top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : சுற்றுப்புறமும் – நம் பழக்கவழக்கமும் (Environment Vs Our Daily Habits)

Updated: Nov 30, 2021

ஒருமுறை மிகவும் பருமணாக இருக்கும் என் நண்பர் ஒருவருடன் உறையாடிக் கொண்டுருக்கையில், அவர் உடல் பருமண் குறித்து பேசி மிகவும் மனவருத்தம் கொண்டார். அவர் தினமும் குறைவாகவே உண்பதாகவும் (காலை 3 இட்லி, மதியம் & இரவு 3 சப்பாத்தி சாப்பிட்டாலும்) தனது உடல் எடை குறைவதில்லை என்று வருந்தினார். இரண்டு-மூன்று மாதங்களாக உண்பதை குறைத்தும் எடையில் சின்ன மாற்றமும் ஏற்படவில்லை என்று குமுறினார். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு நண்பரோ, தனது குழந்தைகள் எப்போதும் தொலைக்காட்சி பார்த்தே நேரம் கழிப்பதாக குறைகூறினார்.


இவை தவிர்த்தும், இன்னும் எண்ணற்ற சிறுசிறு விஷயங்களாக தினமும் சீரழிவுச் செயல்களை கேட்கின்றோம். இவைகளையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்று எல்லோருக்கும் ஆசை தான். எப்படி சரிசெய்வது என்று என்றேனும் யோசிக்கிறோமா?


கைக்கெட்டும் தூரத்தில் திண்பண்டம் இருந்தால்;


உடல் பருமணான நண்பர் வீட்டில் அவர் உண்ணும் உணவை தவிர்த்து என்னவெல்லாம் சாப்பிடுகிறார் என்று பார்த்தபோது, ஒருநாள்பொழுதில் ஏறக்குறைய, அரைக்கிலோவுக்கும் அதிகமான எண்ணெய் பதார்த்தங்கள் & திண்பண்டங்களை சாப்பிட்டுவிடுகிறார். எப்படி இத்தனை எடுத்துக்ககொண்டு எடை குறைய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால், நானா அவ்வளவு சாப்பிடுகின்றேன் என்று நம்மையே கேட்கிறார். ஏதோ, அப்போதைக்கு ஒரு வாய் எடுத்துக்கொள்வேன், இத்தனை எடுத்துக்கொள்கிறேனா என்று தனக்குத்தானே ஆச்சரியப்படுகிறார். வீட்டின் எந்தப்பக்கம் திரும்பினாலும் ஏதேனுமொரு திண்பன்டம் கண்ணுக்கு தெரிகிறது. எப்போதெல்லாம் அது கண்ணுக்கு படுகிறதோ, அப்போதெல்லாம் சிறிது எடுத்து வாயில்போட்டால், ஒரு நாளில் எத்தனை உட்கொள்வோம் !


தன் எடைகுறையாமல் இருப்பதற்கான காரணம் இட்லி, சப்பாத்தியல்ல, இந்த தேவையற்ற திண்பன்டங்களே என்று அவரை உணரவைக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. உங்கள் இல்லங்களில் எப்படி ?.....


நமக்கொரு சட்டம் – குழந்தைக்கொரு சட்டமா ?


அடுத்த விஷயத்திற்கு வருவோம். குழந்தைகளின் அதீத தொலைக்காட்சி மோகம். சற்றே விசாரித்தபோது, வீட்டில் அவரும், அவரது மனைவியும் கேபிள் டிவியில் வரும் எந்தவொரு மெகாத்தொடரையும் விடுவதில்லை என்பதை அறிந்தேன். குழந்தைகள் மாலையில் பள்ளிமுடித்து வீட்டிற்குள் நுழையும்போதே தொலைக்காட்சியில் தொடர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை பார்க்க துவங்கும் குழந்தைகள் இரவு 10 மணிவரை பெற்றோர்களோடு தொடர்ந்து தொலைக்காட்சியுடனேயே நேரத்தை கழிக்கின்றனர். பெற்றோர் வேறுவேலைக்கு நகர்ந்தால், உடனே பொம்மைப்படங்களை பார்க்க துவங்கிவிடுகின்றனர். இதற்கு பெற்றோர்கள் கூறுவது, குழந்தைகள் என்நேரமும் பொம்மை படங்களையே பார்த்துக்கொண்டிருப்பதாகவும், கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்றும் புலம்புகின்றனர்.


மதியம் துவங்கி இரவு வரை தொலைக்காட்சியையே மையமாக கொண்ட வீட்டில் குறைகூறுவது சரியானதா? என்று கேட்டால், அந்த நண்பரிடம் எந்த பதிலும் இல்லை.


நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், ஆனால் எனது குழந்தைகள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரிதானா?


