“செய்வன திருந்தச் செய்” - என்ற பழமொழியை காலம்காலமாய் கேட்டு வருகிறோம். நம்முடைய அன்றாடச் செயல்களில் இதை எந்த அளவு கவனத்துடன் செயல் படுத்துகிறோம் என்று உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்.
சரியான நேரத்தில் காலையில் எழுந்து தயாராக வேண்டும் – ஆனால் எழுந்து தயாராகிறோமா?
அன்றாட செயல்களை பட்டியலிட்டு அவற்றின் அவசர-அவசியம்களுக்கு ஏற்ப முன்னிலைப்படுத்தி செய்தால் காரியங்களை குறித்த நேரத்திற்குள் சரியாக செய்து முடிக்கலாம் – ஆனால் அதற்கென காலையில் 10 நிமிடம் ஒதுக்கி திட்டமிடுகிறோமா?
உண்ணும் உணவுகளில் கவனமாக இருந்து நம் உடலுக்கு உகந்தவைகளை சரியான நேரத்தில் அளவாக உண்டு வந்தால் அந்த உணவே மருந்தாக இருந்து நம் உடலைக் காக்கும் - ஆனால் உணவில் அத்தனை கவனம் செலுத்துகிறோமா?
ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு மாலை சரியாக 6 மணிக்கு செல்ல வேண்டும். போகும் பாதையில் போக்குவரத்து நெரிசல் இருக்க வாய்ப்பிருப்பதால், சற்று முன்னரே கிளம்பினால் குறித்த நேரத்திற்கு முன்னர் சென்று விடலாம். ஆனால் நாம் முன்னரே கிளம்புகிறோமா?
இப்படி எண்ணற்ற செயல்களை தொடர்ந்து பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நம்முடைய முக்கிய பிரச்சினை:
என்ன செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை என்பதல்ல;
செய்ய வேண்டியவைகளை அறிந்திருந்தும்
குறித்த நேரத்தில் செயல்பட்டு
செயல்களை செவ்வனே செய்வதில்லை என்பதே;
நமக்குத் தெரியாத விடயங்களை சரியாக செய்யவில்லை என்றால் பெரிய தவறேதுமில்லை. ஆனால் செய்ய வேண்டிய பல செயல்களையும், அதை தாமதிப்பதனால் ஏற்படும் விளைவுகளையும் நன்கு அறிந்திருந்தும், நாம் ஏன் காலத்தே செயல்படுவதில்லை?
இவ்வாறு தெரிந்து செய்யாமல் இருப்பது, பெரும் குற்றம் அல்லவா?
நிறுவனங்கள் தாமதித்தால்
பெரிய முதலீட்டில் ஒரு நிறுவனத்தை நீங்கள் நடத்திவருகிறீர்கள். இந்த நிறுவனம் வேலைகளுக்கு சரியான திட்டமிடல், குறித்த நேரத்தில் பொருட்களை வாங்குதல்-விற்றல், சரியான விலை நிர்ணயம், காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய மாற்றங்களை உடனுக்குடன் செயல்படுத்துதல், என்று ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக செயல்பட்டால் நிறுவனம் வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்கும். திட்டமிடலிலும், நேர மேலாண்மையிலும், செயல்பாட்டிலும் சரியாக கவனம் செலுத்தாமல் தாமதித்துக்கொண்டிருந்தால், நிறுவனத்தில் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடுமல்லவா.
ஆரோகியத்தில் அலட்சியமா?
இன்றைய வேலையமைப்பில், மேசை வேலைகள் அதிகம் இருப்பவர்களுக்கு, உடல் உழைப்பு மிகமிக குறைவு. அதற்கு ஈடாக,
தினமும் குறித்த உடற்பயிற்சிகளைச் செய்வதும்
காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என ஒவ்வொரு வேளையும் உரிய ஊட்டச்சத்துமிக்க, அதேசமயம் கலோரிகள் குறைவான உணவுகளை எடுப்பதிலும்
கவனம் செலுத்தினால், இன்றைய வாழ்வியல் நோய்களான, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற உடல் உபாதைகள் இல்லாமல் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
இந்த ஆரோக்கியத்தின் அவசியத்தை அறிந்திருந்தும், துரித உணவுகள், அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், தின்பண்டங்கள் என்று அளவுக்கு அதிகமாக உண்டு வந்தால் ஊழைச்சதை வளர்ந்து, உடல் பருத்து அனுதினமும் கஷ்டப்பட வேண்டியதுதான். இந்த உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் தேவை என்பது நமக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் செயல்படாமல் இருந்தால் யாரை குற்றம் சொல்வது?.
