top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : சுலபங்களைத் தாண்டி வெளி வாருங்கள்

Updated: Jun 18, 2022

எதற்கும் அசையாத கூட்டம்


“நமக்கெதுக்கு தேவையில்லாத வேலை?”


“வந்த வேலைய மட்டும் பார்த்துட்டு போகவேண்டியதுதானே”


இப்படிப்பட்ட வாசகங்களை அன்றாடம் நாம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களும், பிரச்சினைகளை நேரடியாக சந்திக்க தயாராக இல்லாதவர்களும் சொல்லும் வழக்கமான வசனங்கள் இவை.


“நான் முதலிலேயே சொன்னேன் அவர் கேட்கவில்லை இன்று மாட்டிக்கொண்டார்”


சுயமாக முடிவெடுத்து வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களின் வழக்கமான வாசகம். எந்த சவாலான செயலுக்கு முன்னர், தங்களை முதலில் தற்காத்துக்கொள்ள ஒரு எச்சரிக்கை மணி அடித்து விடுவார்கள் ‘இது சரிவருமென்று எனக்கு தோன்றவில்லை’ என்று. அவர்களின் பொத்தாம் பொதுவான இந்த பொறுப்பு துறப்பு வாசகங்கள், ஏதேனும் தவறுகள் ஏற்படும் போது / தோல்வி நேரும்போது, நான் அன்றைக்கே சொன்னேன் அல்லவா, என்று காரணம் கூறி அவற்றில் இருந்து தப்பிப்பதற்காகத்தானே தவிர, எந்தவொரு பெரிய ஆலோசனை வழங்கும் நோக்கமேதும் அதில் இருப்பதில்லை.


இப்படி மாற்றங்களையும், சவால்களையும் தவிர்க்கும் கூட்டம் ஒருபுறம். இந்த சவால்களில் தவறு/தோல்வி நேரும்போது அடுத்தவரை கைகாட்டிவிட்டு தப்பிக்க நினைக்கும் கூட்டமொருபுறம்.


இப்படி இயல்பான வாழ்க்கையில் இருந்து ஒரு படி கூட அதிகம் எடுத்து வைக்காதவர்கள், நமக்கெதற்கு என்று எதிலும் விலகிச் சென்று விடும் நபர்களைத்தானோ பாரதி ‘வேடிக்கை மனிதர்கள்’ என்றாரோ?


நம் ஆற்றல்தான் இயக்கமாகிறது


கண் விழிப்பது முதல் கண்மூடும் வரை எல்லாமே ஒரு வகையான சோதனைதான். மனிதன் தன்னுடைய ஆற்றலை பயன்படுத்தினால் தான், அவனுடைய எல்லா செயல்கள் நடக்கிறது. அவனுடைய ஆற்றல்தான் அவனுடைய இயக்கத்தின் அடித்தளமாக இருக்கிறது. சோம்பலாய் இருந்தால் படுக்கையில் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.


தனது ஆற்றலை கண் திறக்க, படுக்கையை விட்டு எழ, பல் துலக்க, குளிக்க, சாப்பிட, என்று சோம்பலை கடந்து செய்தால் தான், அவனால் இயங்க முடியும். இப்படி அன்றாட காலைக்கடன்கள் முதல் எல்லாமே ஆற்றலின் இயக்கமாக இருக்கும் போது, நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பலசெயல்கள் செய்தே ஆகவேண்டிய கட்டாயசெயல்களாக இருக்கின்றபோது, அவை நமக்குப் பழகிப்போய் விடுகிறது. அவற்றை தானியங்கியாக பலசமயங்களில் செய்கிறோம். சில சமயங்களில் சற்று தாமதமாகக்கூட செய்கிறோம். ஆனால் காலைக்கடன்களை தவிர்ப்பதுமில்லை, தவிர்க்கமுடிவதுமில்லை.


புதிதாய் என்ன செய்கிறோம்


இப்படி அன்றாட கடமைகளை நம்முடைய ஆற்றலின் துணை கொண்டு செய்யும் நாம், இந்த இயல்பாகிவிட்ட அன்றாட கடமைகளை கடந்து புதிதாய் என்ன செய்கின்றோம்


  • நமக்கு வரும் புதிய சவால்களை சந்திக்கிறோமா?

  • புதியவைகளை அறிந்துகொள்ள புதிய முயற்சிகளை மேற்கொள்கிறோமா?

