மனித இயல்பு:
நாம் அன்றாடம் பல மனிதர்களை சந்திக்கின்றோம். எண்ணற்ற பழகியவர்களும், புதியவர்களும் நம்மோடு தினம் தினம் உரையாடிச் செல்கின்றனர். இப்படி எத்தனையோ பேர் எத்தனையோ நபர்களை அன்றாடம் சந்தித்து உறையாடி உறவாடினாலும், ஒரு சிலருக்கு ஒரு சிலரை மட்டுமே பிடிக்கிறது. இயல்பாகவே நமக்கும் ஒரு குறிப்பிட்ட சிலருடன் இருப்பதற்கும், பேசுவதற்குமே விரும்புகின்றோம். அதே போல, நம்மையும் ஒருசிலரே எப்பொழுதும் சேர்த்துக்கொள்கின்றனர்.
ஏன் எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிப்பதில்லை ?
எல்லோர்க்கும் ஒரு சிலர் மீதே ஈர்ப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் ?
இந்த ஈர்ப்புக்கும், விருப்பத்திற்கும் உண்மையான உளவியல் காரணங்கள் என்ன என்று நோக்கினால், என் அனுபவத்தில் இந்த ஒரு காரணத்தை முன்னிறுத்த முடிகிறது.
‘தான் முக்கியாமானவன்.
தன்னை எல்லோரும் உயர்வாக எண்ண வேண்டும்’
எவனொருவன் இந்த உளவியலை புரிந்து கொண்டு, தன்னை வழிநடத்துவதோடு அல்லாமல், பிறர்பொருட்டும் சாதுரியமாக கையாளுகிறானோ, அவன் எல்லோராலும் விரும்பப்படுகிறவன் ஆகிறான்.
உடனிருப்பவரின் உணர்வுகள்:
எந்தவொரு உறையாடலிலும் தன்னையே முக்கியப்படுத்தி உயர்வாக பேசினால், உடனிருப்பவன் மெதுவாக ஒதுங்கிவிடுவான். மாறாக அந்த உரையாடலில் அவ்வப்போது உடனிருப்பவனின் உணர்வுகள், தேவைகள், கருத்துக்களை முன்னிலைப்படுத்தி பேசினால், அவன் தான் அங்கீகரிக்கப்படுவதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் உறவினை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வான்.
நமது இல்லம்:
இந்த மனித உறவுகளின் உணர்வுப்பூர்வமான இணைப்பை அறிய, நமது வீடே சிறந்த உதாரணக்களமாகும்.
கணவன் மனைவியரிடையே, எவரொருவர் தனது துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவரது கருத்துக்களை கேட்டு முன்னிறுத்தி செல்கிறாரோ, அவரது மணவாழ்க்கை புரிதலுடன் நன்றாக அமைகிறது. மாறாக தானே அறிவாளி, தான் செய்வதுதான் சரி என்ற அகங்காரத்துடன் செல்பவன், வாழ்க்கையில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கிறது.
குழந்தைகளோடு, அவர்களின் நிறைகளை எடுத்துக் கூறி, தவறுகளை அளவாக சுட்டிக்காட்டி ஊக்கப்படுத்தினால் அவர்களை நம்மீது அன்பு செலுத்துவதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்தோடும் நன்கு இணங்க பழகுவார்கள்.
சந்தையின் செயல்பாடு:
பொருளை விற்கவரும் விற்பனையாளன் அந்த பொருளின் குணங்களை விளக்கும் முன்னர், அந்த பொருள் அந்த வீட்டுப்பெண்ணின் வேலைப்பழுவை எவ்வாறு குறைத்து, வேலையை எளிமையாக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்துவதால், மக்கள் எளிதில் வயப்பட்டு அந்த பொருளை வாங்கி விடுகின்றனர்.
நான் எப்படி ? எனது பொருள் எப்படி ? என்பதைக் காட்டிலும், நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் ? உங்களுக்கு இப்பொருளால் என்ன பயன்? என்று அவர்களை முன்னிறுத்தி பேசுவது மட்டுமே விற்பனையில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறையாகும்.
இந்த உளவியல் விதிக்கு, நான் அறிந்தமட்டும், எந்தவொரு விதிவிலக்கும் சொல்லுமளவில் இல்லை.
நானும் சரி – அவரும் சரி – சரியும் சரி:
மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, முன்னேற வேண்டுமென்று கூறுவதால் நம் சுயமரியாதையை இழக்கவேண்டும் என்றில்லை. எந்த நிலையானாலும், எந்த கருத்தானாலும், பிறருக்கு அவற்றில் மாறுபட்ட கருத்திருக்கும் என்பதை உணர்ந்து, அவர்களின் கருத்துக்களுக்கு உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் வழங்கினால் போதும். அவர்களை கட்டாயப்படுத்தி நம் கருத்து, சிந்தனைகளையும் திணிப்பது, அந்த உறவில் தேவையற்ற விரிசல் துவங்க வழிவகுக்கும்.
[குறிப்பு: சில சமயங்களில் சில உரையாடல்களில் இருவரது கருத்துக்களுமே தவறாக இருக்கக்கூடும். அந்த பாடம் / கருத்து குறித்த முழுமையான புரிதல் இல்லாதபோது இருவருமே தவறாக நேரிடும்.]
எல்லோரையும் அரவணைக்கப் பழகுவோம்:
இறைவனிடத்தும், தானென்ற மமதை விடுத்து, அந்தப் பரம்பொருளை உணர்ந்து, அவனை முன்னிருத்தி, எண்ணற்ற பதிகங்களால் அவன் புகழ்பாடி நம் பெரியவர்கள் விண்ணுலகம் எய்தினர். என்றும், எவ்விடத்தும், தான் என்ற அகங்காரத்தை தவிர்த்து, மற்றவர் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்தால், வாழ்க்கையும், உறவுகளும் நன்கு செழிக்கும்.
நம் முதலாளிக்கு மட்மே மரியாதையளித்து, அவரின் சொற்களை அப்படியே ஏற்பதல்ல வாழ்க்கை. நம் உறவுகளுக்கும், சக தொழிலாளர்களுக்கும் உரிய மரியாதையை அளித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் வாழ்க்கை வளமாகும்.
இதை தினம் தினம், எல்லா உரையாடல்களிலும், செயல்களிலும் கவணத்தோடு வெளிப்படுத்தினால், நம்முடைய எல்லா உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் என்றுமே நாம் விருப்பமானவர்களாகவும், நம்பிக்கையானவராகவும் இருந்து வருவோம்.
உறவுகள் மேம்பட, உணர்வுகளை மதிப்போம் !
[ம.சு.கு - 29-09-2021]
Comments