“வெங்காயம் உரிக்க உரிக்க
ஒன்றுமே இல்லாமல் போகும்;
வாழ்க்கையும் அதுபோலத்தான்
உன்னுள் பயணிக்க பயணிக்க
எல்லாம் மாயை என்பது புரியும்”
என்ன இது? ஆரம்பிக்கும்போதே வாழ்க்கை தத்துவம், ஆன்மா, மாயை குறித்து உவமை அளித்து துவங்குகிறேன் என்று பயப்படவேண்டாம். இது ஆன்மீக கட்டுரையல்ல. எதிலும் ஒரு முற்றுப்புள்ளி இல்லாமல் பயணம் செய்துகொண்டே இருந்தால், இறுதியில் எதுவுமே இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவே இந்த உதாரணம். வாருங்கள் முற்றுப்புள்ளியின் அவசியத்தை விவரமாய் பார்ப்போம்.
முடிவில்லாவிட்டால் விளைவு என்னவாகும்?
இதிகாசம் படித்தவர்கள், அர்ஜுனனின் மனைவி சுபத்திரை, கற்பகாலத்தில் பாடம் கேட்கும்போது சிறிது உறங்கியதால், அபிமன்யுவால் சக்கர வியூகத்தில் இருந்து வெளிவர கற்க இயலாமல் போனது என்று கூறுவவார்கள். சக்கர வியூகத்தின் உள்ளே புகுந்து போராட தெரியும், ஆனால் அதை உடைத்து வெளியே வரத் தெரியாதென்றால், பின்னர் வீரத்தினால் அங்கு பயனேதுமில்லை. முடிப்பதற்கு தெரியாததால், அபிமன்யுவே முடிந்துபோனான்;
வாகனத்தை துவக்கி நகர்த்த தெரியும், ஆனால் நகரும் வாகனத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாவிட்டால் விளைவு என்னவாகும்? பொதுவாக விமானிகள் மத்தியில் ஒரு சொல்வழக்கு உண்டு – “விமானத்தை மேலே எழுப்புவதும் எழுப்பாமலிருப்பதும் விமானியின் விருப்பம் - ஆனால் மேலே ஏற்றி விட்டால், கீழே இறக்கி நிறுத்த வேண்டியது கட்டாயம்”. ஒருவேலை கீழிறக்கத் தெரியாவிட்டால், பயனியர் வாழ்க்கை அதோகதிதான்.
ஒரு குறிப்பிட்ட நூலையோ, கட்டுரையையோ வாசிக்கும்போது, ஒரு வாக்கியம் முற்றுப்புள்ளி இல்லாமல் நீண்டு கொண்டே போனால் அதைத் தொடர்ந்து வாசிக்க உங்களால் முடியுமா? அப்படியே கஷ்டப்பட்டு வாசித்தாலும், அதை புரிந்துகொள்வது சாத்தியமா?
தொடங்கப்பட்ட எதற்கும் முடிவு என்பது அவசியம். முடிவு இல்லாமல் எதுவுமே இல்லை. ஏன் இந்த பூமிக்கு கூட தோற்றம்-முடிவு என்ற இரண்டு நிலைகளும் உண்டென்பதை அறிவியலே கூறுகிறது. அதன் ஆயுள், நம் வாழ்க்கையின் கால எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம், ஆனால் முடிவில்லாமல் பூமியும் இல்லை.
முடிவு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். பின் எதற்காக இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். எடுத்த எல்லா செயல்களுக்கும் முடிவு என்பது அவசியமானாலும், அந்த முடிவை யார் எழுதுகிறார்கள் என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி.
எந்த செயலுக்கும், ஒருவேளை நீங்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், காலச்சக்கரம் தானாக அதற்கு ஒரு முடிவை எழுதிவிடும். நீங்கள் செய்யும் செயலுக்கு உங்களால் உரிய முற்றுப்புள்ளி வைக்கமுடிந்தால், அந்த செயல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தால், எப்படி வாழ்க்கையில் ஈடேறுவது.
