top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தொடர்பு வட்டத்தை விரிவு படுத்துங்கள்

ஊருக்கு புதியவரா நீங்கள்?


புதியதாக ஒரு ஊருக்கு குடிபெயர்ந்து வந்துள்ளீர்கள். அங்கு மின் அலுவலகம் எங்கு உள்ளது? தபால் நிலையம் எங்கு உள்ளது? என்ற அடிப்படை விடயங்களை எப்படி தெரிந்துகொள்வீர்கள். தெருத்தெருவாய் அலைந்து திரிந்தா?


பொதுவாக பக்கத்து வீட்டுக்காரரை அணுகி நட்பு கொண்டு தேவையான உதவிகளை கேட்பீர்கள், அல்லது அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சகஜமாக பேசி நட்பை வளர்த்து தேவைப்படும்போது விடயங்களை கேட்டு தெரிந்துகொள்வீர்கள். இப்படி இடங்களை தேடுவது ஒரு சிறிய சூழ்நிலை தேவை. அதேபோல அன்றாட வாழ்வில் எண்ணற்ற தருணங்களில் எண்ணற்ற தேவைகள் நமக்கு வரும். இவற்றிற்கெல்லாம், எங்கு போய்? யாரை கேட்பது?


திடீரென்று காது வலி ஏற்படுகிறது. இந்த ஊரில் சிறந்த காது மூக்கு தொண்டை நிபுணர் யாரென்று எப்படி எப்படி தெரிந்து கொள்வது. இன்றைய இளைய தலைமுறையினர் எல்லாவற்றிற்கும் கூகுள் {Google} இருக்கிறது என்று சொல்கின்றனர். அந்த வலைத்தளத்தில் தேடினால், நூறு நிபுணர்கள் பெயரை காட்டுகிறது. இதில் யார் சிறந்தவர் என்று எப்படி தெரிந்து கொள்வது. உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு மருத்துவர் இருந்தால், உங்கள் பிரச்சனை எளிதாகிவிடுமல்லவா. இப்படி ஒவ்வொரு தேவைகளுக்கும், அந்தந்த துறையினர் எவரேனும் ஆலோசனை கூறுவதற்கு இருந்தால், உங்களின் பல தேடல்களுக்கான நேரம் குறையும். மேலும் நீங்களே தேடித் தெரிந்துகொள்வதற்கும், அந்த துறைசார்ந்தவர் ஆலோசனை வழங்குவதற்கும் நிறையவேறுபாடு இருக்கும்.


எல்லாவற்றிலும் நீங்கள் நிபுணரா?


உங்கள் தொழிலில், அன்றாட பணிபுரிதலில், அன்றாட பயனத்தில் என்று எல்லாவற்றிலும் எண்ணற்ற புதிய தேவைகள், சந்தேகங்கள் வரும். எல்லாவற்றிற்கான பதிலை நீங்களே அறிந்து வைத்திருக்க முடியாது. அதேசமயம் எல்லாவற்றையும் நானே கற்றுத்தெரிந்து செய்துகொள்கிறேன் என்று கூறுவதும் சாத்தியமில்லை. ஏனெனில் உலகம் மிகப்பெரியது தினம் தினம் எண்ணற்ற மாற்றங்கள். எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெறுவது சாத்தியமில்லை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை அறிந்து வைத்திருந்தால், உங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும், உங்கள் தேவைகளுக்கு, அவற்றை தெரிந்தவர்களை அணுகினால் போதுமே, தேவையான ஆலோசனைகளைப்பெற்று, காரியத்தை சாதிக்கலாமே.


