top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : 80%–20% விதி - நம் வாழ்க்கை (Pareto Principle in Life)

Updated: Nov 30, 2021

எழுதப்பட்ட விதிமுறைகள்;


மனிதயினம் ஒரு கூட்டமாய் வாழத் துவங்கிய நாள்முதல், நாம் என்றுமே தொடர்த்து ஏதேனும் ஒரு சட்டதிட்டம், நெறிமுறை, விதிகளின் படியே நமது வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். இந்த விதிமுறைகளிள் எண்ணற்றவை காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்று தொடர்ந்து நம்மை சமுதாயத்தோடு இணக்கப்படுத்தி மனிதயினம் செழித்தோங்க வழி செய்கிறது.


ஒருபுறம் மனிதன் தனக்கென வகுத்த விதிமுறைகள் வழிநடத்த, இன்னொரு புறம் இந்த மனிதயினத்தை எழுதப்படாத எண்ணற்ற இயற்கை விதிகள் வழிநடத்துகிறது. நாம் விதித்த விதிகளில் வேண்டுமானால் எண்ணற்ற குழறுபடிகள் வரலாம். இந்த இயற்கையின் விதிகளில் எள்ளளவும் குழறுபடிகள் இல்லை.


இயற்கை விதிகள்;


புவியீர்ப்பு விசை துவங்கி, அண்டங்களின் செயல்பாடுகள் வரை எல்லாம் தன்னிச்சையாய் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை இயக்குபவன் யாரென்ற கேள்விக்குப் போனால் நம்மை வேதாந்தம் உள்ளே இழுத்துவிடிம். அதைவிடுத்து அன்றாட வாழ்க்கை முறையை ஆராய்வோம்.


சிறுவயதில், நாம் பாரிட்டோ கொள்கை (Pareto Principle) என்ற 80%–20% விதியை கேள்விப்பட்டிருப்போம். அதாவது நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்கின்ற பெரும்பாலான (80%) விளைவுகளை முக்கியமான சில சிறு (20%) காரணங்களே ஏற்படுத்துகின்றன என்பது இதன் சாராம்சம். உலகின் எந்தவொரு நிலைக்கும் கிட்டத்தட்ட இந்த 80-20 விதி பொருந்துகிறது.


உலகின் 80% செல்வத்தை 20% நாடுகள் கட்டுப்படுத்துகின்றன.


நம் ஊரளவில் எடுத்துக்கொண்டாலும், பெரும்பாலான (80%) செல்வத்தை குறைவான (20%) மேல்தட்டு மக்களே கட்டுப்படுத்துகின்றனர். இந்த 80-20 விதி என்பது ஒரு தோராயமான எண்சார்ந்த விதியாக இருந்தாலும், இது சமுதாய செயல்பாட்டையும், பொருளாதார நிலையையும் எளிதாக தெளிவுபடுத்துகிறது.


சிறு பயிற்சி;


சமுதாயம், பொருளாதாரம் என்ற பெருமப்பொருளியல் (Macro Economic) விஷயங்களை விடுத்து, நமது வாழ்க்கை முறையில் இந்த விதியை அலசிப்பார்ப்பதில் தான் நம்மைப் பற்றிய அறிவும், தெளிவும் நமக்கு ஏற்படும். இந்த விதியினை நன்றாய் உணர கீழ்காணும் சிறிய பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.


  • ஒரு காகிதத்தில் இன்றைய நாள் முழுவதும் என்னென்ன செய்தீர்கள் என்று எழுதவும் (குறைந்தபட்சம் 1 மணிநேர / 1/2 மணிநேர இடைவெளியில் செய்தவைகள்).

  • ஒவ்வொரு செயலுக்கும், அன்றைய தினத்தின் முக்கியதேவையை அடிப்படையாய் கொண்டு, செய்த செயல்களின் தேவை / தேவையின்மை, எடுத்துக்கொண்ட கால அளவு, போன்றவற்றை குறித்துக்கொள்ளவும்.

