எல்லாமே தேர்வுதான்;
வாழ்க்கையில் எண்ணற்ற விஷயங்களில், நாம் கால நேரத்திற்கேற்ப தேர்வுகளை மேற்கொண்டு செயல்படுத்துகிறோம். நாம் அன்றாடம் உடுத்தும் உடைமுதற்கொண்டு உண்ணும் உணவு, பேசும் வார்த்தைகள் என்று எல்லாமே நமது தேர்வுதான். இன்றைய முதலாளித்துவ கோட்பாட்டு ஆட்சியில், இந்த தேர்வென்பது மிகச்சுதந்திரமானது என்று ஒரு சாராரும், விளம்பரமாயையால் கடிவாளமிடப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்ட தேர்வுகள் என்று மற்றொருசாராரும் விவாதித்து வருகின்றனர். இந்த பெரும்பொருளியலை (Macro Economics) சற்றே ஒதுக்கிவிட்டு, நமது தேர்வுகளை சற்றே அலசி ஆராய்வோம்.
வழிநடத்தப்பட்ட தேர்வு;
நாம் இந்த பூமியில் ஜனனம் எடுப்பதற்கு ஆயத்தப்பட்டது முதல் எண்ணற்ற தேர்வுகளை நம் பெற்றோர்கள் நமக்காக செய்கிறார்கள். பிறந்து, குழந்தை பருவம் கடக்கும்வரை பெரும்பாலும் நமக்கான தேர்வுகளை அவர்களே செய்கின்றனர். நாம் கேட்டதையெல்லாம் வாங்கி தருவதன் மூலமும், நாம் விரும்பியதைத்தான் நாம் உண்ணுகிறோம் என்பதையும் கொண்டு, பிள்ளைப்பருவத்தில் நமது தேர்வுகள்தான் செயல்படுத்தப்படுகிறதென்ற மாயையில் பலர் இருக்கிறனர். உண்மையில் நம்மை இவ்விவற்றிற்கு பழக்கப்படுத்த வேண்டுமென்று நம் பெற்றோர் தீர்மானித்து நம்மிடம் அவற்றிற்கு மட்டும் அளவாய் வாய்ப்பளித்து நம்மை அவர்களின் தேர்வு வட்டத்திற்குள்ளாகவே வழிநடத்தி உள்ளனர். நம்முடைய தேர்வுகளில் பெரும்பாலும் அவர்களுடைய தேர்வுகளின் பிரதிபலிப்பு கட்டாயம் தென்படும். இந்த பிள்ளைப்பருவத்தை தாண்டும் போதுதான் நமக்கு யதார்தத்தில் ‘எதை தேர்வு செய்வதென்ற?’ குழப்பம் ஆரம்பிக்கிறது.
தேர்வுகள் – சாதக பாதகங்கள்;
பள்ளிக்கல்வியை தாண்டி கல்லூரி செல்ல எந்த பாடப்பிரிவை தேர்வுசெய்வது என்ற பெரும் குழப்பம் துவங்கி நாம் இறக்கும்போது நம்மை எரிப்பதா? புதைப்பதா? என்பது வரை எண்ணற்ற தேர்வுகள் நம்மை தொடர்கிறது. இதில் பலவற்றிற்க்கு நாமே சிந்தித்து தேர்ந்தெடுக்க வேண்டும். சில விஷயங்களில் தேர்விற்கான வாய்ப்பு இருப்பதுபோல தெரிந்தாலும், நாம் பெரும்பாலும் அறியாமலேயே கட்டாயப்படுத்தப்பட்டு விடுகிறோம். ஒவ்வொரு தருணத்திலும், நம் முன்னே குறைந்தபட்சம் இரண்டு வழிமுறைகளேனும் இருக்கின்ற பட்சத்தில், நம் அறிவுக்கு வேலை வருகிறது. இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய எத்தனையோ சாதக பாதகங்களை அலசி ஆராய வேண்டியுள்ளது. இப்படி வாழ்க்கை ஆரம்பத்திலேயே எல்லாவற்றிலும் செம்மையாக சாதக பாதகங்களை அலசுகின்ற அறிவு எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லாராலும் எடுத்த எடுப்பிலேயை மிகச்சிறந்த வழிமுறையை தேர்வு செய்வது இயலுமா? அன்றைய தினம் அன்றைய பொழுதில் நமக்கு, நம் அறிவிற்கு எட்டிய வகையில் எது சிறந்ததென்று தோன்றுகிறதோ, அதை தேர்வு செய்து செயல்படுத்த முயலுகிறோம். அந்தத் தேர்வை ஓராண்டு கழித்து யோசித்துப் பார்க்கும்போது, நாம் செய்தது சரியா? தவறா? என்பதை புரிந்து உணர்திறோம்.
