குழந்தைகள் நடந்தே தீரும்
குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில் பெரியவர்கள் நடப்பதைப் போலவே அதுவும் நடப்பதற்கு ஆசைப்பட்டு எதோ ஒருவகையில் முயற்சிக்கும். ஆனால் அது முடியாமல் போகவே, அப்போதைக்கு தவழுவது சாத்தியப்படுவதால், நடக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு தவழ்ந்து செல்லும்.
சில நாட்கள் செல்ல, தவளுவது வெறுத்துப்போய், மீண்டும் நடப்பதற்கு முயற்சி செய்யும். இப்போது மாற்று வழி இல்லாததால் மூன்று சக்கர வண்டியை பிடித்தோ, சுவற்றை பிடித்தோ நடக்க முயற்சி செய்யும். இனி வேறு வழியில்லை எனும் போது, எத்தனை முறை விழுந்தாலும் அது விடாது தொடர்ந்து முயற்சித்து ஒரு நாள் நடந்தே தீரும். மாற்றுவழி இருக்கும் போது நடக்கும் முயற்சியைக் கைவிட்டு தவழ்ந்து விடுகிறது. பின்னர் வேறு வழியில்லை எனும் போது தொடர்ந்து முயற்சித்து நடக்கிறது.
என்றைக்கு குழந்தை இனி நடந்தே தீரவேண்டும் என்று விடாது முயற்சிக்க துவங்குகிறதோ, அன்றிலிருந்து மிக விரைவில் நடக்கத் தொடங்கி விடுகிறது. அதன் ஒவ்வொரு நிற்றல் போராட்டத்திலும், அதன் கால்கள் வலுவடைகின்றன. படிப்படியாக நிற்பதற்கும், நடப்பதற்கும் பழகிவிடுகிறது. தவழ்வது எளிதெனத் தெரிந்ததும் நடக்கும் முயற்சியைக் சிலகாலம் கைவிடும் குழந்தை, பின்னர் நடப்பது தான் ஒரே குறிக்கோள் என்று தொடர்ந்து போராடும் போது அது ஒருநாள் வென்றே தீருகிறது.
வீழ்வது எழுவதற்கே
விடாமல் முயற்சிக்கிறது. எத்தனை முறை விழுந்தாலும் தொடர்ந்து எழுந்து நிற்க முயற்சிக்கும்போது அதன் வெற்றி வாய்ப்புக்கள் மேலும் பிரகாசப்படுகிறது. மாற்றுவழி இருந்தபோது தனது முயற்சியைக் கைவிட்டு எளிதாக இருந்ததை செய்தது. இன்று வழியில்லை என்பதால் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடி வெல்கிறது.
ஆம்! விட்டு விலகினால் வெற்றியில்லை. விலகாமல் போராடினால்தான் வெற்றி.
முதல் முயற்சியில் தோல்வியா?
நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மாபெரும் வெற்றி பெற்றவர்கள் பற்றி எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. இலங்கை மட்டைப்பந்து வீரர் மாவன் அத்தப்பத்துவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. மூன்று முறை தன் நாட்டு தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஐந்து போட்டிகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆறாவது போட்டியில் வெறும் ஒரு ஓட்டம் எடுத்தார். தொடர்ந்து ஆறு ஆண்டுகால போராட்டத்திற்குப் பின், தன் முழு திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினார். சாதாரணமானவராக இருந்தால், முதல் முறை தேசிய அணியில் இருந்து விலக்கியவுடன் மட்டைப்பந்து ஆட்டத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மூன்று முறை தேர்வு செய்யப்பட்டு சர்வதேச களத்தில் தோற்றாலும், தொடர்ந்து உள்ளூர் விளையாட்டில் கவனம் செலுத்தி, அதிக ஓட்டங்கள் குவித்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வந்தார். இன்று இலங்கை மட்டைப்பந்து வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு விளையாட்டிலும் மிகுந்த போராட்டத்திற்குப் பின் வென்றவர்கள் ஏராளம். யாரும் முதல் முயற்சியிலேயே வென்றுவிடுவதில்லை. எல்லோருக்கும் சில தோல்விகள் அனுபவமாய் நின்று வழிநடத்தி வெற்றி தருகிறது.
மிதிவண்டியோட்ட எப்படி பழகினீர்கள்?
நாம் மிதிவண்டி ஓட்ட பழகுகிறோம். முதல் முறை கீழே விழுந்தவுடன், இதுக்கு நமக்கு வராது என்று விலகினால் என்றுமே அதைப் பழக இயலாது. எத்தனை முறை விழுந்தாலும் தொடர்ந்து முயற்சித்தால் சில தினங்களில் மிதிவண்டியில் கைதேர்ந்தவர் ஆகலாம். வாழ்க்கையும் அப்படித்தானே !!
முயற்சியும் முட்டாள்தனமும்
தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி பெறலாம் என்பது உலக நியதி. ஆனால் அந்த முயற்சி என்பது முட்டாள்தனமாக இருக்கக்கூடாது. நடக்காத காரியத்தின் பின்னால் அதிக காலம் ஓடுவது பயனற்றது. எது முயன்றால் முடியும், எது முடியாதது ? என்கின்ற தெளிவு வேண்டும்.
வானில் நான் பறப்பேன் என்று முயற்சிப்பது முட்டாள்தனமானது. ஆனால் அதற்கென ஒரு இயந்திரம் கண்டுபிடித்து பறப்பேன் என்று முயற்சிப்பது சாத்தியம். இயலாத காரியம் என்று தெரிந்தால் கூடியவரை விரைவில் வெளியேறி விடவேண்டும்.
எதை? எப்படி? எங்கு? எப்போது?
மனித ஆற்றலால் செய்யக்கூடிய செயல் என்றால், அதை எப்படி செய்வத?, யாரிடம் உதவி பெறுவது? எங்கு பயிற்சி பெறுவது? எப்போது செய்வது? என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்படுத்தி வெற்றி காணுங்கள். சில ஆரம்ப முயற்சிகள் தோற்றால், அதை பெரிதாக்கி வெளியேறி விடாதீர்கள். ஆரம்பகால தோல்விகள் உங்களின் வெற்றிக்கான அனுபவப் படிகள்.
மறவாதீர்
தோல்விகள் நிரந்தரமல்ல;
வெற்றியும் நிரந்தரமல்ல;
தோற்றவுடன் நிறுத்திவிடாதீர்கள்;
உங்கள் முயற்சி மறக்கப்படும்;
வென்றபின் நிறுத்தினால் வென்ற வரலாறு நீடிக்கும்;
வெற்றிச் சரித்திரம் வேண்டுமானால்
வெற்றி பெறும் வரை போராட வேண்டும்;
வெல்பவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம்
முதலில் நிலவில் கால் வைத்த மனிதனையும், முதலில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மனிதனையும்தான், உலகம் நினைவில் வைத்திருக்கிறது. அதற்கு முன்னர் ஆயிரம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை ஏற முயற்சித்து இறந்திருக்கிறார்கள். அவர்கள் யாருடைய பெயரும், யாருக்கும் நினைவில் இருப்பதில்லை. சிகரத்தைத் தொட்ட எட்மண்ட் ஹிலரியும், ஷெர்பா டென்சிங் மட்டுமே என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கிறார்கள்.
போராடுங்கள்!
வெற்றி பெறும் வரை போராடுங்கள்!!
வென்றால் மட்டுமே சரித்திரம் !!
வெற்றி என்பது சாத்தியமான ஒன்றுதான்
தொடர்ந்து போராடுபவர்களுக்கு!!
- [ம.சு.கு - 16 - 03- 2022]
Comments