top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : பரிசோதனை முயற்சிகள் தொடரட்டும்!


“நன்றாகத்தானே போகிறது: இதை ஏன் இப்போது மாற்றவேண்டும்?”


“10 வருடமாக இப்படித்தான் செய்கிறேன்; எனக்கு தெரியாதா!”


உங்கள் சக ஊழியரிடம், ஏதேனும் மாற்றம் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னால், வழக்கமாக அவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் இவை.


மாற்றங்களை வெறுக்கிறார்களா?


மாற்றங்களுக்கு யாரும் தயாராக இருப்பதில்லை. ஏதேனுமொன்று நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், மெத்தனப்போக்கு வந்துவிடுகிறது. இன்றைக்கு நன்றாகச் சென்றுகொண்டிருப்பது என்றுமே நிரந்தரம் என்று நம்பி விடுகின்றனர். அதில் மாற்றங்களை, புதுமைகளை செய்ய அவர்களும் முயற்சிப்பதில்லை! அந்த முயற்சி மேற்கொள்பவர்களையும் பரிசோதிக்க விடுவதில்லை. இன்று இயங்குவது என்றுமே அப்படியே இயங்கும் என்று எண்ணுவது சரியா?


உத;இன்று நம்முடைய வாகனம் நன்றாக ஓடுகிறது என்பதை வைத்து அது என்றைக்கும் அப்படியே நன்றாக ஓடும் என்று எண்ணி எதையும் செய்யாமல் இருந்தால் என்னவாகும். திடீரென்று ஒருநாள் நடுவழியில் பழுதாகி நின்று விடும்! ஏனெனில் வாகன பாகங்கள் தொடர்ந்து தேய்மானமாகி, கட்டாயம் ஒருநாள் செயல்படாமல் போகும். அந்த எதிர்பாராத திடீர் சிக்கலைத் தவிர்கத்தான், அவ்வப்போது அதைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. நான்கு சக்கர வண்டி நடுவழியில் நின்றால்கூட பரவாயில்லை, ஏதோ சமாளிக்கலாம். விமானம் நடுவழியில் பழுதாகிவிட்டால் என்ன ஆவது?


தொழில்நுட்ப மாற்றம்


வாகனமோ, இயந்திரமோ, எதுவும் பழுதாகி திடீரென்று நின்றுவிடாமல் இருக்க, ஒருபுறம் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறோம். அதேசமயம், நாளை அந்தப் பொருளே மாறிவிட்டால், புதியவைகள் வந்துவிட்டால், அந்த புதுமைகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?


உதாரணத்திற்கு 20-30 வருடங்களுக்கு முன்னர் இருந்த பல பொருட்கள் இன்று தேவையில்லாமல் போய்விட்டது. கைபேசி வந்ததால் கிட்டத்தட்ட 15 பொருட்களுக்கு மேல் தேவையின்றி போய்விட்டது [கையடக்க ரேடியோ{Transistor Radio, Walkman, ipod…}, புகைப்படக்கருவி {Camera}, எழுப்பு மணி {Alarm} மின்னனு விளையாட்டு சாதனங்கள் {video game} என்று எண்ணற்ற பொருட்களின் தேவை குறைந்துவிட்டது]. அவற்றை உற்பத்தி செய்து வந்தவர்கள், நிகழும் மாற்றத்திற்கேற்ப வேறு பொருளுக்கு மாறாதவர்கள், இன்று காணாமல் போய்விட்டார்கள்.


எல்லாம் எண்ணிலக்க மயம்


சென்ற நூற்றாண்டில் புகைப்பட கருவியும், புகைப்பட சுருளும் மிகவும் பிரசித்தம். ஆனால் இன்று புகைப்படச் சுருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாகிவட்டது. எல்லாம் எண்ணிலக்க {டிஜிட்டல்} முறைக்கு மாறிவிட்டது. அந்த சுருளை உற்பத்தி செய்த கோடாக், எச்.பி.எப் போன்ற நிறுவனங்களும் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டது. அவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அன்றைய தினம் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. டிஜிட்டல் புகைப்பட முறையை கண்டுபிடித்த தனது ஊழியரையும் கோடக் நிறுவனம் பெரிதாக பொருட்படுத்தவில்லை.


