top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : நம்பிக்கை (எதி) பயம் [Confidence Vs Fear]

Updated: Nov 30, 2021

சாதாரணமாக நாம் மனத்தாலும், எண்ணத்தாலும் நமக்கு நாமே வலிமை உடையவர்களாக உணர்வது மனித இயல்பு. அதேசமயம், சில-பல தருணங்களில், வாழ்க்கையின் நிகழ்வுகளில் சிக்குண்டு மனம் தளர்வதும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.


 • சில இழப்புகள் நம்மை தளர்வடையச் செய்யலாம் !

 • சில ஏமாற்றங்கள் நம்மை தளர்வடையச் செய்யலாம் !

 • சில துரோகங்கள் நம்மை தளர்வடையச் செய்யலாம்!

 • சில தவறுகள் நம்மை தளர்வடையச் செய்யலாம்!


எதுவானாலும், தற்காலிகமான தளர்வுகள் மனித வாழ்க்கையில் இயல்பானவைகளே. ஆனால் இந்தத் தற்காலிக தளர்வில் சிக்குண்டு வாழ்க்கையின் மீது உள்ளூர ஒரு இனம்புரியாத பயத்தை உருவகித்துக்கொண்டு, எதிலும் எதற்கும் மிரட்சியடையும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.


எத்தனைதான் தன்னம்பிக்கை குறித்த நூல்களை படித்தாலும், வெற்றியாளர்களின் கதைகளை கேட்டாலும், ஆலோசனைகளை பெற்றாலும், அவர்களின் உள்ளூர பயம் விலகுவதில்லை. இப்படி சில வாழ்க்கையின் எதேச்சையான நிகழ்வுகளின் காரணமாக உருவாகும் பயம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நம்முள் வளர்ந்து, படிப்டியாக அசுர வடிவம் கொண்டு விடுகிறது. விளைவு - எதை செய்ய முற்பட்டாலும் பயம், பயம்...


 • இது நம்மால் முடியுமா ?

 • இதில் பிரச்சனை வந்தால் என்ன செய்வது?

 • இதை செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

 • இதில் தோற்றால் நமக்கு பெருத்த அவமானமாகிவிடுமோ?

 • இதைச் செய்தால் அவரை பகைத்துக் கொள்வோமோ?


இப்படி எதைச் செய்ய நினைத்தாலும், எண்ணற்ற கேள்விகள் மனதில் தோன்றி பயத்தை தொடர்ந்து அதிகரிக்கச்செய்கிறது. இந்த கேள்விகளெல்லாம் இப்படி தொடர்ந்து கொண்டே போனால், வாழ்வில் நிம்மதியும் இருக்காது! வெற்றியும் இருக்காது! [விபரீத தற்கொலைகள் கூட நிகழ்கிறது].


பயம் மனிதனை சிறுகச்சிறுக கொன்றுவிடும்.

தேவையற்ற பயம் என்பது ஒருவகை இயலாமை.

இயலாமை நம்மில் கோபத்தை வளர்க்கும்.

பயமும், இயலாமையும், கோபமும் - நம்மை தொடர்ந்த துயரத்திலேயே நிலைநிறுத்தும்.


இப்படி எதிர்மறையாகவே சொல்லிக் கொண்டு போனாள், இந்த கட்டுரையை படிப்பதற்கே நமக்கு பயம் வந்துவிடும். நேர்மறை சிந்தனைக்கு வருவோம் - வாழ்க்கையில் வெற்றிபெற, இந்த பயத்தை வெற்றி கொள்ள வேண்டும். அது எப்படி ?


பயம் என்பது நமது உடல் சார்ந்த குறைபாடாக இருந்தால், சில உடற்பயிற்சிகள் மூலமாக விலக்கியிருக்கலாம். ஆனால் அது முற்றிலும் மனம் சார்ந்த ஒன்று. உடலை எத்தனைக் கூறாக்கி பார்த்தாலும், இந்த “மனம்” என்பது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கக்கூட முடியவில்லை. இந்த மனத்தை ஏமாற்ற முடியாது. இப்படி மனவியல் சார்ந்த பயத்தை விலக்க முடியுமா? முடியுமானால், இந்த பயத்தை எப்படி விலக்கி வெற்றி கொள்வதென்று கேட்கிப்பீர்கள்.


