ஆதிகாலம் தொட்டு, இன்று வரையிலும் விற்பனையில் பொதுவாக பயன்படுத்தும் முறை “ஏல” விற்பனை முறை. உணவுப்பொருட்கள் துவங்கி, அடிமைகள், நாடு, பெண், பொன் என்று எல்லாமே ஏலமுறையில் விற்கப்பட்டு வந்துள்ளது. பொருளின் உற்பத்தியளவு, சந்தையின் அன்றைய வரத்து, மக்களின் தேவை போன்ற பல்வேறுபட்ட காரணங்களின் அடிப்படையில் பொருட்களின் ஏலவிற்பனை விலை நிர்ணயம் ஆனது. ஏலமுறை விலைநிர்ணயம் என்பது காலங்காலமாய் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்ட ஒரு விலை நிர்ணய முறை. ஏலமுறை பற்றி எல்லோருக்கும் பொதுவாக தெரியும்.
இருவருமே கட்ட வேண்டிய ஏலமானால்?
ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான ஏலம் துவங்குகிறது. இந்த ஏலத்தில் நீங்களும், நானும் மட்டுமே போட்டியில் இருக்கிறோம். இந்த ஏலத்தின் விதியும், பரிசும் இதுதான்;
வெற்றி பெறுபவருக்கு, ரூ.50,000/- மதிப்புள்ள தங்க காசு பரிசாக கிடைக்கும்
போட்டியாளர்கள், அவரவர்கள் கூறும் கடைசி ஏலத்தொகையை, அவரவர்கள் (வென்றவரும் – தோற்பவரும்) கட்ட வேண்டும்.
ஏலம் துவங்குகிறது. ஆரம்ப விலையாக நீங்கள் ரூ.1,000/- என்று கூறுகிறீர்கள். நான் கூறாமல் விட்டால், உங்களுக்கு ரூ.49,000/- இலாபம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நானும் பரிசு பெறும் ஆசையில், ரூ.2,000/- என்று ஏலம் கூறிகிறேன். இப்போது நான் ஏலத்தில் வெற்றி பெற்றால் 2,000 செலவில் 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க காசு எனக்கு. உங்களுக்கு வெறும் 1,000/- ரூபாய் நஷ்டம்.
உங்கள் நஷ்டத்தைத் தவிர்க்க, நீங்கள் இப்போது ரூ.3,000/- என்று ஏலம் கூறுகிறீர்கள். இப்போது நீங்கள் வென்றால் ரூ,47,000/- உங்களுக்கு இலாபம். ரூ.2,000/- எனக்கு நஷ்டம். என்ன நஷ்டத்தை தவிர்க்க ரூ.4,000/- என்று நான் ஏலம் கூறுகிறேன். இது தொடர்ந்து ரூ.49,000/-ஐ எட்டுகிறது. இப்போது ஐம்பதாயிரம் என்று ஏலம் கூறும் எனக்கு, போட்டி முடிவதானால் எந்த இலாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஆனால் உங்களுக்கு ரூ.49,000/- நஷ்டம்.
நஷ்டத்தை தவிர்க்க எண்ணி நஷ்டத்தை கூட்டுகிறோம்
இந்தக் கட்டத்தில் விலகினாள் ஒருவருக்கு ரூ.49,000/- நஷ்டத்துடன் விலகி இருக்கலாம். ஆனால் உங்கள் நஷ்டத்தைத் தவிர்க்க ரூ,51,000/- என்று கூறுகிறீர்கள். இருவரும் அவரவர்களின் நஷ்டத்தை தவிர்க்க முற்படுவதால் ஏலம் தொடர்கிறது. ஏலத்திலிருந்து யாரேனும் ஒருவர் விலகினால் தான் ஏலம் முடிவிற்கு வரும். ஆனால் யதார்த்தம் யாதெனில், இப்போது விலகுவது என்பது இருவருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கிடைக்கும் பொருளின் விலை மிகக் குறைவு.
இந்த ஏலத்தில் யார் வெற்றி பெறுவார்?
இந்த ஏலத்தின் மூலம் யாருக்கு இலாபம்?
இதனை நீங்கள் எப்படி உங்களுக்கு இலாபகரமாக மாற்றியிருக்க முடியும்?
