top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : விளம்பரத்தை தாண்டி புள்ளிவிவரங்களையும் கவனியுங்கள்

இன்றைய பொருட்களின் சந்தையை சுருக்கமாக சொல்வதானால்


அடக்கவிலை கால் காசு;

விளம்பரச் செலவு முக்கால் காசு;


வியாபாரக் குறி [brand]மோகம்


உங்கள் நண்பர்கள் சிலர், ஒரு குறிப்பிட்ட நிறுவனக்குறியிட்ட [brand] பொருட்களை மட்டுமே தேடித்தேடி வாங்குவார்கள். மற்ற நிறுவன பொருட்களை ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? என்று கேட்டால், இந்த குறிப்பிட்ட நிறுவனகுறியிட்ட பொருட்கள், நல்ல தரமானதாக இருப்பதாக சொல்வார்கள். மற்ற பொருட்களும் அதே தரத்துடன் இருப்பதை நிரூபித்தாலும், அவர்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனகுறியிட்ட பொருளையே தொடர்ந்து வாங்குவார்கள். அது ஏன்? என்று காரணம் கேட்டால், அந்தப் பொருள் பெரிதாக விளம்பரப் படுத்தப்படுவதால், அது சிறந்ததாக இருக்கும் என்று தான் கருதுவதாக கூறுவார்கள். இந்த பதில் சரியா? “அப்படி விளம்பரப்படுத்தப்படும் பொருள்யாவும் தரமானதா?”.


விளம்பர அளவிற்கும், தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. ஏனெனில், நிறைய விளம்பரப்படுத்தப்பட்ட பல பொருட்கள், தரம் & பயன்பாட்டு குளருபடிகளில், சந்தையில் அவை சோபிக்காமல் போயிருக்கின்றன. அப்படியானால் விளம்பரம் தேவையற்றதா? என்று கேட்டால், அதையும் உறுதிபட சொல்ல முடியாது.


விளம்பரம்தான் இன்று எல்லாமே


நடைமுறையில், இங்கு பொருட்களின் தரம், அதன் தேவைகளைக் காட்டிலும், அவற்றிற்கான விளம்பர அளவுதான், அதன் சந்தையை பெரும்பாலும் கட்டுப்படுத்துகிறது.


ஆள் பாதி – ஆடை பாதி


என்ற சொல் வழக்கை எல்லோரும் கேட்டிருப்போம். யதார்த்தத்தில். இதுதான் வாழ்க்கையின் நியதி. நாம் எத்தனைதான் செல்வந்தராக, அறிவாளியாக, உடல் வலுவானவராக இருந்தாலும், அதை முறைப்படி சமுதாயத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே சமுதாயம் அங்கீகரிக்கும். எதற்கும் ஒரு சிறு விளம்பரம் தேவைப்படுகிறது.


கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற ஔவைப் பாட்டியின் வரிகளை சிறுவயதில் படித்துருப்போம். மிக உயர்ந்த ஆடைகள் நம்மிடம் இல்லாவிட்டாலும், இருக்கின்ற ஆடைகளை சுத்தமாக அணிவது ஆரோக்கியத்திற்கும், நம்மை நாம் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கும், மிக முக்கியமான ஒன்றென்று அறிந்திருப்போம்.


இருப்பதைச் சொல்லுங்கள் – இல்லாததையல்ல!


என்ன இது? விளம்பரத்தில் ஆரம்பித்து, ஔவையை இழுத்து அறிவுரை கூறுகிறேன் என்று சலித்துக்கொள்ளாதீர்கள். மனிதரானாலும், பொருளானாலும் இன்று சந்தையில் போதிய அளவு விளம்பரப் படுத்தினால்தான், அவை விற்பனையாகிறது. அதேசமயம், விற்பனை நடைபெற வேண்டும் என்பதற்காக, இல்லாத விடயங்களை எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுவது பெரும் குற்றம். ஒரு விளம்பரம் என்பது, அந்த பொருளின் இருப்பை, அதன் பயன்பாட்டை மக்களுக்குத் தெரியப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அது செய்வதற்கரிய செயல்களைச் செய்யும் என்று பொய்யுரைப்பதாக இருக்கக்கூடாது.


