top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : பொய்களை குறைத்துக்கொள்ளுங்கள்

Updated: Apr 30, 2022

ஒரு நாளைக்கு விழித்தது முதல், இரவு கண்மூடி உறங்கும் வரை, எத்தனை பொய் சொல்கிறீர்கள்?


- இந்த கேள்விக்கான உண்மையான பதிலை யாரிடமும் பெற முடியாது.

- பதில் வந்தாலும், அந்த பதிலிலேயேகூட ஒரு பொய் இருக்கும்.


இன்றைய வாழ்க்கை நடைமுறையில், பொய் சொல்லுவது பெரிய குற்றமில்லை என்றாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் முதலில் பொய் சொல்வதையே வழக்கமாக்கிவிட்டனர். எதிரில் இருப்பவருக்கு, தான் கூறுவது பொய் என்று தெரியும் என்பது, தனக்குத் தெரிந்தாலும், வாய் கூசாமல் பொய் சொல்கின்றனர்.


இப்படி பொய் சொல்வது பழக்கமாகிவிட்டபடியால், யாருடைய மனசாட்சியும் உறுத்துவதில்லை. ஒருமுறை சொன்னால் மனசாட்சி உறுத்தும் - சொல்லிச் சொல்லிப் பழகிவிட்டால் அங்கு மனசாட்சிக்கு என்ன வேலை.


அதற்காக, நான் உங்களை வரலாற்று நாயகன் அரிச்சந்திரனாக வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதை எழுதும் நானே அரிச்சந்திரன் இல்லை என்பதைத் தெரிந்தே எழுதுகிறேன். ஆனால் கூடியவரை பொய்களை தவிர்த்துவிடுங்கள். ஒருவேலை உண்மையைச் சொன்னால் சிக்கல் ஏற்படும் என்ற இடங்களில், எதையும் பேசாமல் சமாளித்து வெளியேறி விடுங்கள்.


சுயநலம் மட்டுமே நிலைத்து விட்ட இன்றைய காலகட்டத்தில், அதை விட்டு விடவும் முடியாது. ஆனால் அதே சமயம் சுயநலத்தை மட்டுமே பற்றிக்கொண்டிருந்தால், காலப்போக்கில் வாழ்க்கை நரகமாகிவிடும். எதைச் செய்வதற்கு முன்னரும், பொது நலனை பற்றி சற்று சிந்தித்து விட்டு, பின் முடிவெடுத்துச் செயல்படுங்கள். கூடியவரை சமுதாயத்திற்கு பாதிப்பு வராமல் செயல்படுவது, நாம் நம்முடைய மனித இனம் நிம்மதியாக வாழ உதவுவதாகும்.


வியாபாரமும் – பொய்யும்


பொய் சொல்லாமல் வியாபாரம் செய்ய முடியுமா? என்று கேட்பார்கள்.


விலை குறித்து பேரம் பேசும்போது, “இந்த விலை கட்டுப்படி ஆகாது, நஷ்டம் ஏற்படும்” என்று பலதரப்பட்ட பொய்களை கூறி விலை பேசவேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாதது தான். ஏனெனில் வாங்குபவர், விலை மலிவாக வாங்க வேண்டும் என்பதற்காக “அந்தக் கடையில் குறைவாகத்தானே சொன்னார்கள்” என்று பொய் சொல்லக்கூடும். அந்த வியாபாரியும் சளைத்தவரல்ல - “இது இன்றைக்கு வந்தவை, தரத்தில் சிறந்தவை” என்று எண்ணற்ற பொய் சொல்லுவார். இதில் யதார்த்தம் யாதெனில், இருவருக்கும் மற்றவர் பொய் சொல்லுவது நன்றாக தெரியும். இருந்தும் இந்த உரையாடல்கள் காலங்காலமாய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


