top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : மாற்றங்களை வரவேற்று முன்னேறுங்கள்

நமக்கு முந்தைய தலைமுறையினர், அவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டால், கிட்டத்தட்ட 30-40 வருடங்கள் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து ஓய்வு பெறுவர். அந்த நிறுவனத்தோடு தங்களை தொடர்புபடுத்திக் கொண்டு, அதை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக வாழ்ந்து பழகியிருந்தனர். இது நிறுவனம் என்று மட்டுமில்லை. எங்கள் ஊரில் உணவகத்திலும், பலசரக்கு கடையிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஊழியர்களுக்கு, தாங்கள் வேலை செய்யும் இடத்துடன் பரஸ்பரம் ஒரு பிணைப்பு இருந்தது.


நிறுவனம் – ஊழியர் புரிந்துணர்வு


அதற்கு நேர்மாறாக, இன்றைய தலைமுறையினர் பலர், வருடத்திற்கு ஒரு நிறுவனம் மாறிவிடுகின்றனர். ஊழியர்கள், தான் வேலைசெய்யும் நிறுவனத்தைப் பற்றி ஏதும் கவலைப்படுவதில்லை. அதற்கு இனையாக, நிறுவனமும் தன் ஊழியர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நிறுவனம் – ஊழியர்கள் இடையே இருந்த பரஸ்பர புரிந்துணர்வு என்பது முற்றிலும் குறைந்துவிட்டது.


30-40 வருடங்களுக்கு முன் ஊழியர்களுக்குள் பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு இருந்தது. ஊழியர்கள் தங்கள் நலனுக்காக, சங்கங்கள் அமைத்துப் போராடினர். இன்றைய காலங்களில், புதிதாய் எந்தவொரு ஊழியர் சங்கமும் உருவாகி நான் பார்க்கவில்லை. ஏன் இந்த மாற்றம்?


வேலைமுறைகள் மாறிவிட்டன


வேலை முறை என்பது எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்துவிட்டது. முன்னே, 90% அதிகமானோர் வெளிவேலைகளில் வெயிலில் பணிபுரிவதிலும், 10%-க்கும் குறைவானோர் மேஜை வேலையிலும் இருந்தனர். இன்று மேஜை வேலைகள் 50%-ஐ கடந்துவிட்டது. மனிதன் செய்துவந்த எண்ணற்ற பழுவான வேலைகள் இன்று இயந்திர மயமாகிவிட்டது. இன்னும் காலப்போக்கில் பல வேலைகள், இயந்திர மனிதர்களின் கைகளுக்கு போய்விடும். எண்ணற்ற வேலைகள் தானியங்கி ஆக்கப்பட்டுவிட்டன. போக்குவரத்துத் துறையில், இன்னும் 10-20 ஆண்டுகளில், வாகன ஓட்டுனர் என்ற ஒரு தொழில் முறையே இல்லாமலே போய்விடும். மாற்றங்களின் வேகம், இந்த நூற்றாண்டில் அசுர வேகத்தில் உள்ளது.


ஊழியர்களின் எதிர்பார்ப்பு


வேலை / வேலைமுறை என்பதைத் தாண்டி, எதற்காக வேலை செய்கிறோம் என்னும் தேவையே பல மாற்றங்களை சந்தித்து மாறுபட்டு நிற்கிறது. மேலதிகாரி-ஊழியர் என்ற முறைகளிலும் எண்ணற்ற மாற்றங்கள் வந்துவிட்டன. இன்று ஊழியர்களை அடிமைகளாக கண்ட காலம் என்பது மலையேறிவிட்டது. தன் கீழ் பணிபுரியும் ஊழியரை, சக தொழிலாளியாக பார்த்து மரியாதை அளித்தால் மட்டுமே அவர் அங்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார். உரிய மதிப்பும், சுதந்திரமும் வழங்கவில்லை என்றால் வேறு வேலை தேடி சென்று விடுகிறார்.


  • ஆரம்பத்தில் குடும்பம்நடத்த பணம் தேவைபட்டது. அதற்காக வேலைக்கு செல்லவேண்டியது மிக அத்தியாவசியமாக இருந்ததால், நிறுவனத்தையும், மேலதிகாரியையும் குட்டி அரசர்களாக பாவித்து தொழிலாளர்கள் வேலை செய்தனர்.