வளர்ந்த நாடுகளில், இந்த விளம்பரங்களுக்கு எண்ணற்ற சட்ட விதிமுறைகள் வந்துவிட்டன. பொருட்களைப் பற்றி தவறான விளம்பரங்கள் செய்யப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டால், அதனால் ஏற்படும் எல்லா இழப்புகளுக்கும் அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க அங்கு சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. நம்மைப் போன்ற வளரும் நாடுகளிலும், மற்ற பின்தங்கிய நாடுகளில் இவ்வாறான நுகர்வோர் சட்டங்கள் இருந்தாலும், அவை அந்த அளவிற்கு வலுவடையவில்லை.


“நிபந்தனைகளுக்கு உட்பட்டது”


நீங்கள் சற்று உற்று கவனித்திருந்தால், எல்லா விளம்பரங்களிலும், ஏதோ ஒரு மூலையில் மிகமிக சிறிய எழுத்துக்களில் ஒரு நட்சத்திரக் குறியீட்டுடன் “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்று வார்த்தைகள் இருக்கும். நடைமுறையில் இந்த நிபந்தனைகள் என்னவென்று, அதை உபயோகிக்கும் 99% மக்களுக்கு தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களும், அவர்கள் விளம்பரங்களில் தெரிவிக்கும் பொருளின் செயல்பாடுகள், அவற்றின் தரம் குறித்த அனைத்தும், அவர்கள் கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தினால் மட்டுமே செல்லுபடியாகும் என்று மிகமிக சிறிய எழுத்துக்களில் அச்சிட்டிருப்பார்கள். அந்த நிபந்தனைகளை பற்றி பெரும்பாலானவர்கள் கவனிப்பதே இல்லை.


சமூக சேவை என்ற பெயரில்


சமூக சேவை என்ற பெயரில் இன்று நன்கொடை வசூலிப்பதும் மிகப்பெரிய தொழிலாக நடக்கிறது. அதற்காக எண்ணற்ற ஆதரவற்ற குழந்தைகள், நடக்க முடியாத முதியவர்களின் புகைப்படங்களையும், குறும்படங்களையும் முன்னிறுத்தி, பல லட்சங்களில் ஆங்காங்கே பரிவர்த்தனைகளும் முறைகேடுகளும் நடக்கின்றன. அழுகின்ற குழந்தையின் குறும்படத்தைக் காட்டி, மக்களை உணர்ச்சிப் பூர்வமாக்கிவிடுகின்றனர். அந்த தொண்டு நிறுவனம் குறித்த புள்ளி விவரங்கள் எதுவும் தெரியப்படுத்தாமல், “சேவை” வார்த்தையை மட்டும் பிரதானப்படுத்தி, மக்களை உணர்ச்சி வயப்படுத்தி பணத்தை, பெற்று ஏமாற்றுகின்றனர். அவர்களின் நிறுவனம் பற்றி எந்தவொரு விசாரனையும் செய்யாமல், சிறிய தொகைதானே என்று சில நூறுகளில் பல பேர் கொடுப்பது, கூட்டாய் பல இலட்சங்களில் ஏமாற்றப்பட்டுவிடுகிறது.


ஊழலை ஊக்குவிக்கறது


இன்றைய விளம்பரத்தின் தேவை எந்த அளவிற்கு போய் இருக்கிறது என்றால், சமுதாய சேவைக்காக மட்டுமே வர வேண்டிய அரசியல் தலைவர்கள் கூட, அவர்களை சமுதாயத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள, எண்ணற்ற சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் சேவையே இன்று விளம்பரத்தை முன்னிறுத்தித்தான் நடக்கிறது. உண்மையில் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இன்று பலபேர் சேவையென்ற பெயரில் எதாவதொன்றை செய்கின்றனர். இந்த தேவையற்ற விளம்பரச் செலவே, அந்த அரசியல் தலைவர்களை ஊழல் செய்ய தூண்டி விடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது..


