top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "இல்லை"- "சரியானது" - "இப்பொழுது" [இ-ச-இ]

இயல்பான இயக்கம்

அன்றாட வாழ்க்கையில் எண்ணற்ற செயல்கள் நம்மைச் சுற்றிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. இவற்றில் சில, நம் எண்ணங்களுக்கு உட்பட்ட கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், சில செயல்கள் தானியங்கியாகவும் நிகழ்கின்றன.


உதாரணத்திற்கு, அலுவலகத்திலிருந்து நம் வாகனத்தில் வீடு திரும்பும்போது, எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது பெருப்பாலும் நமது கவனத்தில் இருப்பதில்லை. கவனத்தில் இல்லாவிட்டாலும், தானியங்கியாகவே நம் வாகனத்தை ஓட்டிச்சென்று வீட்டை அடைகிறோம். சாலையில் நெரிசல்கள் இருந்தாலும், உடனிருப்பவருடன் பேசிக்கொண்டே தானாக நெளிவு சுளிவுகள் எல்லாம் தாண்டி வீடு வந்து சேர்ந்துவிடுகிறோம்.


இப்பொழுது நான் எழுதும் இந்தக் கட்டுரை, என் எண்ணங்களின் கட்டுப்பாட்டில் எழுதப்படுகிறது. அதேசமயம், என் எண்ணங்களை என்னால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

[“எழுத்துக்கள் எண்ணங்களுக்கு கட்டுப்படும் – எண்ணங்கள் எதற்கும் கட்டுப்படாது”]


இயக்கத்தின் முதலாளி


இப்படி எண்ணற்ற செயல்களை நிகழ்ந்த வண்ணமிருக்க, இந்த எண்ணங்கள் தோன்றிடமான நமது மூளை, இந்த இரண்டு வகையான செயல்களையும் தானியங்கியாக தொடர்ந்து நிர்வகிக்கிறது. கட்டுப்பாட்டுடனான செயல்களும், தானியங்கி செயல்களும் இந்த மூளையின் முழுகட்டிற்கு உட்பட்டவைதான்.


இந்த மூளையில் தோன்றும் எண்ணங்களையும், மூளை வழிநடத்தும் செயல்களையும், நம்மால் முழுமையாக கட்டுப்படுத்தி வழி நடத்த முடிந்தால், வாழ்க்கை நம் கையில் முழுவதுமாய் கட்டுப்படும்.


எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியுமா?


  • நாம் சற்றே அதிக எடையுடையவராய் இருப்போம். பொதுவாக நமக்கு உணவுப் பொருட்களைக் கண்டவுடன் உண்ண வேண்டமென்ற அவா தொடங்கிவிடும். ஆனால் ஆரோக்கிய வாழ்விற்காக, அந்த அவாவை கட்டுப்படுத்தி அளவாகவும், ஆரோக்கியமானதாகவும் உண்ணப் பழக வேண்டும்.


  • நம்முடைய சுற்றமும், நட்பும் எப்பொழுதும் அவர்களின் எண்ணியவாறு நாம் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். பல செயல்களை நம்மேல் திணித்து அவசரப்படுத்தவும் செய்கின்றனர். ஆனால் அவர்களின் நிர்பந்தம், அவசரத்தை காட்டிலும் அவசியத்தை ஆராய்ந்து அதற்கேற்ப முடிக்கப் பழக வேண்டும்.


இப்படி ஆசைகளுக்கும், அவசரங்களுக்கும் ஆட்பட்டு, கட்டுப்பாட்டை இழக்கும் நம் எண்ணங்களையும், செயல்களையும் நம்மால் கட்டுப்படுத்தி வழி நடத்த முடியுமா ?


மூன்று சொல் மந்திரம்;


சற்று முயற்சித்தால், கட்டாயம் வழிநடத்த இந்த மூன்று சொற்களால் முடியும்.


“இல்லை” – “சரியானது” – “இப்பொழுது”

{ இ-ச-இ }


அது எப்படி இந்த மூன்று சாதாரண சொற்களால் அளப்பரிய ஆற்றல் கொண்ட மூளையை வழிநடத்த முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.


