top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தலைமைப்பண்பு - கருத்தொற்றுமை

Updated: Nov 30, 2021

மறுமொழிகள் பலவிதம்


நாம் தினமும் பல்வேறு பட்ட மனிதர்களோடு பழகுகின்றோம். பெரும்பாலானவர்கள், நம்முடைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. நம் கருத்துக்கு, பல எதிர் கருத்துக்கள் உடனுக்குடன் வருகிறது. அதேசமயம், ஒரு சில நபர்களோ, எதற்கும் அசருவதில்லை. நாம் எதைச் சொன்னாலும் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? இல்லையா? என்பது நமக்குத் தெரிவதேயில்லை.


நம்மைச் சுற்றிலும் இப்படி

  • நமக்கு எதிரான கருத்துக்களை கூறுபவர்களும், எந்தவொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தாதவர்களும் நிறைந்திருக்க, இவர்களுக்கு மத்தியில் நம்மால் சாதிக்க முடியுமா?

  • நம்முடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை தவிர்த்துவிட்டு நம்மால் வெற்றி கொள்ள முடியுமா?

எல்லோரையும் அரவணைக்க வேண்டும்


வாழ்க்கையில் சிறிய வெற்றிகளை பெறுவதானால், நாம் ஒருவர் மட்டும் தனியாக உழைத்து எட்டிவிடலாம். பெரும் வெற்றிகளையும், சரித்திரங்களையும் படைக்க வேண்டுமென்றால், நாம் கட்டாயம் பலருடைய துணையை பெற்றிருக்க வேண்டும். அவர்களை அரவணைத்து அவர்களின் ஆதரவைப் பெற்று அவர்களையும் வழிநடத்தி மாபெரும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும்.


  • எப்படி எல்லாரையும் அரவணைத்துப் போவது?

  • எப்படி எல்லோரையும் நம்முடைய கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ள செய்வது?

  • எப்படி ஒரு நல்ல தலைவனாய் அவர்களை வழி நடத்திச் செல்வது?


நம்முடைய கருத்துக்களை, நம்மை சார்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவைப்பது என்பதே, மிகப்பெரிய கலை. அதிலும் ஒரு விடயத்தை, ஆணும்-பெண்ணும் வெவ்வேறு கோணத்தில் அனுகக்கூடியவர்கள் என்பதால், இருபாலரும் ஏற்கும் வகையில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவால். குறிப்பாக, நம்முடைய கருத்துக்கள், அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கும், தேவைகளுக்கும் பொருந்தாமல் இருக்கும்போது, அவர்கள் நம்முடைய கருத்துக்களை ஏற்றுக் பின்தொடரச் செய்வதென்பது, வசியக்கலையை காட்டிலும் கடினமான ஒன்றுதான். ஆனால் இந்த அரும்பெரும் செயல்களை சாதாரணமாக செய்துகாட்டிய பல பெருந்தலைவர்களையும், ஆளுமையாளர்களையும் நாம் அறிவோம்.


ஆளுமைத் திறன்


சிலவற்றை எழுத்துக்களால் சொல்ல இயலாது. அப்படித்தான் இந்த மனித உறவுகளும்-உணர்வுகளும் சார்ந்த ஆளுமைத் திறனும். உங்களின் பல்வேறு அனுபவங்கள் தான் அந்த கலையை உங்களுக்கு கற்றுத்தரும்.


இங்கே என் அனுபவத்தில் கண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவையனைத்தும் ஒரு சிறு பொறிதான். இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட அனுபவங்களை கூட்டி, மற்ற தலைவர்களின் அனுபவப் பகிரல்களில் கற்றுக்கொண்டு, எல்லோரையும் அரவணைப்பது எப்படி, தலைமையேற்று வழிநடத்துவது எப்படி என்று அறிந்துணர்ந்து கொள்ளுங்கள்.


