top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : எதற்கும் காலக்கெடு தேவை

கடைசி நேர அவசரம்


பொதுவாக ஏதேனும் தேர்விற்கோ அல்லது அரசு சலுகைகளை பெறுவதற்கோ விண்ணப்பிக்க இந்தவாரம் கடைசி தேதி என்று சொன்னால், அந்த கடைசி 1-2 நாட்களில் எண்ணற்ற விண்ணப்பங்கள் கூவியும். நடைமுறையில் 50 சதவீதத்திற்கும் (>50%) மேலான விண்ணப்பங்கள் கடைசி இரண்டு நாட்களில் தான் வந்து குவிகின்றன. அறிவிப்புகள் ஒரு மாதத்திற்கு முன்னரே கொடுத்தாலும், பெரும்பாலான விண்ணப்பங்கள் கடைசி நிமிடத்தில் தான் வருகிறது. கடைசி நேரத்தில் சென்று இரயிலை, விமானத்தை தவறவிட்டவர்கள் போல், தேர்வுகளையும், சலுகைகளையும் தவறவிட்டவர்களும் உண்டு.


இது விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு மட்டும் என்றில்லை, ஏதேனம் விழா ஏற்பாடுகளாக இருந்தாலும், வீடுகட்டும் வேலையாக இருந்தாலும், அதற்கென ஒரு நாள் குறிக்கப்பட்டுவிட்டால், அந்த கடைசி 2 - 3 நாட்களில் தான் படு வேகமாக வேலைகள் நடந்து முடிகிறது. எத்தனை நாட்கள் முன்னரே சொன்னாலும், அந்தக் குறிப்பிட்ட நாள் நெருங்கும் போதுதான், ஒருவிதமான சுறுசுறுப்பு மக்களை தொற்றுகிறது. அதுவரை மெதுவாக செய்து கொண்டிருந்தவர்கள், நேரம் நெருங்கும்போது வேகம் எடுக்கின்றனர்.


இப்படி கடைசி நிமிடத்தில் அவசரமாக செய்வதால், பொருள்களின் தரமோ, சேவைகளின் தரமோ குறைந்து விடுகிறதா? என்று நானே அவ்வப்போது சோதித்துப் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில், முன்னர் மெதுவாக செய்ததை விட, வேகமாக செய்த பொருட்கள் மற்றும் செயல்களின் தரம் சற்று கூடுதலாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது..


வெறுமனே காலம் கடத்துதல்


இயல்பாகவே மனித மனம் சோம்பேறித்தனமானது. சிறு சிறு விடயங்களுக்கெல்லாம், சீக்கிரத்திலேயே சலிப்படைந்து விடக்கூடியது. வாய்ப்புக் கிடைத்தால் எளிதான சுகமான காரியங்களை மட்டுமே தேர்வு செய்து கொள்ளக் கூடியது. பத்து நாள் இருக்கிறது என்றால் உடனே நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு விடும். வெறுமனே காலம் கடத்துதல் என்கின்ற இந்த இயல்பான மனித செயல்தான் எல்லோரையும் செயல்பாடற்றவர்களாக்கி, சாமானியர்களாகவே சாகடித்துக் கொண்டிருக்கிறது.


இன்னும் ஒரு படி மேலே சென்று “ஒரு செயலைச் செய்” என்று மட்டும் சொல்லிவிட்டு, எப்பொழுது முடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றால், பல சமயங்களில் நம் ஊழியர்கள் அதை துவங்குவதே இல்லை.


காலக்கெடு நிர்ணயிக்கப்படாதவற்றிற்கு, அவசரமில்லை என்று அனுமானித்துக் கொண்டு, மற்ற வேலைகளிலேயே காலத்தை கடத்தி விடுகின்றனர். நேரமே கிடைத்தாலும், அதை மெதுவாக செய்யலாம், இப்போதைக்கு என்ன அவசரம், என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி, காலம் கடத்தி விடுகிறார்கள்.


