top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : முதுகில் குத்த வாய்ப்பளிக்காதீர்கள்

“தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு தானே”


“அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்”


இது போன்று எண்ணற்ற பழமொழிகளை தினம்தினம் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் வென்றாலும்-தோற்றாலும், எண்ணற்ற அறிவுரைகள் தொடர்ந்து உங்களை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர்கள் சந்தித்த தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் அறிவுரைகளை வழங்குவார்கள். இவை அனைத்தும் உங்களை எச்சரிக்கும் நோக்கத்துடன் சொல்பவைகளே.


கூடயிருந்தவர்கள் ஏமாற்றுவது


இந்த அனுபவம் சார்ந்த அறிவுரைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், பெரிய வெற்றியாளர்கள் மற்றும் பெரும் அரசர்களின் வீழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்தால், கட்டாயம் அவர்களின் உடனிருக்கும் ஒருவன் அவர்களை ஏமாற்றியதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும்;


“நம்பிக்கைதான் வாழ்க்கை – ஆனால்

எல்லா மனிதர்களையும் நம்ப வேண்டாம்;


என்ன ஒரு முரண்பாடான வார்த்தைகள்;


ஒருவர் மீதான நம்பிக்கை

எந்தளவு இருக்க வேண்டும் என்பதைத்தான்

உங்களின் அனுபவம் கற்றுக்கொடுக்கும்”


மனிதமனம் கால-நேரங்கள், சந்தர்ப்ப-சூழ்நிலைகளுக்கு, நபர்களுக்கு ஏற்ப அலைபாய கூடிய ஒன்று. யார், எப்போது, எதனால், எதற்காக மாறுவார்கள் என்று உங்களால் கணிக்க முடியாது. எந்தவொரு உறவிலும், நட்பிலும், பழக்கத்திலும் போதுமான தற்காத்தல் இருக்க வேண்டும்.


பெரிய மோசடிகளை யார் செய்தனர்?


பெரிய நிறுவனங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய மோசடிகளை அலசிய எல்லா அறிக்கைகளும், பொதுவாக வெளிப்படுத்திய ஒரே விடயம், அந்த பெரிய மோசடிகளை செய்தவர்கள், அந்த நிறுவனத்தில் நீண்டகாலம் வேலைசெய்து நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருந்தவர்கள் என்பது. ‘இவரா இப்படி செய்தது?’ என்று அதிர்ச்சிக்குள்ளாகுமளவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்கள்தான் செய்திருக்கிறார்கள்.


நிறுவனம் அவர்கள் மீதுகொண்டிருந்த நம்பிக்கையை தங்களுக்குச் சாதகமாக்கி, அவர்களுக்கு நிறுவனத்தினுள் வழங்கப்பட்டிருந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அந்த மோசடிகளை செய்திருக்கின்றனர். ஆங்காங்கே நிகழ்ந்த இவ்வகையான ஏமாற்றுதல்களால், நிறுவனங்கள் இன்று எண்ணற்ற வேலைகளுக்கு, மனிதர்களை நம்பாமல் கணினியை நம்பத் துவங்கிவிட்டது.


அரசியல் பண்ணுவது


அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்களிடன் கேட்டுப்பாருங்கள், சிலருடைய வளர்ச்சி எப்படி வேகமாக இருக்கிறது? எதனால் பலரின் வளர்ச்சி தடைபடுகிறது? என்று. எல்லாமே அவர்களைச் சுற்றியுள்ள, அன்றாடம் அவர்களோடு ஒன்றாக சிரித்துப்பழகி நன்றாக பழக்கப்பட்டவர்களே தங்களின் வளர்ச்சிக்கு தடையாக பல உள்குத்துக்களை செய்வதாகச் சொல்வார்கள்.


தனக்கு அந்த குறிப்பிட்ட பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்ந பதவி இவனுக்கு கிடைக்கக்கூடாது என்று அரசியலில் சதிவேலைகள் மிகமிக அதிகமென்கின்றனர். இப்படி கூட இருந்து கொண்டே நமது வளர்ச்சிக்கு குழிபறிக்கின்ற முறைக்கு, "அரசியல் பண்ணுவது" என்று வழக்குமுறை சொல்லே உருவாகிவிட்டது.


