top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : இன்றைய தினத்தை வாழுங்கள்

Updated: Jul 9, 2022


“நேற்று என்பது முடிந்து போன ஒன்று;

நாளை என்பது வராத கனவு;

இன்று என்பது மட்டுமே நிச்சயமான ஒன்று;”


இந்தக் கருத்தை, பல அறிஞர்கள் வெவ்வேறு வார்த்தைகளில், பலதரப்பட்ட உதாரணங்களுடன் சொல்லி நமக்கு புரிய வைக்க முயன்றுள்ளனர். அந்த அறிஞர்களின் மொழிகள், நமக்கு முழுவதுமாய் புரிந்து செயல்படுகிறோமா? என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


போனவை போனவைதான்


நேற்றைய 24 மணி நேரம் முற்றிலுமாய் நம் கைகளை விட்டு போய்விட்டது; நேற்று செய்திருக்க வேண்டியவைகளை தவறவிட்டிருந்தால் இழந்த நேரப்பொழுது இழந்தவை தான்; அந்த செயல் தேவையானதென்றால், இன்றைய தினத்தின் சில மணித்துளிகளை ஒதுக்கி செய்ய வேண்டியதுதான். சில சமயங்களில், இன்று அவற்றிற்க்கு ஒதுக்க நேரம் இருந்தாலும், அந்த செயலுக்குரிய காலக்கெடு முடிந்து இருக்கும். நேற்றோடு போனவைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட ஒன்றுமில்லை.


“ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ”


என்ற ஔவையின் மொழிகள், மனித உயிர்க்கும் மட்டும் என்றில்லை, நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும் இந்த பொன்னெழுத்துக்களுக்குள் அடங்கியதுதான். அதனால்தான் “காலம் பொன் போன்றதென்றனரோ”.


எப்படி, சென்ற பொழுதைப்பற்றி பேசுவதில் பயனில்லையோ, அவ்வண்ணமே நானும் அதைப் பற்றி அதிகம் எழுதுவதிலும் யாதொரு பயனுமிருக்கப்போவதில்லை.


எதிர்காலம் உறுதியானதா?


சென்றதை விடுத்து எதிர்காலத்தைப் பற்றி அதிகம் பேசலாம் என்று நினைத்தால், நாம் நாளை எழுந்திருப்பது உறுதியா? என்ற கேள்வி உடனே மனதில் எழுகிறது. நாளைய தினம் நாம் எழமாட்டோம் என்று தெரிந்தால், யாருமே உறங்கவே மாட்டார்கள். நாளை எழுவோம் என்று எல்லோரும் நம்புகின்றனர். இருந்தாலும் அன்றாடம் பல்லாயிரம் மக்கள், அடுத்த நாள் சூரியனைக் காண கண்விழிப்பதில்லை. இப்படி நாளைய தினத்திற்கான நமது இருப்பே பெரிய சந்தேகமாக இருக்கும்போது, “நாளை”-யை பற்றி அதிக நேரம் செலவிடுவதில் என்ன பயன்?


எப்போதுதான் வாழ்வது?


“நேற்றில் பயனேதுமில்லை

நாளையின் பயனில் உறுதியில்லை

மீதமிருப்பது இன்று மட்டும்தான்”


அதனால்தானே, சில அறிஞர்கள் நாளைய தினம் இல்லை என்று எண்ணி, இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்துவிடு என்கின்றனர். உண்மைதான்! நாளை இல்லை என்று இன்றே வாழ்ந்து விட வேண்டும்.


ஒருவேளை இந்த வரிகளை அப்படியே எடுத்துக்கொண்டு ஒருவன் வாழ்ந்தால் என்னவாகும்? தனது செல்வம் முழுவதையுமே இன்றே செலவு செய்து அனுபவித்துவிடுவான். நாளை விடிந்தால் கையில் ஒன்றும் இருக்காது. இதுவா முன்னோர் சொன்ன சொல்லின் பொருள்?


