top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஒப்பீடு

நீங்கள் ஆயிரத்தில் ஒருவராக விரும்பினால்

மீதமுள்ள 999 நபர்களை பின்தொடராதீர்கள்


நினைவாற்றல்


நாம் எண்ணற்ற விடயங்கள், எண்கள், நபர்களின் பெயர்கள், என்று பல விடயங்களை ஞாபகம் வைத்திருக்கிறோம். இது எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி, ஒப்பீட்டின் அடிப்படையிலேயே ஞாபகம் வைக்க இயலுகிறதென்று அறிவியல் ‘நினைவாற்றல்’ குறித்துக் கூறுகிறது.


தன்நிலையறிதல்


அரசாங்கம் தன்மக்களை செல்வந்தர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் என்று பிரிப்பதற்கு, அவர்களின் அடிப்படை வருமானம் என்ற அளவுகோளைக் கொண்டு ஒப்பிட்டுப் பிரிக்கிறது.


கல்விச்சாலைகள், வேலை நிறுவனங்கள், வீடுகள், சமுதாய நிகழ்வுகள், என்று எங்கு சென்றாலும் எல்லோரும் எல்லாவற்றையும் இன்னொன்றுடன் தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையில் ஒப்பீடு செய்யாமல் நம்மால் சிலவற்றை புரிந்துகொள்ளவே முடியாது. நாம் வழக்கமாக உண்ணும் உணவுடன் ஒப்பிட்டு இன்றைய உணவில் உப்பு கூடுதலாக இருக்கிறதா? இல்லை குறைவாக உள்ளதா? என்று கூறுகிறோம். உண்மையில், எதுவுமே அதிகமுமில்லை, குறைவுமில்லை. நம்முடைய எதிர்பார்ப்பு என்ற அளவுகோளுடன் ஒப்பிட்டு, அதிகம் குறைவு என்று கூறுகிறோம்.


அதிக கார உணவு உண்பவர்கள், ஒரு குறிப்பிட்ட உணவில் காரம் குறைவு என்றும் சொல்லும்போது, மற்றவர்களுக்கு அதுவே அதிகம் காரமாய் தெரியலாம். ஏனெனில் அவரது உணவு ஒப்பீட்டு அனுபவம் வேறு. இப்படி ஒப்பீடு என்பது வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் ஒரு அங்கமாக ஆகிவிட்ட ஒரு சூழலில் என்றைக்கேனும் இந்த ஒப்பீட்டை பற்றியும் அதனால் ஏற்படும் வாழ்க்கைத்தாக்கம் குறித்தும் யோசித்தது உண்டா?


குழந்தைகளுடனான ஒப்பீடு


அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், பேச்சாளர்களின் சொற்களிலும், குழந்தை நல ஆலோசகர்களாலும், குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று வழக்கமாக சொல்ல கேட்டிருப்போம். வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் ஒப்பீடு என்பது ஒரு அங்கமாக இருக்கையில், எப்படி குழந்தைகளிடம் மட்டும் ஒப்பீட்டை தவிர்க்க முடியும் என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது.


ஒப்பீடுகள் - சரியா-தவறா?


இந்த குழந்தைகள் ஒப்பீட்டையும் தாண்டி, பல வீடுகளில் பக்கத்து வீட்டிலுள்ளவர்களின் செல்வம், வசதி, வாய்ப்புக்களுடன் தங்களது இல்லத்தை ஒப்பிட்டு எல்லாவற்றையும் குறை கூறியே வாழ்க்கையை தொலைக்கின்ற சிலரையும் காண்கிறோம். மறுபுறம், ஆன்மீகவாதிகளின் ‘இருப்பதை வைத்து சந்தோசமாய் வாழ கற்றுக் கொள்’ என்று போதனைகளையும் கேட்கிறோம்.


ஒருபுறம், ஒப்பீடு இல்லாமல் வாழ்க்கையில் எதையும் அளக்கவும், புரிந்து கொள்ளவும் இயலாது என்று இருக்க, மறுபுறம் ஒப்பிட்டு ஒப்பிட்டு வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்த இன்னொரு வர்க்கம். இப்படி இருபுறமும் மக்கள் இருக்க, ஒப்பீடு என்ற ஒரு விடயம் நமக்கு தேவைதானா? அது சரியா-தவறா? எந்த அளவுக்கு ஒப்பீடு செய்ய வேண்டும்? எதில் ஒப்பீட்டை தவிர்க்க வேண்டும்? என்ற தெளிவு நம் வாழ்க்கையை கட்டாயம் வளப்படுத்தும்.