இந்தப் வியாபார விலைப் பொய்களைப் பற்றி நான் இங்கு பேசப்போவதில்லை, ஏனெனில் இவைகளை காலங்காலமாய் பார்த்துப் பழகிவிட்டோம். விலையை ஏற்றி, தள்ளுபடி கொடுத்து எனப் புதுப்புது விதமாய் மக்களைக் கவருகின்றனர். ஆனால் அதே வியாபாரி விலையைத்தாண்டி பொருட்களில் கலப்படம் செய்யாமல் நல்ல பொருட்கள் விற்பவராக இருத்தல் மிகமிக அவசியம். பொருட்களிள் கலப்படம் செய்து பொய் சொல்லுவது, முற்றிலுமாக தன்னை நம்பிய மக்களையும் சமுதாயத்தையும் ஏமாற்றுவது ஆகிவிடுகிறது. விலை கூட குறைச்சல் பற்றி பொய் சொல்வதைப் பொறுத்துக்கொள்கிறோம் - ஆனால் மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுமளவிற்கு பொய் வளர்ந்துநிற்பது இன்று மிகவும் கவலைக்குரிய பிரச்சனை.


உங்கள் வியாபாரத்தை நடத்த, இலாபம் ஈட்ட, அளவின்றி பொய் சொல்லுகிறீர்கள். ஆனால் அவை வாடிக்கையாளருக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் அளவிற்குச் என்றால், அது நியாயமா?


குடும்பமும் – பொய்களும்


வியாபாரத்தைத் தாண்டி குடும்பத்தை நகர்த்தவும் அவ்வப்போது பொய்கள். கணவன்-மனைவியிடையே, பிள்ளைகளிடம் எண்ணற்ற பொய்கள். தாய்-தந்தையர் வாய் கூசாமல் பொய் சொல்வதை பார்க்கும் குழந்தைகள், பொய் சொல்வது தவறில்லை என்று மனதில் பதிந்து கொள்கிறது.


இன்றைய பெற்றோர்கள் தன் குழந்தைகள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் வளர வேண்டும் என்று பேராசைப் படுகின்றனர். ஆனால் இவர்களே தங்கள் குழந்தைகள் முன், நல்லவர்களாகவே நடந்து கொள்கிறார்களா? என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை. குழந்தைகளின் முன்னால் உரைக்கும் ஒவ்வொரு பொய்யும், அவர்கள் ஆயிரம் பொய்களைச் சொல்ல நம்பிக்கை அளிக்கும். குழந்தைகள் அறிய நீங்கள் ஒருவரை ஏமாற்றினாலோ, நம்பிக்கை துரோகம் செய்தாலோ, உங்கள் செயலால் உங்கள் குழந்தைகள் எதை கற்றுக்கொள்வார்கள் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்.


சொல்லும்-செயலும் ஒன்றாக வேண்டும்......


இன்றைய சமுதாயத்தில், ஒரு தனிமனிதன்,


‘நான் எப்படிவேண்டுமானாலும் இருப்பேன்;

ஆனால் என்னிடம் இந்த சமுதாயம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

என்று விரும்புகிறான்;


நான் பொய் சொல்லுவேன்;

ஆனால் மற்றவர்கள் என்னிடம் பொய் சொல்லக்கூடாது

– என்று பாடம் எடுக்கிறார்கள்;


நான் வாங்கிய கடனைத் திரும்பத் தர மாட்டேன்;

ஆனால் மற்றவர்கள் எனக்கு சரியாக தந்துவிட வேண்டும்;’

என்ற சுயநலப்போக்கு பொதுவாகிவிட்டது.


இந்த ஏகபோக சுயநலப்போக்கு இன்னும் எத்தனை காலங்களுக்கு நீடிக்கும்?யோசித்தாலே பயமாய் இருக்கிறது. இந்த சுயநலப்போக்கு மக்களைத் தாண்டி, இன்று அரசியல்-அரசாங்க இயக்கத்தின் ஆனிவேராகியுள்ளது அதனினும் அச்சுறுத்துகிறது. எதிர்வரும் காலங்களில், ஏதேனும் பெறும் புறட்சி ஏற்பட்டால் தான் இந்த நிலை மாற வாய்ப்பாகுமென கருதவைக்கிறது. எதிர்காலத்தில் வரப்போகும் புரட்சிக்காக காத்திருக்காமல், ஒவ்வொரு தனி மனிதனும், தனக்கு தானே உண்மையானவனாக இருந்தால், மெதுமெதுவாய் சமுதாயம் சீர்படுவது உறுதி.


