“அறம் செய்ய விரும்பு”…. “ஈவது விலக்கேல்”…..
……..“ஏற்பது இகழ்ச்சி”……..”ஐயமிட்டு உண்”…..
ஔவையின் ஆத்திசூடியை முழுமையாகப் படித்துணர்ந்து, கடைப்பிடிப்பதற்கு நிகரான எளிய ஒழுக்கநூல் நானறிந்தவரை வேறேதுமில்லை.
அருளுடையார்க்கான உலகம் அடைய
ஒருவேலை உங்களால் ஆத்திச்சூடியை முழுமையாகப் படித்துப் பின்பற்ற முடியாவிட்டால், அதன் அகரவரிசையிலுள்ள வெறும் 13 நீதிகளை, உங்கள் வாழ்வின் அங்கமாக்கினால், அதுவே உங்களின் வாழ்வை அர்த்தமுடையதாக்கி, வள்ளுவர் சொன்ன அருளுடையார்க்கான அடுத்த உலகத்தை எளிதாக எட்டிவிட வழிவகுக்கும்.
அந்த நீதிகளில், “பொருள்” சார்ந்தவை பற்றிய நீதி அதிகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பொருளிருப்பவருக்குத்தான் இவ்வுலக வாழ்வென்று வள்ளுவமே சொல்கிறது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழ்வின் பலதருணங்களில் எண்ணற்ற பொருட்செல்வத்தை நாம் சேர்க்கலாம், இழக்கலாம். நம்மிடம் உள்ள பொருளை எப்படி கையாள வேண்டும் என்று பலவகைகளில் ஔவை எளிதாக, அதே சமயம் இரத்தின சுருக்கமாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இல்லை என்று கேட்டு வருபவர்க்கு, எக்காரணம் கொண்டும் கொடுப்பதை நிறுத்திவிடாதே;
உன்னிடம் இருக்கின்ற பொருள்களைப் பற்றி அதிகமாக விளம்பரப்படுத்தாதே. பகட்டுக்காக பெருமை பேசாதே;
சுயமாக உழைத்து உண். பிறரிடம் யாசித்து உண்ணாதே. பிறரிடம் யாசித்துப் பெறுவதைக்காட்டிலும் உன் தன்மானத்திற்கு பெரிய இழுக்கு வேறெதுவும் இல்லை;
உன்னிடம் உள்ளவற்றை பிறருடன் பகிர்ந்து உண்.
இப்படி பிறருடன் பகிர்ந்து, பிறருக்கு கொடுத்து வாழ வேண்டுமென்று ஔவை திரும்பத்திரும்ப வலியுறுத்துவதின் நோக்கம், மனிதப் பிறப்பின் பொருள் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதை நமக்கு வலியுறுத்தத்தான்.
பிறப்பும் வளர்ப்பும் பெரிய கடன்
நம் ஒவ்வொருவர் வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலும், நாம் எண்ணற்றவற்றை, இந்த சமுதாயத்திடம் பெற்று வளர்கிறோம். அந்த கடனைத் தீர்க்க, நாம் பின்னாளில் வாரி வாரி வழங்க வேண்டும். வழங்குவது என்பது ”பொருள்” செல்வத்துக்கு மட்டுமன்று. அன்பு, கருணை, அருள் என்று நம் உடலால், உள்ளத்தால், எண்ணங்களால், நம்மால் இயன்றவற்றையெல்லாம் வழங்குவதுதான் மனிதப்பிறப்பின் பயன் முழுமைப்பெறுவதற்கான ஒரே வழி.
யதார்த்தத்தில், நம்மால் இந்த உலகத்தில் பெறுவதைக் காட்டிலும் அதிகமாக என்றுமே கொடுக்க முடியாது. கீதையின் வரிகளில் சொல்வதானால், நாம் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை. நாம் எதைக் கொடுக்கிறோமோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது தான். நாமாக எதையும் புதிதாக படைக்கவில்லை. இங்கிருந்தவைகளை சற்றே உருமாற்றியிருக்கிறோம். எதையுமே நான் கண்டு வராதபோது, நீங்கள் எவ்வளவுதான் கொடுத்தாலும், அது என்றுமே அதிகம் இல்லைதானே.
நாம் ஏன் நிறைய கொடுக்க வேண்டும்?