முன்னேற்றத்தை அறிய


வாழ்க்கையின் பல நிகழ்வுகள், நம் முன்னேற்றங்களை, அறிந்து கொள்ள நம்முடைய முந்தைய நிலை, மற்றவர்களின் நிலை, என்ற விடயங்களுடன் ஒப்பீடு செய்தால் மட்டுமே, நமது வளர்ச்சியும் முன்னேற்றமும் நமக்குத் தெரியும். ஒரு அளவுகோல் கொண்டு அளந்து பார்க்காமல் நமது முன்னேற்றம் குறித்து யாரும் உறுதிபடக் கூறமுடியாது. வாழ்க்கையின் முன்னேற்றம், சமுதாயத்துடனான உறவுமேன்மை, போன்ற விடயங்களில் சமகால நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்தால் மட்டுமே நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோமா? இல்லையா? என்பது தெரியும். அளவுகோளுடன் ஒப்பீடு அவசியம் தான்! ஆனால் அந்த அளவுகோளுக்கும் ஒரு அளவு வேண்டுமல்லவா? ‘எந்த அளவிற்கு ஒப்பீடு செய்ய வேண்டுமென்பதற்கு’ ஒரு எல்லை வகுத்துக்கொண்டு, நல்ல விடயங்களுக்கு மட்டும் ஒப்பிட்டு முன்னேற முயற்சிக்க வேண்டும்.


வாழ்க்கையில் வெற்றி பெற நாம் அசாதாரணமானவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண விடயங்களை சாதாரண முறையில் செய்தாலே போதும். எதையும் அசாதாரணமாக செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாம் சாதாரணமாக செய்யும் செயலை, எவ்வளவு ஈடுபாட்டுடன், தவறாமல்-தவறு நேராமல் செய்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த செயலில் நிபுணத்துவம் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். தொடர்ந்த முயற்சியும்-பயிற்சியும் நம்மை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும். நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிடும் போது, அது அவர்களுக்கு சமமானவராக நம்மை ஆக்கிக் கொள்ளவதற்காக இருந்தால் அதில் சிறப்பேதும் இல்லை. அவரது அனுபவங்களையும், கற்றலையும் நாம் அறிந்துகொண்டு அவரைக் காட்டிலும் ஒருபடி மேலே செல்ல தேவையான ஒரு ஒப்பீடாக இருக்கவேண்டும். சில சமயங்களில், ஒப்பீடு செய்யும்போது நாம் வெகுவாக பின்தங்கி இருப்பது தெரியவரலாம். அது எதிர்மறையாக மனச்சோர்வை ஏற்படுத்தவிடாமல், புதிய உத்வேகத்தை தருவதற்கான ஒப்பீடாக இருக்கும் வண்ணம் நம் எண்ணங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.


ஊக்கப்படுத்த


ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் மேன்மையுடைய உயரிய நிலைக்கு வரவேண்டும் என்று அதீத ஆசையுண்டு. அதேசமயம் மேலே உச்சியில் உள்ள வரை மட்டும் பார்த்துவிட்டு, நாம் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது, அது நம்மால் முடியாது என்று தளர்ந்து விடாமல், நமக்கு அருகாமையில் முன்னும்-பின்னும் வருபவர்களுடன் சிறு ஒப்பீடு செய்து, நம்மை உற்சாகப்படுத்தி படிப்படியாய் முன்னேற வேண்டும்.


நம்மைப் பின்தொடர்பவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் முன்னேறுகிறோம் என்ற மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் முன்செல்ல வேண்டும். நமக்கு முன்னே செல்பவர்களுடன் ஒப்பிடும்போது, நமது வேகம் போதவில்லை, சற்று அதிகரிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், அதற்கான நிறைகுறைகளை ஆராய்ந்து, சரிசெய்து முன்னேறிச் செல்ல வேண்டும். இந்த ஒப்பீட்டை ஆக்கப்பூர்வமானதாகவும், நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளும் விதத்திலும் அமைத்துக்கொள்ள வேண்டும்.