  • காகிதத்தின் கீழ்பகுதியில், நாம் அன்றைய தினம் செய்ய திட்டமிட்டிருந்த செயல்களில் செய்யாமல் விட்டவற்றையும், அவற்றிற்கான காரணத்தையும் எழுதவும்.

  • செய்யப்பட்ட ஒவ்வொரு செயலிலும், நாம் செய்த சரியாணவற்றையும், செய்த தவறுகளையும் அதன் அருகிலேயே குறிப்பிடவும்.

மேற்சொன்னவற்றை தொளிவாகவும், உண்மையாகவும் எழுத கிட்டதட்ட 10-20 நிமிடங்கள் பிடித்திருக்கும். அந்த காகிதத்தை சற்றே தள்ளிவைத்துவிட்டு, ஒரு 10 நிமிட நடைபயிற்சி செய்து வரவும். சிறிய இடைவெளிக்குப்பின், எழுதப்பட்ட அந்த காகிதத்தில் உள்ள குறிப்புகளைப்பற்றிய ஒரு மேலோட்டமான கருத்துக்களை சற்றே சிந்திக்கவும்.


  • அந்த காகிதத்தில் குறிபிட்ட எல்லா செயல்களுக்கும் நீங்கள் செலவு செய்த நேரம், தேவை / தேவையற்றவற்றில் செலவிட்ட நேரம், மிகவும் பயன்பட்டதாக செய்யப்பட்ட நேரம் என்று தெளிவாக பிரிக்கவும்.

  • அன்றைய நாளின் துவக்கத்தில் எதை செய்து முடிக்க எண்ணியிருந்தீர்களோ, அதை முடித்திருக்கிறீர்களா?

  • செய்து முடித்த செயல்களில், எவை, எவை எத்தனை நேரத்தை எடுத்திருக்கின்றன?

  • நீங்கள் செய்துமுடிக்க வேண்டிய செயலின் முக்கியதுவத்திற்கேற்ப, செயல்களை முன்னிலை படுத்தி செய்தீர்களா?

  • நீங்கள் சரியாகவும், நேர்த்தியாகவும் முடித்த எல்லாச் செயல்களும் அன்றைக்கு பயன் தருவதாக இருக்கிறதா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை நீங்களே குறித்துக்கொள்ளுங்கள். இந்த சிறிய பயிற்சியின் ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், தெளிவையும் உங்களுக்கு பகிர்கிறேன். பின்னர் உங்கள் கதைக்கு வருகிறேன்.


என் கதை;

அதிகாலை தொடங்கி, இரவு வரை கிட்டதட்ட 17 மணிநேர வாழ்க்கையோட்டம்

  • உடற்பயிற்சி

  • காலை கடமைகள்

  • உணவு & தேநீர்

  • சாலைப்பயணம்

  • அலுவலக வேலை (பயனுள்ளவை)

  • அலுவலக பேச்சுகள் (பயனற்றவை)

  • தொலைக்காட்சி

  • கைப்பேசி & இனையம்

  • குடும்பத்துடன் செலவளிப்பது

  • கணக்கிடப்படாதவை

நான் வாழ்வியல்முறை நோயான உடல்பருமனால் கஷ்டப்பட்ட கட்டத்தில், உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதிலும், அதை செயல்படுத்தாது, தொடர்ந்து பிற வேலைகளையே செய்துகொண்டு உடற்பயிற்சியை தவிர்த்து வந்தேன். நான் செய்யவேண்டிய வேலைகளில் 50% கூட என்னால் நிறைவு செய்ய இயலவில்லை. நேரம் எப்படி ஓடுகிறதென்றே தெரியவில்லை. செய்யப்பட வேண்டியவைகளை செய்யத் துவங்கும் முன்னரே அன்றைய தினம் முடிந்துவிடுகிறது, செய்யவேண்டிய செயல்களை துவங்காமல், அதற்கு சம்மந்தமில்லாத, முக்கியமில்லாத சில செயல்களில் தேவையின்றி 2 – 3 மணி நேரத்தை வீணடித்திருக்கின்றேன். இவைகளுக்கு இடையே எண்ணற்ற மணித்துளிகள் காரணமின்றியே கடந்திருக்கின்றன. மொத்தத்தில், எளிதாக எட்டியிருக்கவேண்டிய அன்றைய சிறிய இலக்கை, நாளைக்கு என்று தள்ளிப்போட வேண்டிய கட்டாயத்தில் அன்றைய தினம் முடிந்திருப்பதை கண்டபோதுதான், காலத்தின் கைகளில் நான் சிக்குண்டது புரிந்தது.

