top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : கைகள் அழுக்காகலாம் ஆனால் கறைபடியக்கூடாது


“கறை படியாத கைகளுக்கு சொந்தமானவர்கள் யார் யாரை உங்களுக்கு தெரியுமென்று?”

இன்னொரு நிமிடம்

“ஊரை ஏய்த்து, ஏமாற்றி சொத்து சேர்த்தவர்கள் யார் யாரென்று?”

இந்த இரு பட்டியல்களில், உங்கள் பெயர் எந்தப் பட்டியலில் இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள்?


கேள்வி எல்லாம் சரிதான். ஆனால் இன்றைய கலிகாலத்தில் நேர்மையாக இருந்தால் வாழ முடிவதில்லையே, என நீங்கள் உடனே கேட்கலாம்!


நம்பியவரை ஏமாற்றலாமா?


உங்களை ஒருவன் ஏமாற்றினான் என்பதற்காக, நீங்கள் உங்களை நம்பிய மற்றொருவரை ஏமாற்றுவது சரியா? யுகங்கள் மாறினாலும், அநியாயங்களும், அசத்தியமும் நம்மைச்சுற்றி தொடர்ந்து சோதித்துக் கொண்டே தான் இருக்கும். சில சமயங்களில் தாங்க முடியாத வலியும் வேதனையும் அவை தரலாம். ஆனால் அந்த இன்னல்களுக்கு பயந்து, அசத்தியத்திற்கு அடி பணிந்துவிட்டால் ஜென்மம் கடைத்தேறுவது எப்படி?


தர்மத்தை நிலைநிறுத்த, எப்போதும் அந்த பரந்தாமனே அவதாரம் எடுத்து வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தாலெப்படி. எல்லா இறை அவதாரங்களும், ஒரு வகையில் சாதாரண மனிதப் பிறப்பு தானே. அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிறப்பாக உங்களின் பிறப்பு ஏன் இருக்கக்கூடாது?


மாற்றத்திற்கு ஆசைப்படுகிறோம்


நம் அன்றாட வாழ்க்கையில், மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும் என்று நம்மனைவருக்கும் பேராசையுண்டு. ஒருபுறம் சமுதாயத்தில் எல்லாம் சிறந்த முறையில் இயங்கவேண்டும், சட்டம் முறையாக நிலைநாட்டப்படவேண்டும், போக்குவரத்து விதிகள் மதிக்கப்படவேண்டும், திருட்டும்-ஏமாற்றுதலும் முற்றிலுமாய் ஒழியவேண்டும் என்று விரும்புகிறோம்.


மறுபுறம்

  • சாலை விதிகளை நாம் தனிப்பட்ட முறையில் முழுமையாக மதிக்கிறோமா?

  • சட்ட விதிகளுக்கு உட்பட்டு நம்முடை எல்லா காரியங்களையும் செய்கிறோமா? (வரி செலுத்துகிறோமா, குப்பைகளை /நெகிழிகளை தவிர்க்கிறோமா, .....)

  • பொய் சொல்லாமல் இருக்கிறோமா?

  • சாதி, மதம், இனம், என்று மக்களிடம் பாகுபாடு காட்டாமல் சமத்துவத்தை கடைபிடிக்கிறோமா?

இப்படி எண்ணற்ற அன்றாட செயல்களில், தனிமனித நேர்மை-ஒழுக்கத்தை தவறவிட்டுவிட்டு, தொடர்ந்து சமுதாயத்தைமட்டும் குறை கூறுவது சரியா? ஒரு நிமிடம் யோசியுங்கள் - சமுதாயம் என்பது யார்?


சமுதாயத்தின் பிரதிபலிப்பு யார்?


நீங்களும், உங்கள் நட்பும், சுற்றமும் தானே இந்தச் சமுதாயம். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதைத்தானே உங்கள் சக குடும்பத்தினரும், உறவுகளும், நட்பும் செய்யும். அப்படியானால் நீங்களும், உங்களின் செயல்களும் தானே இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு. உங்கள் செயல்களின் ஆக்கமும், எதிர்வினையும் பிற்பகலில் உங்களுக்குத் தானே வந்து சேரும்.