  • அடுத்த கட்டத்தில், அந்த உணவிற்கான அத்தியாவசியத்தை தாண்டி, தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும், வீட்டிற்கு பல மின்னணு சாதனங்களை வாங்க வேண்டும் என்னும் தேவைகள் மனிதனை வேலை செய்யத் தூண்டின. இன்று அந்த மின்னணு இயந்திரங்கள் வாழ்க்கையின் பகுதியாகிவிட்டது. அரசாங்கங்களே பலவற்றை இலவசமாக கொடுத்துவிட்டது.


  • இன்றைய காலகட்டத்தில், இளைய சமுதாயம் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றன. இன்று ஆடம்பர தேவைகளை கடந்து, சுயகௌரவம், சுதந்திரம், சமுதாயத்தில் அங்கீகாரம் மற்றும் மரியாதை என்கிற நோக்கில் பணிக்கான உலகம் சென்று கொண்டிருக்கிறது.


எதற்காக வேலைக்கு வருகிறாய்? என்று கேட்டால், ‘பணம் சம்பாதிக்க’ என்று பதில் சொன்ன காலம் போய், பணத்தின் தேவையிருந்தாலும், அதை பிரதானப்படுத்தாமல், ‘சமுதாய அங்கீகாரத்திற்காக’, ‘என் சுய கௌரவத்திற்காக’ என்று பதில் சொல்கின்ற யுகத்தில் நாம் இருக்கிறோம்.


ஊழியர்ளைப் புரிந்துகொண்டு திட்டமிடுங்கள்


இந்த வேலையின் தேவை பரிணமித்திருக்கும் பாதை, இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பு, இன்றைய சந்தை நிலவரம், குறித்த தெளிவான அறிவும் சிந்தனையும் இருந்தால் மட்டுமே, எப்படி சக ஊழியருடன் பணி செய்வது? எப்படி அடுத்தவரிடம் வேலை வாங்குவது? என்று திட்டமிட்டு செயலாற்ற முடியும். இந்த புரிதல் இல்லாமல் பழைய முறைகளில் செயல்பட்டால், இன்றிருக்கும் ஊழியர் நாளை இருக்கமாட்டார். நீங்கள் தொடர்ந்து புதியவர்களை நியமித்து பயிற்சி அளித்துக் கொண்டே இருக்க வேண்டியதாகிவிடும்.


உற்பத்தி (எ) சேவை


நமக்கு முந்தைய தலைமுறை வரை, உற்பத்தியை பிரதானமாகக் கொண்டே வாழ்க்கை முறை இருந்தது. உற்பத்தித் துறையே அதிக வேலை வாய்ப்புகளை வழங்கிவந்தது. எந்தப் பொருளும் இருக்கும் இடத்திற்கும் சென்று வாங்கி வந்தோம். பல அன்றாடத் தேவைகளை, வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தினோம். பலவகையான உணவுகளையும், பலகாரங்களையும் நாமே தயாரித்துச் சுவைத்தோம்.


‘சேவை’ தொழில்முறை நம்மை விழுங்குகிறது


இன்றைய தலைமுறையினர் முற்றிலும் மாறிவிட்டனர். அன்றிருந்த உற்பத்தி முறை தொடர்ந்து கொண்டு இருந்தாலும், நம் வாழ்க்கை முறை அதன் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. உற்பத்தியைத் தாண்டி, சேவை முறைக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டோம். இன்று எந்த பொருளும் வீடு தேடி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். புதியவற்றை வீட்டில் முயற்சித்துப் பார்க்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. எதையும் விலை கொடுத்து வாங்க தயாராகிவிட்டனர். இட்லிக்கு மாவு அரைப்பது கூட மறந்து விடும் காலம் நெருங்குகிறது. எல்லாம் தயார் நிலையில் வீட்டுக்கே வந்து விடுகிறது.


உற்பத்தியை தாண்டி, சேவை முறைக்கு அதிக தேவை இருப்பதால், அரசாங்கமும் உற்பத்திக்கு இணையாக சேவை வரி விதித்து பொருள் ஈட்டுகிறது.


சந்தைசார்ந்து திட்டமிடுங்கள்


எல்லாம் தயார் நிலையில் வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் இன்றைய அதிவேக உலகில், நீங்கள் தொழில்முனைவோராக விரும்பினால், எந்த பொருளை - எப்படி வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பது? என்பது குறித்த தெளிவான திட்டமும், சந்தை ஆய்வு மேற்கொண்டு சந்தை குறித்த முழுமையான புரிதலும் இருந்தால் தான், செய்ய விரும்பிய தொழிலில் வெற்றி பெற முடியும்.


