top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : “வாய்ப்பு” கிரகிக்க பட வேண்டியது

வெற்றபெற அதிர்ஷ்டம் கட்டாயமா?


வாய்ப்பு” என்ற ஒரு வார்த்தையை கேட்டவுடன் மக்கள் உடனடியாக அதனோடு இணைக்கும் அடுத்த வார்த்தை “அதிர்ஷ்டம்”. ஓரிருவர் என்று இல்லை, நான் சந்தித்து ‘வாய்ப்பு’ குறித்து உரையாடிய எல்லோருமே, வாய்ப்பு என்பது உன் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்று வாதிடுகின்றனர். சில உதாரணங்களால், இரண்டும் வெவ்வேறானது என்பதை புரிய வைத்தாலும், அவர்கள் மனநிறைவு அடைவதில்லை. தொடர்ந்து அதிர்ஷ்டத்துடனே வாய்ப்பை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். ஏன்?


“அதிர்ஷ்டம்” இருந்தால் தான் “வாய்ப்பு” கிடைக்குமா? கேள்விக்கான பதிலை அலசுவோம்.


உத-1;

என் மகள் சொன்னால், ‘என் தோழி அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வடநாடு செல்கிறாள், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை - அதிர்ஷ்டம் இல்லை’ என்று. உண்மை யாதெனில், மாநில சுற்றுப் போட்டிகளில் இவளுடைய அணியனர் தோல்வியுற்றதால், இவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை தங்கள் திறமைகளால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பது உண்மையானாலும், கடைசியில் மனம் அதிர்ஷ்டத்தை காரணமாக்குகிறது.


உத-2;

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர், நல்ல வசதி படைத்தவர். ஆனால் எழுதப்படிக்க தெரியாது. ஏன் படிக்கவில்லை என்று கேட்டபோது, பிள்ளைப்பருவத்தில் வறுமையின் காரணமாக படிக்க முடியவில்லை - எனக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்றார்.


உண்மைதான் - அவர் பிள்ளைப் பருவத்தில் கிராமத்தில் படிக்க வசதி இல்லை. அதேசமயம், கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பால் உயர்ந்து வசதியுடன் வாழ்கிறார். காலமாற்றத்தில், அவருக்கி படிப்பதற்கான எத்தனையோ வாய்ப்புக்கள் வந்துபோகின. ஆனால் அவற்றை அவர் பெரிதாய் பொருட்படுத்தவில்லை. ஆதலால் இன்றுவரையிலும் அவரால் அவர் பெயர் மட்டுமே எழுதத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேற்கொண்டு எதையும் படிக்க முயற்சித்தது இல்லை. ஆனால் இன்றுவரையிலும், அதிர்ஷ்டத்தை குறை கூறிக்கொண்டிருக்கிறார்.


இப்படி உதாரணங்கள் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.


ஒரு வாய்ப்பு – முற்றுப்புள்ளியா?


பலருக்கு, உரிய காலங்களில் தங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகும். சிலர் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தாமல் இழந்திருக்கலாம். சில சமயங்களில் வாய்ப்புக்கள் வந்தாலும், அதீதபோட்டியின் காரணமாக, சிலருக்கு முன் செல்ல வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இப்படி எண்ணற்ற சூழ்நிலைகள் வந்துபோனாலும், ஒன்று மட்டும் நிதர்சனம் – ‘வாய்ப்பு’ என்பது வாழ்க்கையில் ஒரே முறை வந்து போகின்ற விடயமல்ல. அது வெவ்வேறு கால இடைவெளிகளில், மாறுபட்ட வடிவங்களில் தொடர்ந்து எல்லோருக்கும் வந்து கொண்டே இருக்கும். அதை இனங்கண்டு கிரகித்துக்கொள்ள நாம் தான் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


ஒருமுறை கிடைத்த நல்லதொரு வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோம் அல்லது அந்த போட்டியில் தோற்று விட்டோம் என்று வாழ்க்கை பூராவும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை. தொடர்ந்து பயிற்சியும்-முயற்சியும் செய்து கொண்டிருந்தால், கட்டாயம் அடுத்த வாய்ப்பில் தேரிவிடலாம். அதற்காக நான் தினமும் வாய்ப்புக்கள் வந்து போகும் என்று உறுதி கூறவில்லை. காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடைவெளியில் வாய்ப்புக்கள் வரும். ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒருமுறை வந்துபோவது போல. இன்று தவறவிட்டுவிட்டால், அடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள, இன்றிலிருந்தே முழுவீச்சில் தயாராக வேண்டியதுதான் அதிமுக்கியம்.


