“அவர் குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்”
“அவர் ஏதாவதொரு குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்”
என்ற பட்டங்களைப் பெற்றவரா நீங்கள்? குறைகளை அதிகமாக காணும் நபர்களை, அவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமும் என்றும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதில்லை.
குறையென்றால் விழித்துக்கொள்கிறோம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யார் எதைச் செய்தாலும், அதில் ஏதேனும் நிறைகுறைகள் இருக்கத்தான் செய்யும். நிறைகள் ஒருபுறம் இருந்தாலும், நம் கண்ணுக்கு குறைகள் தெரிந்துவிட்டால், உடனே அதை சுட்டிக்காட்ட நம் உள்ளம் துடிதுடிக்கும். இப்படி துடிப்பது எல்லோருக்கும் இயல்புதான். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில், யார் சமயோசிதமாக நடக்கிறாரோ, அவரே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.
குறைகளை கண்டவுடன் சுட்டிக் காட்டினால் என்னவாகும்:
முயற்சியை துவக்கியவர், ஆரம்பத்திலேயே தன்னம்பிக்கை இழக்கச்கூடும்;
அவரை முழுவதுமாக சொல்லவிடாமல் பாதியிலேயே இடைமறித்து குறைசொன்னால், அவர் சொல்லவருவதை முழுவதுமாய் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகும்;
உங்களை “குறைசொல்லி” என்று முத்திரைகுத்தி, உங்கள் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படாமலே போகக்கூடும்;
புதுமையான முயற்சிகளுக்குப் போதிய ஈடுபாடு இல்லாமல் போகும்;
சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாமல், விவாகரத்து வரை செல்லக்கூடும்;
சொல்லப்படும் குறையினால் பாதிப்பேதும் இல்லாமல் இருந்தாலும், அதை சுட்டிக் காட்டியதால் ஒரு குற்ற உணர்வு ஏற்படக்கூடும்;
குறை கூறியவர்கள் மூன்றாம் நபர் என்றால், பகைமை வளரவும் வாய்ப்பு அதிகம்;
இப்படி குறை கூறுவதால் அதிகம் தீமைகள் விளையும் என்பதால், குறைகளை சொல்லவே கூடாதா? என்று நீங்கள் கேட்கலாம்.
ஒருவேளை, யாருமே குறைகளை சுட்டிக்காட்டாமல் இருந்தால் என்னவாகும்:
ஒருவர் துவக்கிய செயல் தவறாக இருந்தாலும், யாரும் எதுவும் சொல்லாததால், அது சரியானதென்று நினைத்து, தவறானவற்றையே தொடர்ந்து செய்யக்கூடும்;
நிறை குறைகளை அறிந்து தவறான கருத்துக்களை திருத்திக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகும்;
யாரும், எதற்கும், பொறுப்பெடுத்துக் கொள்ளும் பொறுப்புணர்ச்சி குறைந்து போகும்;
குடும்பமும் சமுதாயமும் படிப்படியாய் சீர்குலைந்து போகும்;
என்னடா இது? குறை சொன்னாலும் தவறு! சொல்லாவிட்டாலும் தவறு! என்று சொல்கிறேன் என்று குழப்பமாக இருக்கிறதா?
சுட்டிக்காட்ட சிறந்தவழி
குறைகள் கட்டாயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய கால-நேரம், சமய-சந்தர்ப்பங்கள் தான் அதிமுக்கியம்.
பலரும் கூடியுள்ள சபையில் நிகழும் சிறு தவறுகளை எல்லோர் மத்தியிலும் பெரிதாய் சொல்லக்கூடாது. தனியாய் வாய்ப்பு கிடைக்கும்போது எப்படி சரியாய் செய்வதென்று சொல்லிக்கொடுக்கலாம்;
அதே சமயம், ஒன்றை தவறாகச் செய்ய யாராவது துவக்குவதை கண்டால், சற்று பக்குவமாய் உடனே சொல்லி திருத்தினால், பெரிய தவறுகள் தவிர்க்கப்படும்;
எவரிடமும் உரையாடும்போது, அவர்களிடம் கண்ட நிறைகளை முதலில் அதிகம் சொல்லி, குறைகளை அதிக அழுத்தம் கொடுக்காமல், கடைசியாக சொல்லி, இவற்றை சரி செய்தால் நீங்கள் இன்னும் சிறப்பாக வெளிப்படுவீர்கள் என்று ஊக்குவிக்க வேண்டும்.
நம்மை தவறாக எடுத்துக் கொண்டுள்ள நபர்களிடம், குறை கூறுவதை முற்றிலுமாக தள்ளிப்போடுவது நல்லது. அது அவர்கள் நம்பால் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை வளர்க்காமல் சாந்தப்படுத்த உதவும்.
குறைகளை காட்டிலும் மனித உறவுகள் முக்கியம். பலநேரங்களில், குறைகளை பொறுத்துக்கொள்ள பழக வேண்டும்.
