"உன் நண்பன் யாரென்று சொல்? நீ எப்படிப்பட்டவன் என்று நான் சொல்கிறேன்."
"சேர்க்கை சரியில்லை, வீணாப்போய்டான்"
இவ்வாறான பழமொழிகளையும், வசனங்களையும், கேட்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் உண்டு. அது என்ன சேர்க்கையினால் ஒருவன் முற்றிலும் கெட்டுப்போவானா? அவனுக்கு என்று சுய புத்தி இல்லையா?
இந்தக் கேள்வி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தருணங்களில் வந்து போயிருக்கும். சிலர் அதற்கான பதிலை அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். மற்றவர்களோ, அதை இன்னும் புரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.
தவறானவர்கள் எளிதில் ஈர்க்கின்றனர்
ஒருவனுக்கு தவறான நண்பன் இருந்தால், இவனும் தவறான செயல்கள் செய்ய சென்று விடுவானா? அப்படியானால், அவனுக்கு வேறு நல்ல நண்பர்கள் இருக்கும்போது, ஏன் அந்த தவறானதைச் சொல்பவனை மட்டும் பின்பற்றுகிறான்?
கேள்வி சரிதானே? விதண்டாவாதமான கேள்வியாக தோன்றுகிறதா? விடைகாணும் முன், சற்று அலசுவோம்.
இந்த பட்டியலை வளர்த்துக் கொண்டே போகலாம். நம் தேவை அதுவன்று. நாம் அறிந்துணர வேண்டியது, எப்படி இந்த தீய பழக்கங்கள் நம்மை ஆட்கொள்கின்றன?
தீமைகளின் ஆரம்பம்
முதலாவதாக புகைப்பிடித்தல்-மது அருந்துதல் பழக்கத்தை எடுத்துக்கொள்வோம். யாரேனும் தானாக கடைக்குச் சென்று முதல் முறையாக வெண்சுருட்டு வாங்கி புகைக்கின்றனரா? இல்லை. நண்பர்கள் கொடுக்க, கட்டாயத்தின் பேரில் முதல்முறையாள ஆரம்பிக்கிறார்கள். பின் அவர்களோடு இருக்கும் தருணங்களில் எல்லாம் அது தொடர்கிறது.
சில சமயங்களில், சில நபர்கள் தன்னால் செய்ய இயலவில்லை என்பதனால் மற்றவர்களும் அதை செய்து விடக்கூடாதென்று, திட்டமிட்டு தன் நண்பர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அப்படி பொறாமை கொண்டவர்களை எவ்வளவுக்கெவ்வளவு எளிதில் இனங்கண்டு விலக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது.
சமுதாயத்தில், பெண்களுக்கு எதிரான பல பாலியல் கொடுமைகள், 2-3 நபர்களாக சேர்ந்து செய்திருப்பதை நாளிதழ்களில் தினம்தினம் காண்கிறோம். ஒருவன் சிந்தனையில் தோன்றுவது, மற்றவர்களுக்கு கடத்தப்பட்டு, அந்தத் தவறு நியாயமானதாக்கப்பட்டு நிகழ்ந்தேறிவிடுகிறது.
கூட்டுப் பயிற்சி
அதிகாலை 5 மணிக்கு எண்ணற்றவர்கள் நடைபயிற்சி செய்வதை காணகிறோம். அவர்கள், பெரும்பாலும் 2-3 நபர்கள் கூட்டாக நடைபயிற்சி செய்வது சாதாரணமாக காணப்படும். காரணம், ஒவ்வொருவரும் தங்களின் அதிகாலை நடைபயிற்சி செய்யும் திட்டத்திற்கு, தனது நண்பர்களை சேர்ப்பதன்மூலம், அதை ஒரு மறைமுக நிர்பந்தமாக்கி, அந்த நடை பழக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வெற்றி கொள்கிறார்கள்.
யாருடைய துணையும் இல்லாமல், தான் மட்டும் எழுந்து செல்வதென்றால், பெரும்பாலானவர்கள் ஒரிரு நாட்களிலேயே அந்த நடைபயிற்சியை கைவிட்டு விடுகின்றனர். தன் தோழர் வந்து எழுப்புவார், தனக்காக காத்திருப்பார், என்ற நிர்பந்தம் அவர்களை குறித்த நேரத்தில் எழுந்து தயார்படுத்த வழிவகுக்கிறது.
