ஒருவரின் கருத்து ஊர்கருத்தாகிவிடுமா?
எல்லோரும் என்ன செய்வார்கள் ? என்ன முடிவெடுப்பார்கள்?
எல்லோரும் எதைப்பற்றி பேசுவார்கள்?
எல்லோரும் எதை தேர்ந்தெடுப்பார்கள்?
இந்த கேள்விகளுக்கான பதில் உங்களிடம் கட்டாயம் இருக்கும். ஆனால் அது ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தான் இருக்குமே தவிர, பலநபர்களின் கருத்துக்களைக் கேட்டு அறிந்துகொண்டதாக இருக்காது. யாரோ ஓரிருவர் சொல்வதைக் கேட்டு உலகமே அப்படித்தான் சிந்திக்கிறதென்று நாமாக அனுமானித்துக்கொள்கிறோம்.
யாரேனும் நம்மிடம், அன்றைய அரசியல், திரைப்படம், குறிப்பிட்ட நபர் பற்றி கருத்து கேட்டால், நம்முடைய தரப்பு கருத்தை சொல்லும் போது இது தான் சரியானது என்றும், பெரும்பாலான மக்கள் இதைத்தான் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் உறுதிபட அனுமானித்து அழுத்தம் கொடுத்து சொல்கிறோம்.
நமக்கு சரியென்பது அடுத்தவருக்கு தவறாகலாம்
உண்மையில் நாம் சொல்லும் கருத்தை தான் பெரும்பாலானவர்கள் சொல்வார்களா / ஏற்றுக்கொள்வார்களா ? என்பது நிச்சயமில்லாத ஒன்று. நமக்கு சரி என்று படுவது, அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம். விஞ்ஞானிகள் தங்களின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று கொடுத்த பொருட்கள் சில, உலகம் தேவையில்லையென்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
நான் தான் அறிவாளி, என்னுடைய கருத்தை தான் உலகம் ஆமோதிக்கும், என்கின்ற மனப்பாங்கு பெரும்பாலும் எல்லோரிடத்திலும் பொதுவாக காணப்படுகிறது. இந்தத் தவறான அனுமானம், பல அரசியல் கட்சிகளையும், தனிமனிதர்களையும், நிறுவனங்களையும் வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
பொருட்களை சந்தைப்படுத்துதல்
வியாபார நிறுவனங்கள் ஒரு புதிய பொருளை சந்தையில் வெளியிடும் போது, அந்தப் பொருளை சந்தை ஏற்றுக்கொள்ளும் என்ற அனுமானத்தில் வெளியிடுகிறது. சில பொருட்கள், மிகுந்த வரவேற்பைப்பெறுகிறது. சில பொருட்களோ, கண்டுகொள்ளப்படாமலே போய்விடுகிறது. பல சமயங்களில் அந்த புதிய பொருள் குறித்து உபயோகிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள், நிறை-குறை குறித்த தகவல்களை பொருட்படுத்தாமல், தங்களின் அனுமானத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து சந்தைபடுத்த முயன்ற நிறுவனங்கள் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளது.
ஒரு பொருளின் உபயோகம், விலை குறித்த நிறுவனங்களின் அனுமானம், பொதுமக்களால் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ளப் படாமல் போகிறது. ஆனால் அதே பொருள் சில காலங்களுக்குப் பின், அதிக விலையில் வேறு நிறுவனங்களால் சந்தை படுத்தப்பட்டபோது பெரிய வெற்றி கண்டிருக்கிறது. ஏன் அந்தப் பொருளை சந்தை முதலில் ஏற்கவில்லை, பின்னர் அதிக விலையிலும் எதற்காக அதை ஏற்றுக்கொண்டது என்ற கேள்விக்கு விடை, வாடிக்கையாளரின் உளவியல் சார்ந்து பெரிய ஆராய்ச்சியாகி விடுகிறது.
நம்முடைய சிந்தனையை சந்தையும், சமுதாயம் ஏற்றுக் கொள்ளும், நம் பாதையை எல்லோரும் பின்பற்றுவார்கள் என்ற அனுமானம் பல நேரங்களில் தவறாக கூடும்.
