கனவு காணுதல் – சரியா? தவறா?
உங்களின் எதிர்கால விருப்பங்கள், ஆசைகள், கனவுகளை உங்கள் குடும்பத்தினரிடமோ நண்பர்களிடமோ நீங்கள் கூறியிருந்தால், ‘அளவுக்கு அதிகமாக கனவு காணாதே’ என்று பொதுவான பதில் வந்திருக்கக்கூடும்.
ஒருபுறம்
‘பகல் கனவு காணாதே’
‘உன் சக்திக்கு மீறி கனவு காணாதே’
‘கனவிலேயே கோட்டை கட்டாதே’
என்று எண்ணற்ற வசனங்களை வருகின்றன.
மறுபுறம் நம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ‘கனவு காணுங்கள் - உறக்கத்தில் வரும் கனவுகளை அல்ல, உங்களை உறங்கவிடாமல் செய்யும் கனவுகளை காணுங்கள்’ என்கிறார்.
சான்றோர்கள் கனவுகள்தான் வெற்றியின் முதல்படியென்று ஒருபுறம் சொல்ல, மறுபுறம் நம் சுற்றமும் சூழ்நிலைகளும் கனவுகளை எதிர்மறையாக விமர்சிக்கின்றன.
ஏன் கனவுகாண்பது தவறா? ஏன் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன.
வாடிக்கையாளரை வெல்வது
உங்கள் வியாபார வளர்ச்சிக்கு, நாளைய தினம் புதிய வாடிக்கையாளரை சந்தித்து, உங்கள் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து அவரின் வர்த்தக ஒப்பந்தத்தை வெல்ல வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த வாடிக்கையாளரை உங்களின் திட்டத்தின்பால் ஈர்த்து வெற்றிகாண முதலில் அவருடைய எதிர்பார்ப்புகள் என்ன என்று அறியவேண்டும். அவருடைய எதிர்பார்ப்புக்க ஏற்ப, எதைப் பற்றி அதிகம் அவரிடம் விளக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். உரையாடலின்போது எந்த மாதிரியான கேள்விகள் வரக்கூடும் என்று முன்கூட்டியே நீங்கள் யூகித்து பதிலை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்கள் யூகங்கள் சரியாக இருந்தால் அந்த வாடிக்கையாளரை வெல்வது எளிதாகும்.
இப்படி நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம், நடக்கவிருப்பவைகளை பற்றிய உங்களின் யூகம் எவ்வளவுக்கெவ்வளவு சரியாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
இலக்குகள் தெளிவுபெற
நீங்கள் அடைய வேண்டிய இலக்கு உங்களுக்கு தெளிவாக இருந்தால், அதை அடையும் பாதையை தேடுவது எளிது. ஆனால் எல்லோருக்கும் ஆரம்பத்தில் இலக்குகளில் முழுமையான தெளிவு இருப்பதில்லை. ஆயிரம் கனவுகள் இருக்கும் - ஆனால் அதற்கான படிப்படியான இலக்குகளை எப்படி நிர்ணயிப்பதென்பதில் எண்ணற்ற குழப்பம் இருக்கும்.
அந்த குழப்பங்களிலிருந்து வெளிவர, முதலில் உங்கள் கனவுகளுடன் நீங்கள் உரையாடவேண்டும். உங்கள் கனவுகளுடனான உரையாடலில்தான், உங்களின் இலக்குகள் தெளிவுபெறும். மறந்துவிடாதீர்கள்! உங்களின் உள்ளுணர்வுதான் உங்களின் முதல் வழிகாட்டி. உங்களின் எண்ணங்கள், உங்கள் லட்சியங்களுடன் தொடர்ந்து பேசப்பேச, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெளிவாகும். இலக்குகளில் உங்களுக்கு எவ்வளவு தெளிவு இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதற்கான திட்டங்களை வகுத்து வெற்றப்பாதையில் உங்களால் முன்னேற முடியும்.
உங்கள் கனவுகளை யார் சுமப்பார்?
உங்கள் கனவுகள் உங்களுடையது மட்டுமே;
உங்கள் லட்சியம் உங்களுடையது மட்டுமே;
உங்கள் கனவுகள்-இலட்சியங்களை அடைய
பிறர் உதவலாமே தவிர
அது ஒரு நாளும் அவர்களுடைய கனவாக முடியாது!!
உங்கள் கனவுகளுக்கு நீங்கள்தான் உருவம் கொடுக்க வேண்டும். உங்கள் கனவுகள் மெய்ப்பட, படிப்படியான செயல்திட்டங்களை நீங்கள்தான் வகுத்து செயல்படுத்த வேண்டும். அந்த கனவுகளை அடையும் பயனத்தில் ஆயிரமாயிரம் தடங்கல்கள் வரலாம். எண்ணற்ற தடைகள் உங்களைத் திசை திருப்பலாம். இவை அனைத்தையும் கடந்து, உங்கள் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து வெற்றி அடைய நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மறந்துவிடாதீர்கள் !
