top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : எது மகிழ்ச்சி ?

Updated: Sep 28, 2022

 • “குழந்தை ஆசைப்பட்டு கேட்டதை வாங்கிக் கொடுத்தோம். ஆனால் வாங்கியபின் அதை குழந்தை கண்டுகொள்வதே இல்லை!!”

 • “புதிதாய் கார் வாங்கிய 1-2 மாதங்களுக்கு கஷ்டப்பட்டு அதை கழுவி, துடைத்து வைக்கின்றனர். பின்னர் அதைப்பற்றி பெரிதாய் பொருட்படுத்துவதில்லை!”

 • “ஆரம்பத்தில் அந்த கடையில் பிரியாணி நல்ல சுவையாக இருந்தது. ஆனால் இப்போது அதன் சுவை குறைந்துவிட்டதே!!”


இப்படி எண்ணற்ற சூழ்நிலைகளை, கருத்துக்களை நீங்கள் தினம்தினம் கடந்து வருவீர்கள்.


ஏன்! நீங்களே கூட, ஏதேனுமொரு பொருளை ஆசைப்பட்டு வாங்கியிருப்பீர்கள். அந்தப்பொருளை ஓரிரு முறை உபயோகிக்கும் வரை அதன் மீது மோகம் தொடர்ந்திருக்கும். இனி அந்தப்பொருள் உங்களுடையது, அதை ஓரிரு முறை பயன்படுத்தியாயிற்று என்றவுடன் அதன் மீது இருந்த மோகம் தானாக குறைந்துவிடுகிறது. அது பத்தோடு பதினொன்றாக உங்கள் வீட்டில் மூலையில் கிடக்கும். இப்படித்தான் தேவையற்ற பலவிதமான பொருட்களை வீட்டில் சேர்த்து விடுகிறோம்.


பொருள் தேவைதானா?


எந்த ஒரு புதிய பொருளை பார்த்ததும், அதை நாம் வாங்க வேண்டுமென்ற ஆவல் அதிகரிக்கிறது. அந்த தருணத்தில் அந்த பொருளினால் ஏற்படும் உடனடி பயன் ஏதேனும் ஒன்று நம்மை உந்தி, அதை வாங்க வைத்துவிடுகிறது. ஆனால் அந்தப்பொருளின் தேவை எல்லா நாட்களிலும் இருக்கிறதா? என்றால் இல்லை. ஓரிருமுறை உபயோகத்திற்காக அந்த பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவது ஏற்புடையதா? என்று நாம் சிந்திப்பதில்லை!


எத்தனை நாட்களுக்கு மகிழ்ச்சியிருக்கிறது?


நாம் இன்ன பொருளை பெற்றுவிட்டோம்! வென்றுவிட்டோம்! என்று மகிழ்கிறோம். அதேசமயம் இன்ன பொருள் நம்மிடம் உள்ளது என்று எண்ணி எண்ணி நீண்டகாலம் மகிழ்கிறோமா? அப்படி ஏதேனும் ஒன்றை நீங்கள் வைத்து என்றென்றும் மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? சற்று யோசித்துப் பாருங்கள்!!


ஒன்றையை சாப்பிட்டால் அதுவும் சலித்துவிடுகிறது


ஒரு குறிப்பிட்ட கடையில் பிரியாணி, மிக சுவையாக இருக்கிறது. அதனால் 2-3 மாதங்களுக்கு தொடர்ந்து அடிக்கடி சென்று சாப்பிடுகிறீர்கள். நாளடைவில் அந்த உணவின் சுவை தானாக குறைவதை நீங்கள் உணர்வீர்கள். யதார்த்தத்தில், அந்த உணவின் சுவை அப்படியேதான் இருக்கிறது. ஆனால் நம் நாக்கு அதை உண்டு உண்டு பழகிய பின்னர், ஒரு இயல்பான சலிப்பு ஏற்பட்டு, அதன் சுவை குறைந்து விட்டதாக எண்ண வைக்கிறது.


கார் வாங்கியதும் அமர்களம்தான் ! – பின்னாளில் ?