கோபம் - ஆட்கொள்ளி
அடுத்ததாக, குறித்த நேரத்தில் செயல்படுதல் என்னும் விடயங்களைத்தாண்டி, நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் குணம் சார்ந்து இன்னொரு பெரிய விடயம் – கோபம். தவறுகளைப் பொறுத்துக் கொள்ள நம்மால் முடிவதில்லை. உடனுக்குடன் அதீத கோபம் கொண்டு விடுகிறோம். அந்த அதீத கோபம், நடந்த தவறிகை சரிசெய்து விடுகிறதா என்று பார்த்தால், பெரும்பாலும் நடந்தவைகள் நடந்தவையே. ஆனால் அந்தக் கோபம், உங்கள் மன அழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரித்து, உங்கள் ஆரோக்கியத்தைதான் அதிகம் பாதித்துவிடுகிறது.
ஒரு சிலர் அறியாமையினாலோ, சோம்பேறித்தனத்தினாலோ, தவறுகளைச் செய்யலாம். அதனால் உங்களுக்கு இழப்புகள் நேரலாம். அதற்காக அவர்கள் மீது கோபப்பட வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் அந்த கோபம் அளவுக்கு மீறும்போது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று தெரிந்தும், ஏன் அதீத கோபம் கொள்ள வேண்டும்?.
தவறுகளை கையாளவும் திட்டமிடுங்கள்
நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்! உலகில் எல்லாமே உங்களின் விருப்பம் போல் நடந்துவிடாது என்ற நிதர்சனத்தை நினைவில் கொள்ளுங்கள். அவ்வப்போது தவறுகள் நேரலாம். அதற்கான முன்னேற்பாடுகளை உங்களின் திட்டமிடலில் சேர்த்து, தவறுகளால் ஏற்படும் விளைவுகளின் தாக்கத்தை குறைத்திடுங்கள். உங்களின் சரியான திட்டமிடல், காரியத்தை செயல்படுத்துவதில் மட்டுமின்றி ஏதேனும் தவறு நேரும் பட்சத்தில், அதனால் பெரிய இழப்புகள் நிகழாமல், குறுகிய காலத்தில் சரி செய்வதற்கான வழிமுறையில் இருக்கும் விதத்தில், உங்களின் திட்டமிடல் இருப்பது அவசியம்.
விழிப்புநிலை
வியாபாரமோ, அன்றாட வாழ்க்கையோ, எதுவானாலும் உங்களின்
திட்டமிடல்,
பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் திறன்,
குறித்த நேரத்தில் செயல்படுதல்
என்ற இந்த முன்று குணாதியங்கள்தான் உங்களுக்கு வெற்றியின், மனநிம்மதியும் தரக்கூடிய விடயங்கள். இதில் எதை தவறவிட்டாலும் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். இந்த மூன்றையும் அனுதினமும் தவறாமல் செய்ய வேண்டியது அதிமுக்கியம்.
இந்த மூன்று குணாதியங்களின் சேர்க்கையை நான் பொதுவாக ‘விழிப்பு நிலை’ என்று எல்லோருக்கும் சொல்லி வருகிறேன். காலத்தின் போக்கிற்கும், இன்றைய சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு விழிப்புடன் கவனித்து செயல்படுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் பெரிய வெற்றிகளைக் குவிக்கலாம்.
வெற்றிபெற - நிறைய உழைக்க வேண்டும்;
புத்திசாலித்தனமாக உழைப்பவர்க்கு
சீக்கிரத்தில் வெற்றி கிடைக்கிறது;
குறிக்கோளின்றி உழைப்பவர்க்கு
வாழ்க்கை வெறுமனே நகர்கிறது;
குறிக்கோளை நிர்ணயுங்கள் - உரிய
பாதையை வகுத்து உழைப்பைத் துவக்குங்கள்;
வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்!
நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய வார்த்தைகள்

- [ம.சு.கு. - 28-05-2022]

Comments