அரைகடலில் ஆழ்தல் சரியோ?


இந்த இரண்டு நிகழ்வுகளும் இன்றைய அவசர உலகத்தின் அன்றாட யதார்த்தங்களாக உள்ளன. இவற்றை உணர்ந்த ஒருசிலர், மாற்று வழிகளை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அவற்றில் பெருப்பாலானோர், முதல் 5 நாட்கள் சரியாக செய்தும், பின்னர் தங்களின் உற்சாகம் தளர்ந்துவிடுவதன் காரணமாக மெதுமெதுவாக பழைய ஒழுங்கற்ற நிலைக்கே திரும்பவும் சென்றுவிடுகின்றனர்.


தனது பருமணை குறைக்க உணவுக் கட்டுப்பாடும், தேகப்பயிற்சியும் செய்யத் துவங்கிய ஒருவர், முதல் 15-20 நாட்களிலேயே மனம் தளர்ந்து அதை விட்டுவிடுகிறார். எத்தனையோ சிந்தனைவாதிகள், தங்கள் கருத்துக்களை புத்தகங்களாக வெளியிடும் ஆவலில் முதல் பக்கத்தை எழுத துவங்குகின்றனர். பெருப்பாலானோர் அவற்றை பாதிவரை கூட எழுதிவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் இரண்டொரு நாளில் தடைவரும் போது, அதையே நிரந்தரத் தடையாக அவர்கள் மாற்றிவிடுகிறார்கள்.


இவற்றிற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று ஆராய்ந்தால், எல்லாவற்றிற்கும் நமது மனம், எண்ணம், செயல் ஆகிய மூன்றிலும், உறுதிப்பாடற்ற தன்மையே காரணமாகிறது. ஏன் இந்த மனத்தின் உற்சாகம் எளிதில் தளர்ந்துவிடுகிறது என்பதை எவருமே உற்றுநோக்குவதில்லை. உற்சாகம் குறைகின்ற தினத்தில் சற்றே விலக ஆரம்பிக்கும் நாம், அந்த துவக்கத்தையே நிரந்தர விலகலாக்கி விடுகின்றோம்.


இந்த மனச்சோர்வுற்கும், உற்சாக இழப்பிற்கும் காரணம் தான் என்ன?


நம் மனத்தின் சபலம்!


இயற்கையில், மனிதயினம் உடலால் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், மனத்தால் சற்றே பலவீணமானவர்கள். ஆசை அவர்கள் கண்களை மிக எளிதில் குருடாக்கிவிடும். எத்தனை உற்சாகத்துடன் துவங்கினாலும், அதில் ஏற்படும் சிறு சிறு இன்னல்கள், உடனே எங்கேனும் கிடைக்கும் சிறிய ஓய்வுக்கும், மகிழ்ச்சிக்கும் எளிதாய் இலக்காகிவிடும். இப்படி அப்போதைக்கு ஏற்படும் சிற்றின்பத்தின் பக்கம் மெதுவாய் தலைசாய்க்கும் மனிதன், நாளடைவில் அதன் அகலபாதாளத்தில் தன்னை அறியாமலேயே விழுந்து விடுகின்றான்.


உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கண்ணில்படும் திண்பன்டங்களெல்லாம் நம் நாவில் எச்சில் ஊரவைக்கிறது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும்போது, காலை தூக்கம் ஐந்து நிமிடமென்று காரணம் சொல்லி நாம் எழுவதையே தாமதப்படுத்தி விடுகிறது. இன்றைய தினம் முக்கியமாய் முடிக்கவேண்டிய செயல்களை துவக்கும்போது, பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போட்டு (Procrastination), பின்னர் செய்யாமலேயே விடவேண்டிய சூழலுக்கு வந்து விடுகின்றோம்.


கண்ணில் படாமல் விலக்கிவிடுதல்;


வெற்றியடைய விரும்பும் ஒவ்வொருவரும், அந்த வெற்றிப்பாதையில் சந்திக்கவிருக்கும் சிறுசிறு சறுக்கல்களையும் முன்கூட்டுயே யூகித்து, அதற்கான தீர்வுகளையும், எதிர் தாக்குதல்களையும் தயார் படுத்திக்கொள்வது அவசியம். ஆனால் எல்லா எதிரிகளுக்கும் தாக்குதல் மட்டுமே சிறந்தவழி அல்ல. பல சமயங்களில் எதிரிகளின் கண்களில் படாமல் விலகியிருப்பதும் அவசியப்படலாம். அப்படித்தான், நம் வாழ்வின் வெற்றிப்பாதையில் ஏற்படும் இன்னல்களையும், கவணச்சிதறல்களையும், நம் பாதையிலிருந்து விலக்கி வைக்கவேண்டும்.