முதல் தேவை


  • ஒருவரை நம்மோடு ஒத்துப் போகச் செய்ய வேண்டும் என்றால், முதலில் அவருடைய தனிப்பட்ட தேவை என்ன என்பது நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அவருடைய தேவைகளை முன்னிலைப்படுத்தி, நம் கருத்துக்களை கூறும் போது, அவர் சற்று யோசிக்க துவங்குவார்.

  • சில சமயங்களில், சில விடயங்களை நாம் சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களாகவே கண்டுபிடித்ததாக இருந்தால் மட்டுமே அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் எல்லாவற்றையும் எடுத்தவுடன் கூறக்கூடாது. அவர்களை களத்தில் இறக்கி சிறிது அனுபவப்பட விட்டுவிட வேண்டும். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்கள் கண்டு கொள்ளும் தீர்வுகளை நம்மிடம் சொல்லும் போது, அதை அவர்களுடைய தேவைகள் என்ன என்பதற்கு ஏற்ப அவற்றை தொடர்புபடுத்தி, அவர்களுக்கு அந்த கருத்தை புரிய வைத்தால், அவர்கள் நம்மோடு கட்டாயம் இணங்குவார்கள்.

  • சில சமயங்களில் அந்த அனுபங்கள், அவர்களுக்கு தவறான புரிதலை தரநேர்ந்தால், அவர்களை நாம் மறைமுகமாக வழி நடத்தி சரிபடுத்த வேண்டும். பலருக்கு, அவர்களின் அனுபவங்களில் மற்றவர்களின் நேரடி பங்கெடுப்பும், பிற அறிவுரைகளும் பிடிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு, அவ்வப்போது மேலோட்டமான சில யோசனைகளை மட்டும் கூறுவதன் மூலம், அவர்களாகவே சிந்தித்து அறிந்ததுபோல் ஒரு மாயையை உருவாக்கி, அவர்களை நம்முடைய பாதையில் பயணிக்க வழிவகுக்க வேண்டும்.


சொல் வசியம்


பல தலைவர்கள் தங்களின் பேச்சாற்றலால் என்னற்றவர்களை மூளைச்சலவை செய்து அவர்களை கண்மூடித்தனமாக தங்களை பின்தொடர வைத்தார்கள். ஹிட்லரை போன்ற கொடுங்கோலர்கள், தங்களின் பேச்சாற்றலால் மிகப்பெரிய படைபலத்தை உருவாக்கி ஒரு இனத்தையே அழிக்க முற்பட்டார்கள்.


அப்படிப்பட்ட கொடுங்கோலர்கள் போல் ஆவது நம்முடைய விருப்பம் அல்ல. நாம் நம்முடைய இலட்சியங்களை அடைய, நாம் செல்லும் பாதையை வகுத்து, அந்தப் பாதையில் நம்மோடு பயணிப்பவர்களை நம் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒத்துப் போகச் செய்து, எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்பது மட்டுமே நம்முடைய குறிக்கோள்.


நாம் யாரையும் தவறாக வழி நடத்தப் போவதில்லை. நாம் கண்டறிந்து வெற்றிப்பாதையில் அவர்கள் நமக்கு உறுதுணையாக இருக்க, அவர்கள் நம்முடைய கருத்துக்களை முழுமனதோடு ஏற்க செய்வது மட்டுமே நமது நோக்கம்.


வார்த்தை ஜாலம் - வியாபார உத்தி


உதாரணத்திற்கு, வீடுவீடாக வரும் விற்பனையாளர்கள், நாம் எத்தனை முறை வேண்டாமென்று சொன்னாலும், அவர்கள் தொடர்ந்து பேசி நம்மை சமாதானம் செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். அவர்களின் பொருள், நமக்கு அத்தியாவசிய தேவை என்ற மாயை உருவாக்கி, பொருளை நமக்கு விற்று வெற்றி கொள்கிறார்கள். அந்த விற்பனைக்கலை தான் வியாபார வெற்றி.