  • நம்மை சார்ந்தவர்களும், சமுதாயம் சிறப்பாக இருக்க அவர்களுக்கு உதவி புரிகிறோமா?


நம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் 24 மணி நேரத்தில், உணவு உறக்கம் என்ற அன்றாட செயல்களை தவிர்த்து, மீதமுள்ள நேரம் என்று பார்த்தால் 10-12 மணி நேரம் தான். இந்த நேரத்தை, எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோம் என்பது நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால். வழக்கம்போல வேலைக்கு சென்றோம், செய்தோம், வந்தோம் என்ற சுலபமான வழக்கத்தை மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தால், வேடிக்கை மனிதராய் சாகவேண்டியதுதான். இப்படிப்பட்ட சாதாரணவாசிகளின் மரணத்தை மறுநாளே அவர்களின் குடும்பமே மறக்கத் தொடங்கி விடும். வாழ்க்கையில் நீங்கள் இயங்கித்தான் ஆகவேண்டும். வேலைகளை செய்தே தீரவேண்டும் எனும்போது, ஏன் சவால்களை மட்டும் தவிர்த்து விடுகிறீர்கள்? அந்தச் சவால்களும் ஒருவகையான செயல்கள் தானே.


அந்தச் சவால்களை சந்தித்தால், ஒன்று வெற்றிகரமாக அதைமுடிப்போம். அல்லது தோல்விநேரலாம். வென்றால் சரித்திரம். ஒருவேளை தவறவிட்டால், அனுபவமாகமாறி அடுத்த வெற்றிக்கு, கற்ற பாடங்கள் உங்களுக்குத்தானே உதவுகிறது. எதற்காக சவால்களை தவிற்கிறீர்கள்?


சாதனைகள் சிறிதாகவும் இருக்கலாம்


உங்களை உலகத்தோடு போட்டிபோட்டு போராடி சாதிக்க விரட்டுவது என்நோக்கமல்ல அதேசமயம் வெந்ததைத் தின்று விதி வழி செல்ல வேண்டாம் என்று உங்களுக்கு புரியவைக்கத்தான் இந்த முயற்சி. நீங்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 10 நொடிகளுக்கு கீழே ஓடும் ‘உசைன் போல்ட்’ உடன் போட்டியிட்டு வெற்றிபெற சொல்லவில்லை. குறைந்தபட்சம் அன்றாடம் உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்கிறேன். காலையில் தாமதமாக எழுவது, தவறான உணவுமுறை, உடற்பயிற்சியின்மையின் காரணமாக உடல்பருமன், நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்கள் எண்ணற்றவை சமுதாயத்தில் பரவியிருப்பது யாவும் உங்களின் சோம்பேறித்தனத்தினால் தானே!


வழியில்லாமலா போய்விடும்


  • சோம்பலெனும் வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள்

  • தெரிந்ததை மட்டுமே செய்வேன் என்று சுலபச் சூழலில் இருந்து வெளிவாருங்கள்

  • எதிர்மறை எண்ணங்களை திணிக்கும் நபர்களிடம் இருந்து விலகி வாருங்கள்.

எந்தவொரு சிக்கலான பிரச்சனைக்கும்,


வழி இல்லை’ என்பதற்கு பதிலாய்

வழி இல்லாமலா போய்விடும் என்று

நம்பிக்கையோடு தேடுங்கள்;

தேடுபவர்களுக்கு தேவையானது

சீக்கிரத்தில் தெரிந்தே தீரும்;


ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள, ஒன்று அதைத் தெரிந்த நபரிடம் விளக்கமாக நாமே சென்று கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும், அல்லது அதுகுறித்த நூல்களை முழுவதுமாக வாசித்து அறிய வேண்டும். இரண்டையும் செய்ய சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு, சும்மா இருந்தால், அறிவு எப்படி வளரும்


நாம்தானே முயற்சிக்க வேண்டும்


இன்றைய போட்டி நிறைந்த உலகில் வெற்றி பெற, அந்த வெற்றியை நோக்கி நாம்தான் ஓட வேண்டும். இருக்கின்ற போட்டிகளுக்கிடையே, தானாக நமக்கு வெற்றிகிடைக்குமென்று அதிர்ஷ்டத்தை நம்பியிருப்பதில் பயனேதுமில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் போட்டிகள் அதிரித்துள்ளதால், பொருட்களை விற்க வாடிக்கையாளர்களை தேடி நாம் செல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது.