குறைகள் இருக்கலாம் - நிறைகளை பார்;
சிக்கல்கள் வரலாம் - தீர்வுகளில் கவனம் செலுத்து;
தோல்விகள் வரலாம் - படிப்பினைகளை மறவாதே;
வெற்றி-தோல்வி, இன்பம்-துன்பம்,
எல்லாமே ஒரு நிலைதான் – நிரந்தரமன்று;
எல்லாமே கடந்து போகும்;
குறை சொல்வதற்கும் ஒரு அளவுண்டு
அலுவலகத்தில் உங்களுக்கு கீழே பணிபுரிய புதிய ஊழியரை பணியமர்த்துகிறீர்கள். புதிய பணியாளர்கள் உங்களைப்போலவே தீயாய் வேலை செய்யவேண்டும், ஒரே முறையில் சரியாய் செய்ய வேண்டும், என்று எதிர்பார்த்தால், பல சமயங்களில் பெருத்த ஏமாற்றம் ஏற்படும். அவ்வளவு சிறப்பானவராக இருந்தால் அவர் ஏன் உங்களிடம் வேலைக்கு வரவேண்டும், அவரே ஒரு நிறுவனத்தை துவக்கியிருப்பாரே!
எந்தவொரு ஊழியரும் சரியாக செய்யாதபோது, அவர்களின் தவறுகளை அவ்வப்போது பக்குவமாக சுட்டிக்காட்டி சரி செய்யலாம். ஆனால் தொடர்ந்து அவர்களிடம் இருக்கும் குறைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால், அந்த ஊழியர் சீக்கிரத்திலேயே வேலையை விட்டு சென்றுவிடுவார். யாரும் குறைசொல்பவர்களை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை.
மேலும், குறை சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று. எதிலுமே சில குறைகள் இருக்கும். அதை அனுசரித்துப் போகப் பழக வேண்டும். சின்னச்சின்ன குறைகளால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை என்கிற இடத்தில், அவற்றை தேவையின்றி சுட்டிக்காட்டி, ஏன் தேவையில்லாமல் ஒருவரை வருத்தபட வைக்க வேண்டும்.
குறைகாண்பது – மனோவியாதி ஆகிவிடக்கூடாது
சில சமயங்களில், குறைகளை பெரிதுபடுத்தினால். தேவையில்லாத மன உளைச்சலும், நிம்மதியிழப்பும் நமக்குத்தான் ஏற்படும். சில அடிக்குமாடி குடியிருப்பு சங்கக்கூட்டங்களில் சிலர், தொட்டதற்கெல்லாம் குறைகூறுவதை பார்த்திருக்கக்கூடும். அவர்கள் சொல்லும் குறை சரியென்றாலும், அவற்றைத் தீர்க்க எந்தவொரு முயற்சியையும் துவக்காமல், எப்போதும் அதை அடுத்தவரே செய்துதீர்க்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. குறைசொல்பவர்களை சங்கத்தின் பொருப்புக்களை ஏற்று வழிநடத்துங்கள் என்றால் உடனே தெரித்து ஓடிவிடுவார். பொறுப்பெடுக்க மாட்டார்கள்! ஆனால் அவர்களுக்கு எல்லாம் சரியாக நடக்கவேண்டும். இந்த குறைசொல்லிகளும் ஒருவகையான மனநலம் பாதிக்கப்பட்டவர்களே.
நடைமுறையில் எதையும் மாற்ற முடியாத இடங்களில், குறைகளை கண்டும் காணாமல் போக வேண்டியதுதான். மாற்றவேண்டும் என்று யோசிப்பதே, தேவையில்லாத மனக்கஷ்டத்தை கொடுக்கும்.
வெற்றிக்காக உழைப்பவன்
நிறை-குறைகளைப் பற்றி கவலைப்படாமல்
தன் திறமையிலும் உழைப்பிலும் கவனம்செலுத்துவான்;
குறைகளை மட்டும் பார்ப்பவன்
துவக்காமலே காலம் தாழ்த்திக்கொண்டிருப்பான்;
குறைகளைமட்டும் குத்திக்கொண்டிருந்தால் எப்படி முன்னேறுவது !!
அனுசரிப்பு அடிமைத்தனமாகிவிடக்கூடாது
குறைகளை அனுசரித்து வாழப்பழகுகிறோம். ஆனால் அந்த குணம், காலப்போக்கில் அடிமைத்தனத்துக்கு வழிவகுத்து விடக்கூடாது. ஒருமுறை தேசம் அடிமைப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் பட்ட துன்பமே போதும்.
ஆள்பவர் சிலரின் தவறான செயல்கள், அவ்வப்போது சுட்டிக் காட்டப்பட வேண்டும். ஒரு தனிநபரின் நலனைக் காட்டிலும், சமுதாய நலன் அதிமுக்கியம். அதேசமயம், தேசநலன் மட்டுமே முக்கியம் என்று தன் குடும்பத்தினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடக்கூடாது.
குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்;
குறைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்;
என்று? எங்கு? எப்போது? எப்படி? யாரால்?
என்பது அதிமுக்கியம்;
குறைகளை பெரிது படுத்தி உறவுகளை கெடுத்து விடாதீர்கள்;
உறவுகளும் முக்கியம்!!
குறைகளை ஓரளவு பொறுத்துக்கொள்ளுங்கள்;
பெரிய குறைகளை சிறிதாய் சொல்லுங்கள்;
சிறிய நிறைகளையும் பெரிதாய் சொல்லுங்கள்;
எல்லா நிறைகுறைகளையும் ஏற்று
சமுதாயத்தோடு வாழப் பழகுங்கள்;
- [ம.சு.கு 06-07-2022]

Comments