நமக்கு நாமே மனநிறைவடைய வேண்டும்


இன்றைய தினம்,


நான் பொய் சொல்லவில்லை;

நான் யாரையும் ஏமாற்றவில்லை’

என்ற மன நிறைவோடு உறங்கச் சென்றால் – இதுவே

நமது அன்றாட வாழ்க்கையில் நெறியாக மாறினால் – இதையே

சமுதாயத்தில் பெரும்பாலானோர் கடைபிடித்தால்,


மக்களுக்கு தங்கள் சுற்றம்-சமுதாயத்தின் மீதான நம்பிக்கை படிப்படியாய் அதிகரிக்கும். நம் சமுதாயத்தின் மீதான நம்பிக்கை, அதிகரிக்க அதிகரிக்க, நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிரந்தரமாகிவிடும்.


ஆரோக்கியமான பொய்கள்


சிலசமயங்களில், மக்கள் மனம் குளிர, பொய்கள் தேவைப்படுகின்றன. உங்கள் மனைவியின் அழகை புகழ்ந்தால் தான் உங்கள் மனவாழ்க்கை மகிழ்வுரும். அந்த அழகுப் பொய்களெல்லாம் பொய்களல்ல – எல்லாம் கற்பனை ஊற்றுகள்.


உடலைக் குறைக்க விரதம் இருக்கிறோம். அந்த சமயத்தில் விருந்தினர் வீட்டிற்கு சென்றால், அங்கு சுவையான விருந்து தயாராக இருந்தால், சாப்பிடாமல் தப்பிக்க, வரும்போதே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன் என ஒரு பொய் சொல்லி ஆரோக்கியம் காக்க முற்படுகிறீர்கள். விரதம் இருக்கிறேனென்று உண்மையைச் சொன்னால், இன்றொருநாள் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நிர்பந்தம் வரும். அவர்கள் மனம் புண்படாமலிருக்க இந்த சின்னச்சின்ன பொய்கள் அவ்வப்போது வந்துபோகும்.


சில சமயங்களில் உறவுகளைப் பேன, அமைதியை காக்க, சமுதாயம் நலம்பெற, பொய் உரைத்தல் அவசியமாகலாம். அந்தப் பொய்களை, ‘வாய்மை’ என்றே வள்ளுவர் சொல்லுகிறார்.


பொய் உரைத்தல் தவறே


எதுவாயினும், எந்தத் தருணமாயினும், பொதுவாக பொய்கூறுதல் தவறுதான். ஆனால் காலச்சூழ்நிலைகளின் கட்டாயத்தால், காலங்காலங்காலமாய் சிலப் பொய்களைக் கூறிக் கொண்டேதான் இருக்கிறோம். நாம் உரைக்கும் பொய்கள், அடுத்தவரை காயப்படுத்தாமல், எவரையும் ஏமாற்றாமல் இருக்கும்வரை, பிரச்சனை ஏதுமில்லை. சிறியதொரு தீமை நேரிடினும், அதனால் ஏற்படும் பழிபாவங்களுக்கு நாமே பொருப்பென்பதை மறந்துவிடக்கூடாது.


மறவாதீர்!!


பொய்யுரைத்தல் தவறு;

காலத்தின் கட்டாயம்

வியாபாரத்தின் தேவை

உறவுகளில் ஒற்றுமை

குடும்பத்தில் அமைதி காக்க

பொய்யுரைக்க நேரலாம்

எனது தாழ்மையான வேண்டுகோள்

கூடுமானவரை - பொய்களை குறைத்துக் கொள்ளுங்கள்!!


எது உங்கள் தேர்வு!!


தவறுகளை மறைக்க ஆயிரம் பொய்கள் தேவைப்படும்;

சொல்லும் பொய்களை கோர்வையாக சொல்ல வேண்டும்;

சொன்ன பொய்களை மறக்காமல் இருக்க வேண்டும்;

எப்படி மாற்றிக் கேட்டாலும் உண்மையென்று சாதிக்க வேண்டும்;

இவ்வளவு கஷ்டப்பட்டு பொய் சொல்ல வேண்டுமா?

உண்மையென்றால் கையாள்வது மிக எளிது!

எதை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்?


- [ம.சு.கு 30-04-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page