top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தெளிவான சிந்தனை & செயல்பாடு

முட்டாள் தனமான செயலா?


எண்ணற்ற மனிதர்களின் அன்றாட செயல்களை, நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவற்றில் பல முட்டாள்தனமான செயல்களை கண்டு உள்ளுக்குள் சிரித்தும் இருப்பீர்கள். ஏன் இப்படி முட்டாள்தனமாக செய்கிறார்கள்? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்கும். இந்த செயலை இப்படி செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று உங்களுக்குள் யோசனைகள் தோன்றியிருக்கும்.


உங்களின் சிந்தனை ஒருபுறம் இவ்வாரு இருக்க, மறுபுறம் அதை செய்தவர் எந்த மனநிலையில் அதைச் செய்தார் என்பது நமக்கு தெரியாது. அந்தக் செயலால் அவருக்கு பலன் கிடைத்ததா? இழப்பு ஏற்பட்டதா? என்பதும் நமக்குப் பெரும்பாலும் தெரியாது.


இத்தருணத்தில் ஒரு பொதுவான கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

  • எவரேனும், தான் முட்டாள்தனமான செயலை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டு செய்வாரா?

  • இதில் எனக்கு நஷ்டம் ஏற்படட்டும் என்று விரும்பி செய்வாரா?

இந்த கேள்விகளுக்கு, எல்லோருடைய பொதுவான பதில் "இல்லை" என்பதுதான்.


சூழ்நிலைகளும் - செயலும்


எல்லோரும் தாங்கள் சாமர்த்தியமான செயல்களைச் செய்வதாகவே எண்ணிக்கொண்டு பல செயல்களை செய்கிறார்கள். அவர்கள் அப்போதிருந்த மனநிலையிலும், எண்ணவோட்டத்திலும் அவர்கள் செய்த செயல், அப்போதைக்கு சிந்தித்து சாதுரியமாக செய்த செயலாக அவர்களுக்குத் தோன்றும். அந்த செயல் முடிந்த பின்னர் அதன் வெற்றி தோல்விகளில் இருந்துதான், தங்களது செயலின் பலாபலன்களை தெரிந்து கொள்கிறார்கள்.


  • தோல்விகள் நேரும் பட்சத்தில் காரணங்களை அலசி ஆராய்ந்து சரி செய்பவர்கள், அடுத்தமுறை வெற்றி பெறுகிறார்கள்.

  • தோல்விக்கான வெளிப்புற காரணிகளைத் தேடி பிறர் மீது குறைகளை கூறுபவர்கள் அடுத்த முறையும் தோற்பதற்கு தயாராகிறார்கள்.

நம் எல்லோருக்கும் எல்லா செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. சில சமயங்களில் வெற்றி கிட்டாவிட்டாலும் நஷ்டம் ஏதும் இல்லாமல் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்துவிடுகிறது. இப்படி எப்போதும் வெற்றியை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் மனம், அந்த வெற்றியை எப்படி உறுதி செய்வதென்ற பாதையில் மட்டும் ஏன் பல தவறுகளை செய்து விடுகிறது?


எங்கே தவற விடுகிறார்கள்?


நடைமுறையில், முதல் முறையிலேயே வெற்றிகொள்வது எல்லோர்க்கும் எளிதன்று. அவ்வப்போது தவறுகள் ஏற்படுவது மனித இயல்பு. ஆனால் அதே தவறு திரும்ப நிகழாமல் பார்த்துக்கொள்வதில்தான் மனிதனின் அறிவும், சிந்தனையும் முக்கிய பங்காற்றுகின்றன.


நாம் எப்போதும் சரியாக சிந்தித்து செயல்படுவதாக நமக்கு நாமே எண்ணிக்கொண்டு,


தவறுகளை சரியாக செய்துவிடுகிறோம் - சிலசமயங்களில்

தவறுகளைக்கூட தவறாக செய்கிறோம்".


எங்கே, எதனால், எப்படி, கோட்டை விடுகிறோம்?


  • செயலின் பலாபலன்களைப் பற்றி சிந்திக்காமல் அவசரத்தில் செயல்படுவதால்

  • அனுபவசாலிகளின் ஆலோசனைகளை உதாசினப்படுத்தி செயல்படுவதால்

  • முன்னர் தோற்ற செயல்களிலிருந்து பாடங்களைக் கற்க மறுப்பதால்

  • எனக்கு எல்லாம் தெரியும் எனும் அகந்தையினால்

  • சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாததால்


என்ன செய்ய வேண்டும்?


எல்லா செயல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையுள்ளவர்கள்,

  • முதலில் தான் என்ன செய்யப்போகிறோம்?

  • எதற்காக செய்ய வேண்டும்?

  • இது நமது குறிக்கோள், இலட்சியத்திற்கு உகந்ததா?

என்பதை அலசிப் பார்க்க வேண்டும். செய்வதென்று முடிவு செய்தபின்,

  • எங்கு?

  • என்று?

  • எப்படி?