அவ்வாறு தேர்வு செய்யப்படுகின்ற ஒவ்வொரு தேர்வுகளும், இடம், பொருள், காலம் சார்ந்தவை. அன்றைய தினம் சரியாணதென்று தோன்றும் ஒன்று, ஒரு மாதத்திற்குப்பின் தவறானதாகலாம். அதற்காக, முதல் நாளில் எடுத்த முடிவு தவறென்று ஆகிவிடாது. ஒருவேலை அவை தவறாயின், அவைகள் அடுத்த தருணத்தில் திருத்தப்படலாம். சிலவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்புக்கள் இல்லாமலே கூட போகலாம்.
தேர்வுகள் – காலத்தின் கட்டாயம்;
எந்தவொரு தருணத்திலும், சரியோ? தவறோ? நாம் ஏதேனுமொன்றை தேர்வு செய்து, முன்னே செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைவிடுத்து நான் சிறந்த தேர்விற்காக காத்திருக்கிறேன் என்று கூறி தொடர்ந்து தீர்வு காண காலம் தாழ்த்தினால், எல்லாமே நம்மை கடந்து போய்விடும். நாம் தொடங்கிய நிலையிலோ, அல்லது அதிலிருந்து மேலும் பின்தங்கியோ நின்றுவிடுவோம்.
காலத்தின் கட்டாயம், ஒரு பாதையை தேர்வுசெய்து முன்னேறுவது. செல்லும் பாதையை எப்போதும் சீர்தூக்கி பார்த்த வண்ணமே செல்வது, நமது தேர்வுகளின் சாதகபாதகங்களை நமக்கு உணர்த்தி வழிநடத்திடும். என்றேனும் தவறென்று தெரிந்தால், அக்கணமே அந்த அறமற்ற வழியைவிடுத்து சரியாண பாதைக்கு மாற்றிக்கொள்வது நம் ஆறாம் அறிவுக்கு உள்ள மிகப்பெரிய வேலை.
வெற்றிக்கு – துவக்கம் அவசியம்;
நம் அறிவை வளர்க்க புத்தகம் படிக்க வேண்டும். உடனே எதைப்படிக்க வேண்டுமேன்ற குழப்பம் வரும். முதலில் கையில் இருக்கின்ற புத்தகங்களைக் கொண்டு துவங்குவது முக்கியம். இருக்கின்ற நூல்களைப் படிக்கப் படிக்க நமக்கு ஏற்றது எண்ணவென்று உணர முடியும். எதையுமே படிக்கத் துவங்காமல், நான் நல்ல புத்தகங்கள்களை சேர்ந்த பின் படிக்க துவங்குவேன் என்று கூறுவது முட்டாள்தனமானது.
எந்தச்செயலையும் ஏதேனும் ஓரிடத்தில் துவக்க வேண்டும். அந்த துவக்கப்படுகின்ற இடமும், காலமும் மிக சிறந்ததாகத்தான் இருக்க வேண்டுமென்று காத்திருப்பது சரியல்ல. துவக்கப்படாத எந்தவொரு செயலும் சரித்திரத்தில் முடிக்கப்பட்டதில்லை. துவங்கப்பட்ட எந்தவொரு செயலும் வெற்றியை மட்டுமே அடைந்திருக்கின்றன என்றும் கூற இயலாது. வெற்றி தோல்விகள் இதர விசைகளின் செயல்பாட்டுப் பலன். ஆனால் துவக்கமென்பது காலச்சக்கரத்தின் நிலையான செயல்பாடு. துவக்கம், நம் எண்ணத்தின், நம்பிக்கையின் அடையாளம்.
