top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நியாயமானவற்றிற்கு சண்டையிடுங்கள்! அளவாக!

குட்டக்குட்ட குனியாதே; குனியக்குனிய குட்டாதே;”


என்ன இது? பழமொழியில் துவக்குகிறேன் என்று பார்க்கிறீர்களா!!


தலைப்புக்கு ஏற்றதொறு ஆரம்பிக்கும் வரி வேறு கிடைக்கவில்லை. பழமொழி நன்கு பொருந்திவந்தது; வாருங்கள் மேலே படிப்போம்;


அரசுக்கு எதிராக சுதந்திரக் குரல்


பரங்கியரின் ஆட்சிக்கு கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தோம். “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்று நம் முன்னோர் போராட்டத்தைத் துவக்கி, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் போராடி, சுதந்திர பாரதத்தை உருவாக்கினர். யதார்த்தத்தில், ஆளும் அரசுகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம். ஏன்? ராஜ துரோகமும் கூட! ஆனால் அடிமைத்தனம் அதனினும் குற்றம். நம் முன்னோர்களின் போராட்டம் நியாயமாக இருந்ததால், அன்று அரசுக்கு எதிராக போராடியவர்கள், இன்று வரலாற்று நாயகர்களாக போற்றப்படுகின்றனர்.


அதேசமயம் இன்றும், ஆளும் அரசுக்கு எதிராக சில தீவிரவாத குழுக்கள் போராடத்தான் செய்கின்றன. இது சர்வாதிகார ஆட்சியாக இருந்தால் இங்கு புரட்சி வெடித்திருக்கலாம். ஆனால் மக்களாட்சி என்பதால், பெரிதாய் எந்த போராட்டமும் வழுப்பெறவில்லை. ஆதலால் பல கிளர்ச்சியாளர்களின் போராட்டங்கள் நியாயப்படுத்த முடியாமல், கடைசியில் தீவிரவாதிகளாக அடையாளப்பட்டு விடுகின்றனர்.


நியாயமான காரணங்கள் இருந்தால், எந்த ஒரு அநீதிக்கு எதிராகவும் யாரேனும் ஒருவர் குரல் கொடுத்தால்தான் தவறு செய்பவர்களுக்கு பயம் இருக்கும். யாருமே கேள்வி கேட்கவில்லை என்றால், அதிகாரவர்கத்தின் கையோங்கி, அநீதிகளே வாழ்க்கையின் நியதி ஆகிவிடும். பின் பலசாலிகள் மட்டுமே வாழ தகுதியுடையவர்கள் ஆகிவிடுவர். அநீதிகளை கண்டு வெகுண்டெழுந்து போராட வேண்டும். ஆனால் எந்தப்போராட்டமானாலும், அதற்குகொரு அளவு வேண்டும். போராட்டங்கள் அஹிம்சை முறையில் இருக்கும் வரை இழப்புகள் குறைவு. ஆயுதம் ஏந்தப்படும்போது, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆயுதம் ஏந்திப்போராடுபவர்களை நம்பியும் குடும்பம் குழந்தைகள் இருப்பார்கள். போராட்டத்தில் அவர் இறந்தால், அந்த குடும்பங்களை யார் கவனிப்பார்கள்.


“தேசத்தின் நலன் காக்க சிலர் தியாகங்களைச் செய்து தான் தீரவேண்டும்” என்று சமுதாயம் சொல்லலாம். யார் அந்த சிலர் என்பது தான் இங்கு கேள்வி? அறப்போர் விடுத்து ஆயுதம் ஏந்தத் தொடங்கினால், இழப்புகள் அளவில்லாமல் ஆகிவிடும். போராட்டம் எத்தனை தீவிரமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் போராடும் முறைகள் அளவோடு தான் இருக்க வேண்டும்.


குடும்பம்


சண்டை சச்சரவுகள் இல்லாத வீடுகளை பார்த்திருக்கிறீர்களா? நடைமுறையில் அப்படி ஒரு அமைதியான வீட்டைப் பார்க்க வேறு கிரகத்திற்கு தான் செல்ல வேண்டும். இல்லற வாழ்விலும், கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது சிறுசிறு ஊடல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். இருவருமே ஒரே கோணத்தில் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் சிந்திப்பது அரிது. இருவரின் மாறுபட்ட சிந்தனைகள், கருத்து வேற்றுமையை அவ்வப்போது தோற்றுவித்துக் கொண்டேதான் இருக்கும்.


உங்கள் தரப்பில் நியாயம் இருப்பின், கட்டாயம் நீங்கள் கேள்வி கேட்பீர்கள். சமயசந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு கேள்விகேட்பதில் தவறில்லை. மனதிற்குள்ளேயே வைத்து மனம்நொந்து சாவதற்கு பதிலாய், நியாயத்தை உரிய வகையில் துணைவியிடம் கேட்டு விடுவதில் தவறேதுமில்லை. அதேபோல் அவர் தரப்பிலும் நியாயம் இருக்கலாம். இருவருமே தங்கள் தரப்பு நியாயத்தில் பிடிவாதமாய் நிற்கும்போது, சண்டைகள் வரத்தான் செய்யும். இந்த சிறிய சண்டைகளில் தவறேதுமில்லை. ஆனால் இவை வளர்ந்து பெரிய வார்த்தை போராகி, சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்ல வைத்து, நிரந்தர விரிசலை ஏற்படுத்தி விடக்கூடாது.


