top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : கண்ணோட்டம் மாறவேண்டுமா?

சில நாடுகளுக்கு இடையே போர்;


சில நாடுகளுக்குள்ளேயே புரட்சிப் போர்;


பலநாடுகள் அமைதியில்;


இதில் எதைப் பற்றி உலகம் அதிகம் பேசுகின்றதென்று பார்த்தால், பெரும்பாலும் போர்களைப், குழப்பங்களையும் பற்றித்தான் மக்கள் அதிகம் அலசி ஆராய்கின்றனர். நம் நாட்டில் நிலவும் அமைதியை பற்றி யாரும் சிந்திப்பதில்லை. நம் நாட்டில் எந்த ஒரு போரும் சச்சரவுகளும் இன்றி நாம் அமைதியாக வாழ்வதே ஒரு பெரிய கொடைதானே. ஆனால் ஏன் நல்லவற்றைப் பற்றி நாம் அவ்வப்போது சிந்தித்து அதை அங்கீகரிப்பதில்லை. மாறாய் ஏதேனுமொரு குற்றம் குறையையே சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏன் நிறைகளை புறந்தள்ளி பிரச்சினைகள் குறித்தே அதிகம் பேசுகிறோம் ?


பலசரக்குக் கடையில் [வணிக வளாகத்தில்]:


“கொழுப்பில்லா பால்”


“கலோரி குறைந்த குளிர்பானம்”


“புரதம் நிறைந்த அசைவ உணவு வகைகள்”


இப்படி எண்ணற்ற விளம்பரப் பதாகைகளை கடையிலே பார்ப்பீர்கள். எல்லாப் பொருளிலும் அதிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மையை பெரிதாக விளம்பரப்படுத்தி இருப்பார்கள்.


கலோரி குறைவாக இருக்கும், ஆனால் அதில் அதிக கொழுப்பு சத்து இருந்தால், அதைப் பற்றி எதையும் குறிப்பிடுவதில்லை. அந்தப் பொருளை மக்களிடம் விற்க, எது நேர்மறையான விடயமோ, அதை மட்டும் பெரிதாகச் சொல்லி ஏனையவற்றை தவிர்த்து விடுகின்றனர். இது உணவுப் பொருள் என்று இல்லை, வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதன பொருட்கள், என்று எல்லா பொருட்களின் வியாபாரத்திலும் தேவையானவற்றை மட்டும் நிறைவாகச் சொல்லி, ஏனையவற்றை தவிர்த்து வியாபாரத்தை முடிக்கின்றனர்.


இந்தத் தேர்ந்தெடுத்த விளம்பர முறை பல சமயங்களில் மக்களை தவறான முடிவெடுக்கச் செய்துவிடுகிறது. பொருளின் ஏனைய தன்மைகள் குறித்து பல பொருட்களின் அட்டையில் அச்சிடப்பட்டிருந்தாலும், யாரும் அந்த வாசகங்களையும். விவரங்களையும் பொருட்படுத்துவதில்லை. ஒரு பொருளை தீர்மானித்து வாங்குவதற்கு முன்னர், ஏன் அந்தப் பொருளின் எல்லா தன்மைகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை?


அரசாங்கம் நமக்கென்ன செய்கிறது


“மத்திய அரசாங்கம், வரிகளை ஏற்றி விட்டது”


“மாநில அரசாங்கம், இந்த்ந்த சலுகைகளை நிறுத்திவிட்டது”


என்று அரசாங்கங்களின் சில செயல்பாடுகள் மட்டும், மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக ஆளும் கட்சியின் குற்றம்-குறைகளை மட்டும், எதிர்க்கட்சிகள் அவர்களின் அரசியல் நோக்கில் பெரிதாய் பிரச்சாரம் செய்யும்போது, மக்களும் அவர்களின் ஒருதலைப்பட்சமான கண்ணோட்டத்திலேயே பார்ப்பதினால், அரசாங்கத்தின் பல முடிவுகள் திருப்திகரமாக இல்லாமல் போகலாம்.


