top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நமது நம்பிக்கை – எல்லாமே உண்மையா ?

Updated: Nov 30, 2021

1. கல்வி வெற்றியை தரும்;


என் சிறுவயதில், என் பெற்றோர் தொடர்ந்து என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த ஒரு வரி ‘நீ நன்றாக படிக்க வேண்டும். படித்தால் தான் உனது வாழ்க்கை சிறப்பாக அமையும்’. இதை வெவ்வேறு வார்த்தைகளில் என்னை சுற்றியுள்ள உறவுகளும், சமுதாயமும் தொடர்ந்து வழியுறுத்திவந்தன. இயற்கையிலேயே எனக்கு கல்வியின் மீது சிறிது ஈடுபாடு இருந்தகாரணத்தினால், கிடைக்கப்பெற்ற கல்வியை சிறப்புற கற்றேன். அந்த கல்வி எனக்கு வெற்றியை உறுதி செய்ததா?


ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால், நாம் கற்ற கல்வி நமக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதில்லை. ஏனென்றால், நம்முடைய போட்டியாளர்கள் பலரும், நமக்கு இணையாகவோ, கூடுதலாகவோ கற்றவர்களாகவே உள்ளனர். மாறாய், இந்தக் கல்வி நம் வாழ்க்கைக்கு, ஒரு சிறந்த திறவுகோலாய் அமைகிறது. அடிப்படைக் கல்வி இருப்பதனால்தான், நம்மால் சில துறைகளில் நுழையவே இயலுகிறது.


நம் வெற்றிப்பாதைக்கு நுழைவுச்சீட்டுதான் கல்வி.

அது வெற்றியின் அடையாளமல்ல.

2. பெரியவர்கள் தவறுசெய்வதில்லை ;


சிறுவயதில், நாம் எண்ணற்ற குறும்புகள் செய்து பெற்றோர்களிடம் அடிவாங்குகிறோம். பல செயல்களின் செய்முறையை நமக்கு சொல்லிக்கொடுத்தாலும், தெரிந்தோ தெரியாமலோ தவறாக செய்து முழிக்கின்றோம். நாம் செய்த தவறுகளை, நம் பெற்றோர்கள் எளிதாக சரிசெய்வதை காணும் போது, நம் மனதில் பதிவானது, ‘பெரியவர்கள் எப்போதும் தவறு செய்வதில்லை’. அவர்களுக்கு எல்லாவற்றையும் சரியாக செய்வது எப்படியென்று நன்றாக தெரியும்.


வருடங்கள் கடந்து, பள்ளியைவிட்டு கல்லூரிக்கு செல்லும் நாட்களில் மேலே பதிந்த எண்ணத்தை மறு ஆய்வு செய்தபோதுதான் தெரிந்தது, சிறுவர்களைவிட பல பெரியவர்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனறென்று. சிறியவர்களாய் நாம் செய்யும் தவறுகள் யாவும் திருத்தக்கூடியவை. எவரையும் பாதிக்காதவை. ஆனால் பல பெரியவர்கள் செய்யும் தவறுகளோ, எண்ணற்ற மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது. இந்த எண்ணத்தின் ஆய்வு என்னை சரிசெய்துகொள்ள வைத்தது. இன்று பெரியவனாய் எந்தவொரு திருத்தமுடியாத தவறுகளை செய்யாமல் பார்த்துக்கொள்ள கவனப்படுத்துகிறது.


3. வேலை – பணம் – பிரச்சனை ;


நாம் பள்ளியை கடந்து கல்லூரியை கடக்கும் நாட்களில் நம் எண்ணங்களில் பொதுவான ஒரு கருத்து, நாம் வேலைக்கு சென்றோ அல்லது தொழில்புரிந்தோ நிறைய சம்பாதித்தால் நம் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பது. சிறுவயதில் நம்மிடம் அளவுக்கதிகமான ஆற்றலும், நேரமும் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்த நம்மிடம் போதிய பணம் இருப்பதில்லை. ஆகவே பணமே எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றெண்ணி, பணம் சம்பாதித்தால் அந்த பிரச்சனைகள எல்லாம் தீர்ந்துவிடுமென்று நம்பினோம்.


உண்மையில் பணம் எவ்வளவு சம்பாதிக்க ஆரம்பித்தாலும், பிரச்சனைகள் வேறு வடிவங்களில் புது பரிணாமம் எடுக்கின்றன. இன்று வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கிறோம், ஆனால் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் அமர்ந்து கழிக்க நேரம் இருப்பதில்லை.