இப்படி நம்மைச் சுற்றியுள்ள, நம்மைச் சார்ந்த சமுதாயத்தில் நிகழ்பவையாவும் நம்முடைய பிரதிபலிப்பாக இருக்கின்ற பொழுது, நம்முடைய வாழ்க்கைமுறை முன்னேற, பெரிய மாற்றங்கள் நிகழ, முதல்படியாக, நாம் அந்த மாற்றத்திற்கு முன்னுதாரணமாக செயல்பட்டால்தானே முடியும்.


தனிமனித ஒழுக்கம்


கடந்த 30-40 ஆண்டுகளாக, சமுதாயத்தில் படிப்படியாக ஏற்பட்டுள்ள ஒழுக்கச் சீர்கேடு, தற்போது இரண்டு தலைமுறைகளின் ரத்தத்தில் ஊறிவிட்டது. இந்த ஒழுக்கச்சீர்கேட்டை 1-2 நாளில் மாற்றுவது சாத்தியமில்லை. படிப்படியாக வந்த ஒழுக்கச் சீர்கேட்டு குறித்து முதற்கட்டம் இளைய தலைமுறையினரின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எவ்வளவுதான் அரசாங்கம் ஒருபுறம் முயற்சித்தாலும், தனிமனிதர்களின் பங்களிப்புதான் இதில் அதிமுக்கியம். ஏனெனில் மாற வேண்டியவர்கள் தனி மனிதர்கள் தானே.


அநியாயங்களை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோம்


  • உங்களில் எத்தனை பேர் வரிகளை முறையாக செலுத்துகிறீர்கள்?

  • எத்தனை பேர் பொருட்களை வாங்கும்போது முறையாக வரி செலுத்தப்பட்ட வகையில் இரசீதுகளை கேட்டு வாங்குகிறீர்கள்?


வரியைத் தவிர்க்க, வங்கிப் பரிவர்த்தனையை தவிர்த்து ரொக்கமாக கொடுத்து, இரசீதுகளையும் தவிர்த்து விடுகிறீர்கள். இப்படி கணக்கில் காட்டப்படாத பணம் எல்லாமே, ஏதேனும் ஒருவகையில் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன.


அன்றாட சமுதாய நிகழ்வுகளில், இப்படிப்பட்ட குற்றம்-குறைகள் நிறைய இருந்துகொண்டேதான் இருக்கின்றன. யதார்த்தத்தில், நாம் இந்த தவறுகளுக்கு முற்றிலுமாய் பழகிவிட்டோம். இவையாவும் சிறிதாக தெரியத் துவங்கிவிட்டன. ஆயிரம் கோடி ஏமாற்றுபவனை பார்த்தபின்னால், 100 ரூபாய் கையூட்டு கேட்பவனை, ‘பரவாயில்லை’ என்று ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோம். இன்றைய தலைமுறையினருக்கு, சமுதாயத்தில் தர்ம-ஞாயங்களின் முக்கியத்துவம் என்னவென்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.


கறைபடியாத தொழில் தர்மம்


என்னடா இவன், தலைப்பு ஒன்றாக இருக்கிறது, இங்கு தர்மத்தைப் பற்றி பாடம் நடத்தத் தொடங்கிவிட்டானே என்று யோசிக்கிறீர்கள். நான் ‘கறைபடிதல்’ என்று குறிப்பிடுவது, மனித சமுதாயத்திற்கு ஒவ்வாத அதர்ம காரியங்கள் செய்வதைத் தான் குறிக்கிறேன்.


வெற்றி பெற நிறைய உழைக்க வேண்டும்; எண்ணற்ற போட்டியாளர்களை சந்தித்து சமாளிக்க வேண்டும்; பொருள் விற்பனையானாலும், சேவையானாலும், போட்டியாளர்களைக் காட்டிலும் சிறப்பாக செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து, வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு மாறாக, போட்டியாளர்களைப் பற்றி அவதூறுகளை பரப்பி, அவர்களை அழிக்க நினைத்தால், எப்படி தொழில் தர்மம் நிலைக்கும். நீங்கள் இன்றைக்குச் செய்யும் அதர்மச் செயலை, நாளை உங்களுக்கு இன்னொருவன் செய்ய வருவானே! அன்றைக்கு மட்டும் நியாயத்தை கேட்பது எந்த விதத்தில் நியாயமாகும்?