பயத்தை வெற்றிகொண்டு, அது பெரும் தன்னம்பிக்கையாக நம் செயல்களில் மிளிரும் போது, நாம் செய்கின்ற செயல் உண்மையில் கடினமானதாகவே இருந்தாலும், அதை எப்பொழுது, எப்படி செய்யவேண்டும் என்று நமது புத்தி பல கோணங்களில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து வழிகளைத் தானாகவே நம்பிக்கையோடு தேடும்.


செய்யத் துணிந்தாள், கட்டாயம் வழி பிறக்கும். எதைச் செய்தாலும், அதை நன்கு ஆராய்ந்து செய்து வந்தால் கட்டாயம் வெற்றிக்கணியை சுவைக்க வாய்ப்புகிடைக்கும்.


என் அறிவிற்கு புலப்பட்ட மட்டும், பயமென்னும் கற்பனை எதிரியை வெற்றி கொள்வது சாத்தியமான ஒன்றுதான். அதற்கான சில மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால், கட்டாயம் படிப்படியாய் பயத்தை தவிர்த்துவிடலாம்.


என் அனுபவத்தில் அறிந்த வழிமுறைகளை இங்கே பட்டியலிடுகிறேன்.


அ. நம்மீதான நம்பிக்கை நம்முள் வளர வேண்டும்


வாழ்வின் அன்றாட பயனத்தில் நம்மால் நல்ல முடிவுகளை எடுத்து செயல்படுத்த முடியும் என்று நம்மீது நம்பிக்கை நமக்கு வர வேண்டும். இந்த நம்பிக்கையை நமக்கு நாமே வளர்க்க, எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்னர், அந்த செயலின் சாதக பாதகங்கயும், அந்த செயலி்ன் தேவைகள், முக்கியத்துவம் குறித்து, சற்று நிதானமாய் ஆய்வு செய்து பின் தீர்மானிக்க வேண்டும். எடுத்தோம் ! கவிழ்த்தோம் ! என்றில்லாமல், சிறிது சிந்தித்து செய்யும்போது, அதில் நமக்கே நம்பிக்கை வளரும். நமக்கு நம்பிக்கை வளரும்போது வெற்றிகளும் வரும். இப்படி தொடர்ந்து வரும் சிறு சிறு வெற்றிகள் நமக்கு மேலும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுக்கும்.


இப்படி ஆராய்ந்து செய்யும் செயல்களின் பாதையில், தவறுகள் இருக்கநேரிட்டால், அதை அறிந்தவுடன், அவற்றை திருத்திக்கொண்டு பயனத்தை தொடர வேண்டும். தவறுகள் நேர்வது மனித இயல்பு. அதை எப்போது எப்படி சரிசெய்வது என்பதுதான் முக்கியம்.


ஆ. உங்கள் சுயமரியாதையை கட்டமையுங்கள்


உங்களை நீங்கள் முதலில் விரும்பத் துவங்குங்கள். மற்றவர்கள் உங்களை தானாகவே விரும்பத்துவங்குவார்கள்.


என்றோ நீங்கள் செய்த தவறுகளுக்காக, எத்தனை நாட்களுக்குதான் குற்ற உணர்வில் வருத்தப்படுவீர்கள் ? நடந்தவைகள் நடந்தவைதான். எப்படி பிறர் குற்றங்களை மன்னிகிறீர்களோ, அவ்வாறே உங்கள் குற்றங்களையும் மன்னித்து முன்னேறும் வழிகளைத் தேடுங்கள்.


இ. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்


நீங்கள் எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களை தீர்மானிக்க விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற முடிவை நீங்களே எடுக்க வேண்டும். வெற்றி தோல்வி எதுவானாலும், உங்கள் முடிவுகளின் பயன்-விளைவுகளை நீங்களே சந்தித்து, உங்கள் அனுபவத்தை கூட்டுங்கள். பிறர் கட்டுப்பாட்டில் நீங்கள் இருந்தால், உங்களுக்கென்று எந்த அனுபவமும், எந்த ஆற்றலும், எந்த மாற்றமும் வரப்போவதில்லை .