பொரும்பாலும், நாம் எல்லோரும் நேரத்தின் கைகளில் அகப்பட்டுள்ளோம். நேரத்தை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற மாயைகொண்டு, நேரத்தின் கட்டுப்பாட்டிலேயே நாம் வலம்வருகின்றோம்.

இப்படித்தான் என் வாழ்க்கைமுறையும் சில ஆண்டுகாலம் கழிந்ததென்று எண்ணும்போது, தவறவிட்ட மணித்துளிகள் என்னை மலைக்கச்செய்கிறது.


என்னதான் நடக்கிறது ?


இனி உங்கள் கதைக்கு வருவோம். ஒருநாளில், உங்களின் 15-17 மணிநேரத்தை (தூக்கம் தவிர்த்து) எத்தனை பயனுள்ளதாக செலவிட்டிருக்கிறீர்கள் என்கின்ற புள்ளிவிவரம் இப்போது உங்கள் கைகளில். இவற்றின்று என்ன புலப்படுகிறது?

இந்த புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவர்களின் நிலைமை கீழ்கண்டவாறு இருக்கிறது;

  • அன்றையதினம் முடிக்கதிட்டமிட்ட செயல்களில் பாதியை கூட முடிக்க முடியவில்லை.

  • தேவையற்ற உரையாடல், பொழுதுபோக்கு, இணையம் போன்றவற்றில் எண்ணற்ற நேரத்தை வீணாக்கியிருப்பது

  • செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலில், சரியாக முன்னிலைப்படுத்தாமல், அன்றைய தினம் அவசரமில்லாத செயல்களில் அதிக நேரத்தை செலவிட்டு, அன்று முடிக்கப்பட வேண்டிய செயல்களை துவங்காமலேயே விட்டிருப்பது.

  • சில சமயங்களில், செய்வதற்கு தேவையான நேரமிருந்தும், ஏதோ ஒரு சோம்பேரிதனத்தின் காரணமாக அதை நாளை செய்யலாமென்று தள்ளிப்போடுவது....

இப்படி என்னற்ற காரணங்களை கேள்விப்படுகின்றேன். இவற்றில் பலவற்றை ஆரம்பத்தில் நானும் அனுபவித்திருக்கிறேன். இவைகளை கடக்காமல் எவரொருவரும் வெற்றியாளராகவில்லை. வெற்றிபெற்றவர்கள் இந்த அன்றாட சிக்கல்களை உணர்ந்து, அதற்காக ஆக்கப்பூர்வமான மாற்று முயற்சிகளை மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகின்றனர்.


இப்படி அவசரம் / அவசியமற்ற செயல்களில் வெகுவாக நேரத்தை செலவிடுவதே எல்லா இன்னல்களுக்கும் அடிப்படையாகிறது. அதைத்தாண்டி நாம் செய்த செயல்களை முன்னிலைப்படுத்தி நேரச்செலவை பார்த்தால் பெரும் நேரத்தை குறைவான மதிப்பீடு கொண்ட காரியங்களுக்கு செலவிட்டிருப்பது தெரியும்.