‘பொய் சொல்பவர்கள் தானே அதிகம் பொருள் சேர்க்கின்றனர்’ என்று சிலர் கேட்கின்றனர். ஆம்! ஆனால் அது எத்தனை நாட்களுக்கு அவர்களிடம் நிம்மதியாய் தங்கியது? என்று பாருங்கள். ஏமாற்றி சேர்க்கப்பட்டவைகள், மற்றொருவரால் சீக்கிரத்திலேயே ஏமாற்றி பறிக்கப்படுகிறது. கண்கூட பல உதாரண நிகழ்வுகளை நானே கண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் இறைவனே இல்லை என்று நாத்திகம் பேசிய ஒரு தமிழ் பெருங்கவி, சமுதாயத்தில் விதியின் விளையாட்டையும், தர்மம் மெதுவாய் நிலைநிறுத்தப்படுவதையும் உணர்ந்து 'அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற ஒரு நூலையே எழுதினார்.


ஆம்! காலவெள்ளத்தில் என்றும் அதர்மங்கள் தாக்குப்பிடித்து நிற்க முடியாது. சில நாட்கள், சில மாதங்கள் ஒருவர் ஏமாற்றிக் திரியலாம். ஏன் சிலர் பல வருடங்கள் கூட ஏமாற்றித்திரிந்தார்கள். அவர்களின் அந்திம காலங்களை கூர்ந்து பாருங்கள். தான் செய்தவைகளுக்காக மனம்நொந்து, வினைப்பயனாய் வேதனையுற்று, அனுவனுவாக சித்திரவதைக்கு உட்பட்டு மாண்டுள்ளனர். எந்தவொரு வினைக்கும், எதிர்வினை உண்டென்று அறிவியலும் ஏற்றுக்கொள்கிறதே.


வியாபாரத்தில் தரம்


உங்கள் பொருட்கள் சற்று விலை கூடுதலாக இருக்கலாம். ஆனால் என்றும் தரமானதாக இருந்தால் வியாபாரத்தில் நீண்டகாலம் நிலைத்திருக்கலாம். போட்டியாளர்களின் பொருட்கள் விலை குறைவாக இருப்பதால், உங்களின் வியாபாரம் குறைவாக இருக்கக்கூடும். உங்கள் பொருட்களின் தரத்தை படிப்படியாக மக்களுக்குப் புரிய வையுங்கள். உங்களால் ஒரே இரவில் வெற்றியை குவிக்க முடியாமலிருக்கலாம். ஆனால் படிப்படியாக திட்டமிட்டு செயல்பட்டால், உங்களின் தரமான பொருட்களின் விற்பனையை, கட்டாயம் அதிகரிக்கமுடியும். ஏனெனில் ‘தரம் மட்டுமே நிரந்தரம்’.


தரம் மட்டுமே நிரந்தரம்


தரத்தையும் விலையையும் குறைத்து, ஒரே நாளில் உங்களின் போட்டியாளர்கள், ஆயிரமாயிரம் வாடிக்கையாளர்களை சேர்க்கலாம். ஆனால் அவர்களால் அந்த வாடிக்கையாளர்களை நீண்ட நாட்கள் தக்க வைக்க முடியாது.


உதாரணத்துக்கு உங்கள் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பலகாரக் கடைகளையும், உணவகங்களையும் கவனித்துப் பாருங்கள். யார் ஐந்து ஆண்டுகளைக் கடந்து வியாபாரத்தில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

  • மலிவான மூலப் பொருட்களை உபயோகித்து, மலிவான விலைக்கு விற்ற பலகாரக்கடைகள் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கின்றன?

  • தரமான மூலப் பொருட்களை உபயோகித்து, சரியான விலையில் விற்கும் கடைகள் எப்படி நிலைபெறுகின்றன?

எந்தவொரு வியாபாரமானாலும், அதற்கேற்ற சரியான திட்டமிடல் தேவை. நீண்டகாலம் நிலைத்திருக்க தரம்தான் முக்கியமென்றாலும், தரமாக தருகிறேனென்று, எடுத்தவுடன் பெரிய அளவில் துவக்கியவர்கள் சிலரும் காணாமல் போயிருக்கிறார்கள். காரணம், அவர்களின் திட்டமிடலும், சந்தை குறித்த அறிவும், போதியளவு இல்லாமல் போனதுதான்.


