சிறு குழந்தைகள் மஞ்சள் கண்ணாடி அணிந்து கொண்டு உலகமே மஞ்சளாய் தெரிகிறது என்று கூறுவர். என்னதான் விலையுயர்ந்த கருப்பு நிற கண்ணாடி (கூளிங் கிளாஸ்) அணிந்தாலும், எதிரில் உள்ள எல்லாப் பொருளும் சற்றே மங்களாகவும், கருப்பாகவும் தான் தெரியும். நாம் எதைக் கொண்டு பார்க்க முற்படுகிறோமோ, நம்மைச் சுற்றிய இவ்வுலகமும் அதுவாகவே நமக்கு தெரியும்.
இருள் பயம்:
நம் அன்றாட வாழ்க்கைக்கு வருவோம். இன்னும் சில பெரியவர்களுக்கு கூட, இருட்டைக் கண்டால் அதீத பயம் இருக்கிறது. தனியாக இருளில் செல்ல மாட்டார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே இந்த இருளின் மீதான பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏன் ? எதனால் ? இந்த பயம் என்று கேட்டால் பதில் தெரியாது.
இருள் என்பது, இயல்பினின்று ஒளியின்மை என்ற ஒன்று மட்டும்தான் வேறுபாடு என்ற விளக்கம் சொன்னாலும், மனதளவில் இருட்டைப் பயப்படுபொருளாகவே உருவகித்து மிரள்கின்றனர். வேறு சிலரோ, எதற்கும் பயப்படுவதில்லை, இரவில், காட்டில், வன விலங்குகளுக்கும் பாம்புகளுக்கும் மத்தியில் பயமின்றி உலாவருகின்றனர்.
மனிதரில் அழகு யார்:
வெள்ளையாக இருப்பவர்கள் எல்லோருமே அழகு என்றில்லை, அதேசமயம் கருப்பாக இருப்பவர்கள் எல்லாரும் அழகு குறைந்தவர்களும் இல்லை. பெரும்பாலானவர்கள் தோலின் நிறத்தைக்காட்டிலும், முக லட்சணம் பார்ப்பார்கள். அங்கே நிறம் ஒரு சிறு பொருட்டாகிவிடும் பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் அழகு வேறுபடுகிறது.
அரசியல் கண்ணோட்டம்:
அன்றாடம் தொலைக்காட்சிகளில் பல விவாதங்கள் பார்க்கிறோம். ஒருசாரர் ஆளும் அரசு எல்லாவற்றையும் சரியாக செய்கிறதென்கின்றனர். ஒரு சாரார் எதுவுமே இங்கு சரியில்லை என்று சொல்கின்றனர். தொட்டதற்கெல்லாம் குறைசொல்லும் கூட்டம் ஒறுபுறம், குறை இருந்தாலும் நடைமுறையில் அதனை அனுசரித்து போகும் கூட்டம் இன்னொருபுறம். இந்த இரண்டுக்கும் இடையே ஒரு கூட்டம் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசவும், எதைச் செய்யவும் தயாரென்று இருக்கிறது. ஏனெனில் அவர்களின் கண்ணோட்டத்தில் பணம் மட்டுமே பிரதானமானது. மற்றவை எல்லாம் பொருளற்றது. பணத்துக்காக எதைச்செய்தாலும் தவறில்லை என்று எண்ணுகின்றனர்.
மனநிலையும் - கண்ணோட்டமும்:
உண்மையில் நம் கண்ணோட்டமும், நிதர்சனமும் வேறு வேறு. நாம் பொதுவாய்ச் சொல்லும் ஒரு வாக்கியம், பலரால் பலவிதங்களில் புரிந்து கொள்ளப்படலாம். நம்மை எதிரியாய் பார்ப்பவர்க்கு, நாம் அவரை கிண்டலடிப்பது போலவும், அவரை ஏசுவதுபோலவும் அறியப்படலாம். நம்மை நேசிப்பவர்க்கு, நாம் அவர்கள் பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாக தெரியலாம். தொடர்பில்லாதவர்களோ அந்த கூற்றை முற்றிலுமாய் பயனற்றதென்று உதாசீனப்படுத்தலாம். ஒருவர் எந்த மனநிலையில் உள்ளார் என்பதற்கு ஏற்ப, அவரது கண்ணோட்டம் அமையப்பெரும். ஏதேனும் அவசரத்தில் இருக்கும்பொழுது, நம் குழந்தை வந்த ஏதேனும் ஒன்றை காண்பித்தால், அந்த நேரத்தில் நாம் குழந்தையை சற்றே கடிந்துகொள்கிறோம். அதேகுழந்தை அதே பொருளை நாம் இளைப்பாரிய நிலையில் இருக்கும்போது வந்து காண்பித்தால், நாம் குழந்தையை பாராட்டி அன்பு செலுத்துகிறோம்.
