top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : சில அனுபவங்கள் – மூடப்பழக்கமாவது ஏன்?

குட்டிக்கதை


இந்த தலைப்பிற்கு, ஒரு தெனாலிராமன் கதையைச் சொல்லி துவக்குவோம்.


ஒருமுறை, அரசர் 100 பூனைகளை தூர தேசத்திலிருந்து இறக்குமதி செய்து, தன் அவையில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொன்றைக் கொடுத்து, அவற்றை நன்றாக வளர்ப்பவர்களுக்கு பெரும் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், அதை வளர்க்க தினமும் அரசாங்க பண்ணையிலிருந்து பாலும் கொடுக்கப்பட்டது. தெனாலிராமனின் மகனுக்கு அந்த பால் தேவைப்பட்டது. அதேசமயம் பூனைக்கு அந்த பால் கொடுக்கப்படாவிட்டால், பெரும் அரசகுற்றம் ஆகிவிடும் என்பதால் தெனாலிராமன் ஒருமுறை பாலை நன்கு கொதிக்கவைத்து பூனைக்கு வைத்தான். சூடாக இருப்பது தெரியாமல், எதேச்சையாக பூனை பாலை குடிக்க முயற்சிக்க, அது தன் நாவை சுட்டுக் கொன்டது. அது முதல், எப்போது பாலை கண்டாலும், பயந்து ஓட ஆரம்பித்தது.


ஆறு மாதம் கழித்து எல்லா பூனைகளும் அரசவையில் காட்சிக்கு வரிசைப்படுத்தப்பட்டபோது, தெனாலிராமனின் பூனை மட்டும் மிகவும் மெலிந்து காணப்பட்டது. அதைக் கண்டதும், அரசர் மிகவும் கோபமடைந்தார். மேற்கொண்டு விசாரணையில், தெனாலிராமன் பூனை பால் குடிக்க மறுப்பதால், அந்த மாறுபட்ட பூனையை வளர்க்க மிகவும் சிரமப்பட்டதாகக் கூறினார். பூனை பால் குடிக்க மறுக்கிறது என்ற வரிகளைக் கேட்டதும் அரசரும், அவையோரும் சிரித்தனர். தன் கூற்றை நிரூபிக்க, தெனாலிராமன் காவலரிடம் பால் கொண்டு வந்து பூனையின் முன் வைக்கச் சொன்னார். பாலைக் கண்டமாத்திரத்தில், பூனை பயந்து ஓடியது. அது எப்படி பூனை பாலை கண்டால் ஓடுகிறதென்று எல்லோருக்கும் பெரும் ஆச்சரியம். அதன் இயல்பிலிருந்து மாறுபட்டிருப்பது பெரும் வியப்பாக இருக்கவே, அந்த மாறுபட்ட பூனையை காத்த தெனாலிராமனுக்கு, பரிசு வழங்கப்பட்டது என்று அந்தக் கதை முடிகிறது.


அனுபவங்கள் இயல்பை மாற்றிவிடுகிறுது


இது பேச்சுவழக்கில், குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வரும் நகைச்சுவைக் கதை. எந்த பூனைக்கும் பாலை சூடாய் கொடுக்கும் அளவிற்கு தெனாலிராமன் கொடுமையானவன் இல்லை என்று என்னுடன் யாரும் வாதாட வந்துவிடாதீர்கள். இது வெறும் கற்பனைக் கதையாக கூட இருக்கலாம். ஆனால், இந்த நகைச்சுவை கதை கற்றுத்தரும் பாடம் ஏராளம். எப்படி ஒருவருடைய தனிப்பட்ட அனுபவங்கள், அவருடைய அடிப்படை இயல்பை / நம்பிக்கையை மாற்றியமைக்கிறது, வாழ்வையே திசை திருப்புகிறது என்பதை இந்த கதை சாதாரணமாக காட்டுகிறது.


எதேச்சையாக ஓரிரு முறை ஏற்படுகிற அனுபவங்கள், அப்படி என்ன நம் வாழ்வை மாற்றிவிடும் என்று கேட்கிறீர்களா?


சில உதாரணங்களைப் பார்ப்போம்:


அதிர்ஷ்ட பேனா


ஒரு மாணவன் தனக்கு பரிசாக கிடைத்த புதிய விலையுயர்ந்த பேனாவில் தேர்வு எழுதுகிறான். ஓரிரு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுகிறான். அடுத்தமுறை, வீட்டு விசேட களேபரத்தில், பேனாவை வீட்டிலேயே மறந்துவிட்ட காரணத்தினால், வேறு ஒரு பேனாவில் தேர்வு எழுதவே, ஏதோ காரணத்தினால் அந்தத் தேர்வில் மதிப்பெண் மிகவும் குறைந்துவிடுகிறது. உடனிருக்கும் அதிக மதிப்பெண் பெற்ற நண்பன், அவனுடைய பேனாவை காட்டி இது அவனுடைய மிக அதிர்ஷ்டகரமான பேனா என்று கூறுகிறான். இந்த மாணவனும் சற்று யோசித்து, நடந்த நிகழ்வுகளை கோர்வையாக்கி அவனுடைய அந்த விலை உயர்ந்த பேனாதான் அவனுக்கு இராசியான பேனா என்று மனதளவில் தீர்மானித்து விடுகிறான். அதன்பின் எந்த தேர்வுக்கு சென்றாலும், அந்த பேனாவின் மீதுதான் அவனது கவனம் அதிகமாக இருக்கிறது.


