top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஒருமுகப்பட்ட உழைப்பே வெற்றி

Updated: Nov 30, 2021நாம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ, ஏதேனுமொரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க வேண்டுமென்று துவங்குவோம். இடையில் வெவ்வேறு மனிதர்கள், தொலைப்பேசி அழைப்புக்கள், சக ஊழியர்களின் சந்தேகங்கள் என பல இடர்கள் வந்த வண்ணம் இருக்கும். ஒவ்வோரு இடை செயல்களும், கையில் உள்ள வேலையை முடிக்க தாமதப்படுத்திக் கொண்டே இருக்கும். பல சமயங்களில் காலையில் துவங்கிய பணி, மாலை வரையிலும் முடியாமலே போய்விடுகிறது.

அன்றாடம் சாதித்தது என்ன?


மாலையில் அமர்ந்து, அப்படி என்னதான் இன்றைய தினம் செய்துமுடித்தோம் என்று யோசித்தால், சொல்வதற்கு பெரிதாய் ஒன்றும் இருப்பதில்லை. அப்போதைக்கப்போது வரும் பிரச்சனைகளை சமாளித்திருப்போம்.


ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்தால், நாம் கடைசியில் என்னதான் சாதித்திருப்போம் ?


அதே செயலை யாரும் இல்லாத நேரத்தில் செய்ய துவங்குகிறீர்கள். எந்த தொலைபேசி அழைப்பும், தொந்தரவும் இல்லை. எத்தனை வேகத்தில் செய்து முடிப்பீர்கள் ? [அலுவலகத்தில் எல்லாரும் கிளப்பிய பின் பல வேலைகளை சீக்கிரமாக முடிக்க முடிகிறதென்று பலமுறை நானே நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன்].


பிடித்தமான செயல்கள் – ஒருமுகப்படுதல்


உங்களுக்கு பிடித்தமான ஒரு செயலுக்கு வருவோம். இங்கு பலருக்கும் மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) மிகவும் பிடிக்கிறது. உங்களுக்கு மட்டைப்பந்தாட்டமோ, அல்லது அதுபோல வேறொரு விளையாட்டோ பிடித்திருக்கிறது. அந்த விளையாட்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த விளையாட்டை தொலைக்காட்சியில் காண ஆரம்பிக்கிறீர்கள். மதியம் துவங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் அந்த ஆட்டத்தில் ஒரு பந்தை கூட விடாமல் பார்த்து விட்டுத்தான் அவ்விடம் விட்டு அகலுகிறீர்கள். இடையில் எந்த செயல் வந்தாலும், எந்த தொலைபேசி அழைப்பு வந்தாலும், கவனத்தை பூராவும் தொலைக்காட்சியிலேயே வைத்துக்கொண்டு ஏதேனுமொரு பதிலைச் சொல்லி சமாளித்து விடுகிறீர்கள். நீங்கள் உண்ணும் உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், அதில் கவனமே இல்லாமல் பிடித்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடுகிறீர்கள். இங்கே உங்களின் கவனம் மட்டைப்பந்தாட்டம் என்று ஒருமுகப்படும் போது, மற்றவைகள் எல்லாம் அப்போதைக்கு சமாளிக்கபட்டு, ஆட்டத்தை முழுவதுமாய் பார்த்து முடிக்கிறீர்கள்.


இந்த விளையாட்டை ஒருமுகப்பட்ட ஈடுபாட்டுடன் பார்ப்பதென்பது ஒரு சிறு உதாரணம் தான். அன்றாடம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்துப் பார்த்தால், நம்முடைய ஒருமுகப்பட்ட ஈடுபாட்டிற்கும், அந்த பணி எப்படி முடிக்கப்படுகிறதென்பதற்கும் எத்தனை சம்பந்தம் இருக்கிறதென்பது நமக்கே தானாய் புரியும்.


மாற்றுக் கருத்து


பரந்துபட்ட அறிவு பெற வேண்டும். ஒருமுகப்பட்ட சிந்தனையும் உழைப்பும் உன்னை சிறை பிடித்து விடும்’ என்ற சிந்தனையை ஒருசாரர் போதிக்கின்றனர்.


நானும் பல தருணங்களில், பலவாறு சோதித்துப் பார்த்து உள்ளேன். கட்டாயம் பரந்துபட்ட அறிவு வேண்டும்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயலை சிறப்பாக முடிக்க, ஒருமுகப்பட்ட சிந்தனையும், உழைப்பும் தேவைப்படுகிறது. பல்வேறு விடயங்களில் கவனம் சிதறினால், எந்த ஒரு செயலும் முடிவதில்லை.


ஒருமுகப்பட்டால் என்ன பயன்


நாம் செய்யும் செயலின்மீது ஆர்வமும், ஒருமுகப்பட்ட உழைப்பும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அந்த செயலை செய்வதில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கும்.


ஒருமுகப்பட்ட அறிவுத்தேடல் நம்மை அத்துறையில் அறிவாளி ஆக்கும். ஒருமுகப்பட்ட பயிற்சி, நம்மை அதில் நிபுனத்துவம் பெறச்செய்யும்.


குவி வில்லை கொண்டு சூரிய ஒளி ஒருமுகப்படுத்தப்பட்டால், அது எதையும் சுட்டெரிக்கும்;

மனிதனும் தன் ஆற்றலை ஒருமுகப்படுத்தினால், செய்வதற்கரியதென்று ஒன்றுமில்லை;


மறவாதீர்கள்


எதில் உங்கள் கவனம் இருக்கிறதோ அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். எதிலிருந்து உங்களின் கவனம் சிதறுகிறதோ, அது படிப்படியாய் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விலகி விடும்.


ஒருமுகப்பட்டால் வெற்றி நிச்சயமா ?


ஒருமுகப்பட்ட சிந்தனையும் செயலும் உங்களுக்கு வெற்றியைத் தருமா? என்று கேட்டால், என்னுடைய பதில் - அந்த சிந்தனை நிலை, உங்களை அந்த வெற்றிப் பாதையில் சரியாக அழைத்துச் செல்லும்.


ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களை போல் நூற்றுக்கணக்கான பேர் அந்தப் பாதையில் முன்சென்று கொண்டிருக்கக்கூடும். அவர்களினின்று நீங்கள் தனிப்பட்டு முன்னேற, கட்டாயம் நீங்கள் தனிப்பட்ட ஆற்றலையும், திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களின் அன்றாட பயிற்சிகளை மேம்படுத்தி, நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.


வெற்றிக்கு!!


அறிவுத் தேடலை மீளாதுயில் வரை தொடர்ந்திடுங்கள்;

பரந்துபட்ட அறிவைக்கொண்டு, நல்ல வழியை, சரியாண வழியை தேர்வு செய்யுங்கள்;

தேர்வு செய்தபின், தயக்கமின்றி, ஒருமுகப்பட்ட சிந்தனையோடு உழைத்து வெற்றியை உறுதி செய்யுங்கள்;


- [ம.சு.கு – 10-11-2021]30 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page