நாம் எதையுமே கொடுக்காமல், நம்மிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எண்ணற்றவர்கள் நமக்காக பல உதவிகளையும், தியாகங்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
உங்கள் பிறப்பே ஒரு தாயின் உன்னதமான தியாகத்தின் விளைவுதான். நாம் இங்கு பிறந்திட எதையுமே அன்னைக்கு கொடுக்கவில்லை. அன்னைக்கு நாம் செலுத்த வேண்டிய கடன் மிகப்பெரியது;
நமக்காக எல்லையில் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீரர்கள் – நாம் யார் என்று தெரியாமல், அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சிறிய ஊதியித்திற்காக, அளப்பரிய தேசப்பற்றுடன் நம்மை காக்க, தங்களின் இன்னுயிர் துறக்கவும் தயாராய் நிற்கின்றனர்.
·பள்ளி ஆசிரியர் - எண்ணற்ற சான்றோர்களை, அறிவியல் அறிஞர்களை, மேதைகளை தொடர்ந்து உருவாக்கும் காரணகர்த்தாக்கள். தான் ஒருவரிடம் கற்ற பாடத்தை, ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்பித்து அறிவை வளர்க்கின்ற உன்னதமான தொழிலை செய்கின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் - உயிர்காக்கும் சேவை புரியும் உன்னத பிறப்புக்கள். நம் தாய்க்கு அடுத்தபடியாக, நம்மால் இயலாத காலங்களில் நம்மலத்தைக்கூட அசூசையின்றி அகற்றிடும் அந்த செவிலியர்களை தலைவணங்க வேண்டுமன்றோ;
சமூக சேவகர்கள் - தன்னிடம் உள்ளவற்றையும் தாண்டி, சமுதாயத்தில் பலரிடம் யாசித்து பொருள் பெற்று ஏழைகளை, குழந்தைகளை, அனாதைகளை, மனநலம் குன்றியவரை பராமரிக்கும் பணியை செய்கின்றனர்.
இப்படிப் பிறப்பு முதல், இறப்பு வரை எண்ணற்ற விடயங்களில், எண்ணற்ற வகைகளில், பல மனிதர்கள் தொடர்ந்து எந்த பிரதிபலனும் பாராமல் இந்த சமுதாய நலனுக்காக எண்ணற்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
எண்ணற்றவர்கள் நம்மைச்சுற்றி இப்படி பிரதிபலன் பாராது சேவை செய்து கொண்டிருக்க, நாம் மட்டும் எப்படி சுயநலமாய் வாழ முடியும். அதற்காக நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் எடுத்து மற்றவர்களுக்க உடனடியாக கொடுக்க வேண்டுமா? என்று கேட்காதீர்கள்.
மிஞ்சியதை கொடுக்கத்தான் வேண்டும்!
“தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்”
இந்த வரிகளை பலமுறை கேட்டிருப்பீர்கள். தனக்கும், தன்னை நம்பியவர்களுக்கும் கொடுத்தது போக மிஞ்சியது என்ன இருக்கிறது என்று யோசியுங்கள். அதிகமாய் இருக்கும் எல்லாவற்றையும் ஒரே நாளில் கொடுத்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை.
ஆனால் கட்டாயம் உங்கள் தேவை போக மீதியை, நீங்கள் உங்கள் வாழ்நாளில் மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆதலால் எப்போதெல்லாம் யார் உங்களிடம் யாசித்தாலும், அப்போதைக்கு என்ன இருக்கிறதோ, அதை கொடுத்து உதவுங்கள். அதே சமயம் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களின் உதவி ஒருவரை வாழவைக்க உதவவேண்டுமே தவிர, அவரை சோம்பேறி ஆக்கிவிடக்கூடாது.
பிச்சைக்காரர்களை வளர்க்காதீர்கள்
இன்றைய தினம், சோம்பேறித்தனம் வளர்ந்து, பிச்சை எடுப்பதையே முதலீடில்லாத சிறந்த தொழிலாகக் கருதி, அதை வர்த்தகமாக ஒரு கூட்டம் செய்கிறது. அந்தக் கூட்டங்களை, சோம்பேறிகளை எந்த வகையிலும் ஆதரிக்காமல் இருப்பது, சமுதாயத்துக்கு மிக நல்லது.