நபர்கள் மாறவில்லை. பொருட்களும் மாறுபடவில்லை. அதை பார்க்கின்ற நம் பார்வையும், கண்ணோட்டமும் தான் மாறுபடுகிறது. அன்பான பார்வை, மோசமான சூழ்நிலையைக்கூட சாதுரியமாக கையாண்டு சுமுகமானதாக்கி விடும். கோபமான பார்வை, இயல்பு நிலையைக்கூட, அபாயகரமானதாக்கிவிடலாம்.
அரைக்குவளை நீர்:
நிர்வாகவியல் கல்வியில் வழக்கமாக கையாளப்படுகின்ற ஒரு சிறந்த கண்ணோட்டம் குறித்த உதாரணம் – அரைக்குவளை நீர்.
ஒரு சிறு குவளையில் பாதியளவு தண்ணீர் நிரப்பப்படுகிறது. அந்த குவைளை குறித்தான ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் கேட்கப்படும்போது, ஒரு சிலர் குவளையில் பாதியளவு நீருள்ளது என்று இருக்கும் விடயத்தை கூறுகின்றனர். ஒருசிலர், பாதியளவு குவளை காலியாக உள்ளதென்று இல்லாதவற்றை கூறுகின்றனர். ஒருசிலர் பாதிநீரும், பாதியளவு காற்றும் இருக்கிறதென்பர். அங்கு இருப்பது வெறும் குவளையும், சற்று தண்ணீர் மட்டுமே. அதில் சிலர் இருப்பவற்றை அளவீட்டுடன் பார்க்கின்றனர். சிலர் இல்லாதவற்றை அளவீட்டுடன் பார்க்கின்றனர். ஒருசிலர் காலியிடத்தில் இன்னும் நீர்நிரப்ப வாய்ப்புள்ளதென்று அவர்கள் கண்ணோட்டத்தில் வாய்ப்புக்களை பார்க்கின்றனர். ஒருசிலரோ, அதை மேலோட்டமாக மட்டும் பார்த்துவிட்டு எதையும் சிந்திப்பதேயில்லை. இருக்கும் பொருள் ஒன்றானாலும், பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் எண்ணற்ற வேறுபாடுகள்.
இயற்கையும் - இனிமையும்:
அன்றாடம் இயற்கையைக் காணும் நமக்கு, சாதாரணமாக அதில் எந்தவொரு இனிமையும் தெரிவதில்லை. காதலர்களுக்கும், கவிஞனுக்கும் இயற்கையின் எல்லா தோற்றங்களிலும், வடிவங்களிலும் இனிமையும், புதுமையும் தெரிகிறது. நிலவும், தென்றலும், மலையும், மரமும் என்று எல்லாவற்றிலும் இனிமையும், புதுமையும் காண்கின்றனர்.
சிறு பகுதிகளாய் பிரித்தல்:
நான் உயர்கல்வித் தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருந்த காலத்தில், படிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் ஒவ்வொன்றும் தலையணையைக் காட்டிலும் பெரியதாகவே இருக்கும். அதை எடுக்கும்போதே, இத்தனை படிக்கவேண்டுமா? என்று பயமாக இருக்கும். அந்த ஒருநிமிட பயமே, என்னை பல சமயங்களில் சோர்வடையச் செய்துவிடும். காலப்போக்கில், ஒவ்வொரு நாளுக்கென்று சிறுசிறு இலக்குகளாய் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்களை தெளிவுற படித்து உணர்வதென்ற எண்ணத்தில் படிக்கத் துவங்கியபின்னர், எல்லாப் பெரிய பாட புத்தகங்களும் ஓரிரு வாரங்களில் முழுவதுமாய் படித்து முடிக்கப்பட்டு விடுகின்றன.
இவ்வளவு பெரியதா என்று எண்ணித் தயங்கியவைகளை, சிறிய சிறிய பகுதிகளாய் பார்க்கத் துவங்கியதும், அதை தெளிவுற கற்றுமுடிப்பது எளிமையாயிற்று. புத்தகம் பெரியதுதான். ஆனால் அதை பார்க்கும் கண்ணோட்டம் வேறுபட்டது தான் அங்கு புதிய முயற்சி.