அடுதடுத்த வாய்ப்பிலும் வெல்லலாம்


முதலில் கிடைத்த சில வாய்ப்பில் சரிவர சோபிக்காமல், தொடர்ந்து நம்பிக்கையோடு போராடி சில ஆண்டுக்களுக்குப் பின் கிடைத்த அடுத்த வாய்ப்பில் சிறந்த வீரராக பரிணமித்த இலங்கை மட்டைப்பந்து வீரர் ‘மரவன் அட்டப்பட்டு’-வின் சிறு வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இவ்வாறு, உங்கள் ஊரிலும் கூட பல தோல்விகளுக்குப் பின்னர் கடைசியில் ஏதேனும் ஒரு தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் இருப்பார்கள். அப்படி போராடி வென்றவர்களுடன் சிறிதுநேரம் உரையாடிப் பாருங்கள். தங்களுக்க வாயப்புக்கள் எப்படி வந்துபோனது, அதில் அவர் என்ன செய்தார்? எதைச் செய்யாமல் விட்டால்? அதிலிருந்து அவர் கற்ற பாடம் என்ன? என்பது உங்களுக்கே நன்றாக புரியும்.


இலக்கைநோக்கி முயற்சிக்க வேண்டியது யார்?


  • பள்ளி, கல்லூரிகளில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்குகிறார்கள் என்றால் அது யாருக்கும் அதிர்ஷ்டத்தில் கிடைக்கப்போவதில்லை. தொடர்ந்த உழைப்பால் மட்டுமே அது கிடைக்கப்பெரும். இந்து விருதைப்பெற ஆரம்பத்தில் எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு இருக்கும். ஆனால் யாரொருவர் படிப்பிலும், நன்நடத்தையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி பள்ளியில் ஆசிரியர்களிடன் நற்பெயரை தக்கவைத்துக்கொண்டு வருகிறாரோ, அவருக்கே அந்த விருது இறுதியில் கிடைக்கும். அந்த விருது வாங்கும் வாய்ப்பு எல்லா மாணவர்களுக்கும் சமமாக இருந்திருந்தாலும், அதை தங்கள் பக்கம் கிரகித்து வெற்றியை தங்களுக்கு உரியதாக்க, அவர்கள்தானே குறிக்கோளுடன் முழுவீச்சில் செயல்பட்டாக வேண்டும்.

  • மருத்துவத் துறையில் நிபுணர்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. ஆனால் அந்த நிபுணத்துவத்தை யார் வளர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மேற்படிப்பிற்கு குறைவான கல்லூரிகளே இருக்கலாம். ஆனால் இருக்கின்ற அளவிற்குள் இடத்தைப்பிடிக்க வாய்ப்பு எல்லோருக்குமே சமமாகத்தானே வந்துபோகிறது. இங்கு அதிர்ஷ்டத்திற்கு ஏதும் வேலையிருப்பதாகத் தெரியவில்லை. நன்றாகப் படிப்பவர் இடம்பிடித்து முன்செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

  • மீன் பிடிக்க ஆசை. நமக்கு ஆசையிருக்கிறது என்பதற்காக, மீன்னென்ன தானாக நம் கையில் வந்து அகப்படுமா? மீனைப்பிடிக்கத் தேவையான வலையோ-தூண்டிலோ, ஏதேனுமொன்றைத் தயார் செய்து நீரில் இறங்கினாள் தானே மீன் கிடைக்கும்.


நாம் அடைய வேண்டிய லட்சியம் நமக்குத் தெளிவாகத் தெரிந்தால், அந்த இலக்கை அடைய உரிய முயற்சிகளைத் தொடர்ந்து செய்யாமல், ‘வாய்ப்பு’ கிடைக்கவில்லை, ‘அதிர்ஷ்டம்’ இல்லை என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்னபயன்.