இன்று பணம் இருக்கிறது. ஆனால் நேரம் இருப்பதில்லை. இதன் தொடர்ச்சியாய் முதுமையில் நம்மிடம் பணமும், நேரமும் இருக்கும். ஆனால் அதை ஆண்டனுபவிக்க நம்மிடம் சக்தி இருப்பதில்லை. இந்த வாழ்க்கைச் சக்கரம் வேலை – பணம் என்னும் மாயையில் உழன்று முடிந்துவிடுகிறது.


4. வாழ்க்கை நியாயமானது (Life is Fair)


நம் பிள்ளை பருவத்தில் பலரும் பலவிதங்களில் தங்களின் வாழ்க்கை குறித்து தாங்களே விமர்சித்துக் கொண்டுள்ளதை, பார்த்திருப்போம் ! கேட்டிருப்போம் ! கடவுள் தன்னிடம் மட்டும் ஒருதலைபட்சமாக நடந்துவிட்டதாக என் நண்பன் ஒருவன் அடிக்கடி குறைகூறுவான். காரணம் அவனுக்கு பெற்றோர்கள் இருவரும் உடனிருந்தாலும் பொருட்செல்வம் குறைவே. இன்னொரு நண்பனுக்கோ செல்வம் போதுமான அளவுக்கு இருந்தாலும், தந்தையில்லை என்ற தொடர் ஏக்கம். ஒருசிலருக்கோ பெற்றோரும், செல்வமும் இருந்தும் பட்டம், புகழ், பதவி, பிள்ளைப்பேரு போன்ற ஏதேனுமொன்று இல்லை என்ற ஏக்கம். இவற்றை அன்றாடம் பார்க்கும் யாவர்க்கும், மனதில் எழும் கேள்வி, வாழ்க்கை எல்லோருக்கும் நியாயமானதாய் இருக்கிறதா? என்பதுதான்.


எல்லோருக்கும், வெவ்வேறுபட்ட ஏதேனுமொரு குறை இருப்பதைப் பார்த்தால், வாழ்க்கையை இறைவன் மிகவும் நியாயமற்றதாக வைத்திருக்கிறான் என்று எண்ணினோம். நாம் வளர்ந்து வேலைக்கு சென்று பணம் ஈட்டிய போதும், இந்த நியாயமற்ற தன்மை குறித்த நம்முடைய எண்ணம் பெருப்பாலானோருக்கு தொடர்வதை பார்க்கிறோம். அவர்கள் தங்களின் நிலைக்கும், தங்களைவிட உயர் பதவியில் இருப்பவர்களையும், செல்வந்தர்களையும் கண்டு சற்றே பொறாமை கொள்வதோடு மட்டுமன்றி, இறைவனின் படைப்பில் எண்ணற்ற இருதலை பட்சங்கள் இருப்பதாய் நிந்திப்பதை காண்கிறோம்.


உண்மையில் வாழ்க்கை நியாயமற்றதா? இந்த கேள்விக்கு எனக்கு விடைதெரிய கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆயிற்று. எல்லா செயல்களுக்கும் விளைவு என்ற ஒன்று உண்டு என்பதை உணர வெகுகாலம் பிடித்தது (Cause & Effect). இந்த ஆட்டத்தின் இயக்கத்தை கண்டபோது, இவை எத்தனை துள்ளியமாகவும், சமமாகவும் இயங்குகிறதென்று பார்த்து வியக்கிறேன். இந்த பேரண்டத்தில் ஒரு சிறு ஜீவராசியாகிய இந்த மனித இனம் மட்டும் எப்படி தவறிப்போகும். நம் நிலையற்ற தன்னைக்கு நாம் இயற்கையை மாற்றியமைக்கும் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்றுணரும் போது, வாழ்க்கை எத்தனை நியாயமானதாக படைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.


இந்த உணர்வு நிலையை சொற்களால் விளக்கி புரிந்துணர்வை கொண்டுவருவதென்பது கடினம். மாறாய் ஒவ்வொருவரும்,


தங்களின் உடல் இயக்கத்தையும், பேரண்டத்தின் இயக்கத்தையும் உள்வாங்கி உணர்வதால் மட்டுமே இந்த வாழ்க்கையின் நியாயமான தன்மையை உணரமுடியும்.


5. பெரியவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை;


நம் சிறுவயதில், நமக்கு நம்முடைய தாய் தந்தையர் நாயகர்களாய் தென்படுவார்கள். நம்மால் செய்ய இயலாததையெல்லாம் அவர்கள் செய்வார்கள். நாம் இருட்டைக் கண்டு பயம் கொள்ளும்போது, நமக்கு துணைவருவார்கள். தெருவில் நாயைக்கண்டு அஞ்சியபோது, அவர்கள் நம் கைபிடித்து அதை கடக்க உதவுவார்கள். இவற்றை பார்த்தவாறே நாம் புரிந்து கொண்டது, பெரியவர்கள் எப்போதும் தைரியசாலிகள். அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை. எண்ணற்ற சிறிய விஷயங்களைக் கண்டு அஞ்சி நின்றபோது, அவர்கள் நம்மை தைரியப்படுத்தி வழிநடத்தினர். இவையாவும் அவர்களை தைரியசாலிகளாகவும், நாயகர்களாகவும் நம்மனதில் பதிய வைத்தது. உண்மையில் பெரிவர்கள் அவ்வளவு பெரிய தைரியசாலிகளா?


இந்த கேள்விக்கான முதல் கட்ட விடையை அறிந்துகொள்ள வாலிப பருவத்தில்தான் முடிந்தது. அந்த வாலிபப்பருவத்தில் சற்றே இரத்தம் சூடேரியதாகவே இருக்கமல்லவா ! நாம் செய்யலாம் என்று சொல்லும் செயல்களை பெரியவர்கள் ஆபத்தானதென்று தடுப்பார்கள். அவர்கள் பயத்தை நம்மால் இந்த நிலையில்தான் தெரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு பயம் உண்டென்று அறிந்துகொண்டாலும், இப்பருவத்தில் நாம் அதை பெரும்பாலும் உணர்வதில்லை. உண்மையில் ஏதேனும் விபத்தை சந்தித்தாலோ, அல்லது ஏதேனும் விபத்தில் நமக்கு நெருக்கமானவரை இழந்தாலோ நம்முல் முதல் கட்ட பயம் தொற்றிக்கொள்கிறது. வயது முதிர்ச்சியடையும்போது, நம் எண்ணமும் சிந்தனையும் முதிர்ச்சியடைவதில், நாம் பயத்திற்கும் எச்சரிக்கைக்குமான வேறுபாட்டை உணருகின்றோம். குழந்தைப்பருவத்தில் கண்டு அஞ்சியவைகளையும், வாலிபவயதில் செய்த துணிச்சலான செயல்களையும் யோசித்துப்பார்த்தால், நம் பேதைமைக்கண்டு நாமே நகைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. காலசூழ்நிலைகளுக்கேற்ப நமது நம்பிக்கைகள் மாற்றம் பெறுகின்றன.


வாழ்க்கையில் அச்சத்திற்கும், எச்சரிக்கையுணர்விற்குமான உண்மையான வேறுபாட்டை உணர்ந்து செயல்படும் தெளிவை எட்டுவதே உண்மையான வளர்ச்சியாகிறது.


6. உலகம் நம்மை அரவணைக்கிறது;


நம் குழந்தைப பருவம்யாவும் தாயின் அரவணைப்பிலும், தந்தையின் நேசத்திலும் கடந்துவிடுகிறது. இந்த அரவணைப்பை உணர்ந்துகொள்வதில் நாம் சற்றே அதிகமாக யூகித்துக்கொள்கிறோம். ஆம் ! பிள்ளைப்பருவத்தில் தொடர்ந்துகிடைக்கும் அன்பையும் அரவணைப்பையும் பார்த்து, இந்த வாழ்க்கைமுழுதும் இப்படிபட்ட அன்புநிறைந்த சமுதாயத்தில் அரவணைக்கப்பட்ட வாழ்க்கையே தொடர்கிறதென்று நம்பி வளர்கிறோம். பள்ளியில், நண்பர்களிடத்தில், விளையாட்டு, கல்வி என்ற பல்வேறு விஷயங்களில் வெற்றி தோல்விகளை கண்டாலும், ஒரு சிலரே இந்த மாய அரவணைப்பை சிறுவயதிலேயே உணர்கிறார்கள். நாம் எல்லோருமே இந்த அரவணைப்பு நிலையானதென்று தொடர்ந்து நம்பி வந்துள்ளோம்.

கல்வியை கடந்து வேலை, உழைப்பு, ஊதியம் என்று வருகின்றபோதுதான் நம் சமுதாயத்தின் உண்மை சொரூபத்தை நம்மால் காணமுடிகிறது. நாம் செல்வந்தராயிருந்தால், நம்மைச் சுற்றியொரு கூட்டம் நம்மை உயர்வாக பேசி நம்மை இந்த சமுதாயம் அரவணைக்கிறதென்ற மாயை தொடர்கிறார்கள். மாறாய் நம்மிடம் செல்வம் குன்றியிருந்தால் நம்மைவிட்டு எல்லோருமே கூடுமானவரை விலகிநிற்கிறார்கள். ஏதேனும் அவசர உதவித தேவையானாலும், நம் அருகில் வருவதைக்கூட தவிர்க்கிறார்கள். ‘பணம் பத்தும் செய்யும்’ என்னும் சொல்வழக்கிற்கான உண்மையை நமக்கே உணர்த்திவிடுகிறார்கள்.