உங்கள் கனவும் எதிர்காலமும் உங்களுடையது மட்டுமே!
அதை நீங்கள் மட்டுமே சுமந்தாக வேண்டும்!
உடன்வருபவர்கள் எல்லாம் உங்களுக்கு உதவலாமே தவிர,
உங்களின் கனவுகளை சுமக்க முடியாது.
படிப்படியாக முன்னேற திட்டமிடுங்கள்
எதிர்காலம் யாருக்குமே உறுதியானது கிடையாது. ஆனால் அந்த எதிர்காலத்தை நோக்கி, சில-பல திட்டங்களை வகுத்து, சரியான பாதையில் பயணிப்பவர்களுக்கு எதிர்காலம் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் அமைய வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு கனவுகளுக்கும் சில நீண்டகால, இடைக்கால, குறுகியகால இலக்குகள் வேண்டும். ஒவ்வொரு இலக்குகளையும் அடைய, உரிய திட்டங்களை வகுக்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும், விழிப்புடன் செயல்படுத்தி அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டும். இவ்வாறு படிப்படியாக முன்னேறி அடையப்படும் வெற்றியில் சரிவுகளில் குறைவு. திடீரென்று அதிர்ஷ்டத்தில் கிடைக்கும் வெற்றிக்கு, மிக அருகாமையிலேயே அகலபாதாளமும் தயாராய் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யூகங்களை ஆழப்படுத்துங்கள்
யதார்த்தத்தில்,எதிர்காலத்தைப்பற்றிய உங்களின் யூகங்கள்தான் உங்களின் இலட்சியப்பாதையின் வழிகாட்டி. விழிப்புடன் உங்களின் யூகங்களை சரி பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். சூழ்நிலை மாற்றங்கள், எல்லாவற்றையும் மாற்றக்கூடும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
எப்போதும் மாற்றங்களை எதிர்பார்த்திருங்கள். மாற்றங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால் அந்த மாற்றங்களையே உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி முன்னேற முடியும்.
உங்கள் கனவுகள்-யூகங்களில் விழிப்புடன் இருக்க, உங்கள் கனவுகளுடன் நீங்கள் அமைதியாக உறையாட வேண்டும். உங்களின் உள்ளுணர்வைக் காட்டிலும் சிறந்த எச்சரிக்கையாளர் யாரும் கிடையாது. அமைதியாய் உங்களுடன் நீங்கள் பேசினால், உங்கள் சரி-தவறுகள் உங்களுக்கு புரியும். உங்களுடனான உங்களின் பேச்சுதான், உங்களின் சுயஅலசல். அந்த சுயஅலசல், உங்களின் யூகங்களுக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும்.
கனவுகளுடன் பேசாவிட்டால்?
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் கனவுகளுண்டு. அரசனாவது தொடங்கி, அன்றாடம் பசிதீர உணவுகிடைப்பதுவரை, கனவுகள் அவரவர்களின் சிந்தனைத் திறணுக்கேற்ப வந்துபோகும். ஆனால் இந்த எல்லா கனவுகளும் மெய்பட அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகின்றனவா? பெரும்பாலும், அந்த கனவை சிந்தித்தவரே, அதை மறுமுறை சிந்திப்பதில்லை. ஒன்றிலிருந்து வேறொன்றிற்கு தாவிவிடுகிறார். உங்களின் கனவுகள் மெய்பட, அந்தக் கனவுகளுடன் ஆயிரமாயிரம் மணித்துளிகளை செலவிட வேண்டும்.
உங்கள் கனவுகளுடன் பேச மறுத்தால்
உங்களின் எதிர்காலம்
எதிர்பார்க்காத திருப்பங்களை உடைய
அகலபாதாளமாகக்கூட வாய்ப்பு உண்டு.
சிலசமயங்களில், உங்களின் யூகங்கள் ஒரு சார்புடையதாக இருந்துவிடக்கூடும். மாற்றுக் கருத்துக்களுக்கு அவ்வப்போது இடமளித்து உங்களின் பயனப்பாதையை மறுஆய்வு செய்யுங்கள். பயனத்தில் எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களின் வெற்றி உறுதியாகும்.
மறவாதீர்!
மாற்றங்களை அறிய
எதிர்காலத்தை கவனியுங்கள்
எதிர்காலம் ஒருகனவென்றாலும்
அந்தக் கனவோடு பேசுங்கள்
கனவுகள் மெய்ப்பட
யதார்த்தத்தைப் புரிந்து யூகியுங்கள்
யூகங்கள் சரியானால்
வெற்றிகள் வந்து குவியும்
யூகங்களை சரியாக்க
எதிர்காலத்தோடு தொடர்ந்து பேசுங்கள்
- [ம.சு.கு - 11.05.2022]

Comments