புதியதாக ஒரு குறிப்பிட்ட மகிழுந்தை [காரை] வாங்க ஆசை. அதை வாங்கியதும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அந்த மகிழ்ச்சியில் அதை முதல் இரண்டு-மூன்று மாதங்களுக்கு பொக்கிஷமாக பாதுகாப்பதும், வாராவாரம் கழுவி சுத்தம் செய்வதும், குடும்பமே அமர்க்களமாய் இருக்கும். இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த பராமரிப்பு படிப்படியாய் குறைந்து முற்றிலும் நின்றுவிடும். பின்னர், குடும்பத்திற்குள் அதை நீ சுத்தம் செய் என்று அடுத்தவருக்கு சொல்ல ஆரம்பித்துவிடுவோம். அந்த கார் பழகிவிட்டபடியால், அதை கொண்டிருப்பதால் யாதொரு மகிழ்ச்சியையும் உங்களால் இப்போது உணர முடியவில்லை? ஏன் இந்த மாற்றம்?


மகிழ்ச்சி – பூரணத்துவம்?


ஒரு குறிப்பிட்ட பதவி உயர்வு, நீண்ட நாட்களாய் எதிர்பார்த்திருந்தது கிடைத்திருக்கும். அது கிடைத்தவுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். ஆனால் நாளடைவில் அதன் மோகமும் குறைந்துவிடுகிறது. அடுத்த உயர் பதவியின் மீது ஆசை வளர ஆரம்பித்து விடுகிறது.

 • ஏன் இந்த பூரணத்துவம் இல்லாத அரைகுறை மகிழ்ச்சி நிலை?

 • நாம் ஆசைப்பட்ட பொருளின் மீதான மோகம் ஏன் சீக்கிரத்திலேயே மறைந்து சலிப்புத் தட்டி விடுகிறது?

 • ஏன் இந்த மனநிலை மாற்றம். ?

இந்தக் கேள்விக்கான பதில் ஒரு மிகப் பெரிய உளவியல் பாட புத்தகம். அதை முற்றிலுமாக அறிந்து துறவறம் பூணுதல் நமது நோக்கமல்ல. எதைச் செய்கிறோமோ? எதை பெறுகிறோமோ? அதில் பூரணமான ஒரு மகிழ்ச்சியை உணர்வதுதான் நமது குறிக்கோள்.


சலிப்பும், வெறுப்பும் சீக்கிரத்தில் வருகிறதே?


நாம் செய்துகொண்டிருப்பதிலும், நாம் பெற்றவற்றிலும் பாதியிலேயே சலிப்பு ஏற்பட்டு, அவற்றைப் பின்னர் பாரமாக நினைக்கும் மனநிலை உங்களை என்றுமே நிம்மதியின்றி அலையச்செய்யும். எதிலுமே ஒரு நிறைவை காண முடியவில்லை என்றால், எல்லாவற்றிலும் ஒரு வெறுமை, வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு வாழ்க்கையே ஒரு பாரமாக மாறிவிடக்கூடும்.

 • எப்படி இந்த வெறுமையில் இருந்து விடுபடுவது?

 • எப்படி இருப்பதில் மகிழ்ச்சி காண்பது?

 • எப்படி சலிப்பு அடைவதை குறைப்பது?

இவை கேட்பதற்கு எளிதான கேள்விகள்தான். யதார்த்தத்தில் இவை உளவியல் சார்ந்து மிகப்பெரிய கேள்விகள்.


இருப்பதில் மகிழ்ச்சிகான - என்ன செய்யலாம்?


“இந்த பிரச்சனக்கு இது மருந்து” என்று ஒரு குறிப்பிட்ட தீர்வு சொல்வது இதற்கு சாத்தியமில்லை. இந்த வெறுமை மனநிலை மாறி, பூரணத்துவத்தை உணர, நீங்கள் விழிப்புடன் எண்ணற்ற முயற்சிகள், சிறுசிறு மாற்றங்களை படிப்படியாக உங்கள் வாழ்க்கை முறைமையில் செய்ய வேண்டும்.


எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளை நான் இங்கு பகிர்கிறேன்.


 • ஒரு பொருளின் முழுமையான தேவையை புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு வாங்கி ஓரிருமுறை பயன்படுத்திவிட்டு பின்னர் கிடப்பில் போடுகிறோம். வாங்குவதற்கு முன் சற்றே தீர்க்கமாக யோசித்தால், அதன் நீண்ட கால பயன் குறித்து சற்று யோசித்தால், அதன் தேவைக்கு ஏற்ப வாங்கும் முடிவை எடுக்கலாம்!