இப்படி விளம்பர மாயை நிறைந்துவிட்ட உலகில், எதை நம்புவது? எதை எந்த அளவுக்கு நம்புவது? என்பது நமக்கு மிக மிக சிக்கலான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.


மக்களை சென்றடைய விளம்பரம்தான் ஒரேவழி


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், வெறும் 100 கோடிக்கும் குறைவான மக்கள் வாழ்ந்துவந்த இந்த பூமியில், இன்று கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் நிறைந்து விட்டார்கள். இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழ்ந்த காலம் மாறி, வாழ்க்கை முழுமையும் அளவற்ற பொருள் சார்ந்ததாக மாறியுள்ளது.


தொட்டதற்கெல்லாம் இயந்திரங்கள், ஆயிரமாயிரம் உணவு வகைகள், அளவுக்கு அதிகமான வெளியூர் / வெளிநாட்டு பிரயாணங்கள், என்று தினமும் கோடானோடிகளில் தேவையின்றி செலவு செய்யும் மாயை மக்களைத் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்த நுகர்வு பொருளாதாரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்த எண்ணற்ற மாய விளம்பரங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். அந்த விளம்பரங்கள் தான், அந்த பொருளின் இருப்பு குறித்து நமக்குத் தெரியப்படுத்துகிறது. அதேசமயம் அந்த விளம்பரம் கூறும் எல்லாவற்றையும் அப்படியே நம்பி வாங்குவதில், நமக்குத் தான் எண்ணற்ற சிக்கல் உருவாகிறதென்ற புரிதல் நம்மக்கள் மத்தியில் இல்லாததுதான் இங்கு பெரிய அதிர்ச்சி.


நம்மை நாமே தற்காத்துக்கொள்ள


இன்றைய மாய உலகில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம்.

  • எப்படி மருந்து & உணவு பொருட்கள் வாங்கும் போது, அவற்றின் காலாவதி தேதியை பார்க்கிறோமோ, அதே போல எல்லா பொருட்களுக்கும், தயாரிப்பாளர்கள் குறிப்பிடும் நிபந்தனைகளையும், 2-3 நிமிடம் செலவிட்டு படித்துப் பாருங்கள். ஒருமுறை படித்துப்பார்ப்பதில் தவறொன்றும் ஆகிவிடாது. மாறாக அதற்கு செலவிட்ட நேரம், அப்பொருள் குறித்த புரிதலை நமக்கு அதிகரிக்கச்செய்யும்;

  • எல்லா உணவுப் பொருட்களிலும், அதன் ஊட்டச்சத்து, அதை செய்ய பயன்படுத்திய மூலப்பொருட்கள் குறித்து கட்டாயம் அச்சிட்டிருப்பார்கள். அவற்றை முறையாக கவனித்தாலே போதும், நீங்கள் எதை உண்ண வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், என்ற விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்பட்டுவிடும்;

  • பொருட்களின் சந்தை தாண்டி, பல நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக, ஏகபோக விளம்பரம் செய்வார்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கவர்ச்சி வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வங்கியில் வைத்தால் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், உங்கள் முதலுக்கு பாதுகாப்பு அதிகம். வெளியில் வட்டி விகிதப் அதிகம் கிடைக்கலாம், ஆனால் முதலீடு திரும்ப கிடைப்பதற்கான சிக்கல் அதிகம். ஆதலால் அதிக வட்டியை நம்பி, முதலுக்கே மோசம் ஏற்படும் இடங்களை, கவனமாக தவிர்த்து விடுங்கள்;

  • பலர், குறிப்பிட்ட முதலீடுகளில், முன்னர் வந்த இலாபங்களையும், சாதனைகளையும் முன்னிறுத்து உங்களை கவர முயிற்சிப்பார்கள். ஒரு தொழிலில் இத்தனைக்காலம் இலாபம் வந்துள்ளது என்பதற்காக எதிர்காலத்திலும் அவ்வாறான இலாபம் கட்டாயம் வருமென்று உறுதிபட சொல்லமுடியாது. பழைய சாதனைகளோடு, அவற்றின் எதிர்கால சாத்தியக்கூறுகளை கட்டாயம் அலச வேண்டும்;

  • அடுத்தபடியாக , பல புள்ளியியல் சராசரிகளைக் கொண்டு உங்களை நம்பவைக்க பலமுயற்சிகள் நடக்கும். எப்போதும், சராசரிகளை பார்க்கும் போது, அந்த சராசரிக்குட்பட்ட இருதுருவங்களையும் கவனியுங்கள்.[“0” & “100”-க்குமான சராசரி “50”. இந்த சராசரியில் பயனேதுமில்லை, ஏனெனில் வந்தால் “100” இல்லாவிட்டால் “0”. இதில் “50” என்ன வேலை].