சிந்தனை – முற்றுப்புள்ளி
முற்றுப்புள்ளி என்பது உங்களின் செயல்களுக்கு மட்டுமன்று, உங்களின் எண்ணங்கள், சிந்தனைகளுக்கும் கட்டாயம் தேவைப்படுகிற ஒன்று. ஒரு குறிப்பிட்ட செயலுக்கோ, நிகழ்விற்கோ முடிவில்லாமல் சிந்தித்துக் கொண்டிருப்பதுவும் இங்கு மிகப்பெரிய பிரச்சனை தான். இழப்புக்கைப் பற்றி தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தால் வேதனைதான் அதிகரிக்கும். எப்படி துவக்குவது? எப்படி செய்வது? யாரைக்கொண்டு செய்வது? என்று தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தால், காரியம் துவங்கப்படாமலே இருந்துவிடும். எந்த காரியத்துக்கும், எவ்வளவு யோசிக்க வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
வியாபாரமும்-முடிவெடுத்தலும்
ஒரு வியாபாரத்தை துவங்குவதற்கு முன், அதன் சாதக-பாதகங்களை கட்டாயம் அலசி ஆராய வேண்டும். அதேசமயம் அந்த வியாபார அகல்வாராய்ச்சியும் ஒரு அளவுக்குத்தான் இருக்க வேண்டும். தொடர்ந்து மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டே இருந்தால், வெங்காயம் உரிப்பதுபோலத்தான். இறுதியில் ஒன்றுமே இருக்காது. எல்லா வியாபாரத்திலும் ஏதேனுமொரு சாதக-பாதகங்கள், சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். போதுமான அளவு அலசிவிட்டு, ஏதாவதொரு ஒரு இடத்தில் வியாபாரத்தை துவக்கினால்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். தொடர்ந்து யோசித்துக் கொண்டு மட்டுமே இருந்தால், முன்னேற்றம் என்பது சாத்தியமே இல்லை.
அதேபோல, வியாபாரத்தில் விற்பனை குறையும்போதோ, கடன் அதிகரிக்கும்போதோ, அதைவிட்டு விலகவேண்டிய தேவை ஏற்படின், எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து வெளியேறுகிறோம் என்பது அதிமுக்கியம். கடனுக்கு வட்டிகட்ட முடியாத நிலைமையில், எவ்வளவு சீக்கரத்தல் தேவையற்றவைகளை விற்று, கடனைக் குறைக்கிறோம் என்பது முக்கியம். எல்லாம் தானாக சரியாகும் என்று எதையும் செய்யாமல், காலம் தாழ்த்திக்கொண்டுருந்தால், சீக்கிரத்தில் தொழிலையும், தன் சொந்த சொத்துக்களையும் முற்றிலுமாய் இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.
குற்றம் பார்க்கின் – சுற்றம் இல்லை
அடுத்தபடியாக, ஒரு சில விடயங்களில் அளவுக்கு அதிகமாக நாம் யோசிப்பதால், நம்முடைய உணர்வுகளுக்கு அங்கு வேலையில்லாமல் போய், அவை பாழ்பட்டுவிடக்கூடும். உதாரணம்; உறவுகள் மத்தியில் “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற சொல்வழக்கை கேள்விப்பட்டிருப்போம். உறவுகள் நிலைக்க சிலரின் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். முடிவில்லாமல் அவரின் தவறுகளையே யோசிப்பதும், அதைப்பற்றியே பேசுவதும் உறவுகளை மேலும் முறிக்கச் செய்துவிடும்.
பொறுமைகாத்தல் – பொங்கியெழுதல்
ஒரு சில விடயங்களில், பல தவறுகளையும், பலரின் தவறான செயல்பாடுகளையும் நாம் தற்காலிகமாக பொறுத்துக் கொள்கிறோம். ஏனெனில் அந்தத் தவறான செயல்களுக்கு விரைவில் ஒரு முடிவு உண்டு என்பது தெரிவதால். ஒருவேளை அந்த தவறான செயல்களுக்கு முடிவே இல்லை என்பது உறுதியானால், கட்டாயம் யாராலும் நீண்டகாலம் தொடர்ந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு நாள் அதை எதிர்த்துப் போராட துவங்குவார்கள். மக்கள் புரட்சிகள் அப்படித்தான் வெடிக்கின்றன.
எங்கே உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? எங்கே மூளைக்கு வேலை அளிக்க வேண்டும்? என்பதை உங்கள் அனுபவத்தில் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றை மட்டுமே கடைசிவரை பிடித்துக் கொண்டிருந்தால் பலவற்றை இழக்க நேரிடலாம்.