நடைமுறையில் அரசு எந்திரம் இயங்க வேண்டும். அரசாங்கம் இயங்க, போதுமான பொருளை அரசுகள் ஈட்டித் தானே ஆகவேண்டும். அங்கங்கே, தேவைக்கேற்பவுத், சூழ்நிலைகளுக்கேற்பவும், இருக்கும் வரிகளை ஏற்றுதல், இறக்குதல், புதிய வரிகளை விதித்து வசூலித்தல், அடித்தட்டு மக்களுக்கு இலவசங்களை வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்துதல் என்று ஏதேனும் ஒன்றை செய்து கொண்டேதான் இருக்கும். இப்படி அரசாங்கம் செய்யும் நிறைகளைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. ஏன் நாம் அரசாங்கப் பார்வையில் இவற்றைப் பார்க்காமல், நம் தனிமனித பயன் நோக்கிலேயே, இவற்றை காண முற்படுகிறோம்.


குடும்பங்களில் பாரபட்சம்


“மகள் தனிக்குடித்தனம் சென்றால் புத்திசாலி”


“மருமகள் தனிக்குடித்தனம் சென்றால் கொடுமைக்காரி”


“மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி”


அன்றாடம் பல வீடுகளில், சர்வசாதாரணமாக நிகழும் இந்த அதிகார யுத்தம்.

மகளுக்கென்றால் வரிந்து கட்டி வேலை செய்யும் மாமியார்கள், மருமகள்களுக்கு ஏனோ பாராமுகம். அதே வண்ணம், தனது தாய் தந்தையர்க்கு விழுந்து விழுந்து உபசரிக்கும் மகள்கள், மாமனார்-மாமியார் விடயத்தில் எண்ணற்ற பாரபட்சம்.


  • அவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை?

  • இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?

  • இவர்கள் பாவம். பார்த்துக்கொள்ள யாரும் இல்லை!

  • அவர்களுக்கென்ன! இருப்பதை சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்க வேண்டியதுதானே! ஏன் இந்த ஊர்வம்பு?


என்று எண்ணற்ற வசைகளையும், ஒருதலை பட்சமான கருத்துக்களையும் தினம்தினம் குடும்பங்களுக்குள்ளும், உறவுகளுக்கு மத்தியிலும் நாம் கேட்கிறோம். ஏன் நம் குடும்பத்தினர்களுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் இப்படி எண்ணற்ற பாகுபாடுகளையும், பிரிவினைகளையும் பார்க்கிறோம்? ஏன் பொறாமை கொள்கிறோம்?


முதலீடு


யாரேனுமொருவர், இதில் முதலீடு செய்தால் இலாபம் அதிகம் என்று ஆலோசனை வழங்கினால், அதீத பணத்தாசையின் காரணமாக, சீக்கிரத்தில் அந்த மாய வார்த்தைகளில் மயங்கி, அவர்களின் ஆலோசனையை ஏற்று, முதலீடு செய்கின்றனர். அதே வேறொருவர் இதில் முதலீடு செய்யாதே, முற்றிலுமாய் இழக்க நேரிடும் என்று அறிவுரை சொன்னால், அதே அளவு முக்கியத்துவம்தோடு அந்த ஆலோசனைகளை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக ஒருவர் ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிறகு, அவரின் முடிவிற்கு சாதகமான ஆலோசனைகளை மட்டுமே அதிகம் செவிகொடுத்து கேட்கிறார். பாதகமான ஆலோசனைகளை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. ஏன் இந்த முரண்பட்ட ஒருதலைபட்சமான செயல்பாடு?


மாணவர்கள் முத்திரை குத்தப்படுகிறார்கள்


“அவன் நல்ல பையன் நன்றாக படிக்க கூடியவன்:”


“இவன் ரௌடி, எப்பவும் யாரிடமாவது வம்பிழுத்துக் கொண்டே இருப்பான். படிப்பு சுத்தமாக ஏறுவதில்லை;”


இவையும், பல வீடுகளிலும் பள்ளிகளிலும் தினம் தினம் அரங்கேறும் நிரந்தர வசனங்கள். நன்றாகப் படிக்கும் மாணவன் என்றால், பொதுவாக நல்லவன் என்ற முத்திரை. அவன் தவறு செய்தாலும், யாரும் அதைப் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அதேசமயம், படிப்பு குறைவான மாணவன் என்றால், பொதுவாக லாயக்கற்றவன் என்ற முத்திரை.