பெருநிறுவனங்கள் பிறக்கவில்லை – வளர்ந்துவந்தன


இன்று பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ள எண்ணற்ற உணவகங்கள், பலகாரக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் யாவும், ஒரு காலத்தில் ஒரு சிறிய 10 x 10 கடையாக, தொழிற்கூடமாக துவங்கியதுதான். தரத்திற்கும், சேவைக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, படிப்படியாக வியாபாரத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண கடைகளில் இட்லி ஒன்று 5 ரூபாய்க்கு கிடைத்தாலும், அந்த பெரு நிறுவனங்களின் கடைகளுக்குச் சென்று, இட்லி ஒன்றிற்கு 20 ரூபாய் கொடுத்து சாப்பிட தயாராக எண்ணற்ற வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.


மலிவான சீன பொருட்களுக்கு மத்தியில், தரமான வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 10% - 50% வரை அதிகவிலை கொடுத்து வாங்கத் தயாராகவும் எண்ணற்ற வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.


மிகச் சிறந்த நிறுவனத்தை உருவாக்கியவர்கள், எந்தக் காரணத்துக்காகவும், மலிவான தரமற்ற பொருட்களை வாங்க முயற்சிக்கவில்லை.


அதேசமயம், வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என்று எண்ணி, இடையிடையே தரமற்ற பொருட்களை சேர்த்தவர்கள் சீக்கிரத்திலேயே சேர்த்த நற்பெயரை கெடுத்து வெளியேற்றப்பட்டார்கள்.


கறைபடியா நாணயம்தான் வெற்றி


பணத்தின் பேராசையில் மலிவாக விலை போய்விடாதீர்கள்;

வெற்றிக்கு நீங்கள் வேலை செய்துதான் ஆகவேண்டும்;

உட்கார்ந்த இடத்தில் உங்களுக்கு எல்லாம் கிடைக்காது;

ஆரம்பத்தில் பொருட்கள் விற்க தெருத்தெருவாக அலைந்தாக வேண்டியிருக்கலாம்;

உழைப்பையும், வேர்வையையும் பொருட்படுத்தாமல்

பொருட்களின் தரத்தையும் சேவையையும் முன்நிறுத்துங்கள்;

உங்கள் நிறுவன பொருட்களென்றால்

கண்மூடி வாங்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்;


ஒரு கூடை மாம்பலத்தில், ஒரு அழுகிய பலம் இருந்தால், ஒரே நாளில் அந்தக கூடைபழம் முற்றிலுமாக கெட்டுவிடும். ஆம்! நீங்கள் ஒரு தவறு செய்தால், உங்கள் நிறுவன ஊழியர்கள் அவற்றை ஓராயிரம் முறை செய்வார்கள்.


நீங்களே களமிறங்கி, கைகள் அழுக்காக வேலை செய்தால்தான், உங்களின் நிறுவனம் வெற்றி பெறும். கைகள் எத்தனை வேண்டுமானாலும் அழுக்காகலாம். ஆனால் அதர்மம்-ஏமாற்றுதல் என்ற கறைபடியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அழுக்குகளை நீர்கொண்டு எளிதில் கழுவலாம். ஆனால் பட்ட கறைகளை நீக்குவது கடினம். மிகவும் கஷ்டப்பட்டு நீக்கினாலும், பலசமயம் அதன் வடுக்கள் நீண்டகாலம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஒரு முறை சரியில்லையென்று மக்களுக்கு தோன்றி விட்டால், பின்னாளில் எத்தனை சரி செய்தாலும், அவர்களின் எண்ணங்களை எளிதில் மாற்ற முடியாது.


கறை படியாத கரங்களாய்

சமுதாயத்தை சந்தியுங்கள்;

துன்பங்களும் தோல்விகளும்

பனிபோல் அவ்வப்போது வந்து விலகிப்போகும்;

எது தனிமனிதனைத் தாண்டி

சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடியதோ

கூடுமானவரை அதைத் தேர்ந்தெடுங்கள்;

நாம் எல்லோருமாய் ஒரு வளமான சமுதாயத்தை

அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்;


- [ம.சு.கு - 11.06.2022]



7 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Комментарии


Post: Blog2 Post
bottom of page