சிறந்த தேர்வை சீக்கிரம் எடுக்க பழகவேண்டும்
நீங்கள் வழக்கமாக செய்து பழக்கப்பட்ட விடயங்களில் / முறைகளில், யோசிக்க அதிகம் ஏதுமில்லை. உங்கள் நினைவலைகளில் பதிந்தவையே உங்களை தானாக வழிநடத்திவுடும். உத; வாகனம் நன்றாக ஓட்டி பழகியவருக்கு, அதன் இயக்கம் அவரது அகநினைவுகளில் கலந்துவிட்டதால், போதிய விழிப்புநிலை இல்லாவிட்டாலும், அவரால் வாகனத்தை ஓட்டிச் சென்று, சேரவேண்டிய வழக்கமான இடத்தை எளிதாக சென்றடைய முடியும். அதே சமயம் ஒரு புதிய இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்போது, அதற்கு பல பாதைகள் இருக்குமென்றால், ஏதேனும் ஒரு பாதையை விழிப்புடன் தேர்ந்தெடுத்து முன் செல்ல வேண்டும். எது சிறந்த பாதை? எதில் போக்குவரத்து நெரிசல் அதிகம்? எதில் வேகத்தடைகள் அதிகம்? என்று யோசித்துக் கணக்கிட்டுக்கொண்டே இருந்தால், எப்போது அங்கே போய் சேருவது. ஒருகட்டத்தில் யோசிப்பதை நிறுத்தி, ஒரு வழியை தேர்ந்தெடுத்து போகத்தான் வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராக திட்டமிடுகிறோம். அதற்கு முன்னர் படித்த சிலரிடம் அறிவுரை கேட்கும்போது, வெவ்வேறு புத்தகங்களை படிக்க, வேறுபட்ட முறைகளை கையாள அறிவுரைகள் கிடைக்கும். இப்படி பலரின் ஆலோசனைகளில் குழம்பிப்போய், எதை முதலில் எடுத்து படிப்பது என்று முடிவெடுக்காமல் இருந்தால் நேரம் போய்க்கொண்டே இருக்கும். தேர்வுக்கு தயாராக எது சிறந்த நூல், படித்து நினைவில் கொள்ள எது சிறந்த முறையென்று தொடர்ந்து ஆராய்ந்து கொண்டேயிருந்தால், சீக்கிரத்திலேயே தேர்வுக்குரிய தேதி நெருங்கி விடும். யோசிப்பதற்கு ஒரு கட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்து படிக்கத் துவங்கினால் தான், தேர்வுக்கு தேவையானவற்றை படித்து தயாராகி தேர்வை வெற்றிகரமாக சந்திக்க முடியும்.
அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சாகும்
என்னடா இது? முன்னர் பல கட்டுரைகளில், நிறைய யோசித்து செய்ய வேண்டும் என்று இவன் சொன்னானே! இங்கே அதிகமாக யோசிக்க வேண்டாம் என்கிறானே? என்று குழப்பமடைய வேண்டாம். எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உண்டு என்பதுதான் நாம் உணர வேண்டிய உலக நியதி. எதையும் அளவுக்கு அதிகமாக செய்தால், அதன் முடிவுகள் நமக்கு பாதகமாகக் கூடும். “அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சாகும்” என்ற பழமொழி நாம் அறிந்தது தானே. நீண்டுகொண்டே போகும் விடயங்களின் முடிவுகளை நாம் கட்டுப்படுத்துவது மிகமிக கடினம்.
எல்லா வியாபாரங்களிலும் ஒருநாள் சரிவு வரும். காலவெள்ளத்தில் அந்த பொருளோ, வியாபார முறையோ இல்லாமல் போகும். அதை காலத்தின் போக்கில் முன்கூட்டியே யூகித்து, வேறு பொருளுக்கு, வியாபார முறைக்கு மாறுபவர்கள் தான், தொழிலில் தாக்குப்பிடித்து நின்று, தங்கள் செல்வத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். மாறாக அந்த பழைய வியாபாரத்திலேயே உழல்பவர்கள், காலவெள்ளத்தில் எல்லாவற்றையும் தொலைத்து விடுகின்றனர்.
முடிவு நாமெழுதியதாக இருக்க வேண்டும்
தொழிலோ, வாழ்க்கையோ, சிந்தனைகளோ, எல்லாவற்றிற்கும் ஒரு நாள் கட்டாயம் முடிவு தேவை. அந்த முடிவானது நாமாக சிந்தித்து நமக்கானதாக அமைத்துக்கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, காலம் நம்மீது திணித்ததாக இருக்கக்கூடாது. நாம் முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால், காலச்சக்கரம் அதன்போக்கிலே அவற்றை முடித்து வைக்கும். அப்படி தானாக நிகழும் போது பெரும்பாலும் அவை நமக்கு சாதகமாக இருக்காது.
எப்படி யோசித்து துவக்குகிறோமோ -அதேபோல
எப்போது முடிக்க வேண்டும் என்பதையும் யோசித்து வைக்க வேண்டும்;
எதையும் யோசிக்காமல் துவக்குவது முட்டாள்தனம்;
அதே சமயம் யோசித்துக்கொண்டே நேரம் கடத்துவதும் முட்டாள்தனமே;
துவக்கிய எதையும் எப்படி முடிப்பது என்று தெரிந்திருக்கவேண்டும்;
தெரியவில்லை என்றால் எதற்காக துவக்க வேண்டும்;
சற்று பொறுமையுடன் முழுமையாக கற்றபின் துவக்கலாமே!!
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு;
அந்த எல்லை எதுவென்று
நாம் தெரிந்திருக்கவேண்டியதுதான் அதிமுக்கியம்;
எல்லை தெரியாமல் பகட்டிலும் போதையிலும் திண்டாடி
வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம்;
எங்கும் எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி அவசியம்;
அது எங்கு, எப்போது இடவேண்டுமென்று
அறிந்திருப்பது தான் அனுபவ அறிவு!!
- (ம.சு.கு 13.08.2022)
Comments