தொலைக்காட்சி, திண்பன்டம், கைபேசி போன்ற சிறுசிறு கவணச்சிதறல்களை எவ்வளவுக்கெவ்வளவு விலக்கிவைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நாம் வெற்றிப்படியை எளிதில் ஏறலாம்.


பொருட்களின் இடத்தை சற்றே மாற்றுங்கள்;


காலை எழுந்ததிலிருந்து 10 மணி வரை, கைபேசியைத் தொடாதீர்கள். உங்கள் மின்னஞ்சல்களும், சமூகவலை தளங்களும், காலையில் கவனத்தை திசைதிருப்புவதை சற்றே தள்ளிப்போட்டு, காலை செய்ய திட்டமிட்டவற்றை தவறாமல் செய்து முடியுங்கள்.


தொலைக்காட்சியை படுக்கையறையில் வைக்காதீர்கள். அது வரவேற்பறையிலேயே இருக்கட்டும். உண்ணும் அறையிலும் வேண்டாம். தொலைக்காட்சியை குறிப்பிட்ட தேவைக்கு மட்டும் ஓடவிடுங்கள். மற்ற நேரங்களில் அனைத்து வைக்க பழகுங்கள்.


வீட்டின் எல்லா இடங்களிலும் திண்பன்டங்களை வைக்காதீர்கள். கண்ணுக்கு தென்படும் இடங்களில் பழங்களை வைத்துவிடுங்கள். உடலுக்கு ஒவ்வாத எண்ணெய் பதார்த்தங்களை, அலமாரியின் மேல்வரிசையில் கண்ணுக்கு புலப்படாதவாறு பின்புறமாக வைத்துவிடுங்கள். எளிதாய் எடுக்கப்பட முடியாத இடத்தி்ல் இருக்கும் எந்தவொரு பொருளும், தானாகவே உட்கொள்ளப்படுவது குறைந்துவிடும்.



நேர்மறை சூழல் – நேர்மறை எண்ணங்கள் – நேர்மறை பழக்கங்கள்;


உங்கள் வீட்டுச் சுற்றுச்சூழலை, உங்கள் குறிக்கோள், இலட்சியங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவைகள் சரியாக இருந்தால், உங்கள் மனதில் எந்தவொரு சிறிய சஞ்சலமும் வராது. தவறானவற்றை நோக்கி கவனத்தை ஈர்க்கும் எந்தவொரு பொருளும், கண்ணுக்கு சாதாரணமாய் தென்படாதபோது, கவனச்சிதறல் என்பது பெரும்பாலும் குறைந்துவிடுகிறது.


தினமும் தேகப்பயிற்சி செய்ய விரும்புபவராயிருந்தால், உங்களுடன் தினம் தவறாமல் வருவதற்கு ஓரிரு நண்பர்களை சேர்த்துக்கொள்ளுங்கள். நம் மனம் உற்சாகம் குன்றும் தினங்களில், அவர்களின் கட்டாயம், நம்மை இடைவிடாது தேகப்பயிற்சியில் ஈடுபடுத்தும். மாதங்கள் செல்லச்செல்ல, அந்த பழக்கம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகி வழக்கமாகிவிடும். பழக்கம் என்று வழக்கமாகிறதோ, அன்று அந்த செயல்கள் நம் எண்ணக்கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு. தானாகவே நம்மை இயக்குபவையாக மாறிவிடும்.


அவ்வப்போது சிறுசிறு மாறுபட்ட கவனச்சிதறல்கள் வந்துபோகும். நம் மனத்தின்மைக்கும், உற்காகத்திற்கும் என்றுமே ஏதேனும் ஒரு எதிர்மறை ஆற்றல் வந்தவண்ணமே இருக்கும். எவ்வளவுக்கெவ்வளவு நல்ல பழக்கங்களுக்கேற்ற சுற்றுப்புறத்தை நாம் அமைக்கின்றோமோ, அந்த அளவிற்கு, முன்வரும் தடைகற்களை எளிதில் கடக்கலாம்.


உங்களைச் சுற்றி இயங்குபவைகள்தான், பெறுமளவில் உங்களை கட்டுப்படுத்துகின்றன. உங்களின் சுற்றத்தை சற்றே ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தினால், உங்களால் எளிதில் அடுத்த நிலைக்கு செல்ல இயலும்.


முயற்சியும், பயிற்சியும் தொடரும்போது, கவனச்சிதறல்களின் காரணிகளான உங்களுடைய சுற்றுப்புறத்திலும் போதிய கவனம் செலுத்தி, சூழலை உங்களின் வெற்றிப்பாதைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வெற்றிகாண்பதுவே, மனிதகுலம் ஆறாம் அறிவின் செயல்பாட்டை செம்மைப்படுத்தியது ஆகும்.



[ம.சு.கு - 06-10-2021]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page