 • எந்தப் பொருளையும் பகட்டுக்காக வாங்காமல், அதன் பயனுக்காக வாங்கினால் செல்வம் முறையாக உபயோகிக்கப்படுவதோடு, தேவையற்ற குப்பைகளும் வீட்டில் சேராது. நாம் வாங்கிய பொருள் முறையாக பயன்படுவது நமக்கு மனநிறைவைத் தரும்.

 • எந்தப் பொருளை வாங்குவதானாலும், அதை அதன் முதல் அணுகலிலேயே வாங்காதீர்கள். இன்று விட்டுவிடுங்கள். அடுத்த முறை அதை பார்க்கும் போது, அந்த பொருள் மீண்டும் தேவை என்று உணர்ந்தால் பின் வாங்குங்கள். பொருள் வாங்குவதற்கான முடிவை சற்று தள்ளிப்போட்டால், அதை உடனடியாக வாங்கவேண்டுமென்ற உந்துதல் குறைந்து அதன் பயன் பற்றி யோசிக்க சற்று நேரம் கிடைக்கும்.

 • இவையனைத்தும் பொருள் வாங்குவதற்கு மட்டும் அல்ல நம் வாழ்வின் எல்லா தருணங்களிலும் கடைபிடிக்க வேண்டிய முறை. நாம் மகிழ்ச்சி என்று எண்ணுவது நாளடைவில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லாமல் போகலாம். மது குடிப்பவர்களுக்கு அப்போதைக்கு மகிழ்ச்சி ஆனால் நீண்டகால நோக்கில் அது அவர்களின் உடலை சீரழித்து பெரிய நோயாளி ஆக்கி விடும் புகை பிடித்தலும் அப்படித்தான்.

 • ஒரு மாணவனுக்கு, இன்று திரைப்படத்திற்கு செல்வதா? அல்லது நாளைய தேர்வுக்கு தயாராவதா? என்ற கேள்வி வரும்போது, அப்போதைய சிறிய மகிழ்ச்சிக்காக திரைப்படத்திற்கு சென்று, படிக்க தவறினால் அவன் தேர்வில் தோல்வி அடையக் கூடும். நம் வாழ்க்கைக்கு எது நிரந்தரமானது என்ற தெளிவு நம்முள் இருக்கவேண்டும். அப்போதைக்கப்போது வரும் சிற்றின்பங்களுக்கு அடிமையானால், நீண்ட கால நோக்கில் தொடர்ந்து வேதனையில் உழல வேண்டி வரும்.

இன்றைய சிற்றின்பங்களில் நாளைய பேரின்பத்தை நோக்கிய பயணத்தில் யாரொருவர் தவிர்த்து முயற்சிகளை தொடர்கிறாரோ, அவரே எல்லாவற்றையும் சாதிக்கிறார்.


சிற்றின்பம் – பேரின்பம்


உறக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து தினந்தோறும் காலையில் பயிற்சியை தவிப்பவர்கள், விளையாட்டில் வெற்றி காண்பது சாத்தியமில்லை. யதார்த்தத்தில், அன்றாட வாழ்வில் வரும் இந்த சிறுசிறு மகிழ்ச்சிகளும் இரசித்து சுவைக்கவேண்டியவைதான். ஆனால் இந்த மகிழ்ச்சிகளில் எது நிரந்தரமானது? எது நமக்கு முக்கியத்தேவை என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். பெரிய சாதனைகளைப் புரிய எண்ணுபவர்கள் அந்த சிற்றின்பங்களில் இருந்து விலகி பேரின்பத்தை நோக்கிய பயணத்தில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே, சாதிக்க நினைத்தவற்றை சாதித்து சரித்திரம் படைக்க முடியும்.


எது மகிழ்ச்சி என்ற தெளிவு

உங்களுக்கு இருக்கவேண்டும்;

எல்லாமே மகிழ்ச்சி தான் – ஆனால்

எதற்கு விலை எது என்பது தெரிய வேண்டும்!

இன்று ஓய்வெடுக்கும் மகிழ்ச்சி

நாளைய போட்டியில் தோல்வியைத் தரலாம்;

நாளைய பேரின்பத்திற்காக

இன்றைய சிற்றின்பங்களை

விழிப்புடன் தவிர்ப்பவர்கள் மட்டுமே

சாதனைகளோடு சரித்திரம் படைக்கின்றனர்!


- [ம.சு.கு - 24.09.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page