தற்கொலை முயற்சிகள்
ஒரு கல்லூரி மாணவன் தனது மூன்றாம் ஆண்டு இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, கல்லூரியில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஒரு நேர்காணலில் பங்கெடுத்தான். நேர்காணலில் பங்கெடுப்பது இது முதல்முறை என்பதால் அவனிடம் ஒரு வகையான படபடப்பு இருந்தது. இயல்பாகவே சற்றுத் தாழ்வு மனப்பான்மை உடையவனாதலால் படபடப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
அந்த படபடப்பின் காரணமாக, ஒரு எளிமையான கேள்விக்கு, மிகவும் திக்கித் திணறி பதில் சொல்ல வேண்டியதாக போயிற்று. அதைத் தொடர்ந்து அந்த நேர்காணல் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர்கள் மற்ற மாணவர்களின் நேர்காணலை முடித்து, பின் மாலையில் முடிவுகளை தெரிவித்தனர். அதில் அவன் தேர்வாகவில்லை. உடனே அந்த மாணவன் மனமுடைந்து கல்லூரியின் மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்திருக்கிறான். எதேச்சையாக அவன் நண்பர்கள் அதை கவனித்திட, அந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது.
என்ன காரணம்
இது ஏதோ திரைப்படங்களில் வரும் கதையல்ல. இது உண்மையில் நடந்த நிகழ்வென்று ஒரு பேராசிரியர் கூறினார். இந்த நிகழ்வைக் கேட்டதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
தன்னம்பிக்கை இல்லாத மாணவன் !
நிறுவனங்கள் சிறிய குறைகளை பெரிதாக்கி இப்படி மாணவர்களை நிராகரிப்பது, அவர்களை பாதிக்கிறது !
இன்றைய கல்வி முறை வெற்றியை மட்டுமே பிரதானமாக்கி தோல்விகளை தீட்டாக கருதச் செய்கிறது !
மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதை விடுத்து, எதிலும் வெற்றியை மட்டுமே முடிவென்று எண்ணுகிறார்கள் !
மற்றவர்களைவிட தான் தாழ்வானவன் என்ற தாழ்வு மனப்பான்மையிலிருந்து பல மாணவர்கள் வெளிவருவதில்லை !
இப்படி எண்ணற்ற கருத்துக்கள் உங்கள் மனதில் வந்து போகும்.
அன்றாட தற்கொலை விபரீதங்கள்
இது ஒரு மாணவன் விடயத்தில் நடந்தது மட்டுமன்று. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும், பல தருணங்களில் சிறுசிறு தோல்விகளால் இப்படிப்பட்ட நம்பிக்கையிழப்புகள் துவங்குகிறது. சில மாணவர்கள் தேர்வு தோல்விக்கு பயந்து மரணித்துள்ளனர்.
சில குடும்பங்கள் கடன் தொல்லையால் மரணித்துள்ளனர். சில குடும்பங்களில் கணவன் மனைவி பிரச்சினைக்கு மரணங்கள் முடிவாகி விடுகின்றன. இப்படி சிறுசிறு தோல்விகள், பிரச்சனைகளுக்கு பயந்து உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நம்பிக்கையை இழப்பதற்கான காரணம் தான் என்ன?
தோல்விகள் – அறிவு (எ) மனம்?
தோல்விகளை அறிவின் அலசலோடு நிறுத்தாமல், மனதோடு தொடர்புபடுத்தி வேதனை கொள்வது மிகத்தவறு. ஒரு தோல்வி என்பது அந்தத் தனிமனிதனின் மொத்தமான தோல்வி என்று மனதளவில் கருதுவதால், அவர்கள் இனி நமக்கு என்ன இருக்கிறது என்று விரக்தி அடைகின்றனர். இந்த விரக்தி, தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.
தோல்விகள் நேரும்போது, அவர்களின் குடும்பத்தினர் ஆறுதலாக இருந்து, அடுத்தமுறை முயற்சி செய்து வெல்வோம் என்று தைரியம் கொடுத்தால், அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். மாறாக நீ இலாயக்கற்றவன், உதவாக்கரை என்று தொடர்ந்து கடிந்து கொண்டால், அவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குடும்பத்தினரை தாண்டி, சமுதாயம், நட்புவட்டம் என்ற சூழல் அந்த தனிநபரை அவமதிப்பது போல கருதினால், தோல்விகள் அவர்களை மேலும் துவளச்செய்கிறது. உண்மையில் சமுதாயத்திற்கு அந்தத் தனிமனிதனின் தோல்வியைப் பற்றி கவலையே இல்லை. ஒன்றிரண்டு நாள் மட்டும் பேசிவிட்டு| மறந்து விடுவார்கள். ஆனால் அதைப்பற்றி அந்தத் தனிமனிதன் அதீதமாக யோசித்து, தவறான முடிவுகளை எடுக்கிறான்.
அதீத தன்மை (எ) சமநிலை கொள்ளுதல்
புறச்சூழ்நிலைகளைக் கடந்து, அந்த தனிமனிதன் எந்த அளவுக்கு இயல்பாக சமநிலையில் இருக்கிறான் என்பது முக்கியம். எதிலும் ஒரு அதீத தன்மை உள்ளவர்கள் தான் இப்படிப்பட் விபரீத முடிவுகள் செயல்படுத்துகிறார்கள். எதையும் சமநிலையோடு பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை அவர்களிடம் இருப்பதில்லை. எல்லோரும் எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் வெல்வது சாத்தியமில்லை என்பது வாழ்வின் யதார்த்தம். ஒருவர் வெல்லும் இடத்தில் மற்றொருவர் இரண்டாவது நிலைக்கு தள்ளப்படுவது நிதர்சனம் என்பதை உணர்வது அவசியம்.