புரிதல் இல்லாவிட்டால் போட்டிதான்
ஒருவேளை நம் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருந்திருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து இருந்தால், சொற்ப செலவில் ரூ.50,000/- வென்றிருக்கலாம். ஆனால் இருவருக்கும் இடையிலான போட்டி மனப்பான்மையில், தேவையில்லாமல் விலை ஏற்றப்பட்டு, பின்னர் நஷ்டத்தை தவிர்க்க இருவருமே அதை தொடர்ந்து கொண்டிருக்க, அதுபெரும் தொடர்கதையாய் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இப்படித்தான் எல்லா ஏல முறைகளும். ஏலம் கூறுபவர்களுக்கிடையே ஒரு புரிதல் இல்லாவிட்டால், ஏலத்தொகை ஏறிக்கொண்டே போகும். இதனால் வாங்குபவரைக் காட்டிலும், விற்பவருக்குத்தான் இலாபம் அதிகம்.
அதேசமயம் அரசாங்க ஏலங்களில், அப்படிப்பட்ட புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொள்வது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.
ஏலத்தில் மலிவு விலையில் கிடைக்கிறதா?
ஏலத்தில் பங்கெடுப்பவர்கள் பெரும்பாலானோர், இந்த அடிப்படை புரிதல் இன்றி ஏமாந்து, அதிக விலை கொடுத்து வாங்கி விடுகின்றனர். அந்த ஏல விற்பனையாளருக்கோ, உங்களின் இந்த ஏமாற்றம்தான் மிகப்பெரிய விருந்து. அந்த ஏல முறை, அதன் நுணுக்கம் குறித்து நமக்கு ஒரு புரிதல் ஏற்படுவதற்குமுன் தன் வார்த்தை ஜாலங்களினால் நம்மை ஏலம் கூறவைத்து நமக்கு போதுமான நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பார். இன்னும் இதில் நகைச்சுவை யாதெனில், தன் கவர்ச்சிகரமான வார்த்தைகளினால் ஏலத்தின் மூலம் நாம் அந்தப்பொருளை மலிவான விலையில் வென்றுள்ளதாக, ஒரு மாயை நமக்கு ஏற்படுத்திவிடுவார். இது நம் ஊரில் மட்டுமில்லாமல், உலகெங்கும் நடக்கும் எல்லா ஏலங்களிலும் இதுதான் பொதுவான விதி.
ஏலத்தில் தப்பிப்பவர்கள்
பெரும்பாலானவர்கள் இப்படித்தான் ஏமாறுகிறார்கள் என்று சொன்னேன். அப்படியானால் ஒரு சிலர் ஏமாறாமல் தப்பிக்கின்றனர் என்றுதானே அர்த்தம் என்று நீங்கள் கேட்கலாம். அது எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
யாருக்கு “ஏலம்” என்பது வெறும் பகட்டுக்காண போட்டி, அதிகாரத்திற்கான போட்டி, பேராசைக்காண போட்டி என்பது புரிகிறதோ, அவர்கள் எப்போது அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றறிந்து வெளியேறிவிடுகின்றார்கள். விபரமின்றி அந்த மாய சுழற்சியில் சிக்குபவர்கள்தான் அந்த ஏலமுறைகளில் நிறைய தொலைத்துவிடுகின்றனர்.
உலகத்தில் யாரிடமும் இல்லாத “ஒரு பொருள்”, “ஒரே பொருள்” என்று கூறி ஏலத்தை துவக்கி நடத்துவார்கள். பெரும் பணக்காரர்களால் அவற்றை வாங்க முடியும். நம்மால் அந்த பொருளை வாங்க முடியுமா? வாங்க முடியுமா என்பதை விட, அது நமக்கு தேவைதானா என்று கேட்டுக்கொள்ளுங்கள்?
சிறுசேமிப்பு ஏலச் சீட்டுகள்
எந்த ஒரு ஏலத்திலும் பங்கெடுப்பதற்கு முன்னர், நம்முடைய தேவை என்ன? நமக்கான அளவுகோல் என்ன? என்ற தெளிவு நம்முள் இருக்க வேண்டும்.