அவர்களின் விற்பனைமுறை எப்படி என்று சற்று யோசித்துப் பார்த்தால், அவர்கள் முதலில் நம் வீட்டில் உள்ளவர்கள் அன்றாடம் செய்ய கஷ்டப்படும் விஷயம் எதுவென்று அறிந்து கொள்கிறார்கள். அதை முன்னிலைப்படுத்தி அவர்களின் வார்த்தைஜால விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்களின் குறிப்பிட்ட பொருளை வாங்கினால் நம் அன்றாட செயல்கள் மிக எளிமையாக செய்ய இயலும் என்று நம்மை வெற்றிகரமாக நம்பவைக்கிறார்கள்.


இந்த வார்தைஜால விளையாட்டுக்கு அவர்கள் பலவாறு தயார் படுத்தப்படுகிறார்கள்.

  • கூச்சப்படாமல் பேசுவது

  • எந்தெந்த வார்த்தைகள் பயன்படுத்த வேண்டும்

  • எந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்

  • பெண்களிடம் எதை சொல்ல வேண்டும்

  • ஆண்களிடம் எதை முன்னிலைப்படுத்த வேண்டும்

  • எப்படி அவர்களை புகழ வேண்டும்

  • எதை தேரடியாக சொல்ல வேண்டும்

  • எவற்றை மறைமுகமாகவும், நாசுக்காகவும் சொல்ல வேண்டும்

என்று என்னற்ற சிறுசிறு விடயங்களிலும், அவர்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு களத்தில் இறக்கப்படுகிறார்கள். இதுவொறு மிகப்பெரிய வியாபார விளையாட்டு. இந்த வார்த்தைஜாலங்கள், பொருட்களுக்கேற்ப படிப்படியாய் உருவாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது.


கருத்தொற்றுமைக்கு - சில யோசனைகள்


நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள, நாம் கவனத்துடன் செய்வதற்கு சில யோசனைகள்


  • நீங்கள் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் உடல் அசைவுகள், “அவர்களை முழுமையாய் நாம் ஏற்றுக் கொள்கிறோம்” என்ற நம்பிக்கை வரும் விதத்தில் இருத்தல் வேண்டும்.

  • எதிரிலிருப்பவர் பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய, “ஆம்” என்று பதில் தரக்கூடிய கேள்விகளையே தொடர்ந்து கேட்டுக் கொண்டு வாருங்கள். பல “ஆம்”-களுக்கு இடையில் வரும் உங்களின் குறிப்பிட்ட கேள்வி பெருப்பாலும் “ஆம்”-ல் முடியும்.

  • நம்முடைய கேள்விகளுக்கு, அவர்கள் “ஆம்-இல்லை” என்று தலையை அசைப்பதற்கு முன்னர், கேள்வியை முடிக்கும் போதே முதலில் உங்கள் தலையை “ஆம்” எனும் கோணத்தில் அசைக்கவேண்டும். சில சமயங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உடல் அசைவு குறியீடுகள் அவர்களை வழிநடத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யும்.

  • சில சமயங்களில் உங்கள் கேள்விகள், “ஆம்-இல்லை” என்று பதில் தருவதற்கு பதிலாக, “இதுவா-அதுவா” என இரண்டு தேர்வுகளை கொண்டிருந்தால், இரண்டில் ஏதேனும் ஒன்றை அவர்கள் ஏற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும். உதாரணத்திற்கு நாம் நாளை காலை சந்திக்கலாமா? மாலை சந்திக்கலாமா? என்று கேட்டால், அவர்கள் ஏதேனும் ஒன்றை எளிதாக தேர்ந்தெடுப்பர். மாறாக, ‘நாம் நாளை காலை சந்திக்கலாமா?’ என்று மட்டும் கேட்டால், அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட நேரம் பொருந்தாதபோது, எளிதாக ‘இல்லை’ என்று மறுப்பதற்கான வாய்ப்பு அதிகம். “காலையா-மாலையா” என்று இரு தேர்வுகள் கொடுக்கப்படும்போது, அவர்களுக்க ஏற்ற ஒன்றை தேர்வு செய்வார்கள்.