எல்லைக்கோடு அவசியம்


எப்படி எந்த ஒரு போட்டிக்கும் ஒரு எல்லைக்கோடு கட்டாயம் தேவைப்படுகிறதோ, அதேபோல ஒவ்வொரு செயலுக்கும் முதலில் காலக்கெடு என்பது மிக அவசியம். காலக்கெடு இல்லாதவைகள், பல நேரங்களில் துவக்கப்படுவதே இல்லை. இது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர் வரை, எல்லோருக்கும் பொதுவான இயல்பு. உங்கள் வியாபாரத்தில், விளையாட்டில், இலட்சியப் பாதையில் முன் இருக்கும் ஒவ்வொரு செயலுக்கும், அதை முடிப்பதற்கான காலக்கெடுவை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.


எல்லா செயல்களுக்கும் காலக்கெடு நிர்ணயித்தால், எதை முன்னர் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்வதென்று முன்னிலைப்படுத்தி செய்து முடிக்க இயலும். இவ்வாறு காலக்கெடு நிர்ணயித்து செயல்படுவது, உங்களின் நீண்டகால இலட்சியம், குறுகிய கால இலக்குகள், செயல்பாடுகள் போன்றவற்றை எளிதாக வேறுபடுத்தி, உரிய கால நேரங்களை வரையறுத்து சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும்.


இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என்கிற ஒரு காலநிர்ணயம், சுயஉத்வேகத்தை அளித்து அதை செய்துமுடிக்க உறுதுணையாக இருக்கும். மேலும், காலக்கெடு நிர்ணயம், உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஒருமுகத் தன்மையுடன் செயல்பட வழிவகுக்கும். பல சமயங்களில் புதுமைகளை படைக்க உதவிபுரியும்.


பரிபூரணம் சாத்தியமில்லை


எந்த ஒரு செயலிலும், பரிபூரணத்தை (100%) எதிர்பார்ப்பது இயலாது. காலக்கெடு இருந்தால், பரிபூரணத்தை பற்றி அதிகம் கவலைப்படாமல், சரியானதை - போதுமானதை செய்து முன்னேறச் செய்யும். எதையும் அதற்குரிய காலக்கெடுவுக்குள் முடித்தால், அது அடுத்த செயலை சிறப்பாக செய்து முன்னேற தன்னம்பிக்கை அளிக்கும்.


காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள் எடுத்த செயல்களை முடிப்பது நம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், அந்தக் காலக்கெடு நிர்ணயமும், அதற்குட்பட்ட செயல்பாடுகளும், நமக்கு எந்தவிதத்திலும் எதிர்மறை விளைவுகளை விளைவிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதும் அவசியம்.


எங்கு தவறு நேரலாம்


எல்லாவற்றிற்கும், உரிய காலக்கெடு நிர்ணயித்து செயல்படுவது அவசியம் என்றாலும், கையில் உள்ள செயல்களுக்கு, மிகக் குறுகிய காலக்கெடு நிர்ணயித்து செயல்பட்டால்;


  • குடும்ப உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல் வேலையிலேயே இருந்தால், குடும்ப உறவுகளும், நட்புவட்டமும் அதிகம் பாதிக்கும்.

  • காலக்கெடுவை முன்னிறுத்தி, அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், ஊழியர்கள் வேலையை விட்டு சென்று விடுவார்கள்.

  • அதிக மன அழுத்தம் நம் உடலுக்குள், தேவையில்லாத நோய்களை உண்டாக்கிவிடும்.

மறவாதீர்!


காலச் சுவடுகளை கடந்து நம் பெயர் நிலைத்திருக்க

கற்பனைக்கெட்டாத காரியங்களை செய்து காட்டவேண்டும் !!


காலம் பொன் போன்றதுஎன்பர்

காலத்தை கடத்தும் சோம்பலைத் தவிர்த்து

காலக்கெடு நிர்ணயித்து

காரியங்களைச் செவ்வனே செய்து முடிக்க பழகுவோம்.


வெற்றி தொட்டுவிடும் தூரம்தான், அயராது உழைப்பவர்க்கு. உழைக்கத் துவங்கும் நீங்கள், செய்ய வேண்டிய காரியம் பெரியதோ, சிறியதோ, எதுவானாலும் நேரத்தை வீணடிக்காமல், உரிய கவனத்தோடு காலக்கெடு நிர்ணயித்து, காரியத்தில் கவனமாய் முடித்து வெற்றியை உறுதிப்படுத்துங்கள் !!


- [ம.சு.கு – 02-02-2022]Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page