top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : இலவசங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள்

“இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்”


“விலையில்லா தொலைக்காட்சி, மடிக்கணினி, .....”


“தங்க நகை வாங்குபவருக்கு, எடைக்கு எடை வெள்ளி இலவசம்....”.


இப்படி எண்ணற்ற இலவசங்களை, தினம்தினம் நாம் கேட்கிறோம்.


இந்த இலவசங்களால் எந்த அளவிற்கு தனிமனிதராக நீங்கள் நீண்டகால பயன்பெறுகிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?

தனிமனித பயன்களைத் தாண்டி, நீங்கள் வாழும் இந்த சமுதாயம் இந்த இவசங்களால் என்ன பயனடைந்தது / என்ன எதிர்மறை விளைவுகளை சந்தித்தது என்று கணக்கிட்டுள்ளீர்களா?


அரசாங்கமும் – இலவசங்களும்


அரசாங்கம் மாணவர்களுக்கு வழங்கிய இலவச பேருந்து பயனஅட்டை பல கிராமப்புர மாணவர்களின் மேற்படிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்ததை நான் கண்கூட கண்டிருக்கிறேன். அதேசமயம் அரசாங்கம் கொடுத்த விலையில்லா மடிக்கணினிகள், வெளிச்சந்தையில் ரூபாய் 8000-க்கும் 10,000-திற்கும் விற்கப்பட்டது தான் அதிகம். அரசாங்கம் கொடுத்த இலவச தொலைக்காட்சிகள் பல மேல்தட்டு மக்களின், நடுத்தர வர்க்கங்களின் வீடுகளில் இரண்டு தொலைக்காட்சிகளாக ஆடம்பரமானது ஒரு கேளிக்கூத்து.


அரசாங்கங்கள் எல்லா இலவசங்களை முறையாக பயனாளர்களை தேர்வுசெய்து, உரியவருக்கு மட்டும் வழங்கினால், இன்னும் எண்ணற்ற அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் பலன்களைக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை படிப்படியாக உயர்த்த முடியும்.


வியாபாரமும் – இலவசமும்


கடைகளில் எந்தப் பொருளை வாங்கினாலும், ஏதேனுமொரு இலவசம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறோம். மக்களின் இலவங்களின் மீதான மயக்கத்தை நன்குணர்ந்து வியாபாரிகள், இலவசங்களை அதிக விளம்பரப்படுத்தி, விற்கப்படும் பொருளின் விலையிலும், தரத்திலும் அதிகம் விளையாடி விடுகின்றனர்.


“இரண்டு வாங்கினால் - ஒன்று இலவசம்” என்றால், அந்த இலவசத்தின் விலையையும் அந்த இரண்டு பொருட்களில் சேர்த்துள்ளனர் என்பது உலகம் அறிந்த நிதர்சனம். இருந்தாலும் நாம் அதை பொருட்படுத்துவதில்லை. நம் தேவைக்கு கூடுதலாக இருக்கும் என்று தெரிந்தாலும், ஒன்றோடு நிறுத்திக்கொள்ளாமல், இரண்டாவதையும் வாங்கி அந்த இலவசத்தை பெறுகின்றனர். யதார்த்தத்தில், ஒன்றுக்கே பெரிய உபயோகம் இல்லாதிருக்க, இலவசத்திற்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் காசை வீணாக்கிவிடுகின்றனர்.


எனக்கு இலவசம் வேண்டாம், அதற்குரிய விலையை குறைத்துக் கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், இது நிறுவனத்தின் அறிய திட்டம், இதில் தங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியாதென்று பெரும்பாலும் எல்லா வியாபாரிகளும் பொதுவாக சொல்லி முடித்துவிடுகின்றனர். அவர்களைப் பொருத்தமட்டில், ஒன்றுக்கு பதிலாய் மூன்று பொருள் விற்கப்பட வேண்டும். அதே சமயம் ஒரே ஒரு பொருளை மட்டும் வாங்குவதானால், கூடுதல் விலையைக் கொடுத்துத்தானாக வேண்டும். இவையனைத்தும் வியாபார தந்திரம்.


இலவசமும் வார்த்தை ஜாலங்களும்


இலவசம், தள்ளுபடி என்ற ஆசை வார்த்தைகளால் மக்களை ஈர்த்து, உள்ளே நூழைய வைப்பது ஒரு வகை வியாபார தந்திரம். உள்ளே வந்த பின்னர், தன் வார்த்தை ஜாலங்களால், அவர்களின் மனதை மயக்கி, பல பொருட்களை அத்தியாவசியத் தேவை என்று சிந்திக்க வைத்து, இன்றைய தினம் வாங்கினால் சிறப்பு தள்ளுபடிகள் உண்டென்று கூறி, வாங்க வைத்துவிடுகின்றனர். அந்தப் பொருட்கள் எதுவுமே அத்தியாவசியமில்லை என்று உணருவதற்குள், எல்லாம் முடிந்து போயிருக்கிறது.


