பணம் வெளியே வர எத்தனை நாள் ஆகும், அது இப்பொழுது எந்த வடிவத்தில் இருக்கிறது என்று முழுமையான தெளிவும் புரிதலும் இருத்தல் மிக முக்கியம்.

  • வியாபார வரவுசெலவு-களில், வரவேண்டிய பணத்தை காலம் தாழ்த்தாமல் தொடர்பு கொண்டு கேட்டு பெற்று விடுங்கள். பணம் தான் பிரதானம்.

என் ஆலோசனைகள்


  • இலாபம் குறைவாக இருந்தாலும், உடனடி பணத்திற்கு விற்பனை செய்தால், பணம் கையில் புலங்கும். வியாபாரத்தை தொடர்ந்து நடத்தலாம்.

  • தொழிலில் பொருட்களின் தன்மைக்கேற்ப எப்பொழுதும் இருப்பு, பணமாகவோ, விற்பனைப் பொருளாகவோ இருக்க வேண்டும். வரவேண்டிய கடன்களாக இருந்தால், அவற்றுள் சில, வாராக்கடனாக மாற வாய்ப்புக்கள் அதிகம்.

  • கடனுக்கு விற்க நேர்ந்தால், வியாபாரத்திற்கு இனையாக, கடனை வசூலிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். வசூல் தாமதங்கள், உங்கள் வியாபாரத்தையே கேள்விகுரியாக்க வாய்ப்புண்டு.

  • பணத்தின் பாதையை அறியாமல் தொழில் செய்து சீக்கிரத்தில் பணத்தை இழந்து விடாதீர்கள்.


வியாபாரத்தில் இருப்பவர்கள், நடப்பு மூலதனம், பண வரவு-செலவு, பணத்தின் மேலான்மை, கணக்கியல், குறித்து தொடர்ந்து அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்கின்ற இருமாப்பு வேண்டாம். தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களால் மட்டுமே புதிதாய் வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.


"பணம் தான் என்றென்றும் வியாபாரத்தை கட்டுப்படுத்துகிறது.

இன்று வாழ்க்கையும் பணத்திடம் சிக்கிக்கொண்டது.

பணத்தை இன்றைய அவசர உலகம் அரசனாக்கிவிட்டது.

அடிபணிந்தவன் அல்லல்படுகிறான்,

போராடுபவன் வெற்றிகொள்கிறான்"


- ம.சு.கு [08.12.2021]

27 views0 comments
Post: Blog2 Post
bottom of page