  • ஒரு குறிப்பிட்ட சீட்டுக் குழுக்களில், “நீங்கள் பரிசு வென்றுள்ளீர்கள், இது உங்கள் பரிசுக்கான அழைப்பு” என்ற மாய வார்த்தைகளில் உங்களுக்கு அழைப்புகள் வரும். அவற்றை நம்பிச் சென்று, தேவையற்றவைகளில் உங்களின் பணத்தை வீணடித்து விடாதீர்கள். வாடிக்கையாளர்களை ஈர்க்க, இப்படி பரிசு என்கிற பெயரில் எண்ணற்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது;

  • இன்றைய காலகட்டங்களில், “வெளிநாட்டில் உங்களுக்கு பரிசு சீட்டு விழுந்திருக்கிறது”, “இறந்தவரின் பெரும் சொத்திற்கு நீங்கள் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள்”, என்று கூறி பல லட்சங்களில் மோசடிகள் நடக்கிறது. முகம் தெரியாத இப்படிப்பட்ட நபர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறாதீர்கள். “பரிசு விழுந்திருக்கிறது, உங்களுக்கு பணம் வரும்” என்று கூறி உங்களிடம் ஆரம்பத்தில் முன்பணம் யாராவது கேட்டால், சுதாரித்துக் தப்பித்துக் கொள்ளுங்கள்.

இங்கு எதுவும் இலவசமில்லை


இங்கு, யாரும்-யாருக்கும்
ஆதாயம் இல்லாமல் சேவை செய்யத் தயாரில்லை;
யாரும்-யாருக்கும்
இலவசமாக பணத்தை வாரிக்  கொடுக்கத் தயாரில்லை;

அதைத் தாண்டி, பணம் / கடன் தருகிறேன், சேவை செய்கிறேன் என்றால், உடனே உங்களின் ஆறாவது அறிவுக்கு வேலை கொடுத்து, விழிப்புடன் இருக்க வேண்டியது உங்கள் கடமை. அதைவிடுத்து, அவர்களை நம்பிச்சென்று ஏமாந்து நின்றால், யாரும் உங்களை காப்பாற்ற முடியாது.


உண்மையான தொண்டு நிறுவனங்கள் தவிர்த்து, இங்கு யாரும் யாருக்கும் இலவசமாக ஒருவேளை உணவு கொடுக்கவும் தயாரில்லை. எல்லோருமே எல்லாவற்றிலும் அவர்களுக்கான தனிப்பட்ட ஆதாயத்தை தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தன் பொருளைத் தாண்டி, பிறர்பொருளை எடுத்த தானமாக கொடு என்றாலும், அதிலும் அவர்கள் என்ன ஆதாயம் பெற முடியும் என்பதைத்தான் பிரதானமாகப் பார்க்கிறார்கள்.


அடிப்படைகளை அலசிப்பாருங்கள்


தேக்கு மரத் திட்டம், ஈமு கோழி வளர்ப்புத் திட்டம், பிட்காயின் [எண்ணம நாணயம்] முதலீடு, படிநிலை சந்தைப்படுத்துதல் திட்டம் [MLM] என்று எண்ணற்ற கவர்ச்சித் திட்டங்கள் வருடாவருடம் புதிய புதிய கோணங்களில் சந்தையில் பிரபலமாக கொண்டே இருக்கும். இவைகளில், ஆரம்ப காலங்களில் ஓரிருவர் செல்வம் சேர்த்திருப்பதாக நிரூபனங்களும் இருக்கலாம். அவற்றை நம்பி கண்மூடி முதலீடு செய்து விடாதீர்கள். எந்தத் தொழிலானாலும் சில அடிப்படைக் கேள்விகளைக் கேளுங்கள்.