ஒரு நிமிடம் யோசித்தால், தேர்வில் மதிப்பெண் குறைந்தமைக்கு வீட்டு விசேடத்தில் சரியாக படிக்கவில்லை என்பதுதான் முதல் காரணம், பேனா அல்ல என்பது நமக்கே புரியும். ஆனால் மனித மனம் சில எதேச்சையான நிகழ்வுகளை கோர்வையாக்கி, பேனாவின் பால் அவனது மூட நம்பிக்கையை வளர்த்துவிட்டது.


அதிர்ஷ்டமானது – துரதிர்ஷ்டமானது


இந்த அதீத பழக்கம், நம்மில் பலரிடம் வெவ்வேறு கோணங்களில் இருக்கிறது. இது என்னுடைய அதிர்ஷ்டமான சட்டை, இது எனக்கு இராசியான நிறம், இராசியான எண், இவரோடு சேர்ந்து செல்வது எனக்கு அதிர்ஷ்டகரமாக இருக்கும், இவர் முகத்தில் முழித்தால் துரதிர்ஷ்டம், என்று எண்ணற்ற காரணமில்லாத மூடப்பழக்கங்கள், சில எதேற்சையான அனுபவங்களிலிருந்து புதிது-புதிதாக நாமே வளர்த்துக் கொள்கிறோம்.


நீங்களும், உங்களுக்குள் அப்படி என்னென்ன அதிர்ஷ்ட-துரதிருஷ்டகரமான விடயங்கள் இருக்கிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.


பழுதுபட்ட பொத்தானும் – தீப்பொறியும்


நமக்கு ஏற்படும் சில எதேச்சையான நிகழ்வுகள், நம்முள் தவறான அனுமானத்தை ஏற்படுத்துவது ஒருபுறம். மறுபுறம், சில அனுபவங்கள் நம்முள் நீங்காத பயத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. என் வீட்டில் ஒரு குறிப்பிட்ட மின்விளக்கு பொத்தானை அழுத்த முயற்சித்தபோது, சின்ன தீப்பொறி ஏற்பட்டதுடன், எனக்கு சிறிய மின் அதிர்வை 2 முறை ஏற்படுத்தியது. அந்த பழுதுபட்ட பொத்தானை மாற்றிவிட்டேன். ஆனால் அந்த பழைய பொத்தானில் ஏற்பட்ட மின் அதிர்வு அனுபவம், என்னுள் அப்படியே பதிந்துவிட்டது.


இன்றும் அந்த குறிப்பிட்ட பொத்தானை [புதியதானாலும்] தொடும்போது உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இது ஒரு சிறிய உதாரணம் தான். இது போன்று எண்ணற்ற எதேச்சையான சில நிகழ்வுகள், நம் எண்ணங்களை / நம் கண்ணோட்டத்தை முற்றிலுமாய் மாற்றியமைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு அந்த அனுபவங்கள், அதீத பயத்தை உண்டாக்கி பைத்தியமாக்கி விடுகிறது.


அனுபவங்களின் வடுநீங்க


பூனை பாலை கண்டு பயந்து ஓடுவதும், நான் குறிப்பிட்ட பொத்தானை உபயோகிக்க பயப்படுவதும், வெளியிலிருந்து பார்ப்பவற்கு முட்டாள்தனமாக தெரியும். ஆனால் அதை அனுபவப்பட்டவருக்கு, அந்த பழைய வலிகள் தொடர்ந்து நினைவில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த பயம் தேவையற்றது என்பது நன்றாகத் தெரிந்தாலும் அது அவர்களை விட்டுவிலக வெகுகாலம் எடுக்கிறது. குறிப்பாக, ஒருவரின் எண்ணங்களை எதிர்மறையாக சிந்திக்கவைக்க, அவர்களுக்க ஏற்பட்ட ஒரிரு எதிர்மறை அனுபவங்களே போதுமானதாகி விடுகிறது. அதேசமயம், அவரின் எண்ணங்களை நேர்மறையாக மாற்ற, எண்ணற்ற சோதனை முயற்சிகளும், நிரூபனங்களும் தேவைப்படுகின்றன.