என்ன செய்யவேண்டும்;


இந்த செயல்களில் நேரம் ஒதுக்கியவை என்று மட்டும் அலசுவது போதாது. அதன் அடுத்தபடியாக, எப்படி 80 – 20 விதியை நம் அன்றாட செயல்களிலும் செயல்படுத்தி நம் நேரத்தை சிறப்பாக பயண்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் செய்கின்ற வேலைகளில் 20% மட்டுமே முக்கியமானதகவும், நம் கடமைக்கு ஏற்புடையதாகவும் இருக்கும். இவையே பெரும்பாலும் 75% - 80% க்கும் கூடுதலான நேரத்தை எடுக்கும். இப்படி முக்கியமான 20% செயல்கள் என்ன என்று சிந்தித்து, அவற்றை பட்டியலிட்டு, ஒவ்வொரு நாளும் அதை கவணம் சிதறாமல் செயல்படுத்த திட்டம் வகுப்பது முதலில் அவசியமாகிறது.


அடுத்தபடியாக நம் நேரத்தை தேவையில்லாமல் வீணாக்கும் அந்த 80% வேலைகள் என்னென்னவென்று பட்டியலிட்டு அவற்றை குறைப்பதற்கும் / ஒழிப்பதற்கும் வழிமுறைகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். தேவையில்லாமல் தொலைக்காட்சியிலும், கைப்பேசியிலும் நேரம் செலவழிப்பது, பயனற்ற இணையப் பயன்பாடு போன்றவற்றை தொடர்ந்து குறைப்பதும் / தவிர்ப்பதும் மிக முக்கிய கடமையாகும். இந்த தேவையற்ற நேரச செலவினங்களை ஒழிப்பது ஒன்றுதான் வெற்றியின் தாரகமந்திரமாக இருக்கும். இன்று எண்ணற்ற இல்லத்தரசிகளை வீட்டில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளின்றி முடக்கி வைத்திருப்பதே இந்த தொலைக்காட்சி என்னும் மாயப்பெட்டிதான். எண்ணற்ற கலைகளைக் கற்று உயர்வடைய வேண்டிய பல தாய்மார்களையும், குழந்தைகளையும், இளைய தலைமுறையையும் இந்த பொழுதுபோக்கு என்னும் மாயவலை படுபாதாளத்திற்கு இழுத்துச் செல்கிறது.


அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய செயல்களை கவணத்தோடு ஆராய்ந்து தவிர்க்கவேண்டியவற்றை தவிர்ப்பதனால் மட்டுமே நாம் அடுத்த நிலைக்கு அடியெடுத்து வைக்க முடியும்.


பொருளாதாரத்தைச் சார்ந்து உருவான இந்த 80%-20% விதியை, நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளில் உணர்ந்து செயல்படுத்தி எல்லா மணித்துளிகளையும் பயனுள்ளதாக ஆக்குவதன் மூலம், மனிதகுலம் எல்லாத் துறைகளிலும் மேலும் வளர்ச்சிகண்டு வெற்றிகாணும்.


இந்த நிலைகளை விளக்கி எண்ணற்ற அறிஞர்கள் பேசியிருக்கிறார்கள். பல்வேறுபட்ட புத்தகங்கள் வாயிலாகவும் எடுத்துறைத்திருக்கிறார்கள். இவைகளை படிக்காதவர்களைக் காட்டிலும், இவற்றை படித்தறிந்த பின்னும், இன்னும் செயல்படுத்தாமல் வெறுமனே காலத்தை அதன் போக்கிலேயே ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை, பாரதி சொன்ன ‘வேடிக்கை மனிதர்’ என்றே கொள்ள வேண்டும்.


“கற்றல் நன்று ;

கற்றலின் கேட்டல் நன்று ;

கற்பதுவும், கேட்பதுவும் செயலாய் மாறுவதே

மனிதகுலத்திற்கு மிக நன்று“


செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அறிந்த ஞானத்தை செயல்படுத்தி வெற்றி கொள்வோம்.


[ம.சு.கு - 18-08-2021]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page