சவால்களை சந்தித்தே ஆகவேண்டும்


சின்னச் சின்ன சவால்களை சந்திப்பதை தவிர்த்து கொண்டே வந்தால், எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எடுத்தவுடன் ராக்கெட்டை இயக்கச் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் மிதிவண்டியோ, தானியங்கி இருசக்கரவாகனங்களையோ ஓட்டிப் பழக முயற்சிக்க வேண்டும் அல்லவா? ஆரம்பத்தில் கீழே விழவாய்ப்புண்டு. அதற்கு பயந்து, முயற்சி செய்யாவிட்டால் எப்படி கற்பது?


தோல்விக்கு பயந்தால் படைப்பதெப்படி


புதியவற்றை கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான சோதனை முயற்சிகளை செய்யத்தான் வேண்டும். பல முயற்சிகளில் தோல்விகள் தொடர்ந்து வரலாம். ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு அனுபவப் பாடத்தை கொடுக்கும். ஒவ்வொரு தோல்வியும் எதை செய்யக்கூடாது என்று கற்றுக்கொடுக்கும். தோல்விக்கு பயந்து, பிறர் என்ன நினைப்பார்கள், என்று எண்ணி ஒருவர் முயற்சிகளை கைவிட்டால், புதியவைகளை எப்படி உருவாக்குவது.


வாழ்க்கையை எளிமையாக்க ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மனிதனின் தேவைகள்தான் புதியவற்றைக் கண்டுபிடிக்க அடிகோளிடுகிறது. இந்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பயன்படுத்தி, வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை வளர்ப்பது நியாயமா? புதிய கண்டுபிடிப்புகள், நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய சாதாரண / இயல்பான செயல்களை எளிதாக்கத்தானே தவிர, உங்களை சோம்பேறியாக்குவதற்கு அல்ல. இந்த இயல்பான செயல்களை தானியங்கியாக்குவதன் மூலம், உங்களின் பொன்னான நேரத்தை இன்னும் புதிய ஆக்கப்பூர்வமான செயல்களில் பயன்படுத்த வழிகிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


சந்நியாச நிலைஒருவேளை இருப்பதைக் கொண்டு அளவோடும், மனநிறைவுடனும் வாழ வேண்டுமென்ற துறவு நிலை வாசகங்களை சொல்பவராக இருந்தால், அங்கும் நீங்கள் சோம்பேரியாவது சரியன்று. உங்களின் பொருட்தேவைகளை குறைத்தலும், அதன் அடுத்த நிலையான ஆன்ம அறிவு, ஆன்மீகத்தேடல் குறித்து நீங்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமல்லவா.

நீங்கள் எந்த சித்தாந்தத்தை கடை பிடிப்பவராக இருந்தாலும், எந்தக் கொள்கையை கொண்டவராக இருந்தாலும், தொடர்ந்து இயங்கத்தின் மூலமாக புதிய முயற்சிகளை மேற்கொள்வது கட்டாயம். சிலசமயம், உடல் நலமில்லாமல் ஓய்வெடுக்கும்போது கூட, மருத்துவர் சின்னச்சின்ன உடற்பயிற்சிகளை செய்ய கட்டளையிடுகிறார். அப்போதுதானே உடல் நலம் தேறும். ஆம்! எந்தத் தருணத்திலும் சோம்பேறித்தனம் பதிலாகாது.


செய்ததையே திரும்பத்திரும்ப செய்து

நூறாண்டு கழித்தென்ன பயன்;

நாளொறு புதுமை

கனமொரு அனுபவமென்றால்

வாழும் ஆண்டு குறைந்தாலும்

வாழ்வை வாழ்ந்த நிறைவு கிடைக்கும்;காலங்காலமாய் புதிய பாதையில்

பயனித்தவர்களால் மட்டுமே

சாதனைகளையும் சரித்திரங்களையும்

நிகழ்த்தி நிலைத்திருக்க முடிந்திருக்கிறது!

செய்ததையே திரும்பச் செய்யும் சாதாரணமானவர்கள்

வந்துசென்ற தடயமே இருப்பதில்லை!- ம.சு.கு 18.06.2022Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page