ஈ. நிகழ்ந்தவைகள் (எ) நிகழப்போகின்றவைகள்


இதுவரை நிகழ்ந்தவைகளுக்கு எதிர்வினை ஆற்றுவது அன்றாட இயல்பு. பயத்தை வெற்றிகொள்ள, அந்த பயத்தின் உச்சம் என்ன என்பதை மனதளவில் யூகித்து, உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்த செயல்கள், எடுத்த முடிவுகளுக்கான எதிர்வினைகள்-எதிர்விளைவுகள் எப்படி எல்லாம் வரும் என்று முதலில் மனதளவில் யூகியுங்கள். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டால், எது வந்தாலும் அதை சந்தித்து சரி செய்யும் தன்னம்பிக்கை வளரும்.


உ. எதனால் ? எதில் ? பயம் என்று பட்டியலிடுங்கள்


 • முன்னர் சந்தித்த தோல்விகளால் பயமா ?

 • பிறர் கருத்துக்களினால் பயமா ?


அந்த பயம் என்னென்ன என்பதை நீங்கள் முதலில் பட்டியலிடுங்கள். பயம் / பிரச்சனை எதுவானாலும் முதலில அது என்ன என்று நமக்குள் தெளிவு ஏற்பட்டால், அதற்கு தீர்வுகளை நம்மால் கணிக்க முடியும். நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும் உங்களது பயத்தின் காரணிகளுக்கான எதிர்வினையை முன்னரே யூகித்து அடை எப்படி சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள்


முக்கியமாக, தோல்வி வந்து விடுமோ? என்று வருவதற்கு முன்னாடியே எண்ணி வருத்தம் கொள்ளாமல், ஏதேனும் காரணங்களாள் தோல்வி வரும் பட்சத்தில், அதை கடந்து செல்ல மனதளவில் முதலில் தயாராக இருங்கள். தோல்விகளைக் கண்டு களங்காதவர்கள் மட்டுமே வெற்றியடைய தகுதியானவர்கள்.


ஊ. தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்


நமக்கு தெரியாதவற்றைக் கற்றுக்கொண்டு நம்மால் முன்னேற முடியும் என்று நம்புங்கள். கிடைக்கும் வாய்ப்புகளில் நமக்குத் தேவையான செய்திகளையும், தகவல்களை புதிதாய் கற்றுக்கொண்டு முன்னர் செய்த தவறுகளை சரி செய்யுங்கள். நம் துறை குறித்த அறிவுடன், உலகின் தற்போதைய நிலை, காலத்தின் போக்கு, சமூக பொருளாதாரம், போன்றவற்றையும் தொடர்ந்து அறிந்து வாருங்கள்.


உலகில், எல்லாவகையான அனுபவங்களையும், நாம் மட்டுமே செய்து பெற வேண்டும் என்பதில்லை. பிறரது வெற்றி தோல்விகள், அவர்கள் செய்யத்தவரியவைள், என்று பிறருடைய அனுபவங்களிலிருந்தும் தொடர்ந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நாமே அனுபவப்பட்ட அறிவதென்பது சாத்தியமற்றது. பிறர் அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அறிவு நம் அறியாமை பயத்தைப் போக்கி, நம்மை சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும்.


அச்சம் தவிர்


இப்படி எண்ணற்ற வழிமுறைகளை நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். ஆயிரமாயிரம் யோசனைகளால் மட்டுமே பயனில்லை. அவற்றில் ஏதேனுன் ஒன்றை செயல்படுத்த முயற்சித்து முன்னேற்றம் அடைவதுதான் முக்கியம்.


உங்களுக்குள் இருக்கும் அச்சத்தை இனங்கண்டு, படிப்படியாய் அதை விலக்கி வாழ்கையில் முன்னேறிச் செல்லுங்கள். இந்த சமுதாயமும், வாழ்க்கை முறையும் உங்களுக்காக, தானாக மாறாது. உங்களுக்கு தேவையான மாற்றத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். உங்களது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கட்டாயம் நீங்கள் அடைய விரும்பும் உச்சத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கும்.


அச்சம் என்பது மடமையடா ! அஞ்சாமை திராவிடர் உடமையடா !

– கண்ணதாசன்


- [ம.சு.கு – 13-10-2021]Comments


Post: Blog2 Post
bottom of page