போட்டியா? பொறாமையா?


நாடுகளும் தங்களை மற்றொரு நாட்டுடன் ஒப்பிட்டு தங்களின் முதன்மைதுவத்தை அறிய முற்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், என்று எல்லாமே தங்கள் நிலைமையை தங்கள் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு, தங்களை முதலாவது, இரண்டாவது என்று வரிசைப் படுத்திக் கொள்கின்றனர். இந்த ஒப்பீடு அவர்களுக்கு மேலும் போட்டி மனப்பான்மை அதிகரித்து வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கிறது.


பல சமயங்களில், இந்த ஒப்பீடு போட்டியை வளர்க்காமல், பொறாமையை வளர்த்து அவர்களின் அழிவிற்கே வழிவகுக்கிறது. இப்படி பொறாமை கொள்பவர்கள், தங்களை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பிறரையும் அழிக்க முற்படுவது மிகவும் வருத்தப்பட வைக்கிறது.


பொறாமையால் வரும் அழிவுகள்


ஒப்பீடுகள் போட்டியை அதிகரித்து நன்மை தரவேண்டும்;

பொறாமை வளர்த்தால் சமுதாயம் சீரழிவை சந்திக்கும்;’


இது வாழ்க்கையில் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் வரும் பொறாமைக் குணம், தன் சககுழந்தைகளுடனான நட்பை பாதித்து, பகைமையை வளர்த்து விடும். உறவுகள் மீது ஏற்படும் பொறாமை எண்ணம், நம்மை தவறாக பேசச்செய்து, தவறான செயல்களுக்கு தூண்டி நம் நற்பெயரை கெடுக்கும். நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் பொறாமைக் குணம், பல தீய செயல்களுக்கு வழிவகுக்கும். தேசங்களுக்கு இடையே ஏற்படும் பொறாமைக்குணம், தீவிரவாதம்-வகுப்புவாதம் என்கின்ற தவறான செயல்களை தூண்டச் செய்கிறது.


ஒப்பீடு வாழ்க்கையின் அத்தியாவசிய தேவை –ஆனால்

அது ஆக்கத்திற்கான ஒப்பீடாக இருக்கவேண்டுமே தவிர,

அழிவிற்கு வழிவகுப்பதாக இருக்கக் கூடாது.

அது போட்டி மனப்பான்மையை வளர்த்து

முன்னேற வழிவகுக்க வேண்டுமே தவிர

பொறாமையை வளர்த்து தீய செயல்களுக்கான

தூண்டுதலாக அமைந்து விடக்கூடாது.


ஒப்பீடு – அளவுகோள்


ஒப்பீடுகள் அவசியம்; அது நமது வளர்ச்சிக்கு ஒரு அளவுகோளாய் இருக்கும். ஒப்பீடு இல்லாமல் நம்நாமே அறிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த விஞ்ஞானம் சார்ந்த, பொருட்களின் மீதான பற்றுள்ள வாழ்க்கையை வழிநடத்துவதே இந்த ஒப்பீடுகள் தான். நாம் பற்றற்ற மெய்ஞ்ஞான வாழ்க்கை நிலையை அடையும்வரை, இந்த ஒப்பீடுகளை அளவாகவும், ஆக்கத்திற்கானதானவும் மட்டும் பயன்படுத்தி, தனிமனிதனும், அவனது குடும்பமும், அவனைச் சார்ந்த சமுதாயமும், சீரும்சிறப்புமாக வாழ்ந்திட வேண்டும்.


இதற்கான அளவுகோளை, ஒவ்வொருவரும் தங்களின் அனுபவத்திலேயே நிர்ணயிக்க வேண்டும். இதற்கென பொதுவான அளவுகோல் கிடையாது. அவரவரின் எண்ணங்கள், வெற்றி பெறவேண்டும் என்கிற உந்துதல், போன்ற பல்வேறு மனநிலைகளுக்கு ஏற்ப ஒப்பீட்டிற்கான அளவுகோளை வகுத்து, வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்;


- [ம.சு.கு - 21-05-2022]




Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page