  • இந்த முதலீடு எந்த பொருள் தயாரிப்பதற்கு அல்லது என்ன வகையான சேவைத் தொழில் செய்வதற்கு போகிறது?

  • அந்தப் பொருள் / சேவையின் சந்தைத் தேவை, எவ்வளவு காலங்களுக்கு இருக்கும்? எந்த அளவிற்கு வளர்ச்சி காண வாய்ப்பிருக்கும்?

  • குறிப்பிட்ட தொழிலில் இலாபம் அதிகம் என்றால், மக்கள் கூட்டம் சீக்கிரத்தில் வந்து குவிந்துவிடும். வியாபாரிகள் அதிகமாகி போட்டி அதிகரித்தால், அந்த வியாபாரமும், இலாபமும் நிலைக்க வாய்ப்பிருக்கிறதா?

  • ஏதேனும் ஒன்றை இலவசமாக சலுகையில் யாராவது தருகிறார் என்றால், அதில் அவருக்கு ஆதாயம் என்ன இருக்கும்? அதில் நமக்கென்ன சாதக-பாதகம்?

இந்த சில அடிப்படைக் கேள்விகளை, நீங்கள் தெளிவாக அலசி ஆராயாமல், எந்த ஒரு இடத்திலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் அரும்பாடுபட்டு உழைத்து சேர்த்த செல்வம், நீங்களும், உங்கள் குடும்பமும் அனுபவிப்பதற்கேயன்றி, விஷப்பரீட்சை செய்து தொலைப்பதற்கல்ல.


நேரம் – முதலீடு


மேலும் முதலீடு என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல. உங்களின் பொன்னான நேரத்தை எதன் பொருட்டு செலவிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். பணத்தைத் தாண்டி, நேரமும் மிகப்பெரிய முதலீடுதான். நேரத்தையும் சிறப்பாக முதலீடு செய்து அறிவை வளர்ப்பது, பொருள் ஈட்டுவது, உறவுகளை பேனுதல், நட்பு பாராட்டுதல் என கவனமாக பயன்படுத்துவது அதிமுக்கியமான ஒன்று.


விழிப்புடன் இருங்கள்


சந்தை குறித்தும், புதிதாக வந்துபோகும் கவர்ச்சிகரமான ஏமாற்று திட்டங்கள் குறித்தும், உங்கள் பொது அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். யாரொருவர் விழிப்புடன் இருக்கிறாரோ, அவரால் மட்டுமே இன்று இருக்கின்ற செல்வத்தை பத்திரமாக காத்து பெருக்க முடியும். நீங்கள் அசந்தால், உங்களுடையதை ஏமாற்றிப்பறிக்க பல பேர் தயாராக இருக்கிறார்கள்.


விளம்பரப்படுத்தப்படுபவைகளையும், கவர்ச்சி வார்த்தைகளையும் நம்பி ஏமாறாமல், எந்தப் பொருளானாலும், எப்படிப்பட்ட மனிதரானாலும், நீங்கள் அதில் இறங்குவதற்குமுன், அவற்றின் / அவர்களின் பின்புலத்தை சற்று கவனமாக அலசிப்பார்த்து காலைவிடுங்கள். ஆழமறியாமல் காலைவிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள்.


நம் நேரம், நம் செல்வம் யாவும்

நாம் உண்டு அனுபவிப்பதற்கேயன்றி

ஏமாந்து தொலைப்பதற்கல்ல;

உங்கள் தேவைபோக மிஞ்சியதை

தேவைப்படுவோருக்கு தானமாக கொடுத்து புண்ணியம் சேருங்கள்;

ஏமாற்றுக்காரர்களை நம்பி தொலைப்பதில் என்ன பயன்?

எங்கும், எப்போதும், எதிலும்

உங்களுக்குத் தேவை – “கவனம்”, “விழிப்பு”!!


- [ம.சு.கு - 10-08-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page