ஒருபுறம் வியாபாரத்தில் இப்படி இலவசங்களால், வார்த்தை ஜாலங்கலாள் நிறைய தந்திரம் என்றால், இதே யுத்தியை புத்திசாலிகள், மாறுபட்ட விதத்தில், பல விடயங்களில் பயன்படுத்தி தங்களின் காரியங்களை சாதித்துக்கொள்கின்றனர்.


இலவசங்களின் மூலம் நன்கொடை வசூல்


சில கோவில்களில், கட்டணம் தரிசன வரிசையில் வருகின்றவர்களுக்கு, எண்ணற்ற சிறுசிறு பொருட்களை, பூக்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தினர் / இயக்கத்தினர் இலவசமாகத் தருவார்கள். இப்படி நீங்கள் கேட்காமலே உங்களுக்க தேவைப்படுவது போன்ற பொருட்களை கொடுத்து, நீங்கள் அவர்களின் தனிப்பட்ட சேவைக்கு கடன் பட்டவர்களாக உணர வைத்து விடுவார்கள். எல்லாம் முடியும் தருவாயில், கோவிலுக்காகவோ, அல்லது ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்காகவோ நன்கொடை கேட்டு இறுதியில் ஒருவர் நின்று இருப்பார்.


நீங்கள் வழியில் பெற்ற உபசரிப்புக்கள், இலவசங்களெல்லாம் அவர்களின் பெரிய சேவை என்று சிந்திக்கவைத்து, உங்களை அவர்களுக்கு கடன்பட்டவராக உணரவைத்து, உங்களிடமிருந்து பெரிய தொகையை நன்கொடையாக பெறுவார்கள். இப்படி சின்னச்சின்ன இலவசங்கள் மூலம் உங்களை ஈர்த்து, நன்கொடைகளை வசூலிப்பது சோதித்து வெற்றிகாணப்பட்ட ஒருமுறை. அதுபோல எண்ணற்ற மாறுப்பட்ட புதிய முறைகளை இன்று நிறைய இயக்கங்கள் கையாளுகின்றன.


கடனாளியாக்கி காரியத்தை சாதிக்கின்றனர்


உங்களுக்கு முன்னர் கொடுத்த இலவசங்கள், உபசரிப்புக்கள், உதவிகள் மூலமாக, உங்களை அவர்களுக்கு கடன் பட்டவராக உணரவைத்து, கட்டாயமாக ஏதேனுமொரு கைமாறு செய்ய வைத்துவிடுகிறது. இது நன்கொடை விடயம் மட்டுமென்றில்லை, பலருடைய பணிகளிலும் அவ்வப்போது நடக்கின்ற ஒரு தந்திரமான பரஸ்பர கைமாறுதான்.


அதுவும் குறிப்பாக நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கின்ற உயர்பதவிகளில் இருப்பவராக இருந்தால், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எண்ணற்ற இலவச நுழைவுச் சீட்டுகள், விருந்து அழைப்புகள் என்று ஏதேனுமொன்று வந்த வண்ணம் இருக்கும். இவையனைத்தும், எதேச்சையாக உங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுபோல ஆரம்பத்தில் தோன்றினாலும், அதன் நோக்கம், அதை வழங்குபவருக்கு சாதகமாய், நீங்கள் வியாபார-வர்த்தக முடிவுகள் எடுக்கப்படவேண்டுமென்று மறைமுகமாக நிர்ப்பந்திப்பதுவே என்று உங்களுக்கு பின்னர் புரியும்.


இங்கு உண்மையில் எதுவுமே இலவசம் கிடையாது


இங்கு யாரும், யாருக்கும், எதையும் இலவசமாகத் தரத் தயாரில்லை. எல்லாம் ஒரு கணக்குப் போட்டுத்தான் நடக்கிறது. யாரேனுமொருவர், உங்களுக்கு ஒன்றை இலவசமாக தருகிறார் என்றால், நாளை நீங்கள் பரஸ்பரம் அவருக்கு தேவையான ஒன்றை செய்து தர வேண்டும். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது.


இன்று நாம் ஒருவருக்கு உதவினால், நாளை அவர் நமக்கு உதவுவார் என்ற பரஸ்பரம் இருப்பதில் தவறில்லை. மனித இனமே இந்த பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதிலும், உதவுவதிலுமே இயங்குகிறது. நாம் யாரும் இங்கு தனித்து இயங்கி விடமுடியாது.


ஒருவரே விதைத்து அறுவடை செய்வதும், அவரே விமானம் செய்வதும் சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் பரஸ்பரம் தங்கள் கடமைகளைச் செய்து வந்தால், சமுதாயத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப்பெறும்.