இல்லை” - நம் கவனச்சிதறல்களுக்கு “இல்லை” “வேண்டாம்” என்று தடை போட வேண்டும்;


சரியானது” - நம் லட்சிய பாதைக்கு எது சரியானது என்று தேர்வு செய்ய வேண்டும்;

இப்பொழுது” - எது சரியானதோ, அதை இப்பொழுதே துவக்க வேண்டும்;


“இல்லை”, “வேண்டாம்”, “முடியாது”


அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோரும் நம்மிடம் எப்போதும் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். நாம் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், அடிபணியாமல், எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கும் கட்டுப்பாட்டை நாம் தக்கவைத்திருப்பது முக்கியம்.


நம்மிடம் எதிர்பார்ப்பவர்களுக்கு அது மிகவும் அவசரமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவசியமானதா என்று கட்டாயம் நாம் ஆராயவேண்டும். அவசரங்களின் வழிநடந்து, அவசியமான தேவைகளை கைவிட்டால் வாழ்க்கை பாதை திசையின்றி போகும். நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல், “இல்லை” என்று சொல்ல தொடர்ந்து பழக வேண்டும். எப்படி “கேட்பதற்கு” அவர்களுக்கு உரிமை உண்டோ, அவ்வாறே “இல்லை” என்று மறுப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.


அவசரப்படுத்தியதால் ஒத்துக்கொண்டு பின்னால் வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.


‘ஆம்’ என்பது முடிவு

‘இல்லை’ என்பது துவக்கம்.


உங்களிடம் கேட்கப்பட்ட செயலை செய்வதற்கு ஒத்துக்கொண்டால் உங்கள் நேரம் சிக்குண்டு விடுகிறது. ஆனால் இல்லை என்கிறபோது, வேறு வாய்ப்புகளுக்கு உங்களிடம் நேரம் இருக்கிறது.


“சரியானது”, “அவசியமானது”


உங்கள் முன் இருக்கும் சவால்களுக்கு, அந்த சூழ்நிலைக்கு ஏற்ற சரியான செயல் எது என்று சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.


ஒரு செயலை, அதன் அவசரத்திற்காக மட்டும் செய்யாமல், அது எந்த அளவுக்கு அவசியமானது, எவ்வளவு சரியானது என்பதை ஆராய்ந்து அதன் அவசியதின் பொருட்டு மட்டும் செய்து வந்தால் நமது நேரம் என்றும் பயனுள்ளதாகவே செலவழிக்கப்படும்.


நமக்கு பசிக்கிறது என்பதற்காக கையில் கிடைக்கும் எண்ணெய் பதார்த்தங்களையும், நொறுக்குத் தீனிகளையும் உண்டால், உடல் பருத்து விடும். சரியான உணவு எதுவென்று சிந்தித்து உண்டால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எல்லாச் செயலுக்கும் எண்ணற்ற வழிமுறைகள் உண்டு. ஆனால் அவற்றுள் சரியானது எது என்று ஆய்ந்தறிந்து செய்வது முக்கியமாகும்.


“இப்பொழுது”


ஒரு அவசியமான செயலை செய்வது என்று முடிவு செய்த பின்னர் அதைச் செய்ய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நல்லவற்றைச் செய்ய எல்லா நேரமும் நல்ல நேரமே. நல்ல செயல்களை “இன்றே, இன்னே, இப்பொழுதே” செய்யத் துவங்குங்கள். உரிய காலத்தில் துவங்குவது மிக முக்கியம்.


துவக்குவதில் ஏன் தயக்கம்?


எத்தனையோ செயல்களை துவக்கி சாதிக்க வேண்டுமென்று எல்லோரும் ஆசை படுகின்றனர். ஆனால், செய்ய ஆசைபடுபவைகளை, உள்ளூர இருக்கும் சோம்பேறிதனத்தின் காரணமாக, என்றுமே துவக்குவதில்லை.


உண்மையில், எந்தச் செயலை துவக்கினாலும், முதல் ஐந்து நிமிடங்கள்தான் அதைச் செய்ய சிரமங்களும், சலிப்புகளும் இருக்கும். ஐந்து நிமிடங்களை உத்வேகத்துடன் கடந்து விட்டால், அந்த செயல்கள் தானாகவே நம்மை வழி நடத்தி முடிக்க வைத்துவிடும்.