ஆண்களோடு கருத்தொற்றுமை ஏற்பட


ஆண்களோடு உரையாடும்போது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள்:

  • எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விடயத்தைப் பற்றி ஆழமாகப் பேசுங்கள். அவர்களோடு பல வேறுபட்ட விடயங்களை ஒருசேர தொடர்ந்து பேசினால், அவர்களுடைய மூளையால் எல்லாவற்றையும் கிரகித்து ஆராய முடியாது.

  • ஒரு கருத்தை அவர் கூறும்போது இடைமறிக்காமல் அவர் கூறுவதை பொறுமையாக கேட்டு, பின்னர் நம் கருத்துக்களை கூறவேண்டும். இடைமறித்துப் பேசுவது சிலசமயங்களில் எதிர்வினையாற்றிவிடும்.

  • ஆண்களுடனான உரையாடலில் எந்தவொரு உணர்ச்சி வெளிப்பாடும் தவிர்க்கப்படுவது நல்லது. அவர்கள் பெருப்பாலும் உணர்வுகளைக் கடந்து உண்மைகளை அறிவதில்தான் ஆர்வம் கொள்வார்கள்.

  • ஆண்களோடு உரையாடும்போது வளவளவென்று பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து நீங்கள் கூற வேண்டியதை தெளிவாக, இரத்தின சுருக்கமாக, அவர்களிடம் நேரடியாக கூறி விடுங்கள். நீங்கள் சொல்லும் கருத்துக்களில் இருந்து அவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக செய்திகளை தெரிவிப்பதை தவிர்த்து, நேரடியாக செய்திகளை ஆண்களுக்கு தெரிவிப்பது மிக முக்கியம்.


பெண்களோடு கருத்தொற்றுமை ஏற்பட


பெண்களோடு உரையாடும்போது, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள்:

  • அவர்கள் நமக்கு பேச வாய்ப்பு அளிக்காவிட்டாலும், அவ்வப்போது இடைமறித்து பல்வேறுபட்ட விடயங்களை பேசவேண்டும். அவர்களின் மூளை பல விடயங்களை ஒருசேர கிரகிக்கவல்லது.

  • பெண்களோடு உணர்வுப்பூர்வமாக பேசுங்கள்.

  • அவர்கள் கூற வரும் கருத்துக்களை முழுமனதோடு கேட்பது போன்ற உடல் மொழிகளை வெளிப்படுத்துங்கள். அப்போது அவர்கள் நீங்கள் உண்மையிலேயே அவர்கள் பால் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டுள்ளீர்கள் என்ற மன நிம்மதி கிடைக்கும்.

  • பெண்களிடம் அதிகமாக பேசுங்கள். ஒரு கருத்தை பல்வேறு கோணத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை கூறுங்கள்.


நேரடி அனுபவம்


இங்கு கூறப்பட்ட சில யோசனைகள் அனைத்தும் ஒரு சிறு துவக்கப் புள்ளிதான். உங்கள் அனுபவங்கள் தான் உங்களின் பெரிய ஆசான்.


  • சூழ்நிலைகள், மனநிலைகளுக்கேற்ப வார்தைப் பயன்பாட்டை செம்மைப்படுத்துங்கள்.

  • எத்தருணத்திலும், ‘கோபம்’ முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய விடயம்.

  • எவ்வளவு கடினமாக இருந்தாலும், தைரியமாக களத்தில் இறங்குங்கள்.

  • வென்றால் சரித்திரம், தோற்றால் அனுபவம் {எதிலும் இழப்பில்லை}.


- ம.சு.கு [24-11-2021]



24 views1 comment

1 Comment


அன்புள்ள அயோக்கியன்
அன்புள்ள அயோக்கியன்
Jan 02, 2022

நன்றி தோழர்

Like
Post: Blog2 Post
bottom of page