அந்த புதிய முறையின் முக்கியத்துவம் அறிந்த வேறு நிறுவனங்கள், அவரை வைத்து புதியவற்றை புகுத்தி சுருள்படத்தை தேவையற்றதாக்கிவிட்டது.


தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆராய்ச்சிகள்


தொழில்நுட்பங்கள், நாளுக்குநாள் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்துக்கொண்டே இருக்கிறது. போதிய அளவு அதற்கான ஆராய்ச்சிகளில் செலவு செய்து, புதியவற்றை கண்டுபிடித்து செயல்படுத்த முயற்சிப்பவர்கள் மட்டுமே காலவெள்ளத்தில் நீடித்திருக்க முடியும். உதாரணத்துக்கு ஆப்பிள் நிறுவனமும், கூகுள் நிறுவனமும் தொடர்ந்து எண்ணற்ற ஆராய்ச்சிகளையும், சோதனை முயற்சிகளையும் செய்து புதிய பொருட்களை, புதிய உபயோக முறைமைகளை, சந்தைப்படுத்துவதால் அவர்கள் சந்தையில் தொடர்ந்து முதன்மை நிலையை தக்க வைத்திருக்கின்றனர்.


சோதனை முயற்சிகள்தான் மாற்றத்திற்கான மூலாதாரம்


ஆராய்ச்சிகளும், எண்ணற்ற சோதனை முயற்சிகளுமே மனித இனத்தை கற்கால வாழ்க்கையில் இருந்து இன்றைய நவநாகரீக வாழ்க்கை வரை அழைத்து வந்திருக்கிறது. ஆனால் ஏனோ, ஒரு சிலர் சோதனை முயற்சிகளை செய்ய பயப்படுகின்றனர். அதை, தேவையற்ற பொருள்விரையம் என்று தவிர்க்கின்றனர். அப்படியே முயற்சித்தாலும், அவற்றில் வரும் ஓரிரு தோல்விகளை பெரிதாக்கி சோதனைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர்.


யதார்த்தத்தில் சோதனை முயற்சிகளில் வரும் தோல்விகள் எதுவுமே, நிரந்தர தோல்வியல்ல. அவையாவும், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான படிப்பினைகள். எது சாத்தியமில்லை, எது சாத்தியப்படும் என்று தெரிந்துகொள்ள, அந்த சோதனை முயற்சிகள் தான் நமக்கிருக்கும் ஒரே வழி.


பல்வேறு சோதனைகளுக்குப்பின்தான் வெற்றி


  • எடிசன் மின்விளக்கை கண்டுபிடிக்க, பல ஆயிரம் சோதனை முயற்சிகளுக்கு பின்னரே வெற்றிபெற முடிந்தது.

  • எவரெஸ்ட் சிகரத்தை ஏற பலநூறு பேர் முயற்சித்துத் தோற்றார்கள். பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. அவர்களின் ஒவ்வொரு கட்ட சோதனை முயற்சியும், அந்த சிகரம் குறித்த எண்ணற்ற படிப்பினைகளை தந்தது. இறுதியில் எல்லா தடைகளையும் தாண்டி, ஒருநாள் அதையும் ஏறி சாதித்தனர். இன்று எவரெஸ்ட் சிகரத்தை நூற்றுக்கணக்கானோர் ஏறி விட்டனர். ஏன் மாற்றுத்திறனாளிகள் கூட ஏறி சாதித்து விட்டனர்.


மாறும் உலகில், “மாற்றம்” ஒன்றே மாறாதது


இன்று நடந்து கொண்டிருப்பது என்றைக்கும் இப்படியே நன்றாக நடக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. ஆனால் மாற்றத்தைத் தவிர எதுவுமே நிரந்தரமில்லாத இந்த உலகத்தில், இன்று நடப்பது அப்படியே நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தால், நாம் முட்டாளாகிவிடுவோம். காலமாற்றத்தில், இன்று இருப்பவைகள், நாளை கட்டாயம் தேவையற்றவையாகிவிடும்.