இன்றே வாழ்ந்து விடுங்கள் என்பது எல்லா செல்வத்தையும் தீர்த்து விடுங்கள் என்று பொருளல்ல. அவை இன்றைய தினத்தை மனநிறைவோடு வாழ்வதற்கான வழிகாட்டிச் சொற்களே. இன்று செய்ய வேண்டிய செயல்களை இன்றே பொறுப்புடன் செய்ய வேண்டும் என்பதே. இன்றைய வேலைகளை நாளை என்று தள்ளிப் போட்டால், நாளைய வேலைகள் தடைபடும். தேவையில்லாத அவசரமும், பதட்டமும், நம்மைப் பற்றிக் கொள்ளும். செய்ய வேண்டியவற்றை அதற்குரிய நேரத்தில் செய்து முடித்தால் வாழ்க்கை நிம்மதியாய் போகும்.


நாளைக்கு திட்டமிட வேண்டும்


இன்றைய தினத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, நாளையைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு நாம் முற்றும் துறந்தவர்கள் அல்லவே. நாளைய தினம், அடுத்த மாதத்திற்கு உணவு வேண்டின், இந்த மாதம் சரியாக வேலைக்குப் போனால் தான் அடுத்த மாடம் வாழ்க்கை நகர்த்த, 1-ஆம் தேதி ஊதியம் கிடைக்கும். ஆதலால் இன்றைமட்டும் பார்த்து நாளை பற்றி கவலையில்லாமல் இருக்க முடியாது. மேலும் நாளைய வெற்றிக்கு, இன்றைய செயல்கள் தான் வழிவகுக்கும்.


நாம் நாளை எதை சாதிக்க விரும்புகிறோம் என்கிற தெளிவு இருக்க வேண்டும். சாதிக்க விரும்பியதை நோக்கி பயணிப்பதற்கான படிப்படியான திட்டமிடல் அடுத்த முக்கியமான ஒன்று. ஒவ்வொரு செயலுக்கும் காலநேரம் வகுத்து, உரிய நேரத்தில் துவக்கி சரியாக செய்து வந்தால், வெற்றியை நோக்கிய பயணம் சற்று எளிதாகவும், இனியதாகவும் இருக்கும்.


கனவுகள் தான் வாழ்க்கையின் இயங்குசக்தி


நாளை பற்றிய கனவுகள் இருந்தால்தான் வாழ்க்கைக்கு ஒரு பிடிமானம் இருக்கும். நாளை இன்னின்னவை வேண்டும் என்கிற தேவை இல்லாவிட்டால், இன்றைய செயல்பாட்டிற்கு எந்த ஒரு உந்துதலும், இலக்கும் இல்லாமல் போகும்.


அதேசமயம் – ‘நாளை’ பற்றிய கனவு மட்டுமே

நம்மை அதை அடைய வழிவகுக்கும் என்று

சும்மா இருந்தால், எதுவுமே நடக்காது;

கனவுகள் கனவுகளாகவே கரைந்துபோகும்.


இன்று என்ன செய்கிறோம் என்பதுதான். நாம் நாளை எப்படி இருக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும். நாளைய தினம் அதிக படபடப்புடனும், மனஉளைச்சலுடனும் செல்ல விரும்பினால், இன்று எதையும் செய்யாமல் வெறுமனே தள்ளிப் போடுங்கள். இன்று செய்திருக்க வேண்டியவைகள் நாளை அவசர தேவைகளாக உங்கள் தலையில் அமர்ந்தாலே போதும், எல்லா வகையான மன உளைச்சலும் துவங்கிவிடும்.


அவசர-அவசியங்களுக்கேற்ப முன்னிலைப்படுத்துங்கள்


ஒருவேளை உங்களுக்கு நாளைய தினம் எந்த ஒரு அவசரமும், பரபரப்பும் இல்லாமல் போக விரும்பினால், இன்றைய தினம் நன்றாக செயல்படுங்கள். இன்று செய்ய திட்டமிட்ட செயல்களை, அவற்றின் அவசர-அவசியங்களுக்கேற்ப முன்னிலைப்படுத்தி, ஒவ்வொன்றாய் செய்து முடியுங்கள்.