துவங்கியவர்கும் மட்டுமே வெற்றியும் தோல்வியும்;
எவனொருவன் வாழ்நாளில், தன்முன் வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அந்தந்த தருணத்தில் தேர்வுகளை மேற்கொண்டு முன்னேறுகிறானோ, அவன் கட்டாயம் வெற்றி அல்லது தோல்வி என்னும் இரண்டில் ஒன்றை கடக்கிறான். வெற்றி அவனுக்கு மகிழ்ச்சியை தரும். தோல்வி எதை செய்தால் என்ன நேருமென்ற பாடத்தை கற்றுக்கொடுக்கும். அந்த தோல்வி அவனை அடுத்த தேர்விற்கு நல்ல முறையில் தயார் படுத்தியிருக்கும். தோல்வியை கண்டு துவள்பவன், எந்த காரியத்தையும் துவங்குவதே இல்லை.
தவறுகள் திருத்தப்படலாம்;
எந்த நேரத்தில் எது நேர்வதாக இருத்தாலும், நாம் ஏதேனும் ஒரு தேர்வை மேற்கொண்டு முன்னே சென்றால் எண்ணற்ற வாய்ப்புக் கதவுகள் புலப்படும். ஒவ்வொரு தருணத்திலும், இருக்கின்றவற்றுள் இன்னது சிறந்ததென்று நம் அறிவு வழிநடத்தும் பாதையில் முன்னேறி சென்றால் தான் வெற்றிகிட்டும். சில சறுக்கல்கள் நேரலாம். ஏனெனில் நமது முதல் தேர்வானது சிறந்ததாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. முதல் தேர்வு எப்படியாயிருந்தாலும், போகும் பாதையில், அறிவால் எல்லாச் செயல்களையும் சீர்தூக்கிப் பார்த்து தேவையானபோது போதிய மாற்றங்களை செய்து முன்னேறினால், வெற்றிக்கனி நமக்கு உறுதியாய்கிட்டும்.
வெற்றி காத்திருக்கின்றது;
நம் வாழ்க்கையில், சரியாண தேர்வுகள் நமக்காக காத்திருக்கின்றன. அவற்றை அடைய நாம் முதலில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்து முன்செல்ல வேண்டும். நம் அனுபவமும் காலச்சூழ்நிலைகளும் நம்மை சரியான தேர்வை நோக்கி வழிநடத்தும்.
‘செய்யப்படாத காரியத்தில் சரி-தவறு கிடையாது;
பேசப்படாத வார்த்தைகளில் உண்மை-பொய் கிடையாது;
காணப்படாத காட்சியில் அழகும்-அவலட்சனமும் கிடையாது;
துவங்குங்கள்; துவக்கம் சரியோ? தவறோ?
செல்லும் பாதையில் சரிசெய்து கொள்ளலாம்;
ஒரு வேலை பாதை தவறானாலும், திரும்ப வந்து அடுத்த பாதையில் செல்லலாம். எண்ணற்றவர்கள் நம் வெற்றியைக் காண காத்திருக்கின்றனர். ஒரு சிலர் நமது சறுக்கல்களைக் கண்டு கிண்டல் செய்யலாம். ஆனால் நாம் பயனித்து சாதித்துக்காட்டினால் தான் அவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்ததாகும்.
இமயத்தின் உச்சியை அடைவதானாலும்,
தெருக்கோடிக்கு வருவதாயினும்,
முதல் அடியை எடுத்து வைத்தால்தான் முடியும்;
நமக்காக யாரும் செய்ய வரமாட்டார்கள். நம் வளர்ச்சிக்கு முதல் ஊன்றுகோள் நம்முடைய முயற்சிமட்டுமே..
******
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு’
-- திருக்குறள் 467
(அதிகாரம் : தெரிந்து செயல்வகை)
******
- [ம.சு.கு - 24-08-2021]
Comments