நம் வீடுகளில் சிறு சேமிப்பாக போடும் சின்ன சின்ன சீட்டுகள், ஆரம்பத்தில் பெரிய தொகைக்கு ஏலம் கூறப்பட்டு எடுக்கப்படும். பின்னர் வாரம்/மாதம் செல்லச்செல்ல, அந்தத் தொகை படிப்படியாக குறையத் தொடங்கும். அது இயல்பாக இயங்குவதுபோல தோன்றினாலும், அங்கும் இதே ஏல விளையாட்தைத்தான் அவ்வப்போது விளையாடுகிறார்கள். வேண்டுமென்றே ஏலகூறலை ஏற்றிவிட சில விஷமிகள் இருப்பார்கள். ஒரு வேலை போட்டி இருக்கும் பட்சத்தில், உங்களின் தேவை, உங்களுக்க கட்டுபடியாகக் கூடிய அதிகபட்ச விலையை கருத்தில் கொண்டு, அளவாக பங்கெடுத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற போட்டி மனப்பான்மை, உங்களுக்கு தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
ஏமாற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம்
ஏலம் என்கிற விடயத்தில் பங்கெடுப்பது தவிர்க்க முடியாததென்றால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் என்னென்ன என்பதை இங்கு பட்டியலிடுகிறோம்;
உங்கள் தேவை என்ன என்பது உங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்;
உங்களின் அதிக பட்ச ஆதரவு விலை என்ன என்பது முறையாக கணக்கிட்டு முன்னரே தீர்மானிக்கப்பட வேண்டும்;
ஏலத்தின் போது எந்தக் காரணத்தைக் கொண்டும் உணர்ச்சிவயப்பட்டு விடக்கூடாது. வெற்றி தோல்விகளை உணர்வுகளோடு சம்பந்தப்படுத்தாமல், அறிவோடு அலசுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்;
எதிர் போட்டியாளர் நமக்கு வேண்டியவராகவோ, வேண்டாதவராகவோ, அல்லது பரம எதிரியாகக் கூட இருக்கலாம். ஆனால் எந்த காரணத்திற்காகவும், நம்முடைய அகங்காரம் முன்வந்து அந்த நேரத்தில் நம்மை திசைத் திருப்பி விடக்கூடாது, அகங்காரத்தால் தொலைத்தவர்கள் தான் ஏராளம்;
எந்த ஒரு பொருளை ஏலத்தில் வாங்குவதானாலும், முதலில் அதன் தற்போதைய சந்தை மதிப்பு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரியாத பொருள் என்றால் அதிலிருந்து விலகி இருப்பது நன்று.
சந்தை விலை தெரிந்தால் அதிலிருந்து 20% குறைவான விலையில் நீங்கள் உங்களின் ஏலக்கூறலை நிறுத்திக்கொள்வது நல்லது. சந்தை விலைக்கே ஒரு பொருளை ஏலத்தில் எடுப்பது ஒன்றும் பெரிய பயனைத் தராது. சந்தை விலைக்கு வாங்குவதானால், பொருமையாக கடைக்குச் சென்று சோதித்துப்பார்த்து, உரிய உத்திரவாதத்துடன் வாங்கிக்கொள்ளலாமே.
கவர்ச்சிகரமான வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள். உங்கள் தேவைகளை மட்டும் தெளிவாக அலசிப் பார்த்து உங்களுக்கு கட்டுபடியாகக்கூடியது வரை பங்கெடுத்துவிட்டு விலகிவிடுங்கள். ஏலக்கூறலை ஏற்றி விடுகிறேன் என்ற விசப்பரீட்சை வேண்டாம்.
ஏல விற்பனை முறைகள்
காலத்திற்கேற்ப மாறி வருகின்றன;
எத்தனைதான் மாற்றங்கள் வந்தாலும்
ஏமாறுபவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்;
சந்தைவிலை தெரியாமல்
எந்தப் பொருளையும் ஏலத்தில் வாங்காதீர்கள்;
போட்டி மனப்பான்மையும், அகங்காரமும் இல்லாது
அறிவோடு அலசினால் ஏலங்கள் இலாபகரமாகலாம்;
- [ம.சு.கு 17.08.2022]
Comentarios