நிறைய உதவி செய்பவர்களை பற்றிச் சொன்னேன். அதேசமயம், உங்கள் வாழ்வில் எண்ணற்ற கருமிகளையும் பார்த்திருப்பீர்கள். எக்காரண்தைத்கை கொண்டும் அவர்களை முன்னுதாரணமாகக் எடுத்துவிடாதீர்கள். ஒரு சிலருடைய தவறான அணுகுமுறை, தவறான கண்ணோட்டங்களினால் அவர்கள் கருமிகளாக இருப்பது, அவர்களின் சாபக்கேடு. கூடியவரை அவர்களை உங்களின் எண்ணங்களினின்று தனிமைப்படுத்தி விடுங்கள். நீங்கள், உங்களுக்கென்று கொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக்குங்கள்.
அறம் செய்ய விரும்பு
சமுதாயத்திற்கு பணம் மட்டுமே இறுதியானதன்று. நல்லவர்களின் உள்ளமும் நிறைய தேவை. ஆதலால்தான் கொடுக்கும் பழக்கமானது முதலில் மனதளவில் துவங்கி வளர வேண்டும் என்பதை உணர்த்த, நம் ஔவை மூதாட்டி “அறம் செய்” என்று சொல்லாமல், “அறம் செய்ய விரும்பு” என்று கூறினார். உங்களிடம் கொடுக்க போதிய செல்வம் இல்லாவிட்டாலும், கொடுக்க வேண்டும் என்கின்ற மனநிலை இருப்பதுதான் அதிமுக்கியம். அந்த மனநிலை இருந்தால் போதிய பொருள் இல்லாவிட்டாலும், உங்களால் முடிந்த ஏதேனுமொன்றை கொடுத்து சமுதாயத்திற்கு நீங்கள் உதவுகிறீர்கள். அதனால் “அறம் செய்ய விரும்புங்கள்”. ஏனையவை தானாகவே நடந்துவிடும்.
கல்வி கேள்விகளை வளர்த்திடுங்கள்
நீங்கள் அளப்பரிய செல்வத்தை சேர்த்து, உங்கள் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதாக நினைக்கிறீர்கள். உண்மையில் உங்கள் சந்ததிகளை நன்றாக வாழவைக்க ஆசைப்பட்டால்,
அவர்களுக்கு
போதுமான கல்வி செல்வத்தைக் கொடுங்கள்;
மனிதத்தன்மையை கற்றுக்கொடுங்கள்;
மகிழ்ச்சியாக வாழ பழக்குங்கள்;
எந்த பொருட்செல்வமும், அவரவர்களின் உழைப்பில்லாமல் எளிதாக கிடைக்கும்போது, அவர்களை அது சீரழித்துவிட வாய்ப்பு அதிகம். அதற்காக எதையும் சேர்த்துவைத்து பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள் என்று நான் தடைபோடவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு நிறைய அறிவுச் செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ போதுமென்ற மனநிறைவையும் பழக்கப்படுத்திவிட்டால், உங்களின் பொருட்செல்வம், அவர்களின் கைகளில் இருந்தும் எல்லோருக்கும் வாரி வழங்கப்படும்.
நிறைய செல்வம் சேர்த்துக்கொடுப்பதைக்காட்டிலும், நல்ல குணங்களை நிறைய கற்றுக் கொடுப்பதை கட்டாயம் செய்யுங்கள். செல்வத்தைக்காட்டிலும், நற்குணங்கள், உங்கள் சந்ததிகளின் பெயரை காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யும்.
கொடுங்கள், உங்களால் முடிந்ததை கொடுங்கள்
பொருட்செல்வம் மட்டுமல்ல
கல்வி செல்வத்தையும் வழங்குங்கள்
அன்பு, கருணை, அருள் என எல்லாவற்றையும்
வாரி வாரி வழங்குங்கள்;
கொடுப்பது குறைந்து பறிப்பது அதிகமாக இருப்பதால்
சமுதாயம் சீரழிந்து நிற்கிறது ;
கொடுப்பது அதிகரித்துவிட்டால்
சமுதாயம் தானாக சீராகிவிடும்;
கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி
பெறுவதில் வருவதில்லை;
கொடுத்துப் பழகுங்கள் – ஏனெனில்
இவ்வுலகில் எதுவுமே உங்களுக்கு நிரந்தர சொந்தம் கிடையாது;
“பிறக்கும் போது என்ன கொண்டுவந்தாய்” என்கிற
கீதையின் வரிகளை அவ்வப்போது நினைவில் கொள்ளுங்கள்;
வாழ்க்கை வசந்தமாகும்;
- [ம.சு.கு 31.08.2022]
Comments