இப்படி முடிக்கமுடியும் என்கின்ற கண்ணோட்டம் வர என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து செய்துபாருங்கள். எந்தவொரு மலைப்பான பெரிய செயலும், கட்டாயம் நம்மால் முடிகின்ற வட்டத்திற்குள் கொண்டவர முடியும்.
ஆதாய நோக்கமே பிரதானப்பட்டால்:
எந்த ஒரு பொருளானாலும், செயலானாலும், மனிதன் பொதுவாக அதில் தனக்கு என்ன இலாபம், ஆதாயம் இருக்கிறதென்ற நோக்கத்திலேயே பார்க்கின்றான். இதை தினம் செய்யும் வேலையில் மட்டுமல்லாது, தன்னை சுற்றியுள்ள உறவுகள், நண்பர்கள், இதர மனிதர்கள் என்று எல்லோரிடமும் ஏதேனுமொரு ஆதாயத்தை தேடும் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றான். எங்கும் எதிலும் ஆதாயத்தை தேடித்தேடி, ஒருகட்டத்தில் உறவுகளைக்கூட தொலைத்து நிற்கிறான். பொருட்செல்வத்தைக் கடந்து, அன்பு, அருள் என்ற அடுத்தகட்ட நிலையை அடைய வேண்டும் என்கின்ற கண்ணோட்டம் ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் துளிர்த்தெழ வேண்டும்.
வளமான பாரதம், வளமான மக்கள், வளமான எதிர்காலம் உருவாக நம் எண்ணங்கள் முதலில் வளம்பெற வேண்டும். எதிலும் ஆதாயம் தேடும் மனப்போக்கைத் தவிர்த்து, குடும்பம், உறவுகள், சமுதாயம் மேம்பட, பொருட் செல்வத்தில் அளவான நாட்டத்துடன் அன்பு, கருணை, பக்தி என்ற எண்ணற்ற நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழ்வு சிறக்க முயற்சிப்போம்.
குற்றம் பார்க்கின் – சுற்றம் இல்லை:
பொதுவாக எல்லா மனிதர்களிடமும், ஏதேனுமொரு குற்றம்குறை இருக்கும். நாம் எவரொருவரை அனுகும்போதும், அவரிடம் என்ன குற்றம் இருக்கிறதென்று பார்க்க முயற்ச்சித்தால், அவரின் நற்பண்புகள் எதுவுமே நம் கண்களுக்கு தெரியாது. அதேசமயம், ஒருவரின் நற்பண்புகளைப் மட்டும் பார்க்கத் துவங்கினால், அவரிடம் உள்ள குற்றம்குறைகள் ஒரு பொருட்டாக தென்படாது. நாம் யாரை எந்த கண்ணாடி அனிந்து கொண்டு பார்க்கிறோம் என்பதில்தான் இந்த சமுதாயத்துடனான நம் உறவு தொடரப்போகிறது. அன்பென்ற கண்ணாடியில் எல்லோரும், எல்லாமும் அன்புமயமாய் தெரியும். வெறுப்பு, விரக்தி என்ற கண்ணாடியில் எல்லோரும், எல்லோமும் நமக்கு ஆகாதவைகளாகத் தோன்றும்.
விதிவிலக்கும் - கண்ணோட்டமும்:
சில சமயங்களில் சில நிகழ்வுகள், ஒருவரின் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றக்கூடும். அது ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருந்தால் மகிழ்ச்சி. அது எதிர்மறையான மாற்றமாக இருக்குமானால், நம் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து மறு ஆய்வு செய்துபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஒரு நிகழ்வை வைத்து எல்லாவற்றையும் தீர்மாணித்து விடக்கூடாது. அடுத்தவர் எந்தச் சூழ்நிலையில் எதைச் செய்தார் என்பது நமக்கு தெளிவாக தெரியும் வரை மறு ஆய்வுகள் தொடர்ந்து செய்து பார்த்து, காரண-காரியங்களை சரியாக உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஆக்கப்பூர்வமான கண்ணோட்டம்:
இவ்வுலகில் நிகழும் எல்லா நிகழ்வுகளும், ஏதேனுமொரு காரண-காரியங்களுக்காகவே நடக்கின்றன. அந்த காரணிகள் நம் புறக்கண்களுக்கு புலப்படாமலே இருக்கலாம். ஆனால் வாழ்வில் எந்தவொரு நிகழ்வின் மீதான நம்முடைய கண்ணோட்டம், ஆக்கப்பூர்வமானதாக இருக்குமானால், வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் கட்டாயம் கிட்டும்.
- [ம.சு.கு – 27-10-2021]
Comments