ஒருவேளை பட்டியலிட்டவைகள் முழுவதையும் முடிக்க முடியவில்லை என்றாலும், பட்டியலின் கடைசியில் இருப்பவைகள் உங்களுக்கு உடனடி மன அழுத்தத்தை தரப்போவதில்லை. பட்டியலின் கீழுள்ளவைகள் அதிமுக்கியம் இல்லாததால், நாளை மனஅழுத்தமின்றி, அவற்றிற்கு நேரம் ஒதுக்கி அவற்றை முடிக்கலாம்.


இலட்சியத்தோடு குடும்பமும் முக்கியம்


இன்றே எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் குடும்பம் உறவுகளுக்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை தவிர்த்து விடாதீர்கள். இன்று குடும்பத்தை தவிர்த்தால் நாளை குடும்பம் உங்களைத் தவிர்த்துவிடும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைப்பதே உங்கள் குடும்பத்திற்காக தானே! அந்த குடும்பத்தோடு நீங்கள் இல்லாவிட்டால் எவ்வளவு சம்பாதித்தும் என்ன பயன்? இன்றைய செயல்களை அவசர-அவசியங்களுக்கேற்ப முக்கிய படுத்தும்போது, போதிய நேரத்தை குடும்பத்திற்கும், உறவுகளுக்கும், நட்பை வளர்க்கவும் ஒதுக்க வேண்டும்.


ஓடி ஓடி எத்தனை செல்வத்தை சேர்த்தாலும், அதை அனுபவிக்க நம்மோடு குடும்பமும், உறவுகளும் இருக்க வேண்டியது முக்கியம். நம்மைச்சுற்றி நம்மவர்கள் யாரும் இல்லாவிட்டால், நாம் எவ்வளவு செல்வத்தை சேர்த்தாலும், எந்தப் புகழை அடைந்தாலும், நம் வாழ்வில் முழுமையை உணர மாட்டோம்.


பிள்ளைகளோடு பின்னர் நேரம் செலவழிக்கலாம் என்று வேலையை மட்டுமே கட்டியழுதால், பிற்காலத்தில் குழந்தைகள் உங்களை தூரத்திலேயே வைத்திருப்பார்கள். பிள்ளைகள், குழந்தைப் பருவத்தில் தான் பெற்றோரின் அன்பு-அரவணைப்பிற்கு ஏங்கியிருக்கும். அவர்களோடு நேரம் செலவிட்டு அன்பு காட்டாமல் பின்னாளில் அன்பு செலுத்துவதில் என்ன பயன்?


நாளைய கனவோடு இன்றைய செயல் முக்கியம்


எல்லா விடயங்களிலும் ‘நாளை’ என்பது முக்கியமாக இருந்தாலும், ‘இன்று’ என்ன செய்கிறோம் என்பது அதனினும் முக்கியம். நேற்றுவரை, என்ன தவறுகள் வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். போனதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்தால், நாளைய தினம் நம் எண்ணம் போல் அமைய வாய்ப்புகள் அதிகம்.


நாளைய கனவுகளுக்கான தெளிவுடன்

இன்றைய செயல்களை இன்றே செய்து முடியுங்கள்;

நாளைய தினத்தை பழைய தலைவலி ஏதுமின்றி

புதிய காகிதத்தில் துவங்கினால்,

எந்த மாற்றத்தையும், புதுமையையும்

மனம் ஏற்க தயாராக இருக்கும்;

பழைய சுமைகள், நம் மாற்றத்துக்கு

தடையாகி விடாத வண்ணம்

இன்றே செய்ய வேண்டியவைகளை செய்து முடியுங்கள்;


- [ம.சு.கு - 09.07.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page