15-20 ஆண்டுகளுக்கு முன்னர், தெருவுக்குத் தெரு தொலைபேசி கடைகள் [காயின் பூத்] இருந்தன. இன்று அந்த ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்று நாம் எல்லோருமே நடமாடும் பூத் ஆகிவிட்டோம். ஆம்! எல்லோர் கையிலும் இன்று கைபேசி.


10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பெரும்பாலான பணப்பரிமாற்றம் ரொக்கமாகத்தான் இருந்தது. இன்று பணவைக்கும் சுருக்குப் பையிலும், பணப்பையிலும் [பர்ஸ்] பணமிருப்பதில்லை. எல்லாப் பணமும் கைபேசிகளுக்குள் அடங்கிவிட்டது. 50 பைசாவானாலும் 5 கோடி ரூபாயானாலும், உங்கள் கைபேசியில் பரிமாற்றத்தை கையாளும் அளவிற்கு உலக மாற்றம் கண்டுவிட்டது.


மாற்றங்களுக்கான சோதனைகள் தொடரட்டும்


இந்த மாற்றங்கள் எல்லாம் பல்வேறு ஆராய்ச்சிகளை, சோதனைகளை முயற்சிகளைச் செய்யும் நிறுவனங்கள் நமக்கு தந்த முன்னேற்றங்கள். இந்த மாற்றங்களில் முதலீடு செய்யாத நிறுவனங்கள், காலப்போக்கில் காணாமல் போய்விட்டன.


நிறைய ஆராய்ச்சிகள், சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அவற்றை அதிகமாக செய்யும் மேலை நாடுகள், வளர்ந்த நாடுகளாக தொடர்ந்து உலகத்தை ஆதிக்கம் செய்து வருகின்றன. அவ்வாறான ஆராய்ச்சிகளுக்கு அதிக பொருள் ஒதுக்க முடியாததால், எண்ணற்ற நாடுகள் இன்னும் பின்தங்கி இருக்கின்றனர்.


தனி மனித வெற்றியாகட்டும்,

நிறுவனத்தின் வெற்றியாகட்டும்,

ஒரு நாட்டின் வெற்றியாகட்டும்,

ஏன் இந்த மனித இனத்தின் வெற்றியே

நாம் எடுக்கும் புதுப்புது முயற்சிகளில் தான் அடங்கியிருக்கிறது;


பட்டாசு இராக்கெட்டுகளில் தொடங்கிய முயற்சி

இன்று மனிதனை நிலவில் கால்பதிக்க வைத்தது;

சந்திரனுக்கு சென்றுவர முடிகிறது;

எண்ணற்ற செயற்கைகோள் சோதனைமுயற்சிகளின் பயனால்

இன்று தகவல் தொடர்பு எளிதாக எங்கும் வியாபித்திருக்கிறது;


விஞ்ஞான வளர்ச்சியும், அதன் தொடர்ச்சியாய் நடைபெறும் சோதனை முயற்சிகளையும் பார்த்தால், வெகுசீக்கிரத்தில் நம்மைச் சுற்றியுள்ள 8 கோள்களுக்கும் சுற்றுலாவே சாத்தியப்படக்கூடும்;


சோதித்தால் தான் சோதனை-வேதனைகள் தீர வழிபிறக்கும்


இன்று செய்வதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், இன்று இருக்கும் நிலையிலேயே நீங்கள் தொடர வேண்டியதுதான். எந்த முன்னேற்றமும் சாத்தியப்படாது. மாறாய் காலவெள்ளத்தில், நீங்கள் பின்செல்லக்கூடும்.


