“வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்”
என்ற சொலவடையை பல தருணங்களில் கேட்டிருப்பீர்கள். அதென்ன “வாயுள்ள பிள்ளை” – எல்லா பிள்ளைகளுக்கும் வாயிருக்கிறதுதானே? என்று கேட்காதீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
இப்படியும் பதில்கள் வரும்
நீங்கள் யாரிடமேனும் கேள்வி கேட்டால், அவர்கள் எப்படியெல்லாம் பதில் அளிக்கக்கூடும்;
என்ன கேள்வியானாலும், யார் கேட்டாலும், பதிலே சொல்லாதவர் ஒருவகை;
எந்த கேள்விக்கும், “இல்லை”, “முடியாது” என்று எதிர்மறையாக பதில் சொல்பவர் ஒருவகை;
கேட்ட கேள்விக்கு, வளவளவென்று நீண்ட பதில் சொல்பவர் ஒருவகை (இறுதியில் பதில் சொன்னாரா? இல்லையா? என்று யாருக்குமே தெரியாது);
எந்தக் கேள்விக்கும் இரத்தின சுருக்கமாக ஒரே வார்த்தையில் பதில் சொல்பவர்கள் ஒரு வகை;
எந்த கேள்வி கேட்டாலும் உடனே அதற்கு எதிர் கேள்வி கேட்பவர்கள் ஒரு வகை;
இப்படி எண்ணற்ற வகையான மனிதர்களுக்கு இடையில்தான் நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
தவறான பேச்சால் சிக்கலில் மாட்டுகிறோம்
எங்கு, யாரிடம், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது, என்று சமயசந்தர்பங்களுக்கேற்ப காய் நகர்த்துவது ஒரு சாதுர்யமான கலை. அப்படி இடம்-பொருள்-ஏவல் அறிந்து பேசுபவர்கள், தாங்கள் எடுத்த காரியத்தில், பிற போட்டியாளர்களைக் காட்டிலும் வேகமாக முன்னேறுகிறார்கள். தவறான தருணத்தில், பேசக்கூடாததைப் பேசி, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்துபவர்கள், தங்களின் பெரும்பாலான நேரத்தை தாங்கள் ஏற்படுத்திய சிக்கலை சரி செய்யவே நேரம் கழிக்க வேண்டியுள்ளது. அப்படி தேவையில்லாமல் சிக்கி நேரம் வீணாக்குபவர்கள், எப்படி முன்னேற்றம் காணமுடியும்.
உழைப்பு மட்டும் போதுமா?
உழைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பல இடங்களில் குறிப்பிடுகிறோம். நானும் அவ்வண்ணமே பல கட்டுரைகளிலும் எழுதியுள்ளேன். உழைப்பே வெற்றியென்பது சத்தியவாக்கானாலும், உழைக்கும் எல்லோருமே வென்று விடுகிறார்களா? என்றால், “ஆம்”, “இல்லை” என்று இரு பதில்கள் வரும்.
நிதர்சனம் யாதெனில், உழைப்பவர்கள் எல்லோருமே கட்டாயம் சராசரிக்கும் மேற்பட்ட நிலையை அடைகிறார்கள். கடுமையான உழைப்பைத் தாண்டி, அவர்களின் உழைப்பு சமுதாயத்தால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து அவர்களின் பெரிய வெற்றிகள் தீர்மாணமாகின்றன. அந்த பெரிய வெற்றியைப் பெற, சமயோசித செயல்பாடு அதிமுக்கியமாகிறது. சமயோசித செயல்பாட்டில் அதிமுக்கியமானது பேச்சாற்றல். சமுதாயத்தால் சிறந்த முறையில் அங்கீகரிக்கப்பட, இடம்-பொருள்-ஏவல் அறிந்து மக்களிடம் பேசுவதும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு உரிய அங்கீகாரமளித்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு முன்னேறுவதும் முக்கியமான குணாதிசயங்களாகின்றன.
உங்களை உலகம் அறியவேண்டும்
எவ்வளவு உழைத்தாலும் அது மக்களிடம் அங்கீகாரத்தைப் பெற, அதைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. சந்தையிலே எவ்வளவு புதிய பொருட்கள் வந்தாலும், எந்த பொருள் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறதோ, அதன் விற்பனை தான் அதிகரிக்கிறது. ஏனெனில் சந்தையில் நிறைய பொருட்கள் இருக்கும்போது, நம்முடைய புதிய பொருட்கள் மக்களை ஈர்க்க, எண்ணற்ற விளம்பரம் தேவைப்படுகிறது.
பொருட்களின் விளம்பரத்தேவை போலத்தான், இன்று மனித வாழ்க்கையும் ஆகிவிட்டது. தனிமனித வெற்றி சமுதாயத்தில் அங்கீகரக்கப்பட, அந்த நபர் எவ்வளவுதான் அறிவும், ஆற்றலும், கடின உழைப்பும் உடையவரானாலும், அவருடைய அந்த அறிவும், செயல்பாடும் போதிய அளவு விளம்பரப்படுத்த பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இன்று உள்ளது.