இந்த அரவணைப்பு என்ற மாயநம்பிக்கை நம் வளர்ச்சிப்பாதையில் மாற்றம் அடைகிறது. ஆனால் உண்மையில் அரவணைப்பு இருக்கிறதா என்று கேட்டால், என் அனுபவத்தில் அதை உண்மையென்றே சொல்வேன். இந்த சமுதாயத்தின் அரவணைப்பை உணர, நான்-என்னுடையது என்ற குறுகிய எண்ணத்தைவிட்டு நாம் வெளியே வந்தால் உண்மையில் நாமும், நம் சமுதாயமும் பிரிக்க இயலாத ஒரு தொடர் கூட்டு இயக்கம் என்பதை உணரலாம். இதில் அரவணைப்பு என்ற குறுகிய கண்ணோட்டம் மறைந்து, இரண்டின் சார்புத்தன்மை நம் எண்ணத்தை மிகவும் தெளிவுபடுத்தும். உண்மையில் நாமும், சமுதாயமும் ஒன்றுதானே ! நம் செயல்களே சமுதாயத்தின் செயல்களாய் ஒன்று சேருகிறது. வளமான சமுதாயத்தை வழிநடத்த நம் எண்ணங்களில் வளமை கூட வேண்டும். வளமான எண்ணங்களால் வளமான சமுதாயம் உருபெருகிறது. வளமான சமுதாயம் வளமான மனித இனத்திற்கு தொடர்ந்து வித்திடுகிறது.


இப்படி எண்ணற்ற குழந்தைப்பருவ எண்ணங்கள், நம் சிந்தணையில் தெளிவுபெறும் காலத்தில், உண்மைநிலை உணர்ந்து மாற்றம் பெறுகிறது. இதை பட்டியலிட்டால், எண்ணற்ற நம்பிக்கைகளின் மாற்றத்தை நாம் அறியலாம்.


குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின்;


  • விளம்பரம், பகட்டுத்தனம் தான் எல்லாமே. நம்மை நால்வர் அறிந்திருப்பதுதான் வெற்றி !! (Being Popular is Everything)

  • உலகம் மிகவும் வெளிப்படையானது. ஒளிவு மறைவற்றது !! (The World is Black & White)

  • நீங்கள் படிப்பில் 90% மேல் எடுக்காவிட்டால், நீங்கள் அறிவு குன்றியவர் (If your marks are poorer, you are dumb and retarded)

  • தற்கொலை ஒரு வழிமுறை (Suicide is an Option)

  • பிறரிடம் உதவி கேட்பதினால் நாம் ஆற்றல் குறைந்தவராய் அறியப்படுவோம் (Asking for help means, you are weak)

இப்படி எண்ணற்ற தவறான கண்ணோட்டத்தை நம் சமுதாயம் நம்முடைய எண்ணத்தில் புகுத்திக்கொண்டே இருக்கிறது. இவைகளின் உண்மைநிலையை அறிவதில்தான் நம்முடைய அறிவின் முதிர்ச்சி வெளிப்படும். இவற்றை கல்லூரிகளாலும், அறிவுரைகளாலும் சொல்லிக்கொடுப்பது சாத்தியமல்ல. ஒவ்வொருவரின் சிந்தனைவளத்தாலும், செயல் அனுபவத்தாலும், காரண காரியத்தை அலசும் கூர்மையான அறிவாற்றலால் மட்டுமே தகர்த்தெரிய வேண்டும்.


பழமையான எண்ணங்களையும், சுற்றத்தின் தவறான கண்ணோட்டங்களையும் அறிந்து அவற்றை தகர்த்தெரிவதில்தான் நம் உண்மையான வெற்றியும், அமைதி நிலையும் இருக்கிறது. தவறான கருத்துக்களும், எண்ணங்களும் நம் பாதையை தடுப்பது மட்டுமன்றி, நம்மை திசைமாற்றிவிடும். எதிலும் காரண காரியங்களை அலசி, சீரிய சிந்தனையில் எடுக்கப்படும் முடிவுகள், நம் வெற்றிப்பாதையை உறுதி செய்யும்.


[ம.சு.கு - 04-08-2021]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page