5 நிமிட போராட்டம்


எத்தனை மனச்சோர்வு இருந்தாலும் சோம்பேறித்தனம் இருந்தாலும் துவக்குவதை தாமதிக்காமல், உடனே துவக்கி முதல் 5 நிமிடங்கள் போராடி கடந்துவிட்டால், பின்னர் அந்தச் செயல் ஒரு பொருட்டாக இருக்காது. இது நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தும்.

  • அதிகாலை எழுவதில் தினமும் சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொள்ளும். போராடி 5 நிமிடம் எழுந்து நடந்து விடுங்கள், பின்னர் தூக்கம் இருக்காது.


  • படிக்க துவங்குவதா? தொலைக்காட்சி பார்ப்பதா? என்று மணம் போராடும் நேரத்தில், உடனே புத்தகத்தை எடுத்து 5 நிமிடம் படித்து விடுங்கள், மனம் போராடத்தை கைவிட்டவிடும்.


  • காலை உடற்பயிற்சி செய்ய உடல் மறுக்கும். காலனியை மாற்றி 5 நிமிடம் வெளியே நடக்கத் தொடங்கிவிடுங்கள். பின் தானாக எல்ல உடற்பயிற்சிகளையும் முடிந்துவிடுவீர்கள்.


“இல்லை” - “சரியானது” - “இப்பொழுது”


“இல்லை, சரியானது, இப்பொழுது”, இந்த மூன்று சொல்லும் நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் தேவையை பார்த்தோம். இது எப்படி நம் மூளையை கட்டுப்படுத்த உதவும்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.

இயல்பாகவே மனித மனம் சுலபங்களையும், சோம்பேறித்தனத்தையும் நோக்கிச் செல்லும். அவசரமில்லை என்று தெரிந்தால், பின்னர் செய்யலாம் என்று கூறி ஓய்வெடுக்க மனம் விரும்பும். இப்படி இயல்பாகவே சோம்பேறித்தனத்தை விரும்பும் நம் மனத்தை, இந்த மூன்று சொல் மந்திரத்தால் மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.


இல்லை” - சோம்பேறித் தனத்திற்கு இல்லை என்று தெளிவாக சொல்லுங்கள். நீங்கள் அவசியமான காரியத்தில் ஈடுபட்டுள்ள போது, உங்கள் நேரம் கேட்டு வரும் வேண்டுகோள்களுக்கு ‘இல்லை’ என்று உறுதியாய் சொல்லுங்கள்.


சரியானது” – குறிப்பிட்ட தருணத்தில் நமக்கு எது சரியான செயல் என்று உடனடியாக தீர்மானித்து செயல்படுங்கள். அவசரங்களைக் காட்டிலும் அவசியங்கள் எதுவென்று அறிந்து காலசூழ்நிலைகளுக்கேற்ப சரியாண முடிவெடுங்கள்.


இப்பொழுது” - எது சரியான செயலோ அதை உடனே துவக்கி விடுங்கள். காலம் தாழ்த்தினால் சோம்பேறித்தனம் நம்மை வெற்றி கொண்டுவிடும். முதல் 5 நிமிடங்கள் துவக்கி செய்வது, சோம்பலை முறித்து, செயலை முழுமையாக செய்து முடிக்க உதவும்.


மறந்துவிடாதீர்கள்:


அவசியம்மற்றவைகளுக்கு இல்லை என்று கூறி, அவசியமான-சரியான செயல்களை ஆய்ந்தறிந்து, அந்த சரியான செயல்களை பின்னர் செய்யலாம் என்று தள்ளாமல், இப்பொழுதே துவக்கி வெற்றிப்பாதையில் முன்னேறுங்கள்..


நம்முடைய வாழ்க்கையிலும் வெற்றியானது நம் அன்றாட செயல்களின் கூட்டுத் தொகையே. இல்லை-சரியானது-இப்பொழுது என்னும் மூன்று சொல் மந்திரத்தை சரியாக பயன்படுத்தி, எல்லாவற்றையும் இயக்கும் மூளையை நீங்கள் கட்டுப்படுத்துங்கள்.


- [ம.சு.கு – 17-11-2021]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page