100 X 100 = 10,000


அப்படியானால் ஊரில் இருக்கும் அனைவரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமா? இது சாத்தியமா? என்ற கேள்வி வரும். ஊரில் உள்ள எல்லோரையும், நீங்கள் ஒருவரே தெரிந்து வைத்திருப்பது சாத்தியம் இல்லாமல் போகலாம். ஆனால் ஊரில் உள்ள எவரையும் அணுக, அவர் சார்ந்த இன்னொருவர் உதவலாம் தானே. உங்களுக்கு 100 நபர்களை தெரிந்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் மேலும் 100 நபர்களை தெரிந்து வைந்திருந்தால், உங்கள் தொடர்பு வட்டம் தானாக 10,000 நபர்களைக் பெற்றுவிடுகிறது. அது மேலும் விரிவடைந்தால் இன்னும் நன்மைதானே.


  • புதிதாய் வாகனம் வாங்குகிறீர்களா? எல்லா வகையான வாகனங்களையும் நீங்கள் உபயோகித்து பார்த்திருக்க வாய்ப்பி்ல்லை. எது உங்களுக்கு சிறந்ததென்று தீர்மானிப்பது எப்படி. அந்தந்த வாகனங்களை உபயோகிப்பவரைக் கேட்டால், அந்த வாகனம் குறித்த நிறை-குறைகளை எளிதில் அறிந்து தீர்மானிக்கலாம்!

  • வீடு கட்டுகிறீர்களா? எந்தப் பொருள் எங்கு கிடைக்கும். எங்கு விலை குறைவென்று எண்ணற்ற ஆலோசனைகள் தேவை!

  • அரசாங்க அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டுமா? யாரை அணுகவேண்டும் என்பது அதிமுக்கியம். இல்லாவிட்டால் அதிகம் அலைய நேரிடும்.

  • கணினி வாங்க வேண்டுமா? தற்போதைய புதிய தொழில் நுட்பம் என்ன, எந்த நிறுவன கணிணிக்கு, அருகாமையிலேயே சேவைகள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள ஆலோசனை தேவைதானே!

  • வீட்டில் மின்சாரம் சாதனம் பழுதடைந்து விட்டதா? சரி செய்யும் நபரை எங்கு தேடுவீர்கள். அறிந்தவர்களின் உதவி தேவைதானே!

  • வெளியூர் பிரயாணமா? எங்கு தங்குவது, அங்கு செல்ல எது சிறந்த பயண வழி, அந்த ஊரில் சிறந்தவைகள் என்ன? அறிந்தவரின் ஆலோசனை மிகவும் உதவியாய் இருக்கம்!

  • வீடு கட்டவோ – வியாபாரம் செய்யவோ, வங்கியில் கடன் வாங்க வேண்டுமே? எந்த வங்கியில், என்ன திட்டத்தின் கீழ் கிடைக்கும் என்ற ஆலோசனை தேவையல்லவா!


உங்களுக்கு நிறைய காரியங்கள் நடக்க வேண்டும். எல்லாவற்றையும் நீங்களே அறிந்து செய்வது சாத்தியமில்லை அந்தக் காரியங்களை செய்யக் கூடியவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

[குறிப்பு: எல்லோரையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மட்டும் போதாது. அவர்களுக்கும் உங்களை தெரிந்திருக்கவேண்டும். நீங்கள் அவரை அணுகும் போது அவர் உங்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும்.]


பெரிய வட்டத்தை நிர்வகிப்பது கடினம்தான்


இந்த நட்பு-தொடர்பு வட்டம் பெரிதாக இருந்தால், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது மிக கஷ்டம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். கல்யாணம், காதுகுத்து என்று எண்ணற்ற அழைப்புகள் வரும். எல்லாவற்றிற்கும் போய் வருவதற்கு நேரமெங்கே? பணமெங்கே? என்று சிலர் கேட்பார்கள். வீட்டில் ஏதேனும் விசேஷமென்றால் எங்கள் உறவுக்கூட்டம் மிக அதிகம் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படி உறவு, நட்பு, தொடர்பு வட்டம் விரிவடையும்போது, அந்த உறவுகளை, நட்புக்களை மேம்படுத்தி அரவணைத்து, கொண்டு செல்வது சற்று கடினம் தான். ஆனால் அந்த வட்டம் பெரிதாக இருப்பதில் அதிக பயனிருப்பதால், அந்த வட்டத்தை விரிவுபடுத்தி கொண்டு செல்லுங்கள். உங்களின் வளர்ச்சிக்கு அது மிகவும் பயனளிக்கும்.