முழுக்க, முழுக்க நியாயம் உங்கள் பக்கம் இருந்தாலும், இல்லறம் செழிக்க சிலவற்றில் விட்டுக்கொடுக்க வேண்டியது இருவரின் தலையாய கடமை. அதற்காக எல்லாவற்றிற்கும் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நியாயமானவற்றுக்கு சண்டை போட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் அது பெரிதாக வளர்ந்து விடாமல் எங்கு நிறுத்தப்பட வேண்டுமென்பதை அறிவது அதிமுக்கியம்.


எந்தக் கட்டத்திலும் பேசும் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகளை விட்டுவிட்டால் அள்ளமுடியாதல்லவா!


இப்போதைக்கு எது தவறோ? எது பிரச்சனையோ? அதைப்பற்றி மட்டுமே பேசினால், பிரச்சனை தீர வாய்ப்புண்டு. மாறாக 5-10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த தவறுகளை இன்று சுட்டிக்காட்டி சண்டையிட்டால், அந்த சண்டையில் எந்த நியாயத்தையும் உங்களால் நிரூபிக்க முடியாது.


நியாயத்துக்காக சண்டையிடுங்கள்; சண்டையிட வேண்டுமென்பதற்காக அல்ல. சண்டையை விட உங்களின் இல்லறம் அதிமுக்கியம் என்பதை மறந்துவிடாமல் சண்டையை அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.


குறைசொல்லி ஆகிவிடாதீர்கள்


நட்பு வட்டம், உறவு, சமுதாயம், தேசம், மனித இனம், என்று நமது வட்டம் சிறிதிலிருந்து பெரிதாகிக் கொண்டே போகும். எல்லா வட்டங்களிலும், எல்லா மட்டங்களிலும் நியாய-அநியாயமும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். எல்லா குற்றங்குறைகளுக்கும் சண்டை போடமுடியாது. சின்னச்சின்ன தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தால் உங்களை “குறைசொல்லி” என்று முத்திரை குத்திவிடுவார்கள். பின்னர் உங்கள் வார்த்தைகளுக்கு அங்கு மதிப்பில்லாமல் போய்விடும். எண்ணற்ற சிறுசிறு பிழைகளை கண்டும் காணாமல் பொருத்துப்போக வேண்டியதுதான்.


அதேசமயம், சில தவறுகளை திருத்த வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. எவரேனும் தவறான புரிதலின் காரணமாக பிழை செய்தால், அவர்களுக்கு அதன் பாதிப்புக்களை புரியவைத்து திருத்தவேண்டும், சண்டையிட்டு அல்ல.


மாறாக நமக்கு நஷ்டம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிந்தே ஒருவர் நமக்கு தீங்கிழைக்க முற்பட்டால், அப்படிப்பட்ட நபரை இணங்கண்டு, கூடியவரை அவரை விட்டு விலகி இருக்க வேண்டும்


நம் கண்முன்னே நடக்கும் எல்லா தவறுகளையும், குளறுபடிகளையும்,

வெறும் சாட்சிகளாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது;

அதற்காக எல்லாவற்றையும் எதிர்த்து சண்டையிடவும் முடியாது;

அதே சமயம் எல்லாவற்றிலுமிருந்து விலகி ஓடவும் முடியாது;


சந்தர்ப்ப சூழ்நிலைகள், தவறுகளின் தன்மை, பாதிப்பின் அளவு, அதில் ஈடுபட்டுள்ள நபர்கள், என்ற பல்வேறு விடயங்களுக்கு ஏற்ப, நாம் எதை எதிர்க்க வேண்டும், எங்கு விலக வேண்டும், எங்கு சமாதானம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து செயல்பட வேண்டும். உங்களின் முந்தைய அனுபவங்கள், காலநேரத்திற்கு ஏற்ற முடிவுகளை எடுக்க உதவும்.


எந்த முடிவெடுத்து நீங்கள் களம் கண்டாலும், எந்தத் தருணத்திலும் சண்டையிடுவதையும், சமாதானம் பேசுவதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எதிலும் எல்லை மீறிப் போய்விடாதீர்கள்.


எல்லை மீறும் போது

சண்டையானால் நமக்கு இழப்பு அதிகரிக்கலாம்;

சமாதானமானால் நாம் ஏமாற்றப் படலாம்;

விலகி ஓடினால் சில வாய்ப்புகளை இழக்கலாம்;


இல்லறத்தில்

நியாய தர்மம் ஒரு அளவு தான்;

இல்லறம் செழிக்க விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதுதான்;

துணைவியிடம் தோற்பதற்கு கவலைப்படாதீர்கள்;

அதேசமயம் அநீதிக்கு துணை போய்

சந்ததிகளுக்கு பாவம் சேர்க்காதீர்கள்;


சமுதாயத்தில்,

நியாய தர்மங்களுக்கு தைரியமாய் குரல் கொடுங்கள் – எதிராளி

புரிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தால்;

அறிவிலிகள் இடம் வாதாடி பயனில்லை – அவ்விடம்

மாற்று வழிகளை யோசித்து நீங்கள் மாறிவிடுங்கள்;


ஆதலால்,

குரல் கொடுக்க வேண்டிய இடத்தில்

தவறாமல் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டுங்கள்;


- [ம.சு.கு 10.09.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page