நீங்கள் உங்களைத் தொடர்ந்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தால்

நீங்கள் விழிப்புடன் தொடர்ந்து நடப்புகளை கவனித்துக் கொண்டிருந்தால்

உங்களால் வாய்ப்புகளை கண்டுகொள்ள முடியும்

உங்களின் தயார்நிலை அந்த வாய்ப்புகளை கிரகிக்க உதவும்.


முயற்சிதான் அதிர்ஷ்டத்தின் திறவுகோள்


அதிர்ஷ்டம் வேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களே, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஓடுபவரால் மட்டுமே போட்டி அன்றும் வேகமாக ஓட முடியும். மாதக்கணக்கில் ஓய்வெடுத்துவிட்டு போட்டியன்று மட்டும் ஓடினால், கடைசி நபராகத்தான் வர முடியும். வாய்ப்புக்கள் வரட்டும், நான் செய்கிறேன் என்று சும்மா உட்கார்ந்துகொண்டிருந்தால், காலம்முழுக்க சும்மாவே இருந்து சாகவேண்டியதுதான். எது நமக்கான வாய்ப்பென்பதை அறிய, நாம் தொடர்ந்து அதை நோக்கி இயங்கிக் கொண்டிருந்தால் தான் முடியும். யாரும் உறங்கிக்கொண்டிருப்பவரை தட்டியெழுப்பி, ‘இதோ உனக்கான வாய்ப்பு, எடுத்துக்கொள்’ என்று கொடுக்கப்போவதில்லை.


நமக்குத் தேவைப்படும் பொருளோ, உதவியோ - நாம் எண்ணியவாறே நமக்கு வருவது தான் ‘வாய்ப்பு’ என்றில்லை. நமக்குத் தேவைப்படும் அந்தப் பொருள், மாறுபட்ட வடிவில் பலரிடம் இருக்கும். அதை இனங்கண்டு உரியவரிடம் கேட்டால்தான் நமக்கு கிடைக்கும். அந்த மாறுபட்ட ஒன்றைத் தேடிச் செல்ல வேண்டியது நாம்தானே! நமக்காக யாரும் தேட மாட்டார்கள் அல்லவா?


தொடர்ந்து இலக்கை நோக்கி ஓடுங்கள்


ஒரு குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டுவிட்டால், அதற்கு மாற்றாக ரயில், விமானம், சிற்றுந்து என்று எண்ணற்ற மாற்று வழிகள் உள்ளன. நம் வசதி வாய்ப்புக்கு ஏற்ப உரியவற்றை தேர்ந்தெடுத்து பயணத்தை மேற்கொண்டு அடையவேண்டிய இடத்தை, குறித்த நேரத்தில் அடைய வேண்டியது நம்முடைய கடமை. ஒருவாய்ப்பு தவறிவிட்டதற்காக உட்கார்ந்துவிட்டால் தேங்கிவிடுவோம்.


தொடர்ந்து ஓடவேண்டும்.

ஓட்டம்

முதலில் வாய்ப்பை நோக்கி – பின்

கிடைக்கின்ற வாய்ப்பில் வெற்றியை நோக்கி – பின்

பெற்ற வெற்றியை தக்கவைப்பதை நோக்கி

இப்படி ஒன்றன்பின் ஒன்றாக,

ஏதேனுமொன்றை நோக்கி - நிற்காமல்

தொடர்ந்து ஓடவேண்டும்.

ஓட்டம் காலத்தின் கட்டாயம்.


மறவாதீர்!


தேடும்போது கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கிறது

சும்மாயிருந்தால் தானாக வர வாய்ப்பு மிகக்குறைவு;


வாய்ப்புக்கள் நம்மைச் சுற்றி அவ்வப்போது வந்துபோகும்

அதை இனங்கண்டு நாம்தான் கிரகிக்க வேண்டும்;


நம் முயற்சியும்-பயிற்சியுமே அதை சாத்தியப்படுத்தும்

நம்பிக்கையோடு முன்னேறுங்கள்!


- [ம.சு.கு - 07-05-2022]





8 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page