நடைமுறையில், உலகின் பெரும் பணக்காரர்கள் எல்லோருமே கல்வியறிவில் அப்படியொன்றும் பெரிதாய் மிளிர்ந்துவிடவில்லை. ஏன் ஒருசிலர் பள்ளிகளையே தாண்டியதில்லை. கடின உழைப்பால் தாங்கள் விரும்பிய துறையில் முன்னேறி உள்ளனர் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. ஆனாலும், நம் வீட்டுப்பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பிடித்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தி முன்னேற வழிவகுக்காமல், சமுதாயத்தைக் கண்டு பயந்து, தொடர்ந்து விருப்பமில்லாத கல்வியை திணிக்கிறோம்.


தவறான கண்ணோட்டங்கள்


இப்படி, நம் அன்றாட வாழ்க்கையில் தவறான கண்ணோட்டங்கள் குறித்து எண்ணற்ற உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இவை ஒவ்வொன்றும், அவரவரே கவனமாக பார்த்து சரி செய்ய வேண்டியவை. யாரும் அறிவுரைகூறி யாரையும் பெரிதாக மாற்றிவிட முடியாது. அப்படியே பெரியவர்கள் ஏதேனும் அறிவுரை சொன்னாலும், அதை இன்றைய தலைமுறைகள் பொருட்படுத்துவதில்லை.


என்ன செய்யலாம்?


இந்த கட்டுரையை எழுதுவதால், இந்த தவறான கண்ணோட்டமெனும் குறையை திருத்திக்கொள்ள என்ன செய்யலாம் என்று நீங்கள் என்னைக்கேட்கலாம். ஏதோ எனக்குத் தெரிந்த சிலஅறிவுரைகளை கூறுகிறேன். முடிந்தால் செயல்படுத்திப் பாருங்கள்.


  • கூடியவரை நேர்மறை விடயங்களை பாருங்கள்; நேர்மையை பேசுங்கள்; பிரச்சனைகளைப் பற்றி பேசுவதை குறைத்துவிடுங்கள்;

  • பொருட்களின் பயன்பாட்டை, தன்மையை முழுமையாக பார்த்து முடிவெடுங்கள்; விளம்பர வார்த்தைகளை அப்படியே நம்பி விடாதீர்கள்!

  • நம் நாடு என்கிற விடயத்தில், அரசாங்கங்களின் கண்ணோட்டத்திலும் சற்று பாருங்கள்! எப்போதும் தனிமனித இலாபத்தை மட்டுமே பார்க்காதீர்கள்!

  • உறவுகளுக்கிடையே பாரபட்சத்தை தவிர்த்திடுங்கள்; கூடி வரை எல்லோரையும் அரவணைத்துச் செல்லுங்கள்;

  • பண முதலீடுகளில் மிகுந்த ஜாக்கிரதை தேவை; அதிக வட்டி, பெரிய இலாபம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்!

  • மற்ற மனிதர்களைப் பற்றி சீக்கிரத்தில் அனுமானித்து முடிவெடுத்துவிடாதீர்கள். மற்றவர்கள் எதைச் செய்தாலும், அவற்றிற்கு ஏதேனுமொரு நல்ல காரண காரியம் இருக்கக்கூடும்;

இப்படி எண்ணற்ற அறிவுரைகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அறிவுரைகள் எதுவுமே உங்கள் நினைவுகளில் இருக்கப்போவதில்லை. ஆகையால், எதையும் உங்களின் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். எதிராளியின் கண்ணோட்டத்திலும் சரி-தவறுகளை அலசுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் எல்லா செயல்களுக்கும், எல்லா நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தாவும், காரியகர்த்தாவும் நீங்கள் தான். உங்கள் வாழ்க்கையையும், உங்களின் சூழலையும் ஏற்றவாறு அமைக்க, உரிய மாற்றங்களை நீங்கள் தான் ஏற்படுத்த முடியும்.


கண்ணோட்டத்தை மாற்றுங்கள்; வாழ்க்கை மாறும்


- [ம.சு.கு 07.09.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Yorumlar


Post: Blog2 Post
bottom of page