top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : வாசிப்பை தொடருங்கள்


உங்களின் அறிவிற்கு எல்லையுண்டு

ஆனால் முட்டாள்தனத்திற்கு எல்லையில்லை

வாசிக்கும் பழக்கம் அறிவின் எல்லையை விரிவாக்கும்

எல்லையில்லாத ஒன்றினுள்

விரிந்த அறிவுதான் உங்களுக்கு பாதுகாப்பான எல்லை


பறந்த அறிவுடைமை


ஒரு சிலர் எந்த தலைப்பை பற்றி பேசுவத்தானாலும், அந்தத் துறைபற்றிய அடிப்படை அறிவுடன் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். மருத்துவம், வியாபாரம், விஞ்ஞானம், அரசியல், வானியல், உளவியல் என்று எதை பற்றியும் பேசுவார்கள். அவர்களைப் பார்த்து நானே சில முறை பிரமித்திருக்கிறேன். எப்படி எல்லா துறைகளிலும் இத்தனை அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர் என்று!!


ஆரம்பகலாலத்தில், அப்படிப்பட்டவர்களை இறைவனின் தனிப்பட்ட படைப்பென்றுகூட கருதியதுண்டு. அவர்கள் சிலரின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் அனைவரின் செயலிலும் பொதுவாக இருந்தத ஒன்று “நூல் வாசிப்பு”. எனக்குத் தெரிந்த ஒருவர், வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கிறார். ஒருசிலர், தினமும் ஒரு மணி நேரத்தைய நூல் வாசிப்பிற்கும் ஒரு மணி நேரத்தை நாளிதழ் வாசிப்பிற்கும் தவறாது ஒதுக்குகிறார். அவர் உணவைக் காட்டிலும் புத்தகத்திற்கே முன்னுரிமை அளிக்கிறார்.


பொருளாதார அறிவு தேவையா?


வியாபாரத்தில் இருப்பவரா நீங்கள். தேசப் பொருளாதாரமும், உலக பொருளாதாரமும் எனக்கெதுக்கு என்று நினைக்கிறீர்களா? சற்று யோசியுங்கள்! வாகனம் எரிபொருள் விலை அதிகரித்தால், உங்கள் பொருட்களின் விலையில் என்ன பாதிப்பு வரும் என்று? நீங்கள் உலகப் பொருளாதாரத்தை அறிந்து, உங்களால் அதில் ஒன்றும் மாற்றம் செய்து விட முடியாது என்று எண்ணி, அதைபற்றி அதிகம் கவலைகொள்ளாமல் இருக்குறீர்கள், ஆனால் பொருளாதாரம் எப்படி செல்கிறது, நமது வியாபாரத்தில் அதன் தாக்கம் என்ன? ஏற்படப் போகும் தாக்கத்தை முன்கூட்டுயே கணித்து நம் வியாபாரத்தில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது அவசியம் தானே.


பொருளாதாரத்தை அறிய, உங்களை ரகுராம்ராஜனையும், அமர்த்தியா சென்னையும் வாசிக்கச் சொல்லவில்லை. குறைந்தபட்சம் தினசரி நாளிதழை சரிவர தினமும் படியுங்கள். நாட்டின் போக்கைப் பற்றியும், உலக சந்தை நிலவரம் பற்றியும் சற்று உங்கள் சிந்தனைகளை ஒடவிடுங்கள்.


பொழுதைக் கழிக்க


சனி-ஞாயிறுகளில் நேரம் போவதில்லையா? மாயப் பெட்டியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் நேரம் கழிக்கிறீர்களா? சற்றே சிந்தியுங்கள் !. அன்றைய தினம் அந்த மாயப் பெட்டியில் பொழுதைக்கழித்ததில் கற்றது என்னவென்று? “பெரிதாய் ஒன்றுமில்லை” என்றால், அடுத்த வாரம் அந்தப் பொழுதை, நல்ல நூலொன்றை வாசித்துப் பாருங்கள். அறிவு வளர்ச்சியின் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.


வாசிப்பின் நன்மைகள் சில


தொடர்ந்த நூல் மற்றும் நாளிதழ் வாசிப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகள் சிலவற்றை இங்கு பட்டியலிடலாம்;


 • வாசிப்பு, உங்கள் மனதை அமைதி நிலைக்கு கொண்டுவர சிறந்த வழி;

 • வாசிப்பு, உங்களின் ஒருமுகத்தன்மையை அதிகரிக்க சிறந்த வழி;

 • வாசிப்ப, உங்கள் மூளைக்கு சிறந்த பயிற்சிமுறை;

 • வாசிப்பு, நீங்கள் புதியவற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு அளிக்கிறது;

 • வாசிப்பு, நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து உங்களை அப்போதைக்கு விடுவிக்கிறது;

 • வாசிப்பின் மூலம் பிறர் அனுபவங்களிலிருந்து சிறந்த பாடங்களை உங்களால் கற்க முடிகிறது;

 • வாசிப்பு, உங்கள் சிந்தனையை வளப்படுத்துகிறது;

 • வாசிப்பு,, உங்களை பெரிதாக சிந்திக்கச் செய்யும்;

 • வாசிப்பு, உங்கள் வாழ்வில் எது சாத்தியமானது, எது சாத்தியமற்றதென்று கணிக்க எளிதாக வழிவகுக்கும்;

 • வாசிப்பு, உங்களின் தன்னம்பிக்கையை மேலும் வழுப்படுத்தும்;

 • வாசிப்பு, சிலருக்கு நல்ல உறக்கத்திற்கான ஆரம்பமாகிறது;

 • வாசிப்பு, உங்களை அறிஞர்களின் எண்ண ஓட்டத்தில் பயணிக்க வைக்கும் [காலப்பயனம் கற்றலில் மட்டுமே சாத்தியம்];

 • வாசிப்பால், உங்கள் நினைவாற்றல் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படும்;


இப்படி வாசிப்பின் நன்மைகளென்ற பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். சிலநாட்கள் வாசித்துப் பாருங்கள், பின் நீங்களே உணர்வீர்கள்!