இன்று செய்துகொண்டிருப்பவைகளில், என்னென்ன மாற்றங்கள் செய்து அதை எளிமையாக்கலாம், என்னென்ன புதுமைகளைப் புகுத்தி, அதை தானியங்கியாக்கலாம், என்று நாம் தொடர்ந்து சிந்திக்கவேண்டும். சிறுசிறு பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். அதற்காக சோதணை என்ற பெயரில், உங்கள் மொத்த சொத்தையும் அதில் பந்தயம் கட்ட சொல்லவில்லை. உங்கள் வியாபாரத்தின் சந்தை நிலவரம், மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, ஆராய்ச்சிகளிலும் சோதனை முயற்சிகளும் கூடுமானவரை முதலீடு செய்து, புதியவற்றை கண்டுபிடித்து முன்னேற்றம் காண வேண்டும்.


ஆராய்ச்சிகள், சோதனைமுயற்சிகள் நம் வளர்ச்சிக்கு முக்கியத்தேவை என்றாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு சோதனையும், நன்கு ஆலோசிக்கப்பட்டு, சந்தையின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். சில கண்டுபிடிப்புகள், மக்களால் அங்கீகரிக்கப்படாமல் தேவையற்றவையாகிவிட்டன. ஒவ்வொரு சோதனை முயற்சியின் படிப்பினைகளும், அடுத்தடுத்த நபர்களுக்கு கடத்தப்பட்டால் தான், பல்வேறுபட்ட முயற்சிகளின் கூட்டுப்பயனாய் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும்.


நிறுவனத்தில் எப்படி மாற்றங்களை கொண்டுவரலாம்


உங்கள் நிறுவன ஊழியர்களிடம், இந்த மாற்றத்தை செய்யுங்கள் என்றால் யாரும் அந்த மாற்றத்தை அவ்வளவாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேசமயம், அவர்களிடம் இதுவொரு சோதனை முயற்சியென்றும், இப்படி செய்தால் என்னவாகிறதென்று சோதித்துப்பார்த்து எனக்கு சொல்லுங்கள் என்றால், பெரும்பாலும் அவர்கள் ஆவலுடன் ஒத்துழைக்கிறார்கள். அந்த சோதனைமுயற்ச்சிகளுக்கு, அவர்களும் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஆம்! மனித இனம் எப்போதுமே புதுமைகளை செய்ய விரும்பக் கூடியதே. அதற்கு அவர்களை சற்று ஊக்கப்படுத்தினால் போதும்.


செய்வதையே செய்து கொண்டிருப்பதில் சலிப்பு ஏற்படும். புதிய பரிசோதனைகளுக்கு பலரும் தயாராக இருப்பார்கள். உங்கள் ஊழியர்களை, பல பரிசோதனை முயற்சிகளுக்கு ஊக்குவித்தால், புதிய கண்டுபிடிப்புகள் கட்டாயம் நடைபெறும். உங்கள் உற்பத்தி முறையில், சேவை முறையில், வர்த்தகத்தில், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.


பெரிய வெற்றிகளை பெற


நீங்கள் பெரிய வெற்றிகளைக் காண விரும்பினால், எண்ணற்ற புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளத்தான் வேண்டும். யாரொருவர் சந்தை விரும்பும் புதுமைகளை சீக்கிரத்தில் கொடுக்கிறாரோ, அவரது நிறுவனமே அதிக லாபம் ஈட்டக் கூடியதாக மாற வாய்ப்பு அதிகம். புதியவற்றை புகுத்தாத நிறுவனங்கள், பின்தங்கிய நிலையிலேயே காலம்கடத்த வேண்டியதுதான்.


இன்று நடப்பவைகள் ஒருபுறம் நடக்கட்டும்;

நாளைய மாற்றத்திற்கு, ஆராய்ச்சிகள், பரிசோதனைகள்

இன்னொருபுறம் தொடங்கப்பட வேண்டும்;


இன்றைய எட்டாக்கனிகள்,

நாளை எட்ட வேண்டுமென்றால்,

இன்றிலிருந்தே புதிய முயற்சிகள் தொடர வேண்டும்;

பரிசோதனை முயற்சிகளை தொடர்வோம்!

புதுமைகள் ஆயிரமாயிரமாய் படைப்போம்!


- [ம.சு.கு 01.10.2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page