என்ன செய்யலாம்


நம் தனிமனித அனுபவங்கள், நம் எண்ணங்களையும், கண்ணோட்டத்தையும் மாற்றி அமைக்கும் பட்சத்தில், அவை நம் வாழ்க்கையையே திசைதிரும்பிவிடவும் வாய்ப்பாகிவிடுகிறது. அப்படிப்பட்ட எதேச்சையான அனுபவங்கள் நம்முள் மூடப்பழக்கமாகி விடாமல் இருக்க என்ன செய்யலாம்:


  • எந்த அனுபவங்கள் நம் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளன என்பதை அறிய, முதலில் நம்மை நாமே அவ்வப்போது சீராய்ந்து கொண்டிருக்க வேண்டும்.

  • அப்படி நம்மை பாதித்தவற்றிலிருந்து விடுபட, அதில் நம் மனதைச் செலுத்தாமல், கூடுமானவரை நம் அறிவைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். பழைய அனுபவங்கள் வெறும் தவறான புரிதல் என்று நம் மனதிற்கு நாமே படிப்படியாக கற்பிக்க வேண்டும்.

  • சில அனுமானங்கள் அதீதமாக இருந்து, நம்மால் அவற்றிலிருந்து விடுபட முடியாவிட்டால், சீக்கிரத்தில் உரிய மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

  • நம்முள் அப்படிப்பட்ட தவறான அனுமானங்களும், ஒரு சார்புத்தன்மையும் இருக்கின்ற விடயங்களில், கூடுமானவரை தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல், குழுவாக செயல்படும் வகையில் அமைத்துக் கொண்டால் நல்லது.

  • நம் கண்ணோட்டத்தை மாற்றிட, நம்மை பாதித்த அந்த குறிப்பிட்ட செயலை, நாமே ஓரிருமுறை செய்து, நம் கண்ணோட்டம் தவறென்று நமக்கு நாமே நிரூபிக்க வேண்டும். அவ்வாறு முயற்சிப்பது எந்தவகையிலும் வேறுசில பாதிப்புக்களை ஏற்படுத்திவிடாத வண்ணம் சோதனை செய்து பாருங்கள்.

  • எவ்வளவுதான் திட்டமிட்டு சரியாக செய்தாலும், ஆயிரத்தில் ஒருமுறை தவறாகக் கூடும். அப்படி எதேச்சையாக ஏற்படும் எதிர்மறை அனுபவங்களை, நிரந்தரமானது, முழுமையானது என்று நம்பிவிடாதீர்கள்.

நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள்தான், நம்மை வழிநடத்துகின்றன. நம் எண்ணங்களையும், நம் கண்ணோட்டத்தையும் தீர்மானிக்கிறது. அவ்வாறு உருவாகும் எண்ணங்களும் / கண்ணோட்டமும் எதிர்மறையாக இருக்கின்ற விடயங்களில், கூடுமானவரை நாம் அதிக கவனம் செலுத்தி, யதார்த்தத்தை புரிந்து உரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.


எண்ணங்களையும் சீராய்வு செய்யவேண்டும்


முன்னர் ஏற்பட்ட தவறான அனுபவங்களை நிரந்தரம் என்று நினைவில் கொண்டிருந்தால், அந்த எதிர்மறை சிறையிலிருந்து வெளியே வரவே முடியாது. நம்மை சுற்றியுள்ளவைகளில் கவனமாக இருப்பது போல், நம்முள் பதிந்துள்ள அனுபவங்கள், நம் எண்ணங்கள், நம் கண்ணோட்டம் முதலியவற்றிலும், மிகமிக கவனமாக இருக்கவேண்டும். நம்முள் பதிந்துள்ள எதிர்மறை எண்ணங்கள், மூடப்பழக்கமாக நம்முள் நிரந்தரமாகி விடாத வண்ணம், கவனமாக இருந்து உரிய மாற்றங்களைச் செய்து ஆக்கத்தை நோக்கி முன்னேற வேண்டும்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்


எத்தனை "பெரியார்" வந்தாலும், உங்களுக்குள் இருக்கும் தவறான கண்ணோட்டத்தையும், மூடப்பழக்கங்களையும், நீங்களே களைய முயற்சித்தால் மட்டுமே, மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.


உங்களை நீங்கள் கவனமாக அலசுங்கள்;

உங்களின் எண்ணங்களையும் கண்ணோட்டத்தையும்

அவ்வப்போது சலித்துப் பாருங்கள்;

உங்கள் கண்ணோட்டம் மாறினால்

உலகமே உங்களுக்கு மாறி இருக்கும் ;

தவறுகளை இனங்கண்டு திருத்துவோம்!

வெற்றியை சொந்த சொத்தாக்குவோம்!


- [ம.சு.கு 06-08-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page