வாய்ப்புக்களை உருவாக்குங்கள்
தனிமனிதன், தன் அறிவாற்றலை, சேவையை, நிபுணத்துவத்தை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தெளிவாக எடுத்துரைத்து, வாடிக்கையாளரின் நினைவுகளில் பதிய வைக்க வேண்டும். ஒரு சில துறைகளில் அதற்கான வாய்ப்புக்கள், போட்டியைப் பொருத்து, தானாக வரும். ஆனால் பல துறைகளில், அந்த வாய்ப்புக்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். வாய்ப்புகள் தானாக வரவேண்டும் என்று காத்திருந்தால், எண்ணற்ற காலதாமதங்கள் ஏற்படக்கூடும். உங்களுக்கான வாய்ப்புக்களை நீங்கள்தான் தேடிச் செல்லவேண்டும்.
தற்பெருமை ஆபத்தாகும்
நிறைய பேச வேண்டும் என்று சொல்கிறேன். அதற்காக, உங்களைப் பற்றி நீங்களே அதிகமாக பெருமை பேச வேண்டுமென்று சொல்லவில்லை. தற்பெருமை ஆபத்தான ஒன்று. தற்பெருமை பேசுபவர்களை மக்கள் சீக்கிரத்தில் வெறுக்கத் துவங்கிவிடுகிறார்கள்.
உங்கள் சேவைகள், உங்களது பொருட்களின் தரம் மற்றும் உபயோகங்கள், உங்களின் நிர்வாகத் திறமை குறித்து சந்தை அறிந்தால் தானே, உங்கள் வியாபாரத்தை வளர்க்கமுடியும். நீங்கள் வெற்றிகரமாக செய்த திட்டங்களைப் பற்றி சந்தையில் எடுத்துரைத்தால் தானே, புதிய திட்டங்களை நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் தருவார்கள்.
வாடிக்கையாளரைக் கவர நிறைய பேசவேண்டும்
உங்களின் தனிப்பட்ட ஆற்றலை, உங்கள் நிறுவனத்தின் சேவையை, இந்த போட்டு நிறைந்த உலகில் மக்கள் எப்படி தானாக அறிவார்கள். உங்களின் தரமான சேவையை மக்கள் தானாக அறிந்துகொள்ள, நீண்டகாலம் எடுக்கும். அது வரை உங்களால் தொழில் தாக்கு பிடித்து நிற்கமுடியுமா? இன்று உலகம் இயங்கும் வேகத்தில், நீங்கள் அவ்வளவு காலம் காத்திருப்பது சாத்தியமில்லை. உங்களின் வெற்றியை வேகப்படுத்த, உங்களை நீங்கள் விற்பனை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
பேசத்தெரிந்தால் தான் வெற்றி என்று சொல்கிறேன் என்பதற்காக, உங்களை உடனே சிறந்த மேடைப் பேச்சாளராக வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை. உங்களின் வாடிக்கையாளருடன் பேசும்போது, அவர்களின் தேவைகள், எண்ணங்கள், காரியத்தின் அவசரம் அறிந்து உரிய முறையில் பேசவேண்டும். புதிய நபர்களை உங்களின் வாடிக்கையாளராக மாற்றும் அளவிற்கு நயமாக பேசவேண்டும்.
உங்களின் வார்த்தைகள், கூடுமானவரை நேர்மறையானதாக இருக்க வேண்டும். நீங்கள் தவறுதலாக உபயோகிக்கும் ஒவ்வொரு எதிர்மறையான வார்த்தைகளும், எதிரில் இருப்பவர்க்கு அதிக சந்தேகங்களை ஏற்படுத்தும்.
இலக்கியத்தில் வாடிக்கையாளர் அனுகுமுறை
பண்டைய இலக்கியத்தில் வியாபாரத்தில் எப்படி பேச வேண்டுமென்று ஒரு உதாரணமுண்டு.
ஏதேனுமொரு பொருளை கேட்டு வாடிக்கையாளர் வந்தால், அந்தப்பொருள் இல்லாதபட்சத்தில், நேரடியாக இல்லை என்று கூறாமல், அதற்கு இணையான வேறு பொருள் ஒன்று இருக்கிறதென்று சொல்ல வேண்டும்.
அவர் கேட்கும் பொருள் நம்மிடம் இருந்தால், நாம் சொல்லும் பதில், அவருடைய அடுத்த கேள்விகளுக்கும் பதில் இருக்கும் வகையிலும், அதேசமயம் சுருக்கமானதாகவும் இருந்தால், நமக்கு மற்ற வாடிக்கையாளரைக் கவணிக்க நேரம் கிட்டும் (உத; கடையிலே வாடிக்கையாளர் சக்கரை இருக்கிறதா என்று கேட்டால், வியாபாரி நேரடியாக கிலோ 50 ரூபாய் என்று சொல்ல வேண்டும். இந்த பதில் தானாக “இருக்கிறதென்று” உணரவைத்து, அடுத்த கேள்வியான விலையென்ன என்பதற்கும் பதில் ஒருசேர கிடைக்கப்பெறுகிறது.