வட்டத்தை விரிவுபடுத்த எண்ணற்ற அமைப்புக்கள்


இந்தத் தொடர்பு வட்டத்தை வளர்த்துக் கொள்ள எண்ணற்ற அமைப்புகள் உருவாகியுள்ளன. வியாபாரத்திற்கு உதவுவதற்கு பி.என்.ஐ [BNI], வர்த்தகக் கூட்டமைப்புகள் [Chamber / Federations], வட்டமேசை [Round Table], ஜே.சி.ஐ [J.C.I]போன்ற அமைப்புகளும், சேவைக்கான ரோட்டரி (Rotary), லயன்ஸ் கிளப் (Lions Club) போன்ற அமைப்புகளும் உங்கள் தொடர்பு வட்டத்தை வளர்க்கிறது.

தொடர்புகளை பெருக்க - உதவுங்கள்


ஒரே நாளில் எல்லா தொடர்புகளும் உருவாகி விடாது. தினம்தினம் புதியவர்களுடன் அறிமுகம் ஆகிக் கொள்ளுங்கள். கூடியவரை, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள். உங்கள் நட்பு-தொடர்பு வட்டத்தில், எவருக்கேனும் உதவி தேவைப்பட்டால், அதை உங்களால் செய்ய முடியுமென்றால், அதிகம் யோசிக்காமல் செய்து கொடுங்கள். அவர்களால் உங்களுக்கு நேரடியாக உதவ முடியாதுபோனாலும், உங்களுக்கு தேவைப்படும் போது உங்களுக்கு ஏதேனும் ஒருவகையில் சிறிய உதவி தருவார்கள். அவர்களால் முடியாவிட்டால், அது யாரால் முடியுமோ அவர்களை அறிமுகம் செய்து வைப்பார்கள்.


அதிகம் யோசிக்காமல், உதவிகளை வழங்குங்கள். வள்ளுவர், பயன் எதிர்பார்க்காமல் உதவி செய்யவேண்டும் என்றார். உண்மைதான். ஆனால் இந்த கலியுகத்தில், அப்படிச் செய்யவோர் விரல்விட்டு எண்ணுமளவில் கூட இல்லை. பலன் எதிர்பார்த்து செய்யும் கூட்டம்தான் அதிகம். யதார்த்தத்தை புரிந்து கொண்டு, அதிக சுயநலமில்லாமல் உதவிகளை வழங்குங்கள்.

மறந்துவிடாதீர்கள்!!

உங்கள் தொடர்பு வட்டத்தை

விரிவு கொடுத்துக்கொண்டே இருங்கள்;

நீங்கள் பெறுவதைக் காட்டிலும்

அதிகமாக உதவி செய்யுங்கள்;

உங்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும்

ஏதேனும் வகையில் உதவிகள் வந்து சேரும்;


எவ்வளவுக்கெவ்வளவு உங்களின்

தொடர்பு வட்டம் விரிவடைந்துள்ளதோ

அவ்வளவுக்கவ்வளவு உங்களின்

வியாபாரம் விருத்தியடையும்;

ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்

அந்த தொடர்பு வட்டத்திற்கு

நீங்கள் உண்மையானவராகவும்

நம்பிக்கையானவராகவும் இருக்கவேண்டும்;

சுயநலமாக மட்டுமே இருந்தால்

நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது;

கொடுத்துப் பழகுங்கள்

கொடுப்பதில் இருக்கும் சுகம் பெறுவதில் இல்லை;



- [ம.சு.கு - 27-04-2022]



12 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page