வழிநடத்துபவர்கள்
நாம் செல்லும் பாதை சரியானதா? இல்லையா? தவறுகள் இருக்கின்றனவா? என்று அவ்வப்போது பார்த்து நமக்கு ஆலோசனைகள் வழங்க நல்ல நண்பர்கள் தேவை. தனியாக இயங்கும் போது, இயல்பாக ஒரு சலிப்பு எல்லோர்க்கும் ஏற்படுவது இயற்கை. அந்த சலிப்பு மற்றும் சோம்பலை வெற்றிகொள்ள, உடனிருக்கும் நட்பும், உறவும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
நாம் கொண்ட நட்பு நம்மை நல்வழியில் வழி நடத்துவதாக இருந்தால் நன்மை. நாம் மனம் கலங்கிய நேரத்தில், ஓய்ந்துவிட்ட நேரத்தில், தோல்வி கண்ட நேரத்தில், நமக்கு ஆறுதல் வார்த்தை கூறாமல் தீய பழக்கங்களான மதுவை நோக்கி அழைத்துச் சென்றால், வாழ்க்கையே நாசக்கேடாகும்.
எல்லா வகையான போதை அடிமைகளும், பெரும்பாலும் தங்கள் நட்பு வட்டத்தில் இருந்தே இந்த தீயாபழக்கங்களை கற்றுள்ளனர்.
நிர்பந்தங்கள்
சில சமயங்களில் பெரிய நட்பே இல்லாவிட்டாலும், சில நிர்ப்பந்தங்களினால் சிக்கவைத்து விடுகின்றனர். நான் அன்று உனக்கு உதவினேன். நீ இதை இன்று எனக்காக செய்ய மறுக்கிறாய்? நட்புக்கு மரியாதை இல்லையா? என்று வார்த்தை ஜால மிரட்டல்கள்.
எனக்கு இவன் இப்படி உதவினான். அவன் அப்படி உதவினான். நீ மட்டும் மறுக்கிறாய். நீ ரொம்ப சுயநலக்காரன், என்று மறைமுகமாக சாடி அவனை அவர்களின் வழிக்கு இழுத்து விடுவார்கள்.
இப்படி எண்ணற்ற தீய சிந்தனைவாதிகள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து தப்பித்து வாழ்வை நடத்துவதே மிகப் பெரிய சவால் தான்.
அறிவினார் சேர்க்கை
பொதுவாக, நல்லவர்களை மட்டும் உடன் வைத்திருப்பவர்களுக்க, எந்த வகையான தீய நிர்பந்தங்களும் வருவதற்கு வாய்ப்பில்லை? வாய்ப்பில்லாதபோது, தீமைகள் நிகழ்வதும் இல்லாது போகும். நல்லவர்களும், நற்சிந்தனைகளும் நிறைந்திருக்கும் சூழலில், ஏதேனும் தீயபோதனைகள் வந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் வல்லமையை இந்த அறிவினார் சேர்க்கை தானாக வழங்கிவிடும்.
தவறுதலாக தீயவைகளின் பக்கம் செல்ல நேர்ந்தால், சாதுரியமாக அதிலிருந்து விலகி சாதிக்க வேண்டும்.
"வல்லமை தாராயோ சிவசக்தி"
என்னும் வரிகள் நினைவிருக்கிறதா? அந்த வல்லமையை பாரதி இறைவனிடம் கேட்டார்.
நாம் நம்மைச் சுற்றி நல்லவர்களையும், நல்ல எண்ணங்களையும் நிரப்பி வைத்திருந்தால், நம் தன்னம்பிக்கையே சிறந்த வல்லமையாக நம்மை வழிநடத்தும்.
நீ நல்லவனாவதும், தீயவனாவதும்
உன் சேர்க்கை தீர்மாணிக்கிறது;
எல்லா தீயபழக்கங்களும்
நட்புவட்டதிலிருந்தே ஆரம்பமாகிறது;
ஏணி ஏறவும் உதவும்! இறங்கவும் உதவும்!
சேர்க்கை முக்கியம்! கவனமாக இரு!
- [ம.சு.கு - 02.04.2022]
Comments