வாசிப்பிலும் தீமையுண்டா?


வாசிப்பினால் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நன்மைகள் இருக்குமிடத்தில் அந்தச் செயலுக்கு எதிர்பதமாக ஒரு சில தீமைகள் இருப்பது இயல்பே. ஆனால் இந்த புத்தக வாசிப்புப் பழக்கத்தின் தீமைகள் என்று பார்த்தால், அது மிகமிக குறைவுதான். எதிர்மறையாகப் பார்ப்பவர்கள் சிலர் கூறும் காரணங்கள்:


 • வாசிப்பு, உங்கள் நேரத்தை வீணடிக்கும்;

 • புத்தகங்கள் வாங்க அதிக பணம் செலவாகும்;

 • அதிகமான வாசிப்பு, உங்கள் கண்களை பாதிக்கும்;

 • ஒரே தலைப்பில், வெவ்வேறு எழுத்தாளர்களின் மாறுபட்ட கருத்துகள், உங்கள் குழப்பத்தை அதிகரிக்கும்;

 • சில பிரிவினைவாத கருத்துக்களை உடைய நூல்கள், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்தின் பக்கம் இழுக்கக்கூடும்;


நன்மைகள் இருக்கும் இடத்தில் தீமைகள் சிலவும் இருப்பது இயல்புதான். தீமைகளை மட்டும் பூதாகரமாக்கி, நன்மைகளை தவிர்த்தால், நம்முடைய வளர்ச்சி தேங்கிவிடும்.


"வாசிப்பு ஒன்றே - உங்கள் வாழ்வை வளமாக்கும்!!

பொருட்செல்வம் - உங்கள் வாழ்வை பாதுகாக்கலாம்

ஆனால், நூல் வாசிப்பு மட்டுமே ஞானத்தை வழங்கி

உங்களுக்கு மனநிறைவையும் அமைதியும் அளிக்கவல்லது"


வாசித்த வெற்றியாளர்கள்


வாசிப்பின் பயன்களைப் பற்றியும், அதன் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்களை பற்றியும் எழுத ஆரம்பித்தால், ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகத்தையும் தாண்டிச் செல்லும். ஏனெனில் வாசிப்பு ஒன்றே கற்றவர்களை அறிஞர்களாக்குகிறது; தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது;


தொடர்ந்து வாசிக்கப் பழகுங்கள்

வார இதழ்களையல்ல, அறிஞர்களின் எழுத்துக்களை !

நல்ல நூல்கள் நம்மை முன்னேற்றப் பாதையில்

தானே கைபிடித்து அழைத்துச் செல்லும் !


நூல்கள் நம் அறிவை வளர்ப்பதோடு,

நம் எண்ணங்களையும் நெறிப்படுத்தும் !

நம் எண்ணங்கள் தான்,

நமது வாழ்வின் கண்ணாடி !


உலகில் இன்று வரை எழுதப்பட்ட சுயசரிதைகள் யாவற்றையும் புரட்டிப் பாருங்கள். எல்லா பெரும் சாதனையாளர்களின் மத்தியிலும் காணப்படும் மூன்று பொதுவான குணநலன்கள்:

 • உழைப்பு

 • தன்னம்பிக்கை

 • நூல் வாசிப்பு


யோசிக்காமல் துவங்குங்கள்


வாசிப்பின் பலாபலன்களைப் பற்றி நீங்கள் அதிகம் யோசிக்கத் தேவையில்லை. உங்களுக்கு ஏற்ற நூல் ஒன்றை தேர்வுசெய்து வாசிக்கத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடத்தை நூல் வாசிப்பிற்கும், 10-15 நிமிடங்களை நாளிதழ் வாசிப்பிற்கும் ஒதுக்குங்கள்.


இன்றிலிருந்து ஒரு ஆண்டிற்கு பின், உங்களுக்கு நீங்களே ஒரு சுயஅலசல் செய்து பாருங்கள். உங்கள் அறிவின் விருத்தியும், வாழ்வின் புரிதலும் மேம்பட்டிருப்பதை உங்களால் நன்றாக உணரமுடியும். எவருடனும், அவர்களுக்குப் பயன்படும் விதத்தில் உங்களால் உரையாட முடியும். மேலும், உங்களோடு அறிஞர்களும் நேரத்தை செலவிட விரும்புவார்கள்.


பெற்றோர்களே !

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்க பழக்குங்கள்;

அவர்களின் வாழ்க்கைப் பயனம் தானாகவே பயனுள்ளதாகிவிடும்;

தன்னம்பிக்கையையும், வாழ்க்கையையும் கற்பிக்க

அறிஞர்களின் நூலினும் சிறந்த ஆசான் கிடைப்பது அரிது!!


- [ம.சு.கு – 16-04-2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page