நாணயத்தின் இரு பக்கங்கள் போல, வெற்றி தோல்விகள் மாறி மாறி வரும் என்பதை அறிவின் துணையோடு உணர்ந்து மனம் சமநிலைபடவேண்டும். இது மனித குலத்திற்கு அத்தியாவசியமான குணநலன். இந்த சமநிலையை அடையாமல், எதிலும் அதீத நிலையை எதிர்பார்ப்பதால், எதற்கெடுத்தாலும் தான் என்ற அகங்காரமும், உலகமே தனக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், உலகமே தன்னை சுற்றி வருவது போன்ற மாயையிலும் சிக்கி உளறுகிறார்கள்.
இன்று தோற்பவர்கள், அதையே நினைத்து துவண்டு கொண்டிருந்தால், அந்த தோல்விகள் நிரந்தரமாகும்.
தோற்றதுக்கான காரணத்தை ஆராய்ந்து தனது திறமை குறைபாடுகளை சரிசெய்து அடுத்த போட்டிக்கு தயாராகுபவன் வெற்றி பெற தகுதி பெறுகிறான்.
சிறுசிறு தோல்விகளுக்கு பழக்கப்படுத்துங்கள்
இன்றைய தோல்வியை யதார்த்தமாக பார்க்கப் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறு சிறு ஏமாற்றங்களை சந்தித்து ஏற்றுக்கொள்ள சிறு வயது முதலே பழக்கப் படுத்தவேண்டும். எனது ஒரே பிள்ளை என்று அதிக செல்லம் கொடுத்து கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து "இல்லை", "ஏமாற்றம்" போன்றவற்றை பெரிதாய் உணரவைப்பதில்லை. இதன் காரணமாக, எதிர்காலத்தில் அவர்களுக்கு தோல்விகளை சமநிலையோடு ஏற்கும் மனநிலை இருப்பதில்லை.
இது பிறருடன் வரும் போட்டிகள் என்று மட்டுமில்லை. தோல்விகளை ஏற்பது, பிறருடன் அனுசரிப்பது, சற்று விட்டுக்கொடுத்து போவது என்ற எண்ணற்ற மனம்நலம் சார்ந்த விடயங்களில், பலரும் ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பதால், இன்றைக்கு எண்ணற்றவர்களின் மணவாழ்க்கையே கேள்விக்குறியாக இருப்பதை காணமுடிகிறது. விட்டுக்கொடுத்துச் செல்ல மனம் பழகாததால், தொடர்ந்து எண்ணற்ற விவாகரத்து விண்ணப்பங்கள் வழக்காடுமன்றங்களில் வரிசைகட்டி காத்திருக்கின்றன.
பகுத்தாய்ந்து பலகுங்கள்
நடைமுறையில் நான் ஏன் தோற்றேன், இன்னொருவன் எப்படி வென்றான் என்று பொருமையாக அலசுங்கள். எங்கு தவறவிட்டேன், எந்தெந்த விடயங்களில் நான் அவனை விட சரிவர செய்யவில்லை, எது எனக்கு பலவீனமாக உள்ளது என்பதை அலசுங்கள். மற்றவரைவிட சற்று கவனமாக எல்லா விடயங்களில் செயல்பட்டிருந்தால், நாம் வென்றிருக்கலாம், என்பதை நமது மனம் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
மனம் சமநிலையோடு பகுத்தாயும்போது, தோல்விக்கான காரணம் சரியாகத் தெரியும். தோல்விக்கான காரணம் தெரிந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவு பிறக்கும்.
வாய்ப்புக்கள் ஏராளம்
எதையும் நேர்மறையாக பார்த்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்க, நமது மனம் பழக்கப் படுத்தப்படவேண்டும்.
அண்டத்தில் வாய்ப்புகள் ஏராளம்;
நமது திறமை, ஆற்றலுக்குத்தான் எல்லையுண்டு;
ஒரு முறை தோற்றதும் விட்டுவிடுவது – சிறுபிள்ளைத்தனமானது;
வாய்ப்புகளை நாம் தேடிச்சென்று - வெற்றிகளை உருவாக்க வேண்டும்;
வரலாற்றிலே கஜினி முகமதுவின் தொடர் முயற்சியை படித்திருப்பீர்கள். ஒரு கொள்ளைக்காறனே அத்தனை முறை விடாமல் முயற்சித்து இறைவனின் சொத்தையே கொள்ளையடித்திருக்கிறான் எனும்போது, வள்ளுவனின் ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ எனும் குறள்தான் கண்முன்னே வந்துபோனது.
இன்று எண்ணற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், நடிகர்கள் யாவரும் பல தோல்விகளுக்கு பின்தான் புகழின் உச்சியை அடைந்துள்ளனர். நீங்கள் மட்டும் எடுத்தஎடுப்பிலேயே வென்று உலகையாள வேண்டுமென்றால், அதற்கு எத்தனை முயற்சிவேண்டும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் சொன்னால்,
முதல் முறையிலேயே வென்றால்
வெற்றியின் சுவையை உணர முடியாது;
சில தோல்விகளுக்கு பின் வரும் வெற்றி
உங்களை சமநிலைப்படுத்தி
அதன் உண்மைச் சுவையை உணரச்செய்யும்;
மறவாதீர்
வெற்றி உங்கள் கையில்!!
- [ம.சு.கு – 02.03.2022]
コメント