இப்படி என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பது வியாபாரத்துக்கு மட்டும் முக்கியமான ஒன்றல்ல. உங்களின் அன்றாட வாழ்வின் எல்லா தருணங்களிலும் பேச்சுதான் முக்கியமான கலை. எல்லா கலைகளையும் போல, இந்த பேச்சுக்கலைக்கும் எண்ணற்ற பயிற்சிகள் தொடர்ந்து தேவைபடும். மற்ற கலைகளைப் போல குருவிடம் சென்று கற்றுக்கொள்வதைக் காட்டிலும், நீங்களாக அனுபவத்தில் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் தான் இதில் ஏராளம்.
சிறார் கதைகள் உணர்த்தும் பாடம்
பல இக்கட்டான தருணங்களில், தன் பேச்சுத் திறமையால், நிலைமையை சமாளித்து வெளிவந்தவர்கள் ஏராளம். நீங்களே கூட, சில சிக்கல்களிலிருந்து நயமாக பேசி நழுவியிருப்பீர்கள். சிறுவயதில் விகடகவி தெனாலிராமன் கதைகள் கேட்டவர்கள், எப்படி சமயோசிதமும், பேச்சுத் திறனும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அவரைக் காப்பாற்றியது என்று புரிந்திருப்பீர்கள்.
கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன், அக்பர்-பீர்பால், முல்லா நசிருதீன் என்று எண்ணற்ற நகைச்சுவை கலந்த அறிவாளிகளின் கதைகளைப் பிள்ளைப்பருவத்தில் கேட்டிருப்பீர்கள். அவை யாவும் வெறும் கற்பனைக் கதைகளாகக் கூட இருக்கலாம். கதை எதுவானாலும், அந்தக் கதையின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளும் பாடம் “வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்வான்” என்பது தான்.
பேச்சு – பல்வேறுபட்ட அனுகுமுறைகள்
பேச்சு என்ற கலையில், ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட பானியை கையாலுகிறார்கள். தங்களுக்கென்ற ஒரு தனிப்பட்ட அடையாள முறையை உருவாக்கி புகழ் பெறுபவர்கள் ஏராளம். பொதுவாக பேச்சாற்றலில் பலரும் கையாள்கின்ற சில அனுகுமுறைகள் இவையே:
எடுத்தவுடன் சற்று அதிகார தொனியில், பேச்சை துவக்கி எதிராளியை சற்றே பின் வாங்க வைப்பது;
அமைதியாய் அடுத்தவரின் பேச்சை ஆதங்கத்தை கேட்டு ஆறுதல் அளிப்பது.
பிறருடனான உரையாடலில், எதிராளியின் கருத்தை ஆரம்பத்தில் முழுமையாய் ஏற்று, பின் படிப்படியாய் அவர்களுக்கு சூழ்நிலையை புரியவைத்து, தன் வழிக்குக் கொண்டு வருவது.
எதிராளியின் சூழ்நிலை மற்றும் தேவையைப் புரிந்து, அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப விவாதத்தை / உரையாடலை வழிநடத்தி சாதிப்பது.
தவறு செய்துவிட்ட இடங்களில், அவற்றை ஏற்று மன்னிப்புக் கோரி மீண்டும் வாய்ப்பைப் தக்கவைப்பது.
இப்படி சூழ்நிலைகள், மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப, நம்முடைய பேச்சை கவனத்தோடு வடிவமைத்துக்கொண்டாள், பெரும்பாலான மக்களின் ஆதரவை எளிதாக வெல்லலாம். பொதுவாக, வெற்றி என்பது நாம் சேர்த்துவைக்கும் பொன்னிலும், பொருளிலும் இல்லை. உண்மையான வெற்றி என்பது மக்களின் மனதில் நீங்காது நிறைந்திருப்பதில் தான் உள்ளது.
வார்த்தைகள் தான் பெரிய ஆயுதம்
எத்தனைதான் செல்வத்தை வாரி வாரி இறைத்தாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க வார்த்தைகள்தான் பலமான ஆயுதம். எந்தச் செல்வமும் இல்லாமல், தங்களின் பேச்சாற்றலாலும், தனித்துவமான செயல்பாடுகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பல தலைவர்கள் பிடித்திருக்கிறார்கள்.
ஆதலால்
இடம் பொருள் ஏவலறிந்து
பேசக் கற்றுக்கொள்ளுங்கள்!
தவறு நேர்ந்துவிட்டால்
உளமார மன்னிப்புக் கோருங்கள்!
பொருளால் ஏற்படும் இழப்புக்களை
பொருள் கொடுத்து ஈடு செய்யலாம்!
வார்த்தைகளால் ஏற்படும் பாதிப்புகளை
சமாதானம் செய்து சரி கட்டினாலும்
வார்த்தைகள் ஏற்படுத்தும் வடுக்களை அழிக்க
பல காலம் பிடிக்கும்!
சொன்ன சொற்களை
திரும்பப் பெற இயலாதென்பதால்
வார்த்தைகளில் அதிக கவனம் தேவை;
நாணயமும் நாநயமும் இருந்தால்
மனநிறைவான வாழ்க்கையை அமைக்க
எல்லோராலும் முடியும்;
- [ம.சு.கு 27-07-2022]
Comments