வியாபார தந்திரங்கள்


வியாபாரத்தில், பொதுவாக பொருட்களை சந்தைப்படுத்த அந்த பொருட்களின் தரத்தை, மேம்பட்ட செயல்முறையை, அதன் பயன்பாட்டை குறித்து விளக்கி விற்பனையை அதிகரிக்க வேண்டும். இந்த பொதுவான சந்தைப்படுத்தல், விளம்பரம் போன்றவை ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு போட்டியாக மற்ற சிறு நிறுவனங்கள் மேலேறி வந்து விடக்கூடாது என்பதற்காக,


  • எண்ணற்ற வியாபார சிக்கல்களை அந்த சிறுநிறுவனங்களுக்கு உருவாக்குவது

  • அவர்களின் பொருட்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்புவது,

  • சந்தையில் பொருட்களின் விலையை தற்காலிகமாக குறைத்து அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வெளியேற்ற முயற்சிப்பது


போன்று எண்ணற்ற ஏமாற்று தந்திரங்களை கட்டவிழ்த்துவிட்டு, மற்ற போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பது வியாபார தர்மத்தையும், நம்பிக்கையும் குலைக்கக்கூடிய செயல்கள் தானே. இதனால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள், அந்த நிறுவனங்களை நம்பிய வாடிக்கையாளர்கள் தானே.


உறவுகளுக்குள் கோள்மூட்டுவது


வீடுகளுக்குள், உறவுகளுக்குள் ஏற்படும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு மூலாதாரம் யார்? காரணம் என்ன? என்று பார்த்தால், அந்த குடும்பத்தில் ஒருவர், அல்லது அந்தக் குடும்பத்தோடு அன்றாடம் ஒட்டிஉறவாடும் நம்பிக்கையான ஒருவர், மற்றவரிடம் நேரம் பார்த்துக் கோள்சொல்வதில்தான் துவங்கியிருக்கிறது.


ஒரு விடயம் சரியோ-தவறோ, அந்த குறிப்பிட்ட நபர், அதை உரியவரிடம் சரியான நேரத்தில் சொல்லிவிட்டால் பிரச்சனைகள் பெரிதாக வளர வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் சொல்வதற்கு முன்னர், மற்றவர்கள் அதை ஒரு பெரும் குற்றமாக அடுத்தவரிடம் சொல்லும்போது, அந்த குறிப்பிட்ட நபர்மீது தவறான அபிப்ராயம், கோபம் வந்துவிடுகிறது.


சொல்லவேண்டியவர் சொல்வதற்கும், அடுத்தவர் வந்து சொல்வதற்கும் வேறுபாடுகள் அதிகம் தானே. நாமே சென்று சொல்லியிருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய விடயம், நாம் சொல்ல தாமதிக்கும்போது, அடுத்தவர் மூலம் அவர் காதுகளுக்கு வரும்போது, அவை பெரும்பாலும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டு, உறவுகளுக்கிடையேயான புரிதல் பெரிதும் பாதிக்கப்பட்டுவிடுகிறது.


நடைமுறை வாழ்வில், ஒன்றைமட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்களை சொல்லவேண்டியவற்றை, எவ்வளவுக்கெவ்வளவு சீக்கரமாக சொல்லவேண்டுமோ, அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரமாக சொல்லிவிடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உங்களின் துரோகிகளுக்கு நீ்ங்களே வழங்கும் பொன்னான வாய்ப்புக்காளாகும்.


பிறர் வேதனையில் இன்பம்காணும் மனநோயாளிகள்


நான் இங்கு உதாரணத்திற்கு சொல்லிய ஒவ்வொரு தருணங்களும், தினம்தினம் எல்லோர் வாழ்க்கையிலும் வெவ்வேறு கோணங்களில் இயல்பாக நிகழ்பவையே. இந்த “அரசியல் பண்ணுவது” என்னும், நமது முதுகுக்குப் பின்னால் இருந்து நமக்கு எதிரான சதிகளை நிகழ்த்த, நம் கூடவே இருக்கும் சிலர் நேரம் பார்த்து காத்திருக்கக்கூடும்.


ஒரு மனிதனின் வெற்றியைக் கண்டு மகிழ்வதைக் காட்டிலும், தன்னை சுற்றி உள்ளவர்களின் தோல்வியையும், வேதனையையும் கண்டு உள்ளூர மகிழும் எண்ணற்ற மனநோயாளிகள் தொடர்ந்து காலங்காலமாய் இருந்துகொண்டேதான் இருக்கின்றனர். இப்படி நம்பியவர்களை ஏமாற்றி இன்பம் காணக்கூடியவர்கள் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற நம்பிக்கை துரோகங்கள் பற்றிய புரிதலும், முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இருந்தால், நாம் தானே முட்டாள்கள்!