‘ஏற்றுக்கொள்ளப்பட’ - முயற்சிக்க வேண்டும்
சமுதாயம், சந்தை குறித்த அனுமானங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நமக்கு சரி என்று படுவதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்து, அதைக்குறித்து எதையுமே செய்யாமல் இருந்துவிடக்கூடாது. நம் கருத்துக்களை எல்லோரும் ஏற்கும் வகையில் செய்யவேண்டுமாயின், அதைக் கட்டாயமாக யார் மீதும் திணிக்காமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பேசி, அதன் சாதக-பாதகங்களை விளக்கி, ஏற்றுக்கொள்ளும் வகையில் செய்ய வேண்டும். பலரிடம் கலந்தாலோசிக்கும் போது, நம் கருத்துக்களில் உள்ள நிறை-குறைகளை அறிந்து சரிசெய்து கொள்ளவும் வாய்ப்பாகிறது.
நடிப்பும் – அரசியலும்
சில வருடங்களாக அரசியல் துறையில் எண்ணற்ற பெரிய நடிகர்-நடிகைகள் வந்து சென்றுள்ளனர். அந்த நடிகர்களை திரையில் ஏற்றுக்கொண்ட மக்கள், அவர்களை அரசியலிலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அனுமானத்தில் அரசியல் பிரவேசம் மேற்கொண்டனர். சமீப காலங்களில், யாரும் எதிர்பார்த்த அளவு வெற்றி காண முடியவில்லை. தங்களைச் சுற்றியுள்ள ஒருசிலரின் கருத்துக்களை மட்டும் கேட்டு, அதையே ஊர் சொல்வதாக அனுமானித்து களத்திலிறங்கினால், பெரிய தோல்விகளை தாங்க வேண்டிவரும்.
விமர்சனங்களுக்கு வாய்ப்பளியுங்கள்
இந்த எல்லாத் தகவல்களிலிருந்தும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் யாதெனின்:
ஒவ்வொரு களமும் வேறுபட்டது, ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மக்கள், மற்றொன்றையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது;
மக்கள் தங்களின் காலச் சூழ்நிலை, சமய-சந்தர்ப்பங்களின் அடிப்படையிலேயே தங்களின் முடிவுகளை எடுப்பார்கள். அந்த முடிவுகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்களிலிருந்து சிலசமயம் முற்றிலுமாய் மாறுபட்டு இருக்கலாம்;
புதியவற்றை சந்தைப்படுத்தும் போது அதன் நிறை-குறைகள் பற்றிய மக்களின் கருத்துக்களை தொடர்ந்து அலசி, ஏற்ற மாற்றங்களை தொடர்ந்து செய்து வந்தால், எல்லா பொருட்களும் பயன் அடிப்படையில், காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்படும்;
நம்முடைய கருத்தும், அனுமானமும் தான் சரியானது என்ற பிடிவாதம் இருத்தல் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களை வரவேற்க வேண்டும்;
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் நம் புகழ்தான் பாடுவார்கள். அவர்களின் பாராட்டு வார்த்தைகளைக் கொண்டு ஊரே ஏற்றுக்கொண்டதாக அனுமானித்து விடவேண்டாம். வாய்ப்புகிடைத்தால், தெரியாத நபர்களிடம் கருத்து கேட்டு பாருங்கள்;
அனுமானத்தில் துவக்கலாம்
வாழ்க்கையை நகர்த்த, வியாபாரத்தில் வெற்றி பெற பல சமயங்களில் அனுமானங்களின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் துவக்க வேண்டிவரும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றுதான்.
எப்படித் துவங்குகிறோமோ, சமுதாயம் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமல், மாற்றுக் கருத்துக்களுக்கு செவிசாய்த்து, தேவையான மாற்றங்களை செய்துவந்தால், அன்றாட வாழ்விலும், வியாபாரத்திலும் பெரிய வெற்றிகளை ஈட்ட முடியும்.
நீங்கள் அறிவாளியாக இருக்கலாம்;
சுற்றியுள்ள சமுதாயம் அதேயளவு
அறிவுடன் செயல்படுமா? என்பது கேள்விக்குறியே;
ஒவ்வொருவரும் சுயநலத்துடனே
அவர்களின் முடிவுகளை எடுப்பார்கள் - என்ற
யதார்த்தத்தை புரிந்து கொண்டால்
மாற்றங்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படும்;
இங்கு
யாரை நம்பி யாரும் இல்லை;
யாருக்காகவும் யாரும் இல்லை;
அவரவர் அவரவர்களின் விருப்பம் போலே
இருந்து வருவதுதான் யதார்த்தம் - ஆதலால்
அனுமானங்கள் அளவோடு இருக்கட்டும்.
- [ம.சு.கு 13-07-2022]
Comments