இலவசத்தை நாடும் சோம்பேறிகள்


காலங்காலமாய், சமுதாயத்தில் ஒரு சாரார் மட்டும் உழைத்துக் கொண்டிருக்க, இன்னொரு சாரார், சும்மா இருந்துகொண்டு, மற்றவரின் உழைப்பைச் சுரண்டி தின்பார்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகள் அதிகரித்தால், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வும், ஒழுக்கச் சீர்கேடும் சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடும். இந்த உழைக்காமல் தின்னும் கூட்டம் தான், இலவசத்தை நாடும் சோம்பேறிகள் கூட்டம்.


நம்மால் இயலாதபோது நமக்கு எவரேனும் கொடுப்பதற்கும், நம்மால் செய்ய முடிகின்றபோதும் அதைச் செய்யாமல் பிறரிடம் இலவசம் கேட்டு செல்வது பிச்சை எடுப்பது போன்றதாகும்.


இலவசங்களும் – பிச்சைக்கார எண்ணமும்


அரசாங்கம் இலவச தொலைக்காட்சி வழங்கியபோது, வீட்டிலே ஏற்கனவே பெரிய தொலைக்காட்சி வைத்திருக்கும் பல பேர் சென்று வாங்கினார்கள். இலவசமாய் அரசு கொடுப்பது சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்குத்தான். ஆனால் பிச்சைக்கார எண்ணம் கொண்ட பல மேல்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமுமே அதை ஓடி ஓடி வாங்குகிறது.


நம்மால் இயலும் போது அதை வாங்க நாம்தான் உழைத்து சம்பாதிக்க வேண்டும். நமக்கு இறைவன் அளித்த ஆற்றல் இருக்கும் வரை எதையும் இலவசமாக பெற முயற்சிப்பது, பிச்சை எடுப்பதற்கு சமமானதாகும்.


இலவசங்கள் ஏற்படுத்தும் சீர்கேடுகள்


இந்த இலவசங்கள், ஒருபுறம் தேவையற்ற சோம்பேறித்தனத்தை உருவாக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த இலவசமெனும் மாயை, தனிமனிதனையும், சமுதாயத்தையும் எண்ணற்ற வகைகளில் தொடர்ந்து சீரழித்து வருகின்றன;


  • ஒருவரிடம்பெறும் உதவியும், இலவசமும், நம்மை அவருக்கு கடன்பட்டவராக்கிவிடுகிறது. அந்தக் கடன் நம்மை சில சமயங்களில், கட்டாயத்தின் காரணமாக, சில அநீதிகளை செய்யவும் / அநீதிகளுக்கு துணைபோகவும் வழிவகுத்து விடக்கூடும்.

  • தேவையில்லாத இலவசங்கள், தேவையற்ற சோம்பேறித்தனத்தை வளர்த்து. சமுதாயத்தில் எண்ணற்ற தீய பழக்கங்களை வளர்த்துவிடுகின்றன. உத; இன்று தமிழகத்தில் மதுப்பிரியர்கள் கூடியதற்கான பலகாரணங்களுள் அரசியல் இலவசங்கள் முக்கியமான ஒன்று;

  • அரசியல் இலவசங்கள், எண்ணற்ற ஊழலுக்கும் முக்கிய காரணமாகி, சமுதாயத்தில் களவும், கையூட்டும், ஏதோ ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறு தவறாக உணரப்படுகிற அவல நிலைக்கு வந்துவிடுகிறது;

  • பெரும்பாலான இலவசங்கள், மக்களின் இலக்கை திசை திருப்பி விடுகின்றன. தேவையான பொருளை உழைத்து வாங்கியிருந்தால், அந்த பொருளின் அருமை தெரிந்து பத்திரமாக காத்திருப்போம். இலவசமாக கிடைக்கின்றவற்றில் எண்ணற்ற அலட்சியங்கள், வீணடிப்புக்களையும் இயல்பாக காணமுடிகிறது.

தேவையோ தேவையில்லையோ இலவசங்கள் விடயத்தில் கவனமாக இருங்கள்.


இயலாதவர்களுக்குத் தான் இலவசங்கள்
இயன்றவர்களுக்கு அன்று;
இயன்றவர்களும் இலவசங்களின் பின்னால் ஓடுவது தான்
சோம்பேறித் தனத்தின் துவக்கமே;

ஒன்றை மறவாதீர்கள்

என்றுமே, எதுவுமே, யாருக்கும்

முற்றிலும் இலவசமில்லை;

எல்லாவற்றிற்கும் – நீங்கள்

ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும்;

அந்த விலை நேரடியாக தெரியாததால்

மக்கள் இலவச மாயையில் சிக்கி

இழப்பது தெரியாமல் இழக்கின்றனர்;


இலவசங்கள் - உங்களை சிறைப்படுத்தி

வளர்ச்சியை கெடுத்துவிடாமலிருக்க

கவனமாக இருங்கள்;

எல்லா நிலைகளிலும்

இலவசங்களை தவிர்த்து விடுங்கள்;


இலவசங்கள்

இல்லாதவருக்கு வரம்;

இருப்பவர்களுக்கு விஷம்;


- [ம.சு.கு 03.09.2022]6 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page