  • எதைக்கொண்டு?

  • யாரை கொண்டு?

செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டும். திட்டமிட்ட செயல்பாடு ஒருபுறமிருக்க, மறுபுறம் செயல்கள் தவறாக போகும் பட்சத்தில், மாற்று பாதைகளையும் கூடவே யோசித்து வைக்கவேண்டும். எவ்வளவுதான் முன்னரே திட்டமிட்டிருந்தாலும், ஒவ்வொரு செயல்பாட்டின்போதும்,

  • செயல்களின் ஒவ்வொரு பகுதியையும் எப்படி மேம்படுத்துவது?

  • செய்த வரையிலும் சரியா? தவறா?

  • செய்தவைகளையும், செய்யப்போகின்றவைகளையும் எந்த வகையில் இன்னும் மேம்படுத்தலாம்?

என்று தொடர்ந்து சுய ஆய்வு செய்து கொண்டே இருக்க வேண்டும்.


குழுவாக செயல்படுதல்


எடுத்த செயலின் முக்கியத்துவத்தையும்-கடினத்தையும் பொருத்து, யாரை துணைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்து, எல்லா நிறை-குறைகளையும் சமன்செய்யும் வகையில் குழுவை ஒன்றுசேர்க்க வேண்டும். ஏனெனில் சிலவற்றை குழுக்களாக செய்வது மட்டுமே சாத்தியம். நல்ல குழுவை அமைத்து வழிநடத்துதல் தலைவனின் தலையாய கடமை.


எல்லோரையும் அரவணைப்பது என்பது அடுத்த பெரிய வேலை. நம்மை சுற்றியுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியங்களும் தேவைகளும் இருக்கும். ஒரு நல்ல தலைவன் எல்லோருடைய தேவைகளையும் புரிந்துகொண்டு சமநிலையோடு வழிநடத்திச் செல்ல வேண்டும். அவ்வப்போது ஏற்படும் முரண்பாடுகள் & தடைகளை கண்டு அஞ்சாமல் எதிர்நின்று சமாளிக்க வேண்டும்.


தொடர்ந்து சிந்தித்து சரிசெய்தல்


ஒரு செயலைப் பற்றிய யோசனையில் துவங்கி, அது முடிக்கப்பட்டு, அதன் கருத்துக்களும் மதிப்பீடுகளும் வரும் வரையிலும் தொடர்ந்து அவற்றை தன் சிந்தையில் அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும்.


நேற்று எடுத்த முடிவு இன்னும் சரியானதாகவே இருக்கும் என்பது உறுதியில்லை. காலச்சூழ்நிலைகள் சிலவற்றை தேவையற்றதாக்கி விடும்.

{உதா.-. கொரோனா என்னும் பெருந்தொற்று வந்தது. உலகம் ஊரடங்கில் அடங்கிப்போனது. இன்று நேரடித் தொடர்பைக் காட்டிலும் வலைத்தள சந்திப்புக்கள் அதிகரித்து, அந்தத் தொடர்புகளெல்லாம் உடனுக்கடன் என எளிமையாகிவிட்டன. பயனங்கள் குறைந்ததால் பல வானூர்தி நிறுவனங்கள் நசிந்தேவிட்டன. காலவோட்டத்தில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை கொரோனாபெருந்தொற்று நமக்கு உணர்த்திவிட்டது.}


உள்ளுணர்வு & எச்சரிக்கைமணி


எந்தச் செயலையும் முடிவெடுப்பதற்கு முன்னர், உங்களின் சிந்தனையில் (ஆழ்மனதில்) ஒருமுறையேனும் ஓடவிட்டு பின்பு தீர்மானியுங்கள். பலசமயங்களில் உங்களின் உள்ளுணர்வு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், எச்சரிக்கையாளனாகவும் செயல்படும்.

மறவாதீர்!!


உங்கள் செயல்கள் இனிதே நிகழ்வதற்க்கும்

உங்கள் லட்சியங்களை முழுமையாக அடைவதற்கும்

உங்களின் தெளிவான சிந்தனைதான் - முதலாவது உற்ற துணைவன்;


உங்களின் நண்பரானாலும், எதிரியானாலும்

அவர்களின் ஒவ்வொரு கருத்துகளிலும், யோசனைகளிலும்

அவரவர்களின் சூழ்நிலைகளும் சுயநலமும் கலந்திருக்கும்;


உங்கள் நலனுக்கும் - உங்கள் வெற்றிக்கும்

உங்களின் தெளிவான சிந்தனையை மட்டுமே - கைக்கொள்ளுங்கள்!!

மற்றவர்களின் யோசனைகள் யாவும் வழிகாட்டுதலேயன்றி - முடிவுகள் அல்ல!!


மறவாதீர்!

காலச்சூழ்நிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்;

உங்களின் எல்லா முடிவுகளையும்

தொடர்ந்து மறு ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டே இருங்கள்;


- [ம.சு.கு – 19-01-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Commentaires


Post: Blog2 Post
bottom of page