இப்படி செய்யும் பணி, ஊழியர்களின் எதிர்பார்ப்பு, மக்களின் சேவை எதிர்பார்ப்பு, தொழில்முறை என்று எல்லாமே தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த மாற்றங்களின் வேகம், எவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் விட்டுவைக்கவில்லை. இவற்றை புரிந்துகொண்டு பயனித்தால், நீங்கள் எந்த சுனாமியிலும் நீச்சலடிக்கலாம்.


ஆபத்து நிலையில் ஆரோக்கியம்


இந்த அசுர வேகம், நம் ஆரோக்கியத்தையும் அதே வேகத்தில் சூரையாடத் தொடங்கிவிட்டது. எல்லாம் இயந்திரமயமாகியதில், மனிதன் சோம் சோம்பேறியாக இயங்கப் பழகிவிட்டான்.


மலைப்பாதையில் பயனிக்கும்போது பல குரங்குகள் சாலையோரங்களில் காத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். பிரயாணிகள் எதேனும் உண்ணக் கொடுப்பார்கள் என்று காத்திருக்கும். குரங்குகளுக்கு காட்டிலே தேவையான உணவு இருக்கிறது. ஆனால், பயனிகள் அவ்வப்போது கொடுத்துப் பழக்கியதில், அது தேடி அலைந்து உண்பதை மறந்துவிட்டது. சிலசமயங்களில் யாரும் கொடுக்காவிட்டால், உங்களின் கைகளில் இருந்து பறித்து உண்ணவும் செய்கிறது.


குரங்குகளுக்கு ஏற்பட்ட இந்த மாற்றம், குரங்கிலிருந்து பரிணமித்த மனிதனுக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. கடுமையாக உழைத்து வேர்வை சிந்தி உணவைச் சேர்த்த காலத்தில், நாம் எடுத்துக்கொண்ட உணவுகள் இயற்கையோடு இயைந்தவையாக இருந்தன. அதிகம் மாற்றம் செய்யப்படவில்லை, பதப்படுத்தப்படவில்லை. இன்று, வாரக்கணக்கில் இட்லிமாவும், சட்டினிகளும் பதப்படுத்தப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், எண்ணற்ற நோய்கள் வாழ்வின் அங்கமாகிவிட்டன. நீரிழிவு, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு, வாழ்வியல் நோய்கள் என்று தனிப்பட்ட பெயர்வரிசையும் உருவாக்கிவிட்டார்கள்.


நிதர்சனம் யாதெனில், இந்த ஆரோக்கியத்தையும் பெரிய சந்தையாக்கி பல இலட்சம் கோடிகளில் வியாபாரம் செய்கின்றனர். எல்லாவற்றிலும் வாய்ப்பை உருவாக்கி செல்வம் சேர்க்க ஒருகூட்டம் தெரிந்து வைத்திருக்கிறது. அவர்களைப் போல், துன்பத்திலும் இலாபம் பார்க்க நான் சொல்லவில்லை. அவர்களைப்போல் வாய்ப்புக்கை இணங்கான, பயன்படுத்த தெரிந்துகொள்ளுங்கள்.


நீங்கள் வெற்றியாளராக விரும்பினால் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்;


  • மக்களின் சேவை எதிர்பார்ப்பு

  • ஊழியர்களின் பணி முறை எதிர்பார்ப்பு

  • அரசாங்கச் சட்டம்

  • இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பு

  • அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள்


அறிவியல் வளர்ந்து விட்டது. தொழில்நுட்பங்கள் நம்மை முழுமையாய் கடத்தி விட்ட சூழ்நிலையில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால், எல்லாவற்றிலும் ஏற்பட்டுள்ள பரிணாம வளர்ச்சியையும், இனி ஏற்படவிருக்கும் மாற்றங்களையும் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொண்டு, சிந்தித்து செயல்படுங்கள் வெற்றி உங்களுடையது;


காலம் மாறலாம்;

தேவைகள் மாறலாம்;

நானும் – நீங்களும் மாறலாம்;

மாற்றத்தைப் புரிந்துகொள்ளுங்கள்;

மாறா உலகத்தில் மாற்றம் ஒன்றே நிரந்தரமென்ற

வரிகளை நினைவில்கொள்ளுங்கள்;


மாற்றங்களை வரவேற்க

உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொண்டால்

அந்த மாற்றங்களே – உங்களை

மேலே தூக்கிச் சென்றுவிடும்;


மாற்றங்களை வரவேற்று

முன்னேற்றம் காணுங்கள்;

வெற்றி உங்களுடையதே!!


- [ம.சு.கு – 20-04-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Bình luận


Post: Blog2 Post
bottom of page