“ஏமாறுபவர்கள் இருக்கும் வரை

ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்”


பணத்தை எண்ணி சரிபார்த்தல்


பொதுவாக யார் பணம் கொடுத்தாலும், நாம் எல்லோருமே அந்தப்பணத்தை எண்ணிப் பார்த்து வாங்குகிறோமல்லவா. அதுதான் யதார்த்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பாடம். எப்படி பணத்தை எண்ணிப்பார்க்கும் ஒரு முன்ஜாக்கிரதையை நாம் கடைப்பிடிக்கிறோமோ, அதுபோல எல்லா நிகழ்வுகள், நபர்கள் மத்தியிலும் ஒரு எச்சரிக்கையுடன் இருப்பது அதிமுக்கியமான ஒன்று.


உங்கள் பெற்றோரே பணம் கொடுத்தாலும், அவர்கள் முன்னரே அதை எண்ணுவது, அவரை சந்தேகப்படுவதாக ஆகாது. ஏதேனும் மனிதத்தவறுகளால், எண்ணிக்கையில் குறைவு இருந்துவிடக்கூடும் என்கின்ற அனுமானத்தின் பேரில்தான் எண்ணப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.


இப்படி யார் பணம் கொடுத்தாலும், அவர் முன்னரே அதை எண்ணிப் பார்ப்பதை, யாரும் அவர்கள் மீதான நம்பிக்கை குறைவாக எண்ணுவதில்லை. இந்த முன்னெச்சரிக்கை முறையையே, வாழ்வின் வெவ்வேறுபட்ட தருணங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.


பூட்டை இழுத்துப்பார்க்கிறோம்


முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்பதற்காக, யாரையுமே நம்பவே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. யார்மீதான நம்பிக்கையும் அளவோடு இருக்க வேண்டும். அவர்களுடைய ஒரு சிறு தவறும் / அலட்சியமும், நம்மை பாதித்துவிடும் என்கிற இடத்தில், நாம் அதீத ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


பொதுவாக வீட்டை பூட்டிய பின், அந்த பூட்டை ஒருமுறை இழுத்துப் பார்த்து, சரியாக பூட்டப்பட்டுள்ளதா என்று உறுதி செய்கிறோம். அதே முன்னெச்சரிக்கை உணர்வோடு எல்லோரும், வாழ்வின் ஒவ்வொரு முக்கிய தருணங்களிலும், தங்களின் செயல்களை ஒன்றுக்கு இரண்டு முறை சோதித்துப் பார்ப்பதில் தவறில்லை. அதேசமயம், உங்களின் சோதித்துப் பார்க்கும் குணம், உங்களை ‘சந்தேகப் பேர்வழி’ என்று மற்றவர்கள் முத்திரை குத்தி விடாத வண்ணம், அதீதமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்களின் வளர்ச்சி-வெற்றியில் மகிழ

ஒரு கூட்டம் இருப்பது போல

உங்கள் வீழ்ச்சி-வேதனையிலும்

மகிழ்ச்சியடையும் கூட்டமும் இருக்கும்;

அந்த துரோகிக் கூட்டத்தை

உங்களால் இனங்காண முடியாமல் போகலாம்;

கவனமாக இருங்கள்!

தேவைக்கேற்ப 1-2 முறை சோதியுங்கள்;

மனிதர்களை நம்புங்கள்;

ஆனால் நம்பிக்கைக்கு எல்லை வகுத்துக் கொள்ளுங்கள்;


சில தவறுகள் எதேச்சையாக நிகழ்ந்திருக்கும்;

சில தவறுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கும்;

தவறுகள் யாரால்-எப்படி நடந்திருந்தாலும்

இழப்பென்பது நமக்குத் தான்;

அந்தத் தவறுகள் நடக்காத வண்ணம்

போதுமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதுதான்

நம்மை நாமே காப்பதற்கான ஒரே வழி;


மறவாதீர்

விதியை நம்மால் வெல்ல முடியாவிட்டாலும்

பாதிப்பு அதிகம் ஏற்படாத வண்ணம்

விதியை சமாளித்து முன்னேற

சமயோசிதமாக பயணம் செய்யுங்கள்;


நம்முதுகில் குத்தவாய்ப்பளித்துவிட்டு

புலம்பித்தீர்ப்பதில் பயனில்லை;

வெற்றிக்குத் திட்டமிடுவது போல

சற்றே ஏமாற்றுதல்களை சமாளிக்கவும்

முன்னெச்சரிக்கையாக திட்டமிடுங்கள்;

வெற்றி நிச்சயம்!!


- [ம.சு.கு 29-06-2022]

8 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 360 - பூஜ்ஜிய நம்பிக்கையில் ஆரம்பிக்கவேண்டும்!"

யார்வேண்டுமானாலும் வந்துபோகலாமென்கிற இடத்தில் எல்லா பாதுகாப்பையும் செய்துவிடுங்கள்–ஏனெனில் உங்களால் எல்லோரையும் அறிந்துவைத்திருக்க முடியாது

Commenti


Post: Blog2 Post
bottom of page